
கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல் : ரேஸிங்


‘விபத்து எதனால் நடக்கிறது’ என்று சொல்லுங்கள்’ என்று எங்கள் கோச் கேட்டார். ‘கவனக்குறைவு’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது. இது உண்மைதான்; அந்தக் கவனக்குறைவு எதனால் வருகிறது? சிந்தனைகள் சிதறுவதால்! மிகச் சரி; ஆனால், இதைத் தாண்டி நம் பார்வை என்றொரு விஷயம் இதற்குப் பின்னால் இருக்கிறது. ஆம், நம் பார்வை எங்கே இருக்கிறதோ, அங்குதான் நமது பைக் நம்மை அறியாமல் போகும்; நம் கை ஆக்ஸிலரேட்டர் முறுக்கும். கொஞ்சம் புரியாதது மாதிரி இருக்கும்! ஆனால்....
இப்படிச் சொல்லித் தரப்பட்டது ஓர் அற்புதமான பயிற்சி வகுப்பில். அதுவும் ரேஸ் வகுப்பு. ‘கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல்’ எனும் மிகப் பெரிய டிரைவிங் ஸ்கூல்தான் ஓர் அற்புதமான ரேஸ் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நாம் மீடியா சார்பாகக் கலந்து கொண்டேன்.
அடடா, சும்மா ஆக்ஸிலரேட்டர் முறுக்கினால் பைக் பறக்கும் என்பதைத் தாண்டி, ரேஸில் இத்தனை விஷயங்கள் அடங்கிக் கிடக்கிறதா என்று என்னுடன் சேர்ந்து பலர் உணர்ந்த தருணம். ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இந்தப் பயிற்சி ஒன்றும் புதிதில்லை. சென்னை எம்எம்ஆர்டி ரேஸ் ட்ராக்கும் புதிதில்லை. ஆனாலும், புதிய மாணவன் போல் நம்மை உற்சாகத்திலேயே வைத்திருக்கிறார்கள், CSS (California SuperBike School) அகாடமியின் கோச்கள். இதற்காகவே அமெரிக்காவில் இருந்து ஏகப்பட்ட கோச்கள் வந்திருந்தார்கள்.
A for ஆக்ஸிலரேட்டர், B for பிரேக்ஸ், C for க்ளட்ச் என்பதெல்லாம் இங்கே கிடையாது. இங்கே A for Apex, C for Cornering என்று டெக்னிக்கலாகச் சொல்லித் தருகிறார்கள். அதுதான் CSS–ன் ஸ்பெஷல்.
இதில் சூப்பர் பைக் வைத்திருக்கும் யாரும் கலந்து கொண்டு இந்த ரேஸிங் ஜயன்ட்களிடம் பயிற்சி பெறலாம். என்ன, இதற்கு ஒரு கட்டணம்! நமக்குக் கிடைத்தது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக். ட்ரையம்ப், பிஎம்டபிள்யூ, கவாஸாகி நின்ஜா, டுகாட்டி என்று ஏகப்பட்ட சூப்பர் பைக் உரிமையாளர்கள் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 30 முதல் 40 பேர் இருக்கும். வெள்ளை, மஞ்சள், பச்சை என்று சில கலர்களாக பேட்ஜ்களாகப் பிரித்துப் பயிற்சி கொடுத்தார்கள். எனக்குப் பச்சை நிறம்! கறுப்பு நிற டிவிஎஸ் அப்பாச்சி ரேஸ் பைக். மொத்தம் 3 நாள் பயிற்சி வகுப்பில் நான் கற்றுக் கொண்டது.
முதலில் தியரி க்ளாஸ்; அதாவது வகுப்பு. அப்புறம் ரேஸ் ட்ராக்கில் பிராக்டிக்கல் வகுப்பு. இங்கே கற்றுக் கொண்ட பயிற்சியை ட்ராக்கில் 25 நிமிடத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். ரேஸ் ட்ராக்குகளில் கொடிகளின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்து கொண்டுதான் களமிறங்குவது நல்லது. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் போகலாம்; சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும் என்பது மாதிரியான டாஸ்க் இல்லை இது. மஞ்சள் கொடிக்கு என்று ரேஸர் ஒரு விஷயம் செய்ய வேண்டும்; இதுவே செக்கர்டு கொடி, அதாவது கறுப்பு–வெள்ளை செஸ்போர்டு நிற கொடி என்றால், அதற்கு ஒரு அர்த்தம். இப்படி கொடிகளிலேயே கோடி விஷயங்கள் சொல்லித் தந்தார்கள்.
ஆக்ஸிலரேட்டர் முறுக்கினால், பைக் பறக்கும்; ஓகே! ஆனால், இந்த வேகம் என்பது புத்திசாலித்தனமில்லை. யார் ஆக்ஸிலரேட்டர் முறுக்கினாலும் பைக் பறக்கத்தான் செய்யும். அந்த வேகத்தில் பைக்கை கன்ட்ரோல் செய்யும்விதத்தில்தான் நம் விவேகம் இருக்கிறது என்றார்கள்.
ஒரு பைக்கை ஸ்டேபிளைஸ் செய்ய, அதாவது கட்டுக்குள் கொண்டுவர 6 விதமான கன்ட்ரோல்கள் உண்டு. அது என்ன தெரியுமா?
1.த்ராட்டில், 2.முன் பக்க பிரேக், 3.பின் பக்க பிரேக், 4.ரியர் பிரேக், 5.ஸ்டீயரிங் 6.கியர்
இந்த 6–ம்தான் ஒரு பைக்கை கன்ட்ரோல் செய்யும் முக்கியமான கன்ட்ரோல்கள். இதில் ஸ்டீயரிங் கன்ட்ரோல் என்பது மட்டும்தான் பைக்கின் திசையை மாற்ற மட்டும் பயன்படும் கன்ட்ரோல். மற்றவை அனைத்தும் வேகத்துக்குத் தொடர்பானவை. மீதமுள்ள ஐந்தையும் சரியாகச் செய்தால்தான் பைக் உங்கள் சொல்படி கேட்கும்.
ஒரு பைக்கில் வேகமாகச் செல்ல என்ன செய்ய வேண்டும்? த்ராட்டிலை முறுக்க வேண்டும். ஒரு கார்னரில் திரும்ப என்ன செய்ய வேண்டும்? ஹேண்டில்பாரைத் திருப்ப வேண்டும். அப்படித் திரும்பும்போது வளைவில் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வளைவுக்கு ஏற்ப சரியான வேகத்தில் செல்ல வேண்டும்.
`இவ்வளவுதானா, ரொம்ப ஈஸியா இருக்கே’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இம்மூன்று செயல்களையும் பிரேக்கைப் பயன்படுத்தாமல் செய்ய வேண்டும். ஒரு சில விநாடிக்குள் முடிவெடுத்துச் செயல்பட, முழு கவனத்துடன் கொண்ட பயிற்சி தேவை. இதை ட்ராக்கில் நான் செய்து பார்த்தபோது ‘ஆஹா’ என்று எனக்கு நானே பெருமையாக உணர்ந்த தருணம் நடந்தது.

ரேஸிங்கில் முக்கியமான விஷயம் – கார்னரிங். ரேஸ் ட்ராக்கில் கார்னரிங்கைக் கணிப்பது ரொம்பவும் கஷ்டம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு கார்னரிங் செய்யும்போது, ஒரு விநாடிக்குள் 20 விதமான துல்லியமான முடிவுகளை எடுக்க வேண்டுமாம்!
நீங்கள் ரேஸ்களில் பார்த்திருக்கலாம். வளைவுகளில் முழங்கால் ரைடிங் கியரைத் தேய்த்துக் கொண்டு, தீப்பறக்க வளைவார்கள் ரைடர்கள். இதற்குள்ளும் ஓர் உண்மை உண்டு. அதிவேகத்தில் செல்லும்போது, நீங்கள் பைக்கை விட்டுப் பிரியவில்லை; நீங்களும் பைக்கும் வேறு வேறு அல்ல என்பதைச் சொல்லும் சைக்காலஜி இது. முழங்காலின் கிரிப்பில் டேங்க்கை இறுக்கிப் பிடிப்பதில் இருந்து, வளைவுக்கு முன் இடுப்பை எதிர்ப்பக்கமாகத் திருப்பி வளைப்பது வரை – ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு.
ஒரு வளைவில் திரும்புவதற்கு முன்பு ஸ்டீயரிங்கைத் திருப்பும் இடம் டர்னிங் பாயின்ட். அந்த டர்னிங் பாயின்ட்டை அடையும் முன்பே த்ராட்டிலை விட்டு, கியர்களைக் குறைத்து கார்னரைக் கடப்பதற்கான சரியான வேகத்துக்கு பைக்கைக் கொண்டு வரவேண்டும். டர்னிங் பாயின்ட்டில் எந்த கன்ட்ரோலையும் பயன்படுத்தாமல், பொறுமையாக பைக்கைத் திருப்ப வேண்டும். கேட்பதற்குச் சுலபமாக தெரிந்தாலும், இது கடினமான டாஸ்க்.
கூடவே கவுன்ட்டர் ஸ்டீயரிங் (Counter Steering) என்றொரு முறையும் சொல்லித் தந்தார்கள். மோட்டோ ஜிபி போன்ற பெரிய ரேஸ்களில், இந்த முறைதான் பாதுகாப்பு. வளைவுக்கு நேர் எதிர்த்திசையில் லேசாக ஹேண்டில்பாரைத் தள்ள வேண்டும்.
அதேபோல், ஒரு கார்னரில் செய்யக்கூடாத விஷயம் தேவையில்லாமல் ஹேண்டில்பாரை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது. விலையுயர்ந்த சஸ்பென்ஷன் இருந்தால் போதும், ஒரு பைக் கார்னர்களில் நிலைத்தன்மையோடு இருந்துவிடும் என்று நினைக்கக் கூடாது. கார்னர்களில் சஸ்பென்ஷனில் அதிக ப்ரெஷர் கொடுப்பதால், நம் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்குத் தேவையில்லாத பிரஷர் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என்றால், ஹேண்டில்பாரை ரிலாக்ஸாகப் பிடித்திருக்க வேண்டும். கால்களை டேங்க்கோடு அழுத்திப் பிடித்துக் கொண்டால் கைகள் தானாக ரிலாக்ஸ் ஆகிவிடும். இதைச் சரியாகச் செய்தால் வளைவுகளை செம ஸ்மூத்தாகக் கடந்து செல்ல முடியும். ஒரு முறை கார்னரின் அபெக்ஸைத் தொட்டுவிட்டால், பொறுமையாக த்ராட்டில் கொடுக்க வேண்டும். சாய்ந்திருக்கும் பைக் தானாக மேலே எழும். அடுத்த கார்னருக்கு வேகம் கிடைக்கும்.
நான் முதல் பாராவில் சொன்னதுபோல், பார்வை பற்றிய விஷயம்தான் வியப்பாக இருந்தது. இதற்குப் பெயர் ‘டார்கெட் ஃபிக்ஸேஷன்’ (Target Fixation). டிரைவிங்கில் உங்கள் பார்வைதான் உங்கள் நண்பன் என்பதைப்போல், ரேஸிங்கில் அதே பார்வைதான் உங்கள் எதிரியும் கூட! இதற்கு ரெஃபரென்ஸ் பாயின்ட் (Reference Point) என்றொரு அம்சம் இருக்கிறது. நீங்கள் அடுத்தடுத்து முன்னேறும் நேரத்தில் நீங்கள் ஒரு ரெஃபரென்ஸ் பாயின்ட் ஒன்றை ஃபிக்ஸ் செய்து கொண்டே வர வேண்டும். அதில் மட்டும்தான் உங்கள் டார்கெட் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லித் தந்தார் எனது கோச். அதாவது, முன்னே செல்லும் ரைடரை மட்டும் பார்த்துக் கொண்டே செல்லக்கூடாது. சில புது ரைடர்கள் அப்படித்தான் வந்தார்கள். ஆனால், அவர்கள் ட்ராக்கில் முன்னே செல்லும் ரைடர்களை முந்தாமல், கீழே விழுந்து விடுவோமோ என்று பின்னாேலேயேதான் வந்து கொண்டிருந்தார்கள். அதேநேரம் விரிவான அகலப்பார்வை கொண்டு பார்க்கும்பட்சத்தில், பைக்கும் நம் உடலும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.


சிஎஸ்எஸ் கோச்கள், மிக அற்புதமாக கார்னரிங் பற்றிப் பயிற்சி எடுத்துப் பலரை எக்ஸ்பெர்ட் ஆக்கியிருந்தார்கள். நாம் ஏற்கெனவே ‘கான்ட்டினென்ட்டல் ஆட்டோமோட்டிவ்’ என்றொரு தொழில்நுட்ப நிறுவனம் பற்றிச் சொல்லியிருந்தோம்! நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, பைக்குகளில் ஏபிஎஸ், ARAS (Advanced Rider Assistance System) போன்ற பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு வரும் நிறுவனம். அதிலிருந்தும் இந்தப் பயிற்சிக்கு வந்து ரேஸ் ட்ரெயினிங் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘எங்கள் டீமுக்கு இதுபோன்ற பயற்சிகள் அவசியமானவை. வெறும் தொழில்நுட்பம் மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டால் போதாது; ரைடிங்கின் மகத்துவம் பற்றியும், ரேஸிங்கின் நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமே! எங்கள் நிறுவனத்திலிருந்து பணம் கட்டி இந்தப் பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். நாங்களும் இப்போ ரேஸர்கள்!’’ என்றார்கள், கான்ட்டினென்ட்டல் ஆட்டோமோட்டிவ் டீம் நண்பர்கள்.
‘யார்றா அது பொண்ணு மாதிரி இருக்கே!’ என்று அந்த அப்பாச்சி பைக்கை நிறுத்தினேன். ‘‘ஹாய், நான் ஸ்ருதி. டிவிஎஸ் நிறுவனத்தின் R&D–யில் பணிபுரிகிறேன். எங்கள் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் செக்ஷனுக்கு இந்தப் பயிற்சி அவசியம் என்பதால் இங்கு வந்தேன். ரேஸிங்கில் இவ்வளவு பாதுகாப்பும், நுணுக்கங்களும்… அடடா! இப்போ எனக்குள்ள ரேஸர் கண் முழிச்சுருக்கா! செமையா சொல்லித் தர்றாங்க கலிஃபோர்னியா கோச்கள்!’’ என்று புளகாங்கிதம் அடைந்தார்.
ட்ராக்கில் பரபரப்பாக இருந்தார், CSS-ன் இந்தியத் தலைவர் – சென்னையைச் சேர்ந்த T.T.வரதராஜன். இவர்தான் கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல், இந்தியாவுக்கு வரக் காரணமாக இருப்பவர். ‘‘இன்னும் பல ரைடர்களை உலகளவில் உருவாக்குவதுதான் என் லட்சியம்!’’ என்றார் வரதராஜன்.
3 நாட்கள் பயிற்சி… சுமார் 75 லேப்கள்… கனவில்கூட இப்போது ‘வ்வ்ர்ர்ரூம்’ சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.