கார்ஸ்
Published:Updated:

ஷோக்கா ஓட்டினார் செக்கா!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

சார்லஸ்  

 ##~##

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸுக்கு இது சோதனைக் காலம்! கடந்த ஆண்டு வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸைவிட்டு பிஎம்டபிள்யூ அணி வெளியேறிய நிலையில், சூப்பர் பைக் ரேஸில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் யமஹா அணியும் சூப்பர் பைக் ரேஸ¨க்கு 'பை... பை’ சொல்லிவிட்டது! அடுத்த ஆண்டு முதல் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் யமஹா இல்லை. யமஹா அணியின் மார்க்கோ மெலாண்ட்ரி, யூஜின் லாவெர்ட்டி இருவரும் இனி புதிய அணி தேட வேண்டும்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் - இங்கிலாந்து

ஷோக்கா ஓட்டினார் செக்கா!

இங்கிலாந்து நாட்டில் உள்ள சில்வர் ஸ்டோன் ரேஸ் மைதானத்தில், கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் ஒன்பதாவது சுற்று நடைபெற்றது. மொத்தம் 5.9 கி.மீ தூரம் கொண்ட சில்வர் ஸ்டோன் ரேஸ் மைதானத்தில், மொத்தம் 18 லேப்புகள் கொண்ட ரேஸாக நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார், சுஸ¨கி பைக்குடன் களம் இறங்கிய கிரஸன்ட் ரேஸிங் அணியின் ஜான் ஹாப்கின்ஸ். யமஹா அணியின் யூஜின் லாவெர்ட்டி இரண்டாவது இடத்தில் இருந்தும், ஏப்ரில்லா அணியின் லியான் கேமியர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். நடப்பு சாம்பியனான ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி பதினோறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவங்கினார்.

ஷோக்கா ஓட்டினார் செக்கா!

ரேஸ்-1

ஆரம்பத்திலேயே சூப்பர் பைக் ரேஸுக்கு கத்துக் குட்டியான ஜான் ஹாப்கின்ஸை ஒதுக்கி விட்டு முன்னேறினார் யமஹா அணியின் யூஜின் லாவெர்ட்டி. நான்காவது இடத்தில் இருந்த கார்லோஸ் செக்கா அதிரடியாக ரேஸ் ஓட்டாமல் வியூகங்கள் அமைத்து ரேஸ் ஓட்டினார். முதலில் மூன்றாவது இடத்தில் சென்றுகொண்டு இருந்த ஹாகாவை முந்திய செக்கா, மூன்றாவது லேப் முடிவில் ஹாப்கின்ஸை முந்தினார். அடுத்ததாக முதலிடத்துக்கு லாவெர்ட்டியுடன் மோதிய செக்கா மிகவும் பொறுமையாக, அதே சமயம் மிகவும் கவனமாக ரேஸ் ஓட்டினார். ஆறாவது லேப்பின் போது யூஜின் லாவர்ட்டியை முந்தினார் செக்கா. லாவெர்ட்டி தொடர்ந்து செக்காவை நெருங்கினாலும் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் 3.3 விநாடிகள் வித்தியாசத்தில் லாவெர்ட்டியை முந்திச் சென்று வெற்றி பெற்றார் செக்கா. மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடம் பிடித்தார். செக்கா வெற்றி பெற்றதன் மூலம் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் 300 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தது டுகாட்டி!

ஷோக்கா ஓட்டினார் செக்கா!

ரேஸ்-2

முதல் ரேஸ் டுகாட்டி அணிக்கு மைல் கல்லாக அமைந்தது என்றால், இரண்டாவது ரேஸ் செக்காவுக்கு மிக முக்கியமான ரேஸாக அமைந்தது. வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் செக்கா கலந்து கொள்ளும் 100-வது ரேஸ் இது. அதனால், முதல் ரேஸில் வெற்றி பெற்றது போலவே, இரண்டாவது ரேஸிலும் வெற்றி பெற துடியாகத் துடித்துக் கொண்டிருந்தார் செக்கா. அவர் திட்டமிட்டது போலவே அமைந்தது. முதல் ரேஸைப் போலவே ஹாப்கின்ஸை முந்தி விட்டு யூஜின் லாவெர்ட்டி முதல் இடத்தில் பறக்க, அவரை ஆறாவது லேப்பில் துரத்திப் பிடித்தார் செக்கா. இறுதி வரை முயன்றும் லாவெர்ட்டியால் வெற்றி பெற முடியவில்லை. 100-வது ரேஸில் வெற்றி பெற்று அசத்தினார் செக்கா. லாவெர்ட்டி இரண்டாவது இடத்தையும், மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் ஒன்பது ரேஸ்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், கார்லோஸ் செக்கா 343 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி 281 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மார்க்கோ மெலாண்ட்ரி 272 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் அடுத்த சுற்று, செப்டம்பர் 4-ம் தேதி ஜெர்மனியின் நர்பர்கிரிங் ரேஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது!