Published:Updated:

பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!

ஆம்பியர் தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் தொழிற்சாலை

ஃபேக்டரி விசிட்: கிரீவ்ஸ் மொபிலிட்டி ஆம்பியர் எலெக்ட்ரிக்

பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!

ஃபேக்டரி விசிட்: கிரீவ்ஸ் மொபிலிட்டி ஆம்பியர் எலெக்ட்ரிக்

Published:Updated:
ஆம்பியர் தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
ஆம்பியர் தொழிற்சாலை

‘தலைவர் படத்துக்கு டிக்கெட் இருக்கு… போலாமா’ என்றால், கும்மாளம் போட்டுக் கிளம்பும் சினிமா ரசிகர்களைப்போல்… ‘ஆட்டோமொபைல் ஃபேக்டரிக்கு விசிட் அடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு… போலாமா’ என்றால், நம் அலுவலகத்தில் குஷியாகிக் கிளம்பும் ஆட்டோமொபைல் ரசிகர்களில் நானும் ஒருவன். அப்படித்தான் ஆம்பியர் எனும் எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலைக்கு விசிட் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘டைட்டானிக்’ பட டிகேப்ரியோ மாதிரி நானும், புகைப்பட நிபுணன் கார்த்திக்கும் சந்தோஷமாக விழுந்தடித்துக் கிளம்பினோம்.

பொதுவாக ஒரு கார்/பைக் ஃபேக்டரி விசிட் என்பது, நிச்சயம் மோட்டார் விகடனுக்கான கன்டென்ட்டாகத்தான் இருக்கும். ஆனால், ராணிப்பேட்டையில் உள்ள ஆம்பியர் எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலைக்குள் விசிட் அடித்தால்… அவள் விகடன், ஆனந்த விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன் என எல்லா விகடன்களுக்கும் ஸ்டோரி கொட்டிக் கிடக்கிறது. (ஜூனியர் விகடனுக்குனுலாம் குசும்பா கேட்கப்புடாது!)

பொதுவாக ஒரு வாகனத் தொழிற்சாலையில் மனிதர்களைவிட ரோபோக்கள்தான் அதிகம் இருக்கும். அப்படியே மனிதர்கள் தென்பட்டாலும் பெண்கள் குறைவாகத்தான் தென்படுவார்கள். அப்படியே பெண்கள் தென்பட்டாலும், அவர்களின் பங்கு பெரிதாக இருக்காது. ஆனால், ஆம்பியரில் ரோபோக்களைவிட, ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமான அளவில் வாகனத் தயாரிப்பில் இருக்கிறார்கள் என்பது அவள் விகடனுக்கான ஸ்டோரி.

ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்குள் அடியெடுத்து வைத்ததுமே, நம்மை மரம் நட வைத்துவிட்டுத்தான் உள்ளேயே அழைத்துப் போய் காபி தருகிறார்கள். நாம் சென்றபோது, ஜனாதிபதியிடம் வெறும் கால்களால் நடந்து போய் பத்ம விருது வாங்கிய கர்நாடகாவைச் சேர்ந்த ஷாலுமரடா திம்மக்கா எனும் வயதான அம்மா மரம் நட்டுக் கொண்டிருந்தார். சுமார் 80 வயதாகும் திம்மக்கா, தன் வாழ்நாளில் சுமார் 30,000 மரங்களுக்கு மேல் நட்டு, ஒரு காட்டையே உருவாக்கியதற்காக விருது வாங்கியவர். ‘‘எலெக்ட்ரிக் நிறுவனம் என்றால், சுற்றுச்சூழல்தானே முக்கியம்! அதுதான் இந்த ஏற்பாடு!’’ என்றார், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் மற்றும் ஆம்பியரின் தலைவர், நாகேஷ் பஸவனஹள்ளி.

பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!
பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!
பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!

கிரீவ்ஸ் காட்டன் ஆம்பியரை வசப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது, கிரீவ்ஸ் இன்ஜின், கிரீவ்ஸ் ரீட்டெய்ல், கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, அதாவது ஆம்பியர் டூ–வீலர், அப்புறம் 3 வீலர் என்று வெரைட்டியாக ஆட்டோமொபைலில் கலக்கி வரும் ஆம்பியரின் CEO மற்றும் MD நாகேஷ் பசவனஹள்ளியுடன் ஒரு க்விக் சாட் செய்தது நாணயம் விகடனுக்கான ஸ்டோரி. ‘‘சுத்தமான மொபிலிட்டியை நோக்கி கிரீவ்ஸ் காட்டன் சென்று கொண்டிருக்கிறது. ஆம்பியர் அதில் முக்கியப் பங்கு வகிக்கும்!’’ என்றார் நாகேஷ்.

இதற்கு முன்பு ஆம்பியர் – கிரீவ்ஸ் காட்டன் வசம் போவதற்கு முன்னால் – கோவையில் இருந்த ஆம்பியர் தொழிற்சாலைக்குள் விசிட் அடித்த அனுபவம் எனக்கு ஏற்கெனவே உண்டு. அதைவிடவும் ஹைடெக்காக இருந்தது ஆம்பியர்.

ஒரு IC இன்ஜின் வாகனத் தொழிற்சாலைக் குள் நுழைந்தால்… சப்டைட்டில் இல்லாத கொரியன் படம் பார்ப்பதுபோல் என்ன நடக்குதுனே தெரியாமல் இருக்கும். பாடி லைன், அசெம்பிளி லைன், இன்ஜின் பே, பெயின்ட் ஷாப், செக்ஷன்–1, செக்ஷன் – 5 எனக் குழப்பியடிக்கும். ஆனால், பல ஏக்கர்களில் பரந்து விரிந்திருந்த ஆம்பியர் தொழிற்சாலைக்குள், வாகனம் தயாராவதற்காக நறுக் சுறுக் என ஒரே ஒரு ஜெனரல் அசெம்பிளி லைன்தான் இருந்தது. பேட்டரிக்கான வெல்டிங் ஷாப், ஸ்கூட்டருக்கான பெயின்ட் ஷாப், மோட்டாருக்கான ஷாப் என்று பல அசெம்பிளி லைன்கள் இனிமேல் ரெடியாக இருக்கிறதாம்.

இந்த எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலையின் வடிவமைப்பு மிகவும் எளிதாகவே இருந்தது. ‘பிக்பாஸ்’ வீடுபோல் இருந்த ஒரு பெரிய பங்களாவுக்குள், சின்ன அசெம்பிளி லைனுக்குள்ளேயே மொத்தமாக ஸ்கூட்டர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. காரணம் – இப்போதைக்கு ஆம்பியரில் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரே ஸ்கூட்டர் ஆம்பியர் EX மட்டுமே! அதேபோல், எல்லாமே மேனுவலாக நடந்து கொண்டிருந்ததும் வித்தியாசமாக இருந்தது. இனிமேல்தான் ஆட்டோமேஷன் சிஸ்டம் கொண்டு வரும் ஐடியாவில் இருக்கிறதாம் ஆம்பியர்!

‘‘இந்தத் தொழிற்சாலையில் 120 விநாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதாவது, 450 நிமிடங்களில் 225 ஸ்கூட்டர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இதை இரட்டிப்பாக்குவோம்!’’ என்றார், அசெம்பிளி லைனின் இன்சார்ஜ் – சைலேஷ் ஜோஷி. இப்போது ஒரு ஷிஃப்ட் அடிப்படையில் 400 யூனிட்கள் ஒரு நாளைக்குத் தயாராகின்றனவாம். ஆனால், ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் அளவுக்கு பொட்டென்ஷியல் கொண்டது என்கிறார்கள்.

ஜப்பானில் ‘கான்பான்’ (Kanban) என்றொரு நடைமுறை உண்டு. இந்த சிஸ்டத்தை வாகனத் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். Just-in-Time-க்கு ஒரு வாகனத் தயாரிப்பு நடக்க வேண்டுமென்றால், இந்த நடைமுறையைத்தான் பயன்படுத்துவார்கள் ஜப்பானியர்கள். இதில் ஒரு விநாடிகூட தாமதிக்கப்படாமல் வாகனங்கள் பிரசவமாகி வந்துவிழும். Kanban–ஐப் பயன்படுத்தித்தான் ஆம்பியர் இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் இருப்பது போன்ற ஒரு பெரிய ஸ்டீல் ரேக்கில், ஒரு ஸ்கூட்டருக்கான எல்லா பாகங்களும் இருக்கின்றன. அந்த லைனின் கடைசியில் அந்த ரேக் காலியானால், ஒரு ஸ்கூட்டர் வெளிவந்து விட்டது என்று அர்த்தம்.

இங்கு 70:30 சதவிகிதத்தில் பெண்கள் ராஜ்யம்தான். யமஹா போன்ற தொழிற்சாலைகளிலும் பெண்கள் உண்டுதான். ஆனால், ஸ்டிக்கரிங் லைனில் மட்டும்தான் கெத்து காட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஏத்தர், எம்ஜி போன்ற நிறுவனங்களிலும் பெண்களுக்கென்று லைன் ஆரம்பித்திருந் தாலும் – ஆம்பியரில் அசெம்பிளி லைனில் ஆரம்பித்து பேட்டரி லைன், டெஸ்ட்டிங் லைன் வரை பெண்கள்… அதுவும் கல்லூரிப் படிப்பு முடித்த மாணவிகள் ஒரு பைக்கை அசெம்பிள் செய்து, அதை குவாலிட்டி செக் செய்து, டிரைவ் செய்து லைனில் நிறுத்துவது வரை பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.

பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!
பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!

‘‘என் பேரு ப்ரியதர்ஷினி. டிப்ளமோ படிச்சிருக்கேன். எனக்கு ஆட்டோமொபைல் பத்தி எதுவுமே தெரியாது! ஆனால், இப்போ எல்லாமே அத்துப்படி! காரணம் – பாலாஜி சார், வெங்கட் சார்!’’ என்றார் வேலூரில் இருந்து வந்த ஒரு மாணவி.

‘‘சிப்காட்டில் இருந்து வர்றேன். என் பேரு சரஸ்வதி. எனக்குலாம் இங்கே வேலை கொடுக்க மாட்டாங்கனு நினைச்சேன். வந்தப்போ ஜீரோ நாலெட்ஜ்தாங்க இருந்துச்சு. இப்போ எலெக்ட்ரிக் வெஹிக்கிள் பத்தி பிரிச்சு மேய்ஞ்சிடுவேன்!’’ என்றார் சரஸ்வதி.

‘‘நான் கலைவாணி. பிஎட் படிச்சிருக்கேன். ஆட்டோமொபைல் பத்தி சுத்தமா தெரியாதுங்க. இங்க வந்து செம எக்ஸ்பெர்ட் ஆகிட்டேன். இப்போதைக்கு நான் ஸ்கூட்டர்லதான் வேலைக்கு வந்துக்கிட்டிருக்கேன். இங்க வேலை செஞ்சவுடனே எனக்கும் எலெக்ட்ரிக் பைக் மேல ஆசை வந்துடுச்சு!’’ என்றார் ஒரு மாணவி.

பெரிய விஷயம் என்னவென்றால் – இவர்கள் யாரும் ஆட்டோமொபைல் எக்ஸ்பெர்ட் இல்லை என்பதுதான். ஆனால், அவர்கள் ஸ்கூட்டர்களை அசெம்பிள் செய்தவிதமும், பைக் டெஸ்ட் ரைடிங் செய்து அதை இன்ஸ்பெக்ட் ஒவ்வொரு ஸ்கூட்டரையும் தயாரிப்பில் இருந்து வெளியே அனுப்பிய விதமும் பல ஆண்டு அனுபவசாலிகள்போல் தெரிந்தார்கள். விரைவில் இரண்டு ஷிஃப்ட் தொடங்கினால், இன்னும் பல இன்ஜீனியர்களுக்கு… அதுவும் பெண் பொறியாளர்களுக்கு ஆம்பியரில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது!

பெண் பொறியாளர்களால் அசெம்பிள் ஆகும் ஆம்பியர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism