Published:Updated:

"பைக் சர்வீஸ்னா... அது என் பைக் ஸ்பாட் தான்!"

பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கர்

நம்ம ஊரு மெக்கானிக் - பைக் ஸபாட் பாஸ்கர்!

"பைக் சர்வீஸ்னா... அது என் பைக் ஸ்பாட் தான்!"

நம்ம ஊரு மெக்கானிக் - பைக் ஸபாட் பாஸ்கர்!

Published:Updated:
பாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கர்

வேலூரில் எந்த ஸ்பாட்டில் இருந்தாலும், ‘பைக் ரிப்பேர் சர்வீஸ் செய்யணும், எங்க பண்ணலாம்’ என்று கேட்டால், ‘பைக் ஸ்பாட்’டுக்குத்தான் வழி காட்டுகிறார்கள். ‘பைக் ஸ்பாட்’ என்பதுதான் அந்த மெக்கானிக் ஷெட்டின் பெயரே! பாஸ்கர்தான் இந்த பைக் ஸ்பாட்டின் பாஸ். பாஸ்கர் பற்றிக் கேள்விப்பட்டதும், அடுத்த நிமிடம், வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையம் அருகில் உள்ள பைக் ஸ்பாட்டில் எனது பைக்கை பார்க் செய்தேன்.

"நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் நாயகன் தோப்புதான். என் அண்ணா போலீஸ்; தம்பி ஏசி மெக்கானிக். ஆர்மியில் சேரணும்னு எனக்கு ஆசை. இப்போ வரைக்கும் ஆசைதான். ஆனா, இப்போ பைக்ஸ்தான் என் உலகமே! நான் பள்ளியில் படிக்கும்போதே பைக் ஓட்டணும்னு ஆசை இருந்துச்சு. அதனால பைக் ஓட்டுறதுல ப்ராப்ளம் வந்துச்சுன்னா, அதை எப்படிச் சரி பண்றதுன்னு ஆர்வமாக கத்துக்கிட்டேன். பைக் மீதான என்னோட காதல் வேலூர் to ஆரணி ரோடுல இருக்கிற ஒரு மெக்கானிக் கடையில தொடங்குச்சு. அங்கு நாலு வருஷம் வேலை பார்த்தேன்‌. அப்புறம் ஓசூரில் டிவிஎஸ் ஷாப்பில் வேலை. ஆவடிக்கு டிரான்ஸ்ஃபர் ஆனேன். சென்னைதான் எனக்கு நிறையக் கத்துக் கொடுத்துச்சு.

பைக் ஸ்பாட்
பைக் ஸ்பாட்

என் கல்யாணத்துக்கு அப்புறம்தான், 2012–ல் இந்த பைக் ஸ்பாட்டை சொந்த முயற்சியிலேயே திறந்தேன். ஆரம்பத்தில் NTR ஆட்டோ ஒர்க்ஷாப்னுதான் பேரு வச்சோம். ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் பைக் ஸ்பாட்னு பெயர் மாற்றம் செய்தோம். வருமானம் போதலை! இரவு முழுக்க ஆட்டோ ஓட்டினேன். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும். 300 ரூபாய் பெட்ரோலுக்குப் போக, 700 ரூபாய் கையில நிக்கும். என்னடா இதுன்னு ஃபீல் பண்ணாம, கொஞ்சம் கொஞ்சமாக கடைய இம்ப்ரூவ் பண்ணேன். இப்போ என் கடையில் எனக்குக் கீழே 7 பேர் வேலை பாக்குறாங்க. முதல்ல சின்னச் சின்ன ப்ராப்ளம் வந்தாலும், இப்ப நிறைய பேர் என்கிட்ட பைக் சர்வீஸ் கொண்டு வர்றாங்க. அதிலும் குறிப்பா திமிரி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா போன்ற வெளியூர்களிலிருந்தும் பைக்ஸ் சர்வீஸுக்கு வருது. பைக்தான் எனக்குச் சோறு போடுது. கஷ்டப்பட்டப்போ நான் பைக்ஸ் மேல வெச்சிருந்த காதல், இப்போ நான் நல்லா இருக்கிற நிலைமையிலயும் குறையவே இல்லை!’’ எனும் பாஸ்கர், ஒரு மாசத்துக்கு அதிகபட்சம் 200–க்கும் மேற்பட்ட டூவீலர்களை சர்வீஸ் செய்து தருகிறாராம். காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை… கிட்டத்தட்ட ரவுண்ட் தி கிளாக் சர்வீஸில் பைக்குகள் டெலிவரி செய்கிறார் பாஸ்கர். ‘‘என் கடையில் இருந்து போற எந்த பைக்கா இருந்தாலும், நான் செக் பண்ணிட்டு ஓட்டிப் பார்த்துட்டுத்தான் கஸ்டமரை டெலிவரி எடுக்க அனுமதிப்பேன்!’’ என்கிறார் பாஸ்கர்.

பாஸ்கர்
பாஸ்கர்

`பைக் ஸ்பாட்’ பாஸ்கர் கொடுக்கும் டிப்ஸ்!

3 மாதத்துக்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் பண்ணணும். 6 மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் ஆயில் சேஞ்ச் பண்ணணும். வாரம் ஒரு தடவை காற்று செக் பண்ணணும்.

சிலர் பைக்கில் கிக்கர் இருக்கிறதையே மறந்துடுறாங்க. தினமும் அதிகாலையில் பைக்கை ஸ்டார்ட் பண்ணும்போது, பெரும்பாலும் கிக்கர் யூஸ் பண்றதுதான் நல்லது! கிக்கரில்தான் ஆயில் சர்க்குலேட் ஆகும். செல்ஃப் ஸ்டார்ட் அதுக்கப்புறம் பண்ணிக்கலாம்.

சிலர் பைக்கை ஓட்டாமேல வைத்திருப்பார்கள். ஆனால், சர்வீஸ் டியூ முடிந்திருக்கும். அவர்கள்தான் நிச்சயம் ஆயில் சர்வீஸ் பண்ணணும். சும்மா இருந்தாலும் ஆயிலின் மசகுத்தன்மை காலியாகும். இதற்காகத்தான் நாங்கள் சர்வீஸ் டியூ தேதியோட பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிடுவோம்.

சிலர் 4 – 5 நாட்களுக்கு ஒருமுறை அடிக்கடி பைக்கை வாட்டர் வாஷ் பண்ணுவாங்க! தேவையில்லை; இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வாட்டர் வாஷ் செய்தால் போதும்.

லாங் டிரைவ் செல்பவர்கள், சிலர் பைக்கைத் தொடர்ந்து பல மணி நேரம் ஓட்டுவார்கள். இது சில நேரங்களில் நல்லதில்லை. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு ஒரு முறை ரெஸ்ட் விடுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism