Published:Updated:

டிராக்கில் மட்டுமில்லை, ரோட்டிலும் சாம்பியன்!

பிஎம்டபிள்யூ S1000RR HP4
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ S1000RR HP4

வாக் அரவுண்ட்: பிஎம்டபிள்யூ S1000RR HP4

டிராக்கில் மட்டுமில்லை, ரோட்டிலும் சாம்பியன்!

வாக் அரவுண்ட்: பிஎம்டபிள்யூ S1000RR HP4

Published:Updated:
பிஎம்டபிள்யூ S1000RR HP4
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ S1000RR HP4

இந்த பைக் கொஞ்சம் ஸ்பெஷல், இந்த ரிவ்யூவும் கொஞ்சம் ஸ்பெஷல். 2008-ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே ரேஸ் ட்ராக்கின் தலயாக வலம் வருகிறது பிஎம்டபிள்யூ S1000RR. இந்த ரிவ்யூவில் இருப்பது வெறும் RR இல்லை. அதன் ஸ்பெஷல் எடிஷன் S1000RR HP4. அதாவது High Performance 4 Cylinder Engine என்பதுதான் இந்த HP4. 2017-ல் ட்ராக்கில் ஓட்டுவதற்கான பிரத்தியேக மாடலை பிஎம்டபிள்யூ தயாரித்திருந்தாலும், இந்த 2015 மாடல் HP4 ட்ராக் மற்றும் ரோடு ரைடிங்கில் ஒரு பேலன்ஸ் தருவதால், இந்த மாடலே இன்றுவரை பலரின் காதலாக இருக்கிறது. இந்த ரிவ்யூவில் பார்க்கப்போவது 2015 S1000RR HP4. உலகம் முழுக்கத் தயாரிக்கப்படும் ஒவ்வொரு HP4 மாடலுக்கும் ஒரு பேட்ஜ் எண் உண்டு. நாங்கள் ஓட்டியது 2670-வது பைக். இந்தியாவில் இருக்கும் நான்கு பைக்குகளில் ஒன்று.

வேகம்தான் ரேஸ் ட்ராக்கின் தாரக மந்திரம். வேகமும், குறைந்த எடையும் இருக்கும் பைக்குகளே ட்ராக்கை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார். பி.எம்.டபிள்யூ S1000RR பைக்கில் இருந்து எவ்வளவு எடையைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு எடை குறைத்து உருவாக்கப்பட்டதுதான் HP4. ஹேண்ட்லிங், பவர், ரைடிங் டைனமிக்ஸ் எல்லாமே இங்கு மாறியிருக்கிறது.

எடை போடத் தேவையில்லை. பார்த்தாலே தெரியும் இது எடை குறைவான பைக். டேங்க் கவுல், சப்-ஃப்ரேம், பாடி பேனல் எனப் பல இடங்களில் கார்பன் ஃபைபர் பார்ட்ஸ் பொருத்தியிருக்கிறார்கள். ஸ்ப்ராக்கெட்டில் மட்டுமே 2.4 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் பைப் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. காட்டலட்டிக் கன்வர்ட்டரும் இல்லை என்பதால், எக்ஸாஸ்ட்டில் மட்டும் 4 கிலோ எடை குறைப்பு. S1000RR பைக்கை ஒப்பிடும்போது இந்த மாடலின் பேட்டரியும் மிகவும் எடை குறைவானது. மொத்தமாக 7 கிலோ எடை நீக்கம் என்பது பெர்ஃபாமன்ஸில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல; பைக்கின் ஸ்டீயரிங்கை இது சுறுசுறுப்பாக மாற்றியிருக்கிறது.

ஹை பெர்ஃபாமன்ஸ் என்று சொல்வதற்கு ஏற்ப பல விஷயங்கள் ட்ராக்கை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கியர் லீவர், பிரேக் என்று என்று எல்லா இடத்திலும் டிசைன் மாற்றம் செய்து எடை குறைத்துள்ளார்கள். ஒவ்வொரு ரைடருக்கும் ஒவ்வொரு டைனமிக்ஸ். தன்னுடைய வசதிக்கு ஏற்ப ஃபுட் பெக் பொசிஷனை மாற்றிக் கொள்ள முடியும் என்பதால், இங்கே ரைடிங் டைனமிக்ஸ் நிலையானதாக இல்லாமல் நமக்கென்று பிரத்தியேகமான ஒன்றாக இருக்கிறது. Forged Aluminum Hollow swingarm பைக் ஃபிரேமின் கடினத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எந்தப் பாதையாக இருந்தாலும் கையாளுதல் தரத்தைத் தீர்மானிப்பது சஸ்பென்ஷன்தான். கம்ப்ரஷன் (compression), ரீபௌண்ட் (rebound), டாம்பிங் (damping) இவை மூன்றும்தான் ஒரு சஸ்பென்ஷனின் முக்கியமான வேலை. வேகமாகப் போகும்போது ஹேண்டில்பார் சஸ்பென்ஷனின் ரீபெளண்ட்டைத் தாங்காமல் தடுமாறுகிறது என்றால், அதைச் சரிக்கட்டுவதற்கு வைக்கப்படுவதே இந்த டாம்ப்பர். மற்ற சஸ்பென்ஷன் பாகங்கள் சாதா என்றால் HP4 மாடலின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று எலெக்ட்ரானிக் டைனமிக் டாம்ப்பிங் கன்ட்ரோல் (EDDC). ரேஸ் ட்ராக்கின் முரட்டுத்தனமான வேகத்திலும், அதுவும் கரி மோட்டார் ஸ்பீடுவேயின் சவாலான ஏற்ற இறக்க தார் ரோட்டிலும் தடுமாற்றமற்ற ரைடு மூலம் அதகளப்படுத்திவிட்டது HP4. சமதளமற்ற நாட்டுப்புறச் சாலையாக இருந்தாலும் சரி, சீரான வளைந்து நெளியும் ரேஸ் ட்ராக்காக இருந்தாலும் சரி - சஸ்பென்ஷன் செட்டப் பற்றி யோசிக்கவே தேவையில்லை. பெரும்பாலான வேலையை எலெக்ட்ரானிக் பார்த்துக் கொள்ளும்.

HP4 பைக்கின் ஃப்ளோட்டிங் டிஸ்க் மற்றும் மோனோபிளிக் பிரெம்போ பிரேக் செட்டப், கார்னரிங் ஏபிஎஸ் இல்லாத நிலையிலும் வளைவுகளில் பிரேக்கிங் பைட் ரெஸ்பான்ஸிவாக இருக்கிறது. வீல் லாக் ஆகும் என்ற சிந்தனையே இல்லாமல் செலுத்தலாம்.

டிராக்கில் மட்டுமில்லை, ரோட்டிலும் சாம்பியன்!
டிராக்கில் மட்டுமில்லை, ரோட்டிலும் சாம்பியன்!

ரேஸ் ட்ராக்கில் HP4 பைக்கை டெஸ்ட் செய்து கொண்டிருந்த ரேஸர் யோகேஷ்வரன் கிருஷ்ணவேலு அவர்களைச் சந்தித்தோம். யோகேஷ் பைக் மட்டுமல்ல; கார், கார்ட் என்று வேகமாக எது கிடைத்தாலும் அனுபவிப்பேன் என்கிறவர். டுகாட்டி UAE ரேஸில் 2018-19, 2019-20 சாம்பியன். கடந்த ஆண்டு MRF F4 கார் ரேஸின் நேஷனல் ரூக்கி சாம்பியன்.

"மோட்டோகிராஸில் கரியரை ஆரம்பித்தேன். இப்போது சர்வதேச ரேஸ் ட்ராக்குகளில் பைக் ரேஸ் மற்றும் கார்ட் ரேஸ் ஓட்டுகிறேன். இந்த பிஎம்டபிள்யூ HP4 பைக்கிற்கு காம்படிஷன் (Competition) எடிஷன் என்று பெயர். ரோடா இருந்தாலும் சரி, ட்ராக்கா இருந்தாலும் சரி ஹேண்ட்லிங்கில் எந்தக் குறையுமில்லை. ட்ராக்கில் ஓட்டும்போது ஒரு கார்னரோ, அல்லது மலைச் சாலையில் ஒரு வளைவோ எடுக்கும்போது இதன் டைனமிக் டேம்ப்பிங் சிஸ்டமும், பிரேக்கும் சிறப்பாக உதவுகிறது. இதன் குறைவான எடை பைக் ஓட்டுவதில் செலுத்தக் கூடிய உடல் உழைப்பைக் குறைக்கிறது. இந்தியாவில் இதுவரை 4 HP4 காம்படிஷன் பைக் மட்டுமே இருக்கிறது. அதில் ஒன்று தமிழ்நாட்டில், கோவையில் என்னிடம் இருக்கு. எந்த பைக்கா இருந்தாலும் கவனமா, புத்திசாலித்தனமா ஓட்டுங்க!" என்கிறார் யோகேஷ்.

டிராக்கில் மட்டுமில்லை, ரோட்டிலும் சாம்பியன்!