ஏமாற்றுவதற்கு ஆயிரம் இல்லை… லட்சம் வழிகள் உண்டு என்றால், ஏமாற்றுவதற்குக் கோடி வழிகள் உண்டு. அப்படி கோடிகளில் ஒரு வழியாக இப்போது ஸ்கூட்டர் விற்பனையையும் தேர்ந்தெடுத்து, சிலர் ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஓலா ஸ்கூட்டர் டீலர் என்கிற பெயரில் தனிநபர் ஒருவர், ஒரு வாடிக்கையாளருக்கு 80,000 ரூபாய் வரை ஆப்பு வைத்திருக்கிறார். இது மும்பையில் நடந்திருக்கிறது.
இப்போதைக்கு ஸ்கூட்டர் விற்பனையில் ஓலாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. இத்தனைக்கும் ஓலா நிறுவனத்துக்கு ஆரம்பத்தில் டீலர்களே இல்லாமல் இருந்தாலும், விற்பனையைப் பொருத்து டீலர்ஷிப்பை அதிகரிக்க இருக்கிறதாம் ஓலா.
நீங்கள் கை நிறைய காசு வைத்திருக்கிறீர்கள்; ஒரு டீலர்ஷிப் தொழில் ஆரம்பிக்க வேண்டும்; ஓலாவின் டீலர்ஷிப் ஆக விரும்புகிறீர்கள் என்று நீங்கள் ஓலாவின் வலைதளத்தைத் தொடர்பு கொண்டால்… ‘ஆர்வத்துக்கு நன்றி! டீலர்ஷிப்பை ஓலா அங்கீகரிப்பதில்லை’ என்று க்ராஸ்மார்க் சிம்பல் போட்டு சாரி மெசேஜ்தான் வரும். இதனாலேயோ என்னவோ, ஓலா மூலமாக உலை வைக்க ஆன்லைன் பேர்வழிகள் நிறையப் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். (இருந்தாலும், ஜம்முவில் தனது 500-வது எக்ஸ்பீரியன்ஸ் சென்ட்டரைத் திறந்திருக்கிறார்கள்.)

அப்படி ஒரு சம்பவம் லேட்டஸ்ட்டாக டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தன்விக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பியுள்ளார். அப்போது பார்த்து அவருக்கு ஆன்லைனில் ஒரு விளம்பரம். ஓலா ஸ்கூட்டர்கள் ஆன்லைனில்தான் விற்பனை செய்யப்படுகின்றன என்கிற குறைந்தபட்சத் தகவலை மட்டும் தெரிந்து கொண்டு, இவர் கூகுளைத் தேட… ஓலா ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நபர் என ராகவ் ஷர்மா என்றொருவரின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. தன்னை டில்லியில் உள்ள ஓலா ஸ்கூட்டர்களின் விற்பனைப் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், நம்பத்தகுந்த மாதிரியான சில ஆதாரங்களை அவரிடம் சமர்பிக்க…. இவரும் ராகவ் சர்மாவின் வங்கிக் கணக்குக்கு முன் பணமாக ரூ.499/– அனுப்பியிருக்கிறார். காரணம், ஓலாவை புக் செய்ய முதலில் 499 ரூபாய்தான் கட்ட வேண்டும்.
ஓலா வலைதளத்தில் எப்படி புரொசிஜர்கள் இருக்குமோ… அதன்படியே ராகவ் சர்மா காய் நகர்த்த… மீதமுள்ள தொகையாக ரூ.80,999 ரூபாயையும் அதே வங்கிக் கணக்குக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்.
செலுத்திய பணத்துக்கு ரசீது வராமல் காத்திருந்த டெல்லி நபர், ரசீதைக் கேட்டபோது… ‘ஸ்கூட்டர் ஏக் சஃப்தாஹ் கே பாத் ஆயகா…’ என்று மழுப்பியிருக்கிறார். ‘பில்லைக் கேட்டா ஸ்கூட்டர் வரும்னு சொல்றாரே’ என்று டெல்லிக்காரருக்குச் சந்தேகம் அப்போதுதான் வலுத்துள்ளது. டெல்லி காவல்துறையில் புகார் கொடுக்க… அதன் பிறகுதான் அந்த வங்கிக் கணக்கை வைத்து அந்த வங்கிக் கணக்கில் இருந்தவரின் பெயர் ராஜேந்திர ஷிவராம் பண்டா என்பதும், அவர் மும்பையை அடுத்த தானேவில் டோம்பிவாலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்… அந்த நபர் வீட்டை சில மாதங்களுக்கு முன்பே காலி செய்து விட்டார் என்கிற தகவல்தான் கிடைத்திருக்கிறது. இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
அட, இது ஒன்றும் புதுசில்லை. ஓலா ஒரு Pan India ஸ்கூட்டர் என்பதால் – இதன் மோசடி இந்தியா முழுக்க முக்கியமான நகரங்களிலெல்லாம் சக்கைப் போடு போடுகிறது. ஏற்கெனவே மும்பை, பீஹார், தெலங்கானா, பெங்களூரு, குருகிராம், பாட்னா போன்ற இடங்களிலிருந்து, ஓலா விற்பனையாளர்கள் என்கிற பெயரில் மோசடி செய்து வந்த சுமார் 20 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
அன்பு மக்களே! இதுபோன்ற ஆன்லைன் வர்த்தகங்களில் மிகவும் கவனமாக இருத்தல் நல்லது! ஓலாவுக்கு டீலர்ஷிப்கள் ஆரம்பத்தில்தான் இல்லை ; இப்போதைக்கு இந்தியா முழுக்க சுமார் 500 டீலர்ஷிப்கள் உள்ளன. இதை Direct to Customer அல்லது ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்கிறார்கள். முடிந்தால் நேரடியாகவே வாங்குங்கள். அதேபோல் தனிநபர் மூலமாகவும், தனிப்பட்ட வலைதளங்களிலும் ஸ்கூட்டர் வாங்குவதைத் தவிருங்கள். சிலர் போலியான வெப்சைட்களை உருவாக்கி, காசு வசூலிப்பதாகவும் தகவல். ஆன்லைனில் புக் செய்வதாக இருந்தால், ஓலாவின் https://olaelectric.com/ வலைதளத்துக்குச் சென்று புக் செய்யுங்கள். அல்லது ஆப் மூலமாகவும் பண்ணுவது நலம்!