பிரீமியம் ஸ்டோரி
உங்களிடம் `நச்’சென்று ஒரு பைக் இருக்கிறது. ஊரடங்கு இல்லை. நேரமும், கையில் பணமும் ஓரளவு இருக்கிறது. அதிகபட்சம் ஆந்திரா, கர்நாடகா, வடஇந்தியா, அட… இமயமலை வரை போவீர்களா? ரோஹித் அதுக்கும் மேல!
  • சட் சட்’ என ப்ளான் போட்டு, `தட் தட்’ என தனது புல்லட்டில் நேபாளம், பூட்டான் வரை பறந்து விட்டு வருவார். `பைக்கிலேயேவா... நேபாளமா… பூட்டானா’ என்று உங்களைப்போல்தான் நானும் ஆச்சரியமாகக் கேட்டேன்.

 பைக் பயணம்
பைக் பயணம்
  • `என்ன.. வாண்டர்லஸ்ட்… அதாவது ஊர் சுத்துவாரு.. அவ்வளவுதானே’ என்று ரோஹித்தை நானும் சாதாரணமாகத்தான் நினைத்தேன். ஆனால், ரோஹித்திடம் ஒரு கொள்கை உண்டு. ஆம், இந்தியா மட்டுமில்லை; எங்கே போனாலும் தனது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டில்தான் போவேன் என்று அடம்பிடிக்கிறார் ரோஹித். ``அப்படிலாம் இல்லை, எல்லா பைக்குகளிலும் ரைடு போயிருக்கிறேன்’’ என்று சொல்லும் ரோஹித், பயணம் போனால் நான்கைந்து மாதங்கள் வரை சொந்த ஊர்ப் பக்கம் திரும்புவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • சென்னையைச் சேர்ந்த ரோஹித் அசோக், இதற்கு முன்பு மும்பையில் வழக்கறிஞர், தனியார் நிறுவன ஊழியர். ஆனால், பயணத்தின் மீது கொண்ட காதலால், பார்த்த வேலைகளையெல்லாம் துறந்துவிட்டு, இப்போது முழுநேர வாண்டர்லஸ்ட். சோஷியல் மீடியாக்களில் ‘TollFreeTraveller’ எனும் சேனலில் தனது பயண வீடியோக்களை, புகைப்படங்களை அப்லோடு செய்வதுதான் ரோஹித்தின் இப்போதைய முழுநேரப் பணி.

 பைக் பயணம்
பைக் பயணம்
  • ``மும்பையில்தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போ லீவுல ஃப்ளைட் அல்லது ரயிலில்தான் பயணம். இந்த தடவை நம்ம பைக்கிலேயே சென்னை போனா என்னனு ஒரு ஐடியா. சட்டுனு கிளம்பிட்டேன்! இப்போ எங்க போனாலும், என்னோட பைக்தான்!’’ என்று சொல்லும் ரோஹித்துக்கு, இன்னொரு கொள்கையும் உண்டு. ஆம், கூட்டுச் சேர்ப்பதில் ரோஹித்துக்கு உடன்பாடில்லை. இப்போதைக்கு இந்தியாவின் எல்லா ஏரியாக்களையும், தனது தண்டர்பேர்டிலேயே சோலோவாக கவர் செய்துவிட்டார் ரோஹித்.

  • ``நான் சோலோ ரைடுதான் போவேன்ங்கிறதுல செல்ஃபிஷ் மட்டும் இருக்குனு நினைச்சுடாதீங்க. ஒரு தன்னம்பிக்கையும் இருக்கும். பிரச்னைனு வரும்போது, இரண்டு பேர் இருந்தா ஆளுக்கொரு ஐடியா வரும். நம்மால அவங்களுக்குப் பிரச்னை ஆகிடக் கூடாதில்லையா! அதான்!’’ என்கிறார்.

 பைக் பயணம்
பைக் பயணம்
  • ஒரு தடவை மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் ஃபெர்ரி பயணத்தின்போது, ஒருவர் சொன்ன ஐடியாவைக் கேட்டு நாகலாந்துக்கு தண்டர்பேர்டை விரட்ட… சாலையே இல்லாத, ஆள் அரவமே இல்லாத, பெட்ரோல் பங்குகளே இல்லாத, கூகுள் மேப்பே வழிசொல்லத் திணறிய இடத்தில், பைக் ஸ்டார்ட் ஆகாமல் திணறி, தங்க இடம் இன்றி, வனவிலங்குகள் உலவும் காட்டுக்குள் டென்ட் அடித்துத் தங்கி, ஊர் போய்ச்சேர்ந்ததெல்லாம் த்ரில்லிங் கதைக்கான அத்தியாயம். அதேபோல் – சாலைகளுக்கு நடுவே அருவி, ஓடைகள், பனிச்சரிவுகளையெல்லாம் சமாளித்து முஷ்டாங் எனும் பனிமலை, ராரா எனும் ஜில் ஏரி போன்ற இடங்களுக்குப் போனதெல்லாம் வேற லெவல். அந்த ஊர் மக்களே, ``இங்கெல்லாம் பைக்கில் யாருமே வந்ததில்லை; நீங்கதான் ஃபர்ஸ்ட்’’ என்று ரோஹித்தை நினைத்து வியந்திருக்கிறார்களாம்.

  • பொதுவாக, நேபாளம் வேறொரு நாடுதான். ஆனால், இங்கே பாஸ்போர்ட் எல்லாம் தேவையில்லை என்கிறார் ரோஹித். ``சாலை வழியா போனா பாஸ்போர்ட் கேக்கவே இல்லை. அதுக்குப் பதிலா நமக்கும், நம் பைக்குக்கும் ஒரு கஸ்டம் கிளியரன்ஸ் சோதனை உண்டு. `Bansar’ என்றொரு விண்ணப்பம்தான் நமக்கான அடையாளமே! ‘Bansar’ இருந்தால், 20 நாட்கள் வரை நேபாளத்தில் நீங்கள் எங்கே வேணும்னாலும் பைக், கார் ஓட்டலாம்.’’ என்கிறார்.

  • எல்லோரைப் போலவே வடகிழக்கு இந்தியாதான் ரோஹித்துக்கும் பிடித்த இடம் என்கிறார்.``ஸ்விட்சர்லாந்தில் இருக்கிற பனிமலை; ஆப்பிரிக்காவில் இருக்கிற காடு; அமெரிக்காவில் இருக்கிற கடற்கரை… எல்லாமே இங்கே உண்டு. இங்கே இடம் மட்டுமில்லைங்க. மனுஷங்களும் அவ்ளோ அற்புதம்!’’ என்கிறார் ரோஹித்.

 பைக் பயணம்
பைக் பயணம்
  • வடகிழக்கில் கேலிம்பாங் என்றோர் இடத்தில், டிராஃபிக்கில் ஒரு இளம்ஜோடியிடம் தங்க இடம் கிடைக்குமா என்று விசாரித்தபோது, ``எங்களை ஃபாலோ பண்ணுங்க’’ என்று அவர்கள் பின்னாலேயே போனால்… கிராமத்தில், மரங்களுக்கு நடுவே அற்புதமான ஓர் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். ஹோம் ஸ்டே என்று நினைத்தால், அது அவர்கள் வீடு. ``இங்கே தங்க இடமெல்லாம் கிடைக்காது. அதான் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டோம். உங்களைப் பார்த்தா டிராவலர் மாதிரி இருக்கு. நீங்க இங்கேயே தங்கிக்கலாம்’’ என்று குடும்பத்தினரைப்போல் உபசரித்து, ஊர் சுற்றிக் காட்டியதைச் சொன்னபோது, வியப்பாக இருந்தது. `அறிமுகம் இல்லாதவங்க வந்து தங்க இடம் கேட்டால், நம்ம ஊரா இருந்தா போலீஸைக் கூப்பிடுவாங்கள்ல’ என்று ஒரு படத்தில் சிம்பு சொன்னது நினைவுக்கு வந்தது

 பைக் பயணம்
பைக் பயணம்
  • ``ஊர் சுற்றி நீங்க. கொரோனா லாக்-டவுன் உங்களுக்குப் புதுசா இருக்குமே?’’ என்றால், அங்கேயும் செக் வைக்கிறார் ரோஹித். ``லாக்-டவுன் எனக்குப் புதுசில்லைங்க. நாகலாந்தில் ஒரு புயல்ல மாட்டி, 14 நாள் வரை ஒரு ஹோம் ஸ்டேவிலேயே தங்கி, வெளியே போக முடியாம லாக்-டவுன் ஆகிக் கிடந்தேன். அப்போ, வெளியூரு. இப்போ உள்ளூரு. அவ்வளவுதான்! தண்டர்பேர்டை இனி வெளிநாடுகளுக்கும் எடுத்துட்டுப் போகணும்!’’ என்று வெறியேற்றுகிறார் ரோஹித் அசோக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு