Published:Updated:

பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஃபர்ஸ்ட் ரைடு: பஜாஜ் பல்ஸர் 250F & 250N

ஆன்ரோடு விலை: சுமார் ரூ.1.64 – 1.67 லட்சம்

பல்ஸருக்கு இப்போது 20 வயசு. நவம்பர் மாத இறுதியில் 2001–ல்தான் உருண்டை வடிவ ஹெட்லைட், ஸ்போக் வீல்கள் என முதல் பல்ஸர் லாஞ்ச் ஆனது. இப்போது எத்தனை மெச்சூர்டு பல்ஸரிடம்! இந்த 20–வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக பல்ஸரின் 250சிசி–யில் இரண்டு மாடல்களை அதே மாதத்தில் லாஞ்ச் செய்து, நம்மை ரைடு செய்து பார்க்கவும் ஆசையாக அழைத்தது பஜாஜ். புனேவில் உள்ள சக்கான் தொழிற்சாலையில் ட்ராக் ரைடு… புனே நகரத்தில் சிட்டி ரைடு… மும்பை சாலையில் ஹைவே ரைடு என்று பல்ஸர் 250 பைக்குகளை ஆசை தீர ஓட்டிப் பார்த்தோம். மைலேஜ் டெஸ்ட் மட்டும் செய்ய முடியவில்லை; கோச்சுக்காதீங்க மக்கா!

ஸ்போர்ட்டி வேணுமா… நேக்கட் வேணுமா?

ஏற்கெனவே சொன்ன மாதிரி இரண்டு பைக்குகள். 250F மற்றும் 250N. அதென்ன F & N? F என்றால் Faired. N என்றால் Naked. ஹைவேஸில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்க விரும்பும் இளசுகளுக்கு, ஏரோடைனமிக் டிசைன் அடிபடாமல் இருக்க ஃபேர்டு பைக். சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர நினைக்கும் புள்ளிங்கோக்களுக்கு நேக்கட் பைக். இரண்டுமே சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள்தான். மற்றபடி ஒரே மெக்கானிசம்தான்.

250F பைக், ஃபேரிங்கோடு ஏதோ ஜெட் விமானம் மாதிரி இருந்தது. ஹெட்லைட் டிசைனும் செம ஷார்ப். முழுக்க எல்இடி மயம்தான். அதுவும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ். முன் பக்க கவுலில் ரியர்வியூ மிரர்களைப் பொருத்தியிருந்தார்கள். உயரமான ஃப்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள், செம ஸ்டைலிஷாக மாற்றியிருந்தது 250F பைக்கை. மற்றபடி அண்டர்பாடியில் ஆரம்பித்து இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல், கும்மென்ற 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், டெயில் லைட் வரை ஒரே டிசைன்தான். டெயில் லைட்டில் அந்த Frosted Lens எஃபெக்ட் செம! 130 செக்ஷன் டயர் கொண்ட பைக்குகளைப் பின் பக்கத்தில் இருந்து பார்க்கையில் கொஞ்சம் குறுகலாக இருக்கிறது. ஆனால், ஓட்டினால் கிரிப்புக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அகலமான டயர்கள் கொடுத்திருக்கலாம் பஜாஜ். கீழே இன்ஜினுக்கு காப்பர் கேஸிங் கொடுத்திருப்பது அழகு. இரண்டிலுமே கியர் லீவரில் ஹீல் ஷிஃப்ட் இல்லை. டோ ஷிஃப்ட் மட்டும்தான். ஷூ போட்டுத்தான் ஓட்ட முடியும். இரண்டு பைக்குகளும் 795 மிமீ உயரம் கொண்டிருந்தாலும், நேக்கட் மற்றும் ஃபேரிங் இரண்டின் ரைடிங் பொசிஷன்களிலும் வித்தியாசம் தெரிகிறது. ஃபுட் பெக்குகள் இரண்டிலுமே பின்னோக்கி இருப்பதால், இரண்டிலுமே ஸ்போர்ட்டினெஸ் தெறிக்கும்.

செமி டிஜிட்டல் மீட்டர் வித்தியாசமாக இருந்தது. டேக்கோவுக்கு மட்டும் அனலாக். பைக்கை ஆன் செய்தால்… முள் ஜர்ரென 12,000ஆர்பிஎம்–க்குப் போய் வருவதே அழகு! டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் கியர் இண்டிகேட்டர், கடிகாரம், இரட்டை ட்ரிப் மீட்டர், ஃப்யூல் மீட்டர், ஓடோ மீட்டர் இருந்தன. சைடு ஸ்டாண்ட் அலார்ம் மற்றும் ஏபிஎஸ் வார்னிங் லைட்டும் கன்ஸோலில் தெரியும். மற்றபடி டிவிஎஸ் மாதிரி புளூடூத் கனெக்ட்டிவிட்டி இல்லை. மற்றபடி பழைய பல்ஸர்களைவிட ஃபிட் அண்ட் ஃபினிஷில் முன்னேற்றம் தெரிகிறது. அதற்காக இந்தப் பெரிய பல்ஸரின் டிசைன் பிடிக்காமல் இல்லை.

இன்ஜின் – பெர்ஃபாமென்ஸ், மைலேஜ்

பல்ஸரை ஒரு பிக் பாயாகக் காட்டுவது இதிலிருக்கும் 249.07சிசி, SOHC, ஆயில்கூல்டு இன்ஜின்தான். ஒரு சிலிண்டர்தான். ஆனால், இரண்டு வால்வுகள். ஸ்டார்ட் செய்தால் ஸ்மூத்னெஸ்ஸோடு ஒரு ஸ்போர்ட்டியான பீட்டும் தெரிகிறது. இது பல்ஸர் N, NS, AS, RS போன்ற சீரிஸ்களில் வராத வெறும் பல்ஸர். சத்தியமாக வேறு எந்த பல்ஸருடனும் ஒப்பிடவே முடியாது. வித்தியாசமாக இருக்கிறது. இதன் பவர் செம வெயிட். 24.5bhp மற்றும் டார்க் 2.15kgm@6,500rpm. இதன் பவரைப் பொருத்தவரை NS200–ல் இருக்கும் அதேதான். இதன் டார்க் NS200 மற்றும் 200F பைக்ஸைவிட அதிகம்.

220 பைக்கைவிட இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும் அருமையாகவே இருக்கிறது. இருந்தாலும் சீட்டிலும் ஃபுட் பெக்ஸ்களிலும் லேசான அதிர்வு தெரிந்தது. இதை அதிர்வு என்று சொல்ல முடியவில்லை; ஆனால், பைக் ஸ்டார்ட் ஆனதற்கான அறிகுறி. இது ஒரு பெரிய குறையில்லை. அடிக்கடி இதன் ரெட்லைன் ஆர்பிஎம்–மைப் பார்க்க முடியாது. இதன் மிட் ரேஞ்ச் இன்னும் கொஞ்சம் பெப்பியாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் 4,000 – 7,000 ஆர்பிஎம் வரை ரெவ் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது பல்ஸர். இது நமக்கும் மகிழ்ச்சி!

புனேவில் வளைத்து நெளித்து இந்த பல்ஸர்களை ஓட்ட ஜாலியாக இருந்தது. இருந்தாலும், ஒரு கோபம் – பஜாஜ் ஏன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸோடு இதை நிறுத்தியது? கொடுத்திருக்கலாம்தான். ஆனால், ஓட்டியபிறகு பெரிதாக அந்தக் குறை தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கியர் ரேஷியோவைக் கச்சிதமாகப் பொருத்தி இருக்கிறார்கள்.

மதிய உணவு முடித்துவிட்டு, பஜாஜ் ட்ராக்கில் ஹைஸ்பீடு டெஸ்ட்டுக்காகக் காத்திருந்தேன். ஆள் அரவமே இல்லாத ட்ராக்கில் ஒரே முறுக்கு. 140 கிமீ வரை எந்தச் சுணக்கமும் தெரியவில்லை. என்ன, பல்ஸர் பார்ட்டிகளே… இந்த வேகம் திருப்திதானே!

மைலேஜைப் பொருத்தவரை அராய் 39 கிமீ என்று க்ளெய்ம் செய்தது பஜாஜ். காலை முதல் மதியம் வரை சிட்டிக்குள் அரை டேங்க் காலி செய்து விட்டேன். அநேகமாக 35 வரலாம். ஒரு 250சிசிக்கு இது ஆஹாதான்!

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் பளீர்!
புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் பளீர்!
பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!
பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!
பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கிண்ணென்று இருக்கிறது
14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கிண்ணென்று இருக்கிறது

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

நான் அடிப்படையில் ஒரு பல்ஸர் மேன்தான். ஆனால், பல்ஸரில் கார்னரிங்குகளிடம் மட்டும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணம், முன் பக்கம் அதிகமான எடை. ஆனால், இந்த பல்ஸர் 250–களில் அப்படி ஒரு பயம் வரவே இல்லை. காரணம், இதை ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்காகவே டிசைன் செய்ததுபோல் இருக்கிறது. அதாவது, எடையை பேலன்ஸ்டு ஆக சமன் செய்திருக்கிறார்கள். இது பல்ஸர் NS200–ன் பெரிமீட்டர் ஃப்ரேமைவிட 3 கிலோ குறைவானது என்பதும் ஒரு காரணம். N பைக்கின் எடை 162 கிலோ. F பைக் 164 கிலோ. இதன் வீல்களும் NS200 பைக்கைவிட அரைக்கிலோ குறைவு. எம்ஆர்எஃப் டயர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கிரிப்பும் ஹேண்ட்லிங்கும் நிச்சயம் பழைய பல்ஸர்களைவிட இது அருமையாகவே இருந்தது.

இதன் ட்யூப்லர் ஸ்டீல் ஃப்ரேம், கிண்ணென இருக்கிறது. பள்ளங்களில் இறக்கி ஏற்றினால் பெரிதாக அலுத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் ஸ்டிஃப் ஆக இதன் சஸ்பென்ஷன் செட்அப் இருக்கிறது.

ஒரு விஷயம் – சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர என்னுடைய சாய்ஸ் – 250Nதான். காரணம், 250F–ல் இருக்கும் ஃபேரிங், முன்பக்க எடையை வழக்கம்போல் அதிகப்படுத்துகிறது. கவுலில் உள்ள சைடு வியூ மிரர்களும் கொஞ்சம் படுத்தத்தான் செய்கின்றன. வளைத்து நெளித்து ஓட்ட ஃபேரிங் இல்லாத 250N நேக்கட் பைக்தான் செமையாக இருக்கிறது.

ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் இந்த பல்ஸரில். தப்பாக கியர் மாற்றினாலும் கடுப்பாகாமல் இருக்கிறது பல்ஸர். 4–வது கியரிலேயே 30 கிமீ–ல் செல்ல முடிந்தது. இரண்டாவது கியரிலேயே 35 கிமீ வரையும் செல்ல முடிந்தது. இதைத்தான் ஜாலி என்று சொன்னேன். 70 கிமீ–ல் 4–வது கியரில் போகும்போது, 20 கிமீ–ல் ஸ்பீடு பிரேக்கரில் ஏறும்போது, நான் கியரைக் குறைக்கவே இல்லை. பல்ஸரும் திணறவே இல்லை.

பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!
பிக் பாய்ஸ் 250சிசி பல்ஸர்ஸ்!

இதன் பிரேக்குகளைப் பொருத்தவரை இத்தாலி நிறுவனத்தைச் சேர்ந்த Grimeca எனும் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. இது மேட் இன் இந்தியாதான். பிரேக்குகளின் தரம் டீசன்ட்தான்; ரொம்ப ஷார்ப் என்றும் சொல்ல முடியவில்லை. 100 கிமீ–க்கு மேல் பறந்து சடர்ன் பிரேக் அடித்துப் பார்த்தேன். என்னதான் பின்பக்கமும் டிஸ்க் இருந்தாலும், இன்னும் ஷார்ப் வேண்டும் என்று தோன்றியது. பின் வீல் மட்டும் ஹார்டு பிரேக்கிங்கில் லாக் ஆகியது. அட, டூயல் சேனல் ஏபிஎஸ் எங்கே பஜாஜ்? மற்றபடி ஓர் அற்புதமான டூரிங் மெஷினாக இருக்கிறது பல்ஸர் 250.

செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே... டேக்கோ மீட்டர் மட்டும் அனலாக்.
செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே... டேக்கோ மீட்டர் மட்டும் அனலாக்.
24.5bhp பவர்... NS200 பைக்கைவிட இன்ஜின் ரிஃபைன்மென்ட் அருமையாக இருக்கிறது.
24.5bhp பவர்... NS200 பைக்கைவிட இன்ஜின் ரிஃபைன்மென்ட் அருமையாக இருக்கிறது.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான். டூயல் சேனல் இல்லை.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான். டூயல் சேனல் இல்லை.
இதன் சீட் உயரம் 795 மிமீ... இரண்டு பேருக்கும் நல்ல சீட்டிங் பொசிஷன் உண்டு.
இதன் சீட் உயரம் 795 மிமீ... இரண்டு பேருக்கும் நல்ல சீட்டிங் பொசிஷன் உண்டு.

பல்ஸர் 250 வாங்கலாமா?

125, 150, 180, 200, 220 என்று எல்லா சிசிக்களிலும் பல்ஸர் இருக்கிறது. இப்போது 250சிசி–யையும் நிரப்பிவிட்டது பஜாஜ். இந்த பல்ஸர் 250–யில் குறைகள் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஸ்லிப்பர் கிளட்ச் அருமை.

இந்த டூ–வீலர் ஜயன்ட் சொல்லியடிப்பது விலையில்தான். இதிலும் அப்படித்தான். யமஹா FZ25/FZ25S மற்றும் வசதிகள் நிறைந்த RTR200 4V–க்கு நெருக்கமாக இருந்தாலும், அதைவிட பவர் அதிகமாக இருக்கிறதே! ஆனாலும், ஜிக்ஸர் 250 மற்றும் பல்ஸர் 220–யைவிட குறைவுதான் பாஸ்!

சிட்டிக்குள் புகுந்து வர 250N… ஹைவேஸில் பறக்க 250F… இதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை! இந்த விலைக்கு டூயல் சேனல் ஏபிஎஸ் மட்டும் இருந்தால், இந்த பல்ஸர்களுக்கு செம ஓட்டு விழும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீல்பேஸ் : 1,351 மிமீ

சீட் உயரம்: 795 மிமீ

பெட்ரோல் டேங்க்: 4 லிட்டர்

கெர்ப் எடை: N:162 – F:164 கிலோ

இன்ஜின்: 249.07 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்கூல்டு

பவர்: 24.5bhp@8,750rpm

டார்க்: 2.15kgm@6,500rpm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு

கிளட்ச் வசதி: ஸ்லிப்பர் அண்ட் அசிஸ்ட் கிளட்ச்

ஹெட்லைட்: எல்இடி புரொஜெக்டர்

வீல்: 17 இன்ச் 100/130 செக்ஷன்

சஸ்பென்ஷன்: டெலிஸ்கோப்பிக்/மோனோஷாக் (மு/பி)

ஏபிஎஸ்: சிங்கிள் சேனல்

டிஸ்க்: 300/230 மிமீ (முன்/பின்)

ஃப்ரேம்: பெரிமீட்டர்