கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அதிர்வுகள் இல்லாத சைலன்ட் பல்ஸர்!

பஜாஜ் பல்ஸர் P150
பிரீமியம் ஸ்டோரி
News
பஜாஜ் பல்ஸர் P150

ஃபர்ஸ்ட் ரைடு: பஜாஜ் பல்ஸர் P150

அதிர்வுகள் இல்லாத சைலன்ட் பல்ஸர்!

விலை: ஆன்ரோடு விலை சுமார் 1.30 – 1.40 லட்சம்

ப்ளஸ்: விலை, ஸ்மூத் இன்ஜின், ஓட்டுதல் தரம்

மைனஸ்: சில ப்ரீமியம் வசதிகள் இருந்திருக்கலாம்.

சில பயணங்களுக்கு எண்ட் கார்டே போட முடியாது. பல்ஸர் பயணமும் அப்படித்தான். 2002–ல்தான் பல்ஸர் எனும் ஆண்களுக்கான அந்தஸ்து பைக் பிறந்தது. 20 ஆண்டுகள் கழித்தும் இப்போதும் பஜாஜின் பல்ஸர் பயணம் நிறைவடையவில்லை. பல்ஸரில்தான் எத்தனை மாடல்கள்! பல்ஸர் வெறியர்களே முழிப்பார்கள் கேட்டால்… அட பஜாஜேகூட!

பல்ஸர் 150சிசியில் மட்டும் சுமார் 9 தடவை ஃபேஸ்லிஃப்ட், மாற்றங்கள் என்று ஏகப்பட்ட பல புதுமைகளைப் புகுத்தியது பல்ஸர். இப்போது 10–வது தடவையாக மாற்றமாகி… இல்லை இல்லை.. புது ஜெனரேஷனாக… அதாவது மறுபிறப்பாக வந்திருக்கிறது 150சிசி பல்ஸர். அதன் பெயர் பல்ஸர் P150.

பல்ஸரின் புதிய அவதாரமான P150 பைக்கை ஓட்டிப் பார்க்க ஹைதராபாத் கிளம்பினேன் – என் கேமரா படையோடு!

அவுட்லுக்… பெரிய வித்தியாசம்!

இப்போது விற்பனையில் இருக்கும் பல்ஸருக்கும் இதற்கும் பார்த்தவுடனேயே வித்தியாசம் கண்டுபிடித்து விடலாம். அது மொழுக் என்றால், இது ‘களுக்’ என செம ஷார்ப். முக்கியமாக, அந்த ஹெட்லைட் டிசைன் சரியான ஷார்ப். அட, பல்ஸர் 150–ல் முதன் முதலாக எல்இடி ஹெட்லைட்… அதுவும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட் கொடுத்திருப்பதற்கு தேங்க்ஸ் பஜாஜ்! புனேவில் ஒரு தடவை பஜாஜிடம் நாம் இதைக் கேட்டதாக ஞாபகம். ‘பல்ஸரில் எல்இடி எப்போ வரும்’ என்று. பஜாஜ் இப்போது கெத்தாகப் பதில் சொல்லியிருக்கிறது. அதைச் சுற்றி ஒரு சின்ன கவுல் கொடுத்திருப்பது அழகு. அந்தப் பெரிய டேங்க்குக்குக் கீழே இருக்கும் ஸ்கூப்… இன்னும் ஷார்ப்பையும் அழகையும் கூட்டுகிறது. 14 லிட்டர் பெட்ரோல் இருக்கிறது இந்த பல்ஸர் P150–ல். இது N160–ல் இருக்கும் அதே கொள்ளளவுதான். சொல்லப்போனால், இந்த செக்மென்ட்டில் அதிக கொள்ளளவு பல்ஸரில்தான். அட, முதன் முதலில் 18 லிட்டர் டேங்க்குடன் வந்ததும் பல்ஸர்தான். வழக்கமாக இல்லாமல், இந்த பைக்கில் இண்டிகேட்டர்கள் அப்படியே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் இருந்து கிளம்பியது வித்தியாசம். ரியர்வியூ மிரர்கள் ஓகே ரகம்!

முக்கியமான மாற்றமாக, அந்த அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட்டைச் சொல்லலாம். என்னா ஸ்போர்ட்டி! வண்டியை ஸ்டார்ட் செய்ததும்… யாருக்கும் தொந்தரவு தராமல்… அதில் வெளிவரும் பீட்… இளைஞர்களின் ஹார்ட் பீட்.

லோ வேரியன்ட்டில் சிங்கிள் சீட் மற்றும் சிங்கிள் பீஸ் ஹேண்ட்பார் இருக்கிறது. நாம் ஓட்டியது டாப் வேரியன்ட். இதன் க்ளிப் ஆன் ஹேண்டில்பார்… செம ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இதில் சீட்டும் ஸ்ப்ளிட்தான். இதன் சீட் உயரம் 790 மிமீ.

அப்படியே பின் பக்கம் கிராப் ரெயில்.. அதுவும் ஸ்ப்ளிட் ஆகி இருந்தது. ஹெல்மெட் லாக் செய்ய நினைப்பவர்களுக்கு இது பெப்பேதான். இதன் டெயில் லைட்கள் ஓகே! எக்ஸாஸ்ட்… ஓ… அதுதான் கீழ் வயிற்றுப் பகுதியில் இருக்கிறதோ! ஓவர்ஆலாக, பழைய பல்ஸர்களிடம் இருந்து இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரமும் பக்காவாக இருக்கிறது. என்ன, பல்க்கியாக இல்லை; ஆனால், உர்றென்று விறைப்பாக இருக்கிறது இந்த பல்ஸர் P150.

சேஸி மற்றும் எடை

இதன் சேஸியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். காரணம், இது புது ஜென் பல்ஸர். அதனால், பல்ஸர் N160–க்கு இணையாக… இல்லை அதைவிட இதன் ஓட்டுதல் தரத்தை சொகுசாக்கி இருப்பது நன்றாகவே தெரிகிறது. இதன் சேஸியே புதுசு. ரொம்ப முக்கியமாக இதன் எடைக் குறைப்பு… இதன் எடை 140 கிலோ. ரெகுலர் பல்ஸரைவிட 10 கிலோ இது எடை குறைவு. இது ஒன்றே கட் அடித்து ஓட்ட ஜம்மென்று இருக்கிறது. அட, N160-யைவிட 14 கிலோ எடை குறைவு!

இன்ஜினில் மட்டும் 4 கிலோ எடை குறைத்திருக்கிறார்கள். இது தவிர வீல்களில் 1 கிலோ… சேஸியில் 2.5 கிலோ… அலுமினியம் ஃபுட் பெக்குகளில் என்று எல்லாவற்றிலும் பார்த்துப் பார்த்து எடைக் குறைப்பை நிகழ்த்தி இருக்கிறதாம் பஜாஜ். லைட்டாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது இந்த பல்ஸர். ஹேண்ட்லிங் பக்கா!

இன்ஃபினிட்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
இன்ஃபினிட்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
தரம் முன்பைவிட சூப்பர்!
தரம் முன்பைவிட சூப்பர்!
பின் பக்கமும் டிஸ்க் இருந்தால் டாப் வேரியண்ட். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சூப்பர்.
பின் பக்கமும் டிஸ்க் இருந்தால் டாப் வேரியண்ட். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சூப்பர்.
14 லிட்டர் பெட்ரோல் டேங்க்
14 லிட்டர் பெட்ரோல் டேங்க்

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

முக்கியமாக சஸ்பென்ஷனைப் பற்றிச் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்கள் எப்போதோ மோனோஷாக்குக்கு மாறிவிட… இந்த பல்ஸரிலாவது மோனோ ஷாக் கொண்டு வரத் தோன்றிய பஜாஜுக்கு நன்றிகள்! இதன் சஸ்பென்ஷன் டிராவல் அருமை. 102–ல் இருந்து 130 மிமீ வரை கூட்டியிருக்கிறார்கள். இதனாலேயே ஓட்டுதல் ஜம்மென்று இருக்கிறது. மற்றபடி இதன் முன் பக்க ஸ்விங் ஆர்ம் மற்றும் 31 மிமீ முன் பக்க ஃபோர்க் கொண்ட டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அதே 135 மிமீ டிராவல். ஆனால், ஓட்டும்போது நன்கு வித்தியாசம் தெரிகிறது.

இது கொஞ்சம் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப்பில்தான் வடிவமைத்திருக் கிறார்கள். பவுன்ஸி ரைடு கிடைக்கும் என்று நினைத்தேன். ரொம்பவும் பவுன்ஸ் ஆகவில்லை. முதுகு வலிக்கு நோ! ஓகேதான். ஹைவேஸில் இதன் நிலைத்தன்மையும் அருமை. வேகமாகப் போகும்போது மட்டும் மேடு பள்ளங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மற்றபடி இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் குறைவாக இருக்கிறது. 165 மிமீ என்பது ஓகே மாதிரி தெரிந்தாலும்… இது சிங்கிள்ஸுக்குத்தான் சரியாக இருக்கிறது. கொஞ்சம் பல்க்கி பார்ட்டிகள் என்றால்… ஸ்பீடு பிரேக்கர்களில் அண்டர்பெல்லி தட்டுகிறது. இதில் இருப்பது 17 இன்ச் வீல்கள். செக்ஷன் இன்னும் அகலமாக இருந்திருக்கலாமோ! இதன் சீட் உயரம் 790 மிமீ; வீல்பேஸ் 1,352 மிமீ என்பது அதிகமும் இல்லை; குறைவும் இல்லை. ஆனால் கட் அடித்து ஓட்ட ஜம்மென்று இருக்கிறது.

டிஸ்க், டிரம் எனும் இரண்டு வேரியன்ட்களில் வருகிறது P150. முன் பக்கம் 260மிமீ டிஸ்க்கும், பின் பக்கம் 230 மிமீ டிஸ்க்கும் இருந்தால் டாப் வேரியன்ட். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உண்டு. இதுவே 130 மிமீ டிரம் பிரேக் இருந்தால்… அது லோ வேரியன்ட். எக்ஸ்ட்ரா… 3,500 ரூபாய் வருகிறது. எனக்குத் தெரிந்து கம்யூட்டிங் பார்ட்டிகளுக்கு லோ வேரியன்ட்டே போதுமானதாக இருக்கும். பிரேக்கிங் ஃபீட்பேக்கும் பக்காவாகவே இருக்கிறது பல்ஸர் P150–ல். டாப் வேரியன்ட்டின் ரைடிங் பொசிஷனும் கொஞ்சம் ஸ்போர்ட்டினெஸ் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்… கியர் செட் அப்… மைலேஜ்!

இந்த பல்ஸர் P150–ல் இருப்பது புது இன்ஜின் செட்அப்! ஆனால், இது சாதா பல்ஸர் 150 மற்றும் புது 150ல் இருப்பதுபோன்ற அதே 56 X 60.7 போர் அண்ட் ஸ்ட்ரோக் செட்அப்தான். அதேநேரம், N160-ல் இருக்கும் புது ஆர்க்கிடெக்ச்சர். இதிலிருப்பது சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு 149.68 சிசி இன்ஜின். ஒவ்வொரு சிலிண்டருக்கும் 2 வால்வ் செட்–அப். ரெகுலர் பல்ஸரைவிடக் கொஞ்சூண்டு பவரும் டார்க்கும் அதிகம். இது 14.5bhp பவரை 8,500rpm–லும், 13.5Nm டார்க்கை 6,000rpm–லும் அளிக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் செட்அப். வழக்கம்போல் 1 டவுன் 4 அப் செட்அப்.

அதிர்வுகள் இல்லாத சைலன்ட் பல்ஸர்!
அதிர்வுகள் இல்லாத சைலன்ட் பல்ஸர்!

இந்த டார்க்கிலும் கியர்பாக்ஸிலும் சில சூட்சுமம் செய்திருக்கிறது போல் இருக்கிறது பஜாஜ். கிட்டத்தட்ட 95% டார்க், எனக்குக் குறைந்த ரெவ்களிலேயே கிடைத்ததுபோல் இருக்கிறது. ஜிவ்வெனச் சீறுகிறது பல்ஸர் P150. இதன் கியர் ரேஷியோ செட் அப் பற்றியும் சொல்ல வேண்டும். குறைந்த கியர்களில் அதிக ரெவ்களிலும் சரி; அதிக கியரில் குறைவான வேகத்திலும் சரி– ஏதோ பெரிய ப்ரீமியம் பைக் போல் தெரிகிறது இந்தக் குட்டி பல்ஸர். உதாரணத்துக்கு, 47 கிமீ வேகத்தை என்னால் கியர் மாற்றாமல் 2–வது கியரிலும் போக முடிகிறது. அதேபோல் மூன்றிலக்க வேகத்தைத் தொட்டுவிட்டு, பிரேக் அடித்து வேகம் குறைத்து… ஆனால், கியரைக் குறைக்கத் தேவையில்லை! அந்தளவு ஓட்டுநர்களுக்கு ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது இந்த பல்ஸர்.

இந்த பல்ஸரின் அறிமுக விழாவில், இதை ‘சைலன்ட் பல்ஸர்’ என்றார்கள் பஜாஜ் குழுமத்தினர். நிஜம்தான்; இதன் ஸ்மூத்னெஸ்தான் இதன் பெரிய பலமாக இருக்கப் போகிறது. அதிக வேகங்களில் கால்களில்… கைகளில் நடுக்கங்கள் தெரியவில்லை. எனக்கு இந்த பல்ஸர் லோ மற்றும் மிட் ரேஞ்ச்களில் N160 போல் ஒரு ஃபன் டு டிரைவ் கிடைத்தது என்பதுதான் உண்மை.

ஆனால், டாப் எண்டில் ‘ஜொய்ங்’ எனப் படுத்தி எடுக்க வேண்டியிருக்கிறது. 100 கிமீ–யைத் தொட முக்கித் தள்ளுகிறது இதன் ஆக்ஸிலரேஷன். இதைக் குறையாகச் சொன்னால் பஜாஜ் கோபித்துக் கொள்ளும். ஆம், ‘இது டாப் ஸ்பீடு க்ரூஸிங்குக்கான பைக் இல்லை’ என்பதை முன்பே சொல்லிவிட்டது பஜாஜ். 0–60 கிமீ–க்கு 5.1 விநாடிகளுக்குள் எடுத்துக் கொண்டது. 100 கிமீ–யைத் தாண்ட 20 விநாடிகளுக்கு மேல் ஆனது. இதன் டாப் ஸ்பீடு 108 கிமீ என்று க்ளெய்ம் செய்தது பஜாஜ். அட, நான் 107 கிமீ வரை பறந்தேன். 108 கிமீ தொடும் வேளையில்… ஹைதராபாத் நெடுஞ்சாலையில் எனக்கு டிஸ்டர்பன்ஸ். ஆக, நிஜம்தான்; இதை சிட்டிக்காகவே பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறது பஜாஜ்.

இதன் மைலேஜ் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்… ரெகுலர் பல்ஸர் சுமார் 45 கிமீ ரியல் டைமில் கொடுப்பதாக இதன் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இந்த P150–க்கு 49 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறார்கள். நமது ஓட்டுதலுக்கு ஹைவேஸில் சுமார் 47 கிமீ–க்கு மேலேயே கிடைத்தது. அப்படியென்றால், சிட்டிக்குள் சுமார் 44.5 கிமீ கிடைக்கலாம். பெரிய வித்தியாசம் இல்லை. ஸோ, கம்யூட்டிங் பார்ட்டிகளையும் திருப்திப்படுத்தி விட்டான் இந்தச் சின்னப் பையன்.

வசதிகள்

இந்த பல்ஸர் வசதிகளில் மட்டும்தான் பெரிதாகத் திருப்திப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் போட்டியாளரான அப்பாச்சி, புளூடூத் கனெக்டிவிட்டி, GTT (Glide Through Technology) என்று வேற லெவலில் போய் விட்டது. பல்ஸர் இதில் பின்தங்கியிருக்கிறது. நல்லவேளை – ஒரு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுத்திருக்கிறார்கள். சிங்கிள் சேனல் ஏபிஎஸ்–க்கு நன்றி! ஆனால் செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுக்குப் பெரிய நன்றி!

பெரிய பைக்குகளில் இருக்கும் இன்ஃபினிட்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அருமை. இதில் கியர் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் கட்ஆஃப், இருக்கும் பெட்ரோலில் எவ்வளவு போகும் என்பதைச் சொல்லும் DTE மீட்டர் போன்ற வசதிகள் உண்டு.

முதல் தீர்ப்பு

இரண்டு வேரியன்ட்களில் சுமார் 1.17 – 1.20 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கிறது பல்ஸர் P150. ஆன்ரோடுக்கு வரும்போது சுமார் 1.30 முதல் 1.40 வரை விலை இருக்கலாம். இது பல்ஸர் N160–யை விட 7,000 முதல் 10,000 வரை மலிவு. அட, அப்பாச்சியை விடவும்தான். ஸ்மூத்தான இன்ஜின் செம என்றாலும், நினைவிருக்கட்டும்; இது ஹைவேஸுக்கான பைக் இல்லை. சிட்டிக்குள் ஓட்ட செமையான ஹேண்ட்லிங், குறைவான விலை, அற்புதமான மைலேஜ் – என்று கம்யூட்டிங் பார்ட்டிகளைத் திருப்திப்படுத்துகிறான் இந்தக் குட்டி பல்ஸர் P150.

அதிர்வுகள் இல்லாத சைலன்ட் பல்ஸர்!