ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2023 - சிறந்த பைக்

மோட்டார் விகடன் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன் விருதுகள்

இந்த ஆண்டின் சிறந்த பைக் என்னென்ன?

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350
ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

பைக் ஆஃப் தி இயர் 2023

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350

வாசகர் ஒருவர், அடிக்கடி லாங் ரைடு செல்வதற்கு பைக் கேட்டிருந்தார். அவருக்கு நாம் ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டரைப் பரிந்துரைத்தோம். உடனே அவர் கேட்ட கேள்வி, ‘சார், வைப்ரேஷன்?’ ஆனால் பைக்கை வாங்கிய பிறகு, ‘வைப்ரேஷனே இல்லைங்க; அதிசயமா இருக்கு’ என்றார் அவர். இதற்குக் காரணம், ராயல் என்ஃபீல்டின் J-Platform–ல் ரெடியான ஸ்மூத்தான 350 சிசி இன்ஜின். இதன் வித்தியாசமான எக்ஸாஸ்ட் நோட்டும் அருமை. இன்னொருவர், ‘என் அக்காகூட இந்த ஹன்ட்டரை ஈஸியா ஓட்டுறாங்க’ என்றார். நிஜமாகவே பெண்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிசைன், ‘பவர் குறைவு’ (20bhp, 27Nm) என்று பலர் குறை கூறினாலும், யாருமே ஓட்டும் விதத்தில் இருப்பது ஹன்ட்டரின் ப்ளஸ். இதன் எடையும் க்ளாஸிக்கைவிட 14 கிலோ குறைவு. 181 கிலோதான். அலாய் வீல்கள் ஸ்டைலிஷ் என்றால், ட்யூப்லெஸ் டயர்கள் பிராக்டிக்காலிட்டியில் இன்னும் சூப்பர். பஞ்சர் பயமே தேவையில்லை. ட்ரிப்பர் நேவிகேஷன், மெட்ரோ வேரியன்ட்டில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் டூயல் சேனல் ஏபிஎஸ், அகலமான டயர்கள் என வசதிகள் பக்கா! சுறுசுறுப்பான ரைடு குவாலிட்டி, 790 மிமீ சீட் உயரம், மீட்டியாரைவிட நல்ல லீன் ஆங்கிள் (ஃபுட் பெக்குகள் சாலையில் உரசும் வரை சாய முடிகிறது), கிரிப்பான சியட் டயர்கள் என்று வழக்கமான ராயல் என்ஃபீல்டு ரசிகர்களைத் தாண்டி, மற்றவர்களையும் உள்ளே இழுக்க எல்லா முயற்சிகளையும் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ரொம்ப முக்கியமாக இதன் விலை! பலத்த போட்டிகளுக்கு இடையில் பலரது மனதையும் ஹன்ட் செய்த ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் 350 பைக்தான், பைக் ஆஃப் தி இயர் 2023.

ஓலா S1
ஓலா S1

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் 2023

ஓலா S1

`ஓலாவின் S1 Pro ஸ்கூட்டர் விலை அதிகமா இருக்கே’ என்று உச்சுக் கொட்டியவர்களுக்கு, சில அம்சங்களைக் குறைத்து, S1 எனும் விலை குறைந்த அடிப்படை மாடலை, 99,000 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் இந்த ஆண்டு விட்டது ஓலா. நல்ல ரெஸ்பான்ஸ். Pro–ல் 4kWh பேட்டரி இருந்தால், S1–ல் இருப்பது 3kWh பேட்டரி. இதை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகிறது. S1 Pro–வுக்கு சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. S1 Pro–வில் 115 கிமீ டாப் ஸ்பீடு போனால், இதில் 90 கிமீ போக முடிகிறது. அதில் எக்ஸ்ட்ராவாக ஹைப்பர் மோடு இருந்தால், இதில் ஸ்போர்ட் மோடு கொடுக்கிறார்கள். அதில் 180 கிமீ–க்கு மேல் ரேஞ்ச் இருந்தால், S1 – 128 கிமீ ரேஞ்ச் (எக்கோ மோடு) தருகிறது. மற்றபடி இரண்டிலுமே 5.5kW மோட்டாரில், 8.5kW பீக் அவுட்புட் பவர் கிடைப்பதால், இரண்டுக்குமே பெர்ஃபாமன்ஸ் பெரிதாகவெல்லாம் வேறுபாடு தெரியவில்லை. வசதிகளைப் பொருத்தவரை – முக்கியமாக க்ரூஸ் கன்ட்ரோலைத் தவிர நேவிகேஷன், 7 இன்ச் TFT டச் ஸ்க்ரீன், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, மியூசிக், ரிவர்ஸ் மோடு என்று பல வசதிகளையும் கொடுக்கிறார்கள் இந்த S1–ல். இதைத் தாண்டி S1 Pro–வைவிட 4 கிலோ எடை (121கிலோ) வேறு குறைவு என்பதால், ஓட்டுவதற்கும் வாகாக இருக்கிறது. சிலருக்கு விலை குறைந்த மாடல் வாங்கினால், ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும்தானே! இதில், அப்படிக் கூச்சமடையத் தேவையில்லை. காரணம், இது ஓவர்ஆலாகப் பார்த்தால்… 12 இன்ச் வீல்கள், 220/180மிமீ டிஸ்க், CBS பிரேக்கிங் சிஸ்டம் என்று டாப் எண்ட் போலவேதான் இருக்கிறது. சொல்லப் போனால், இந்த S1 மாடல், S1 Pro–வைவிட எல்லா வகைகளிலும் லாபமாகவே இருக்கிறது. வாழ்த்துகள் ஓலா S1.

பஜாஜ் CT 125X
பஜாஜ் CT 125X

கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர் 2023

பஜாஜ் CT 125X

100 சிசி வாங்கும் விலையில்... 100 சிசி பைக் கொடுக்கும் மைலேஜில்... 150 சிசி பைக்குகளில் இருக்கும் ஓட்டுதல் தரத்தில் - ஒரு 125 சிசி பைக்கில் கிடைத்தால்… அதுதான் பஜாஜ் CT 125X. இது தரும் 8,000rpm@10.9bhp பவரும், 5,500rpm@11Nm டார்க்கும் (CT 110X-யைவிட 2.3bhp – 1.2Nm அதிகம்) – சிட்டிக்குள் கம்யூட் செய்ய அற்புதமாக இருக்கின்றன. மேலும், ஒரு மாதிரியான கரடுமுரடான பயணங்களுக்கு ஏற்றபடியும் இதை டிசைன் செய்திருக்கிறது. ப்ரீமியம் பைக் இல்லை என்பதால், வளவளவென வசதிகளை இதில் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும், ஹேண்டில்பாரில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுத்திருப்பது, பஜாஜின் தாராள மனசைக் காட்டுகிறது. (இருந்தாலும், போட்டியாளர்களிடம் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் வசதியை அடுத்த வெர்ஷனில் எதிர்பார்க்கிறோம் பஜாஜ்!) டிஸ்கவர் 125 பைக்கின் சிங்கிள் கிரேடில் ஃப்ரேமில் இதை ரெடி செய்திருப்பதால், ஓட்டுதலும் பக்கா! மற்ற போட்டியாளர்கள் போல் ஸ்மூத் ஸ்டார்ட், இன்ஜின் கில் ஸ்விட்ச் போன்றவை இல்லையென்றாலும், கிராமப்புற விவசாயிகள் கிராமங்களில் கம்யூட் செய்ய இதை வாங்கித் திரிவதைப் பார்க்க முடிகிறது. இதன் நீளமான சீட், அவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். அதைவிட, ஒரு லட்ச ரூபாய்க்குள் இப்போதெல்லாம் பைக் வாங்குவது – கம்யூட்டர்களுக்குப் பெரிய சவால். 1 லட்சத்துக்கும் ரொம்பக் குறைவாக (93,00 ரூபாய்) ஒரு 125 சிசி பைக் வாங்க வேண்டுமென்றால், பஜாஜ் ஷோரூமைத் தவிர வேறெங்கேயும் போக முடியாது. மைலேஜ், விலை என்று எல்லாவற்றிலும் Value for Money பைக்காக அசத்தும் CT 125Xதான் இந்த ஆண்டின் சிறந்த கம்யூட்டர் பைக்.

பஜாஜ் பல்ஸர் N160
பஜாஜ் பல்ஸர் N160

எக்ஸிக்யூட்டிவ் பைக் ஆஃப் தி இயர் 2023

பஜாஜ் பல்ஸர் N160

ஒரு 250 சிசி பைக் பிடித்திருக்கிறது; ஆனால், அதை வாங்கக் காசில்லை என்பவர்களுக்கு, இந்த N160 ஒரு வரப்பிரசாதமாக வந்தது. ஆம், பல்ஸர் N250–ல் சின்ன இன்ஜினைப் பொருத்தி, 160 சிசி வாடிக்கையாளர்களுக்கு ஒரு எக்ஸிக்யூட்டிவ் பைக்காக மாற்றிய பெருமை மறுபடியும் பஜாஜையே சேர்கிறது. இந்த செக்மெண்ட்டில் எடை அதிகமான பைக்காக (154கிலோ) இதன் பவர் டு வெயிட் ரேஷியோவில் மற்ற போட்டியாளர்களை விட இது பின்தங்கினாலும், ரியர் டைமில் இது செம டீசன்ட் பார்ட்டி. இன்ஜின் அத்தனை ஸ்மூத் மட்டுமில்லை; உதாரணத்துக்கு, 5–வது கியரில் 120 கிமீ டாப் ஸ்பீடில் போய்க்கொண்டிருக்கும்போது, பிரேக் அடித்து 30 – 35 கிமீக்குள் வந்தபிறகு கியரைக் குறைக்கவில்லை என்றாலும், இன்ஜின் கோவித்துக் கொள்ளவில்லை. அப்படியே ஆக்ஸிலரேட்டர் திருகினாலும் முக்காமல் போகிறது. இதன் லைட் கிளட்ச் இன்னொரு ஸ்பெஷல். அட, ஹை ஸ்பீடு நிலைத்தன்மையும் பக்கா! இதன் லோ வேரியன்ட்டிலேயே 37மிமீ ஃபோர்க், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போன்றவை நல்ல ஓட்டுதல் அனுபவத்தை அளிக்கின்றன. சிட்டிக்குள் புகுந்து புறப்பட ஏதுவாக இருக்கிறது இந்த பல்ஸர். N250 –யில் இருக்கும் Distance to Empty போன்ற பல விஷயங்களை இதிலும் கொடுத்திருந்தாலும், அடுத்த மாடலில் பஜாஜ், புளூடூத் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. ஸ்டைல், வசதிகள், பெர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் என்று எல்லா விஷயங்களிலும் எக்ஸிக்யூட்டிவ்வாக மாற நினைப்பவர்களுக்குச் சரியான சாய்ஸாக இருக்கும் பல்ஸர் N160, இந்த ஆண்டின் சிறந்த எக்ஸிக்யூட்டிவ் பைக்.

டிவிஎஸ் ரோனின் 225
டிவிஎஸ் ரோனின் 225

ரெட்ரோ பைக் ஆஃப் தி இயர் 2023

டிவிஎஸ் ரோனின் 225

ரெட்ரோ ஸ்டைலுக்கும் டிவிஎஸ்–க்கும் சம்பந்தமே இல்லை என்கிற தவறான பேச்சை உடைத்து, அதில் ஜெயிக்கவும் செய்திருக்கிறது டிவிஎஸ் ரோனின் 225. டிவிஎஸ்-ஸில் இருந்து ஒரு க்ரூஸரா என்று இந்த ஆண்டு எல்லா ரைடர்களும் வியந்தார்கள். ஸ்க்ராம்ப்ளர் மற்றும் நியோ ரெட்ரோ பைக்குகளை இன்ஸ்பயர் செய்து செய்யப்பட்ட இந்த ரோனின், பார்த்தவுடனேயே எல்லோரையும் மயக்கி விட்டது. ‘இந்த ரெட்ரோ பைக் ஹை ஸ்பீடு க்ரூஸிங்குக்கானது இல்லை’ என்று ஏற்கெனவே டிவிஎஸ் நம்மிடம் சொல்லிவிட்டது. ஆனால், இதன் ஈஸியான ஓட்டுதலும், சிட்டிக்குள் இதன் போதுமான பெர்ஃபாமன்ஸும், ஷார்ட் கியர் செட்அப்பும் வாவ் ஃபேக்டர்கள்! முக்கியமாக கேடிஎம் பைக் போல் கிடைக்கும் அந்த பிக்–அப்பைப் பற்றிப் பலர் சிலாகிக்கிறார்கள். அட, ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350–யை விட இதன் பீக் டார்க் அவுட்புட் சீக்கிரமாகவே கிடைத்து விடுவது சூப்பர். அதிக கியரில் குறைந்த வேகத்தில் போனால் மட்டுமில்லை; 15 கிமீ வேகத்தில் 3–வது கியரில் இருந்து திருகினாலும், பைக் சலித்துக் கொள்ளாமல் ரெஸ்பாண்ட் செய்வது அருமை. 181 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், டிவிஎஸ் Rambler டயர்கள், குறைவான 160 கிலோ எடை, செம பிக்–அப் என்று ஓட்டுதலில் மட்டுமல்லாமல்… தோற்றத்திலும் ரெட்ரோவுக்கான பல அம்சங்கள். உதாரணத்துக்கு தங்க நிற USD ஃபோர்க், பெரிய க்ரூஸர்களில் இருப்பதுபோன்ற செயின் டிரைவ் கவர், உயரமான Swept Back ஹேண்டில்பார்கள், அதற்கேற்ற அலாய் வீல்கள், 14 லிட்டர் டேங்க் என்று பார்ப்பதற்கு ஒரு குட்டி ஹார்லி டேவிட்சன் மாதிரி இருக்கும் டிவிஎஸ் ரோனின்தான் இந்த ஆண்டின் சிறந்த ரெட்ரோ பைக்.

ஜாவா 42 பாபர்
ஜாவா 42 பாபர்

டிசைன் ஆஃப் தி இயர் 2023

ஜாவா 42 பாபர்

டிவி விளம்பரங்களில் இந்த ஜாவா பைக்கைக் காட்டும்போது, ஏதோ அமெரிக்க ஸ்டைல் பைக் என்றுதான் நினைக்கத் தோன்றியது. இதன் சிங்கிள் Scooped–out சீட், Chopped ஃபெண்டர்கள் என்று இந்த டிசைன், நிஜமாகவே வேற லெவல். பெராக் பைக்கைப்போல் இருந்து விடக் கூடாது என்பதற்காக – ஓரத்தில் எக்ஸாஸ்ட்டுக்கு க்ரோம் ஃபினிஷ் கொடுத்தது (பெராக்கில் ஃபுல் பிளாக்), டேங்க்கில் இருக்கும் அந்த டேங்க் பேடுகள் நம் முழங்கால்களைக் கிச்செனக் கவர்வது, யெஸ்டி ரோட்ஸ்ட்டரில் இருந்து பெறப்பட்ட எல்இடி லைட்ஸ் என்று பைக் ரைடர்களுக்கு இதைப் பார்த்ததும் பிடிக்கும். ட்யூபுலர் கிரேடில் ஃப்ரேம் கொண்ட இந்த பைக்கின் பின் பக்க மோனோஷாக் அப்ஸார்பரை – 7 ஸ்டெப்பில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். 280/240 மிமீ டிஸ்க் என்று டூயல் சேனல் ஏபிஎஸ் வேறு பக்கா! அட, பெராக்கைப்போலவே இதிலும் 750 மிமீ சீட் உயரம்தான் என்பது, உயரம் குறைந்த ரைடர்களுக்கு வரப்பிரசாதம். முழுக்க எல்இடி லைட்டிங், நெகட்டிவ் LCD டிஸ்ப்ளே கொண்ட ஒற்றைக் குடுவை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூ–வே அட்ஜஸ்டபிள் சீட், ரியர் ஃபெண்டரில் சின்ன லக்கேஜ் ரேக், ஹேண்டில் பாரில் கீழே தொங்கும் வித்தியாசமான அந்த மிரர்கள் (Accessories) என்று டிசைனில் கலக்குகிறது. ‘இந்த 2.30 லட்ச ரூபாய் பைக்கில் சிங்கிள் சீட்தானா’ என்று மைனஸையே ப்ளஸ் ஆக்குகிறது ஜாவா. ஆம், மார்க்கெட்டில் இந்த சிங்கிள் சீட் டிசைன் கொண்ட பைக்குக்குப் போட்டியே இல்லாமல் ஜெயிக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ்ஸும், பிராக்டிக்காலிட்டியும் கொண்ட இந்த நியோ–ரெட்ரோ ரோட்ஸ்ட்டர் பைக்தான், இந்த ஆண்டின் சிறந்த கூல் டிசைன் பைக்!

யெஸ்டி அட்வென்ச்சர்
யெஸ்டி அட்வென்ச்சர்

அட்வென்ச்சர் பைக் ஆஃப் தி இயர் 2023

யெஸ்டி அட்வென்ச்சர்

உண்மையிலேயே இந்தப் போட்டிதான் பெரிய டாஸ்க்காக இருந்தது வாசகர்களுக்கு. காரணம், சுஸூகி வி–ஸ்ட்ராம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 Rally, ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411, யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் என்று இந்த செக்மென்ட்டில் இந்த ஆண்டுக்கான போட்டியாளர்கள் குவிந்து விட்டார்கள். வசதிகளில் முதலில் சொல்லியடிக்கிறது இந்த யெஸ்டி அட்வென்ச்சர். ஹிமாலயன் போன்ற பைக்குகளில் செமி டிஜிட்டல் ஸ்க்ரீன் இருந்தால், இதிலிருப்பது ஃபுல்லி டிஜிட்டல் ஸ்க்ரீன். ஏதோ கார்களில் இருக்கும் டச் ஸ்க்ரீன் மாதிரி கெத்தாக இருக்கிறது. முழுக்க எல்இடி மயம். யெஸ்டியில் ஏபிஎஸ்–க்கே எக்ஸ்ட்ரோ மோடுகள் இருப்பதெல்லாம் வாவ்! அட்வென்ச்சருக்கு முக்கியமானதே ஆஃப்ரோடுதானே! இதன் சஸ்பென்ஷன் டிராவல் சூப்பர். மு:200/பி:180 மிமீ என்பது செம அட்வென்ச்சர் டிராவல் கிடைக்கும். முதுகுவலிக்கு சான்ஸே இல்லை. கிரவுண்ட் கிளியரன்ஸும் 220 மிமீ என்பது சூப்பர். ஹிமாலயனை விடவும் 11 கிலோ எடை குறைவு என்பதும் ப்ளஸ். மேலும் பெர்ஃபாமன்ஸில் ஹிமாலயனை (24.3 bhp) ஒப்பிடும்போது, பவர் ரொம்பவே அதிகம். இதில் 30.2bhp. கியர்பாக்ஸும் 1 அதிகம். 6 ஸ்பீடு என்பது சூப்பர். டேங்க்கும் அரை லிட்டர் அதிகம் (15.5 லிட்டர்). ஆன்ரோடு விலையும் 2.58 – 2.67 லட்சம் வரை என்பது ஓகே! இப்படி எல்லா வகைகளிலும் அட்வென்ச்சர் செய்ய ஏதுவாக இருக்கும்; பெயரிலேயே அட்வென்ச்சரை வைத்திருக்கும் யெஸ்டி அட்வென்ச்சர்தான், இந்த ஆண்டின் சிறந்த அட்வென்ச்சர் பைக்.