கார்ஸ்
Published:Updated:

அவென்ஜர் வாத்தியார் இல்லை; நான் புல்லட் வாத்தியார்!

பஜாஜ் அவென்ஜர் 220
பிரீமியம் ஸ்டோரி
News
பஜாஜ் அவென்ஜர் 220

ரீடர்ஸ் ரிவ்யூ: பஜாஜ் அவென்ஜர் 220

அவென்ஜர் வாத்தியார் இல்லை; நான் புல்லட் வாத்தியார்!
அவென்ஜர் வாத்தியார் இல்லை; நான் புல்லட் வாத்தியார்!

கரூர் மாவட்டம், குளித்தலைப் பகுதியில் திருச்சி சாலையில் தினமும் காலையும் மாலையும் பஜாஜ் அவென்ஜர் பைக்கில் ஓர் இளைஞர் ஒயிலாகப் பயணிப்பதைப் பார்க்க முடியும். அவர் பெயர் பூபதி அன்பழகன். குளித்தலை அருகே உள்ள பொய்யாமணியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக்குத் தினமும் தனது பஜாஜ் அவென்ஜர் 220 சிசி பைக்கில்தான் சென்று வருகிறார். பள்ளியில் மாணவர்களுக்கு மார்க் போடுவதைப்போல், தனது அவென்ஜருக்கும் மார்க் போட ஆரம்பித்து விட்டார்.

ஏன் அவென்ஜர்?

‘‘அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார். நான் ஸ்கூல் படிக்குற காலத்துல வீட்டுல டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டிதான் இருந்துச்சு. இந்நிலையில், நான் படிச்சு முடிச்சுட்டு, கடந்த 2005–ம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். முதன் முதலா ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாங்கினேன். பத்து வருஷம் வைத்து ஓட்டினேன். அடுத்து அப்கிரேட் ஆகணும்னு நினைச்சப்போ, முதலில் பல்ஸர்தான் என் ஐடியாவில் இருந்துச்சு. குளித்தலை பெரிய பாலத்துக்கிட்ட இருக்கும் பஜாஜ் ஷோரூமுக்குப் போனேன். ஆனால் அங்கிருந்தவங்க, ‘பஜாஜ்ல நியூவா லாஞ்ச் பண்ணியிருக்காங்க. நல்லா இருக்கும் இந்த வண்டி. இது, க்ரூஸர் பைக். பெஸ்ட் டிரைவ் அனுபவம் தரும்'னு சொல்லி, அவென்ஜர் பைக்கைக் காட்டினாங்க. சும்மா ஓட்டிப் பார்ப்போமேனு, கொஞ்ச தூரம் டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்த்தேன்.

வண்டி ஓட்ட சுகமா இருந்துச்சு. வண்டி புடிச்சுப் போனதால், அடுத்த சில நாள்கள்லேயே ரூ.1,03,000–த்தைக் கட்டி இந்த வண்டியை எடுத்தேன். இப்படி, அவென்ஜர்தான் வேணும்னு திட்டம் போட்டுலாம் இந்த பைக்கை எடுக்கலை. எதேச்சையாக அமைஞ்சிடுச்சு. இப்போலாம் 150 சிசி பைக்கே 1.5 லட்சம் தாண்டுது. இவ்வளவு குறைஞ்ச விலையில் ஒரு 220 சிசி பைக்கை எங்கேயாச்சும் வாங்க முடியுமா சொல்லுங்க! அதுவும் அவென்ஜர் பிடிக்கக் காரணம் ஆகிடுச்சு! இந்த வண்டி பேர் அவென்ஜர்னு தெரியாம, இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும், 'புல்லட் வாத்தியார்'னு என்னைக் கூப்புடுறாங்க.

அவென்ஜர் வாத்தியார் இல்லை; நான் புல்லட் வாத்தியார்!

அவென்ஜர் அனுபவம் எப்படி இருக்கு?

‘‘அஞ்சு வருஷம் ஆவுது. பெரிசா எந்த மக்கரும் பண்ணாம, வண்டி சும்மா ஜாம் ஜாம்னு போகுது. சமீபத்தில், என்னோட மகனோட சேர்ந்து இந்த வண்டியில கீழடி அருங்காட்சியகம் போய்ட்டு வந்தேன். திருச்சிக்கு அதிகப்பட்சம் இந்த பைக்குலதான் போவேன். மாசத்துக்கு 1000 கிலோமீட்டர் குறையாம ஹைவே ரைடு போயிருவேன். இந்த வண்டியை வாங்குன புதுசுல, இந்த வண்டியோட மாடலைப் பார்த்துட்டு சிலர், 'என்ன சைனா வண்டியா?'னு கேட்டாங்க. ஸ்டைலா இதுல நான் பயணிக்குற அழகைப் பார்த்துட்டு நண்பர்கள் சிலர், 'வண்டியை வாங்குனியா, இல்லை, உன் உருவத்துக்குத் தகுந்தமாதிரி ஆர்டர் கொடுத்து செஞ்சியா, உனக்கே உனக்குனு வடிவமைச்ச மாதிரி, நீ ஓட்டும்போது அவ்வளவு அம்சமா இருக்கு'னு சொல்வாங்க. இதுல போறப்ப, குதிரையில் போற உணர்வு வரும்!

என்ன ப்ளஸ்?

இந்த வண்டியோட மொத்த எடை 158 கிலோங்கிறதால, நீண்டதூரம் பயணிக்கும்போது அலுப்பை ஏற்படுத்தாது. இது, 5 கியர்கள் கொண்ட வண்டி. மத்த வண்டிகளைவிட, இந்த வண்டியோட சீட் அகலம் அதிகம் என்பதால், உட்கார்ந்து பயணிக்க நல்லா கம்ஃபர்ட்டா இருக்கு. இந்த வண்டியோட சஸ்பென்ஷன்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். பைக் பெரிய பள்ளத்தில் இறங்கினாலும், அலுங்காம குலுங்காமப் போகுது. அதிர்வுகளைப் பெருசா கடத்தலைனுதான் சொல்வேன். லாங் ரைடுக்கு அலுக்கவே அலுக்காது இந்த அவென்ஜர்.

அதேபோல், அவென்ஜரில் ரொம்பப் பிடிச்ச விஷயம் – இதன் பில்லியன் சீட்தான். சாய்ஞ்கிட்டுப் போறமாதிரி பேக் ரெஸ்ட் இருப்பதால், பெண்கள், குழந்தைகளைப் பின்னாடி அமர வைத்துக்கொண்டு போகும்போது, பயப்படத் தேவையில்லை. பாதுகாப்பா இருக்கு. அதேபோல், இன்ஜினுக்கு முன்னே இன்ஜினை கூல் பண்ணுவதற்காக, கூலர் மாதிரி வச்சருக்காங்க. அதனால், எவ்வளவு விரட்டினாலும், இன்ஜின் சூடாகலை.

மத்த பைக்குகளைவிட, இந்த பைக்கோட கிரவுண்ட் கிளியரன்ஸ் நல்லாவே இருக்கு. ஸ்பீடு பிரேக்கர்கள்லேலாம் கவலையே படத் தேவையில்லை. அப்படியே ஜிவ்வுனு ஏறி இறங்குது அவென்ஜர். அடிப்பகுதி தரையில் இடிபடாது. முன்வீல் டயரைவிட, பின்வீல் டயர் அகலம் அதிகம் என்பதால், ஓட்டுறதுக்கு நல்லா இருக்கும். எங்கேயும் சறுக்காது, தடுமாறாது. அதனால், வண்டியோட ரோடு கிரிப் நல்லாவே இருக்கு. எவ்வளவு தூரமாப் போனாலும், களைப்பே இருக்காது. இதெல்லாம் இதில் உள்ள ப்ளஸ்கள்.

என்ன மைனஸ்?

மைனஸ்னு பார்த்தா, அவென்ஜரின் உயரம் குறைவா இருக்கு. அதனால், கொஞ்சம் வளர்த்தியான ஆட்கள் இதை ஓட்டிக்கொண்டு நீண்டதூரம் போகும்போது, அவர்களுக்கு கால்முட்டிகள் வலிக்கும்னு சொல்றாங்க. நான் உயரம் குறைவான ஆள் என்பதால், எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. செயின் ஸ்ப்ராக்கெட்டுக்குக் கவர் இல்லை. வேகமாகச் செல்லக்கூடிய அதிக சிசி கொண்ட வண்டிகளில் அப்படி செயின் ஸ்ப்ராக்கெட் கவர் இருக்காதுனு சமாதானம் பண்ணிக்கிட்டாலும், எனக்கு இது குறையாகவே இருக்கு. செயினில் அடிக்கடி தூசி, மண் படிந்து, கரரனு சத்தம் வர ஆரம்பிச்சிருது. இதனால், 500 கிலோமீட்டருக்கு ஒரு தடவை செயினுக்கு லூப்ரிகன்ட் அடிக்க வேண்டியிருக்கு.

அதேபோல், இந்த வண்டியோட ஹெட்லைட் வெளிச்சமும் மிக மோசமான அளவில் இருக்கும். இதனால், இரவில் ஓட்டுவதற்குக் கொஞ்சம் சிரமமா இருக்கு. அதேபோல், வண்டிக்கு செல்ஃப் ஸ்டார்ட் மட்டும்தான். கிக் ஸ்டார்ட் கிடையாது. இதனால், எங்கேயாச்சும் பேட்டரி மக்கர் பண்ணும் சூழல் வந்தால், அப்போ வண்டியைத் தள்ள முடியாம அங்கேயே நிறுத்தும் சூழல் இருக்கு.

அவென்ஜர் வாத்தியார் இல்லை; நான் புல்லட் வாத்தியார்!

சர்வீஸ்… பராமரிப்பு எப்படி?

3000 கிலோமீட்டருக்கு ஒருமுறை வண்டிக்கு ஆயில் மாத்திருவேன். நாலு மாசத்துக்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் பன்ணிருவேன். ஆவரேஜா ஒரு சர்வீஸுக்கு ரூ. 2,500 செலவு வரும். அதிகபட்சமா ஒரு சர்வீஸுக்கு ரூ.4,500 வரை செலவு பண்ணியிருக்கிறேன். செலவு அதிகம் வைக்காது. 30,000 கிலோமீட்டர் வண்டி ஓடியிருந்தா, கண்ணை மூடிக்கிட்டு இரண்டு டயர்களையும் புதுசா மாத்திருவேன். 25,000 கிலோமீட்டருக்கு ஒருமுறை செயின் ஸ்ப்ராக்கெட், பிரேக் ஷூவை மாத்திருவேன்.

மத்தபடி, பிரச்னை பண்ணும் சின்னச் சின்ன ஸ்பேர்களை ஜெனரல் சர்வீஸ் கொடுக்கும்போது, அங்க மாத்திருவாங்க. அஞ்சு வருஷமாக இந்த வண்டியை வாங்கிய ஷோரூம்லதான் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அடுத்த சர்வீஸ்ல இருந்து, தனியாகத் தெரிஞ்ச மெக்கானிக்குகிட்ட சர்வீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கிறேன். வண்டியை வாங்கும்போது, லிட்டருக்கு 45 – 48 கிமீ வரை கொடுத்துச்சு. இப்போ, லிட்டர் பெட்ரோலுக்கு லாங் டிரைவ் பைபாஸ்ல போனா, 40 கிலோமீட்டரும், லோக்கல்ல ஓட்டும்போது 35 கிலோமீட்டருக்கு குறையாமலும் கிடைக்குது. 14 லிட்டர் டேங்க் இருக்கு. அதனால், லாங் டிரைவுக்கு ஓகே! என் பெரிய பையன் தனுபன், 'வேற வண்டி வாங்கினாலும், இந்த வண்டியை விக்கக் கூடாது. எனக்கு ஓட்டக் கொடுத்துறணும்'னு சொல்லியிருக்கிறான். அதனால், இந்த வண்டியை விற்கப் போவதில்லை!"