
பைக் \ பஜாஜ் ப்ளாட்டினா 110

100சிசி செக்மென்ட்டுக்கு இவ்வளவு வசதிகள் இருந்தால் போதும் என்கிற வரைமுறையை உடைத்திருக்கிறது பஜாஜ். ஆம், தனது 110 சிசி பைக்கில் ஏபிஎஸ் பிரேக்ஸை அறிமுகப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது பஜாஜ்.
பொதுவாக, பஜாஜ் பைக்குகளின் பிரேக்கிங் ஃபீட்பேக் பற்றி ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அதிவேகங்களில் நம்பிக்கை தராது இந்த பைக். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஹார்டு பிரேக்கிங்குகளில்கூட வீல் லாக் ஆகி ஸ்பின் ஆகும் நிலைமை இனி ப்ளாட்டினாவில் இருக்காது. ஆம், இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் யூனிட்டில் வர இருக்கிறது.
மேலும், இந்த ப்ளாட்டினா 110–ல் ஏபிஎஸ் இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கியர் சேஞ்சிங் இண்டிகேட்டர் என்று கூடுதல் வசதிகளுடனும் வருகிறது ப்ளாட்டினா.
இந்த ப்ளாட்டினா ஏபிஎஸ் மாடலில் இருப்பது விற்பனையில் இருக்கும் அதே 115.4சிசி சிங்கிள் சிலிண்டர் செட்அப் இன்ஜின்தான். இதன் பவர் 8.54bhp@7,000rpm. இதன் டார்க் 9.81Nm@5,000rpm. இந்த கம்யூட்டிங் பைக்கின் சிறப்பே இதன் வெறித்தனமான மைலேஜ்தான். இப்போதும் சிட்டிக்குள் 60 – 64 கிமீ மைலேஜ் தருகிறது ப்ளாட்டினா.
அட, முக்கியமான விஷயம் – இந்த ப்ளாட்டினா 110சிசியில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டு வருகிறது பஜாஜ். ஏற்கெனவே H Gear எனும் மாடலில் இருந்த அதே 5 ஸ்பீடு செட்அப்தான் இதிலும்.
கூடுதல் வசதிகளாக – டெலிஸ்கோப்பிக் முன் பக்க சஸ்பென்ஷன், அலாய் வீல்கள், கேஸ் சார்ஜ்டு ரியர் ஷாக் அப்சார்பர்கள், க்ளியர் லென்ஸ் ஹெல்லைட்ஸ், எல்இடி டிஆர்எல், முன் பக்க டிஸ்க் என்று பல விஷயங்களையும் தருகிறது ப்ளாட்டினா 110.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ், ஹீரோ பேஸன் ப்ரோ, ஹோண்டா CD110 போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக, இந்த ப்ளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கை – 72,224 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் கொண்டு வந்திருக்கிறது பஜாஜ்.
பொதுவாக, மத்திய அரசு 125 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளில் ஏபிஎஸ்–ஸைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கிக் கொண்டிருக்க… ‘ஹலோ, நான் அதுக்கும் மேல’ என்று 110 சிசியிலேயே இந்தப் பாதுகாப்பு வசதியைக் கொண்டு வந்திருக்கும் பஜாஜின் இந்த பாசிட்டிவ் அப்ரோச்சை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.