கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இருக்கிறவங்களுக்கு ஒரு பைக்; இல்லாதவங்களுக்கு பல பைக்ஸ்!

 பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா
பிரீமியம் ஸ்டோரி
News
பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா

பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா

“என்னைக்காவது ஒரு நாள் என் சாதனைகளைப் பார்த்து அப்பா–அம்மா சமாதானம் ஆகிடுவாங்க!’’ என்று இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் விகடனுக்கு முதன் முதலாகப் பேட்டி கொடுத்த நிவேதாவின் சவால் இப்போது பலித்து விட்டது. ‘‘என் பொண்ணு எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்’’ என்று உச்சி முகர்கிறார்கள் நிவேதாவின் பெற்றோர்.

ஆம்! ரேஸ் உலகில் இப்போது தவிர்க்க முடியாத முகமாகி விட்டார் நிவேதா ஜெஸிகா. எந்தவிதப் பின்னணியும் இல்லாமல், பயிற்சி முறைகளும் இல்லாமல், கோச்சும் இல்லாமல், பைக் வசதிகளும் இல்லாமல் தனது சொந்தக் கைகளில் ஆக்ஸிலரேட்டர் முறுக்கி, இப்போது நேஷனல் சாம்பியன்ஷிப் ஆகியிருக்கும் நிவேதா, இப்போதைக்கு பெண்கள் பத்திரிகையில் கவர்ஸ்டோரி கன்டென்ட்.

‘‘கோச் இல்லைன்னு சொல்ல முடியாது. இந்தியாவோட ஃபர்ஸ்ட் மோட்டோ ஜீபி ரைடர் சரத்குமார் அண்ணா தெரியும்ல... அவர்தான் எனக்குக் கொஞ்சநாள் கோச்சா இருந்தார். அவருக்கு எப்பவுமே என் நன்றிகள் உண்டு!’’ என்று அடக்கமாகப் பேசுகிறார் நிவேதா.

நிவேதா ஜெஸிகா
நிவேதா ஜெஸிகா

நிவேதாவுக்கு இப்போது வயது 22. எல்லோருக்கும் சைக்கிள் ஓட்டணும் என்ற ஆசை வரும்போது, நிவேதாவுக்கு பைக் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை. அதுவும் சும்மா ஸ்பீடோ மீட்டர் முள்ளுக்கே வலிக்காமல் ஓட்டுவதில் நிவேதாவுக்கு இஷ்டம் இல்லை. ‘‘அதுக்குனு நான் ஹார்ஷ் டிரைவர்னு நினைச்சுடாதீங்கண்ணா. ட்ராக்கில்தான் விரட்டுவேன். கம்யூட்டிங்கில் என்னை மாதிரி சாந்தமா பைக் ஓட்டுற பொண்ணை நீங்க பார்க்க முடியாது’’ – மறுபடியும் அடக்கம்.

சின்ன வயதில் பக்கத்து வீட்டு அங்கிள் ஒருவரின் அப்பாச்சிதான் நிவேதா முதன் முதலாக ஆக்ஸிலரேட்டர் முறுக்கிய பைக். வீட்டுக்குத் தெரியாமல் ஒருமுறை அப்பாச்சியில் ஹாயாக `ரைடு' போனதைப் பார்த்த அப்பாவிடம் செம ‘ரைடு’ வாங்கியிருக்கிறார் நிவேதா. ஆனால், நாளடைவில் வீட்டுக்குத் தெரியாமல் பைக் ரேஸிலேயே கலந்து கொண்டு, கப்போடுதான் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதை நிறைவேற்றியும் காட்டியதுதான் ஹைலைட்.

 பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா
பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா

பைக் ரைடிங் என்றால் நிவேதாவுக்கு உயிர். அதற்காகவே ‘ராயல் என்ஃபீல்டு’ நிறுவனத்தில் பைக் ரைடிங் கோ–ஆர்டினேட்டர் பணியில் சேர்ந்தார் நிவேதா. அதாவது, ராயல் என்ஃபீல்டு சார்பாக நடக்கும் ரைடிங் ஈவென்ட்களில் கலந்து கொள்ளும் ரைடர்களுக்கு நிவேதாதான் கோச்.

ராயல் என்ஃபீல்டு நிவேதா என்றால் பிரசித்தம். ‘‘ஊர் ஊரா சுத்துறது வாடிக்கையாகிடுச்சு. சும்மா ரோட்லயே பைக் ஓட்டி போர் அடிச்சுடுச்சு.

மூணு வருஷம் முன்னாடி, பைக் ரேஸில் பொண்ணுங்களும் கலந்துக்கலாம்னு ஒரு விளம்பரம் பார்த்து, அதுக்கு முயற்சி எடுத்தேன். எனக்கு அப்போ வழிகாட்டுறதுக்கு யாருமே இல்லை. ‘பொண்ணுங்கள்லாம் ரேஸ் ஓட்ட முடியாது. அது சும்மா ஹம்பக். ஏதாவது கனவு கண்டுக்கிட்டிருக்காதே’னு எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒருத்தங்களே என்னைத் திசை மாத்திவிட்டுட்டாங்க. அவங்க பேச்சை நம்பி அந்த வருஷம் விட்டுட்டேன். ஆனா எனக்கு ஐடியா சொன்ன அவங்கதான் அந்த வருஷத்தில் பைக் ரேஸில் ஜொலிச்சாங்க.

இருக்கிறவங்களுக்கு ஒரு பைக்; இல்லாதவங்களுக்கு பல பைக்ஸ்!

அடுத்த வருஷம் நான் விடலை. டிவிஎஸ் ரேஸிங்கில் பொண்ணுங்களுக்கு செலெக்ஷன் வெக்கிறாங்கனு கேள்விப்பட்டேன். வேலை செஞ்சு சேர்த்து வெச்ச காசுல பெங்களூரு போனேன். ஆனா, டாப்–15–ல்கூட என்னால் வர முடியலை. முறையான பயிற்சி இல்லாததால் எலிமினேட் ஆகி வெளியே வந்துட்டேன். இது எதுவுமே வீட்டுக்குத் தெரியாது. அப்புறம் விடலை. ஹோண்டாவில் பொண்ணுங்களுக்காக ரேஸ் வெக்கிறாங்கனு கேள்விப்பட்டு, அதில் கலந்துக்கிட்டேன்.

அப்போ கோவை கரிமோட்டார்ஸ் ட்ராக்கில் நடந்த ஒன்மேக் சாம்பியன்ஷிப்பில் ஓவர்ஆலாக 4–வது வந்தேன். செம ஹேப்பி.

கப்போட வீட்டுக்குப் போனா, அப்பா–அம்மாவுக்கு ஷாக். சந்தோஷப்படுறதா, ரேஸ் ஓட்டினதுக்காக திட்டுறதானு தெரியாமக் குழம்பிட்டாங்க. இப்போலாம் அப்பா–அம்மா என்னைத் திட்டுறதே இல்லை.

ரேஸில் சரத் அண்ணாவுக்கு அப்புறம் அவங்கதான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!’’ என்று ட்ராக்கில் பைக் ஓட்டுவதுபோலவே ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பேசினார் நிவேதா.

ஃபார்முலா ஜூனியர் ரேஸில் ரன்னர் அப், சூப்பர் ஸ்டாக் 165 சிசி பிரிவில் ரன்னர் அப், போன ஆண்டு நடந்த டிவிஎஸ் அப்பாச்சி 200 சிசி ஒன்மேக்கில் *1-வது* இடம்'... என்று நிவேதாவுக்கு, இப்போது ரேஸிங் உலகில் தனி முத்திரை உண்டு.

2017–ல் கோவாவில் ராயல் என்ஃபீல்டு நடத்திய ரைடர் மேனியாவில் 500சிசி க்ளாஸில், முதல் இடத்தில் போடியம் ஏறிய முதல் தென்னிந்தியப் பொண்ணு நிவேதா. வெளிநாட்டு ரேஸையும் விட்டு வைக்கவில்லை. மலேசியன் கப் ரேஸிங்கில் புரொஃபஷனல் பசங்களுடன் மோதி 4–வது இடத்தில் வந்ததை இப்போதும் பெருமூச்சுடன் சொல்கிறார் நிவேதா. ‘சிறந்த பெண் ரைடர்’ என்கிற விருதும் கிடைத்ததில் நிவேதா செம ஹேப்பி.

‘‘போன வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் நிவேதாவுக்கு என்னாச்சு’’ ‘‘நான் என் சொந்த சம்பாத்தியத்தில்தான் ரேஸ் ஓட்டுறேன். என்னால் பைக்கைப் பராமரிக்க முடியலை. இப்போதைக்கு எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை – என் மெக்கானிக் அண்ணாதான். போன நேஷனல் சாம்பியன்ஷிப்பில் நினைச்ச மாதிரியே பைக் சொதப்பிடுச்சு. அதான் 4–வதுதான் வர முடிஞ்சுது. அதுக்குப் பதிலா டிராக் ரேஸில் விடலை. அடுத்த வருஷம் நேஷனல்ல ஒரு கை பார்த்துட வேண்டியதுதான்’’ என்று சவால் விட்ட நிவேததான், 2019 டிராக் ரேஸ் (Drag Race) சாம்பியன்.

 பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா
பைக் ரேஸர்: நிவேதா ஜெஸிகா

அதாவது, ட்ராக் ரேஸ் (Track Circuit Race) என்றால் - ரேஸ் ட்ராக் முழுவதுமாக ஓட்டி, லேப்களை ஃபினிஷ் செய்வது. டிராக் ரேஸ் (Drag Race) என்றால் - ஒரு நேர்கோட்டு ட்ராக்கை (Straight Stretch) மட்டும் விரைவாகக் கடந்து ஜெயிப்பது. அதில் நிவேதாதான் இப்போதைக்கு அதிவேகப் பெண்மணி. மொத்தம் 4 சுற்றுகள் நடக்கும் டிராக் ரேஸில் இரண்டாவது சுற்று தவிர மூன்றிலும் அம்மணிதான் ஃபர்ஸ்ட்.

ஆரம்பத்தில் டிவிஎஸ் பைக்கையே பயந்து பயந்து எடுத்த நிவேதா – இப்போது யமஹா, ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, டிவிஎஸ் என்று எல்லா பைக்குகளையும் அசால்ட்டாக டீல் செய்கிறார். இப்போதைக்கு ஆக்டிவாவுக்கு மட்டும் சொந்தக்காரியாக இருக்கும் நிவேதாவின் லட்சியம்-சொந்தக் காசில் ஒரு ட்ரையம்ப் பைக் வாங்க வேண்டும் என்பதுதான். ‘‘இருக்கிறவங்களுக்கு ஒரு பைக்; இல்லாதவங்களுக்கு பல பைக்ஸ். இப்போதைக்கு அப்படித்தான் சமாதானப்படுத்திட்டு இருக்கேன்’’ என்று மழலையாக பன்ச் அடித்துவிட்டுப் பறந்தது இந்த ரேஸ் கிளி.