Published:Updated:

பெட்ரோலா... பேட்டரியா... எது லாபம்? எது வேகம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்

ஒப்பீடு: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்

பிரீமியம் ஸ்டோரி
மெட்ரோ, பஸ், ஷேர் ஆட்டோ என்று பயணிக்கும் பலரும் கொரோனா காரணமாக, பேசாமல் ஒரு பைக்கோ ஸ்கூட்டரோ வாங்கிவிடலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இடத்தில் பலருக்கு ஒரு குழப்பம்.

``ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் வாங்கலாம்னு இருக்கேன். ஆனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் மனசில் வந்துபோகுது. எது லாபம்னு ஒரு ஐடியா சொல்லுங்களேன்’’ என்று நிறைய பேர் கேட்டுவிட்டார்கள். முக்கியமான கேள்விதான். சத்தம், புகை என எதுவும் எழுப்பாமல் இயங்கும் எலெக்ட்ரிக்... பழக்கப்பட்ட பெட்ரோல்... இரண்டிலுமே சில சாதக/பாதகங்கள் உண்டு.

விலை:

பைக்குகளுக்கு இணையாக, ஸ்கூட்டர்களின் விலையும் கிர்ரென்று ஏறிக்கொண்டேதான் போகிறது. உதாரணத்துக்கு ஒரு வெஸ்பா 125சிசி ஸ்கூட்டர் வாங்கும் விலைக்கு, பல்ஸர் 150 பைக்கை வாங்கலாம் என்பதுதான் நிதர்சனம். அதேசமயத்தில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் சும்மா சொல்லக்கூடாது. FAME-II மானியம் இருந்தாலுமே, ஒரு லட்சத்துக்குக் குறைந்து EV-க்களை வாங்க முடியாது. ஐ-க்யூப், சேட்டக், ஏத்தர் ஆகியவற்றின் விலை, 1 லட்சத்தில் இருந்து 1.25 லட்சம் ரூபாய் வரை வருகிறது. இதுவே ஹீரோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 60,000 ரூபாய்க்கே கிடைப்பது மகிழ்ச்சிதான்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்

ஆனால் இவற்றில் ரேஞ்ச், வேகம், லித்தியம் ஐயன் பேட்டரி போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயன்பாட்டுச் செலவு:

விலையில் விட்டதை, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஜெயிப்பது இந்த இடத்தில்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் என எடுத்துக் கொள்வோம். உத்தேசமாக 45 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது என்றால், 1 கி.மீ தூரத்துக்கு, தோராயமாக 2 ரூபாய் ரன்னிங் காஸ்ட் வருகிறது. உதாரணத்துக்கு, 3kWh பேட்டரி கொண்ட பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜ் ஆக்குவதற்கு, 3 யூனிட் மின்சாரம் தேவைப்படும். E-ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை, 4kWh மேல் பேட்டரி கிடையாது என்பதால், நீங்கள் எவ்வளவு நேரம் சார்ஜ் போட்டாலும், 4 யூனிட் மின்சாரத்துக்கு மேல் ஆகாது. ஒரு யூனிட்டுக்கு சுமார் 7 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், 28 ரூபாயில் ஃபுல் சார்ஜ் ஏறிவிடும். சேட்டக்கின் ரேஞ்ச் 85–95 கி.மீ வரை என்பதைக் கணக்கில் கொண்டால், எப்படிப் பார்த்தாலும் ஒரு ரூபாய்க்கு 4-4.5 கி.மீ தூரம் வரை போகலாம்.

ரேஞ்ச்:

பெட்ரோல் ஸ்கூட்டர்களில் ரேஞ்சாவது ஒண்ணாவது? பெட்ரோல் டேங்க்கை நிரப்பி நிரப்பிப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். இதில் பைக்குகள்போல 13 லிட்டருக்கெல்லாம் டேங்க் இருக்காது. அதிகபட்சமே 6.5 லிட்டர் டேங்க்தான்! அதனால் சராசரியாக 45 கி.மீ மைலேஜ் எனும் பட்சத்தில், டேங்க் ஃபுல் செய்தால்… அதிகபட்சமாக 250-280 கி.மீ வரை போகலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் Vs பெட்ரோல் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ரேஞ்ச்சை செக் செய்துதான் ஆக வேண்டும். ஒரு ஃபுல் சார்ஜுக்கு 85 – 95 கி.மீ வரை ரேஞ்ச் இருக்கும் என்பதால்… பேட்டரி பாதி முடிந்தபோதே பயம் தொற்றிக் கொள்ளும். டிவிஎஸ் ஐ-க்யூபின் ரேஞ்ச் 75 கி.மீதான். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கவனிக்க வேண்டும். எக்கோ, ஸ்போர்ட்ஸ் அல்லது பவர் எனப் பல்வேறு மோடுகள் உண்டு. இ-ஸ்கூட்டர்களில் மேலே சொன்ன ரேஞ்ச், எக்கோ மோடுக்குத்தான் பொருந்தும். சேட்டக் ஸ்கூட்டரில் ஸ்போர்ட்ஸ் மோடில் ஓட்டினால், ரேஞ்ச் 85 கி.மீ தூரம்தான். இதுவே ஏத்தர் போன்ற ஸ்கூட்டர்களில், ரேஞ்ச் இன்னும் கணிசமாகக் குறையும் (85கிமீ - எக்கோ மோடில்). எனவே மொபைலுக்குத் தினசரி சார்ஜ் ஏற்றுவதுபோல, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஒரு ஃபுல் சார்ஜில்தான் நிம்மதியாக ஓட்ட முடியும் என்பதையும் நினைவில் கொள்க!

பர்ஃபாமன்ஸ், வேகம்:

பெட்ரோல் ஸ்கூட்டர்களில் பர்ஃபாமென்ஸ்தான் கிக்கே! பெட்ரோல் இன்ஜினின் பவரும் டார்க்கும், ஓட்ட ஓட்ட ஆசையைத் தூண்டும். என்டார்க், ஏப்ரிலியா போன்ற ஸ்கூட்டர்களில் 100 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறப்பவர்கள் இருக்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பாதைகளில், சிறிய ஸ்கூட்டியிலும் டபுள்ஸ் ஏறுபவர்கள் இருக்கிறார்கள்.

பெட்ரோலா... பேட்டரியா... எது லாபம்? எது வேகம்?

இதுவே வேகப் பார்ட்டிகளுக்கு இ-ஸ்கூட்டர் செட் ஆகாது. பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் அதிகபட்ச டாப் ஸ்பீடே 60 கி.மீதான். ஐ-க்யூபின் டாப் ஸ்பீடு 78 கி.மீ. இதில் 40 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு 4.2 விநாடிகள் வேண்டும் என்பது ஓகேதான். ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 80 கி.மீதான் என்றாலும், இது 0-60 கி.மீ வேகத்தை எட்ட 6.5 விநாடிகள் என்பது வரவேற்கத்தக்கதுதான்! பில்லியனோடு பாலம் ஏறுவதற்கே இ-ஸ்கூட்டர்கள் திணறுவதால், மலையேற்றம் & நெடுஞ்சாலைப் பயணம் இவற்றுக்கெல்லாம்… சாரி! ஜாலியான பில்லியன் ரைடிங்குக்கு இ-ஸ்கூட்டரை நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்! இருந்தாலும், `வேகம்லாம் வேண்டாம் பாஸ்; ஆபீஸ் - வீடு மட்டும் போய்ட்டு வந்தா போதும்’ என்பவர்களுக்குத் தான் இ-ஸ்கூட்டர்கள் செட் ஆகும்.

பெட்ரோலா... பேட்டரியா... எது லாபம்? எது வேகம்?

வசதிகள்:

பெட்ரோல் ஸ்கூட்டர்களில் என்டார்க்கில்தான் முதன்முறையாக, அதிகபட்சமாக புளூடூத், நேவிகேஷன் வசதியெல்லாம் கொண்டு வந்தார்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இப்போது அதுக்கும் மேலே போய்விட்டன! எல்இடி ஹெட்லைட்ஸ், டைமண்ட் கட் அலாய் வீல்கள், TFT டிஸ்ப்ளே கொண்ட டச் ஸ்க்ரீன் போன்ற வசதிகளெல்லாம் வந்துவிட்டன; டிவிஎஸ் ஐ-க்யூப் இ-ஸ்கூட்டரில் SmartXonnect டெக்னாலஜியுடன் மொபைல் செயலியும் கொண்டு வந்துவிட்டார்கள். ஏத்தரிலும், கார்கள்போல் ஆண்ட்ராய்டு வசதி உண்டு. விலை குறைவான சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், ட்யூப்லெஸ் டயர் இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்கவும்.

சார்ஜிங், ஃப்யூலிங்:

பெட்ரோல் ஸ்கூட்டர்களில் சட் சட் என லாங் ரைடு கிளம்பலாம். போகும் இடங்களில் எல்லாம், கச்சிதமான இடைவெளியில் பெட்ரோலை நிரப்பிவிட்டுப் பயணித்தால், `வண்டி நின்னுடுமோ’ என்ற கவலை வேண்டாம்.

ஸ்கூட்டர்
ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எங்கே சார்ஜிங் போடுவது என்பதுதான் முக்கியமான பிரச்னையே! சில அபார்ட்மென்ட்களில் சார்ஜிங் வசதி இருக்காது. அப்படியே இருந்தாலும், இதற்கென இருக்கும் ஹோம் சார்ஜரைத் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும் (சுமார் 7,000 ரூபாய்). இதை வீட்டில் இன்ஸ்டால் செய்யவும் ரூ.2,500 வரை செலவாகும். 5 ஆம்ப் பிளக் பாயின்ட்டில், நமது வீட்டிலேயே இ-ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனாலும் இதற்கான உள்கட்டமைப்பு, அதாவது போகிற இடங்களிலெல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தால் மட்டுமே நீண்ட தூரப் பயணங்களுக்கு இ-ஸ்கூட்டரை நம்பி எடுக்கலாம். சில எலெக்ட்ரிக் பைக்குகளில் உள்ளதுபோலவே, பேட்டரி ஸ்வாப்பிங் சிஸ்டம் அனைத்து இ-ஸ்கூட்டர்களிலும் வந்தால் நலம்! சட்டென்று பேட்டரியைக் கழற்றி, சார்ஜ் இருக்கும் பேட்டரியைப் பொருத்திவிட்டுப் போகலாம்.

பராமரிப்பு:

இந்த ஏரியாவில்தான், பெட்ரோல் ஸ்கூட்டர்கள் நம்மைப் படுத்தி எடுக்கும். முக்கியமாக, பீரியாடிக்கல் ஆயில் சர்வீஸ். ஸ்கூட்டர் வாங்கிய மூன்று ஃப்ரீ சர்வீஸ்களிலேயே, ஆயிலுக்கு என்று தனியாக பில் போட்டு விடுவார்கள். இதுபோக ஸ்பார்க் ப்ளக், டயர், பிரேக், ஆக்ஸிலரேட்டர் கேபிள், பிரேக் கேபிள், ஏர் ஃபில்டர் போன்ற தேய்மானச் செலவுகளும் உண்டு. ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டர்களை, வெளியே இருக்கும் மெக்கானிக்குகளிடம்கூட சர்வீஸ் விட்டுக் கொள்ளலாம்.

பெட்ரோலா... பேட்டரியா... எது லாபம்? எது வேகம்?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒரே முக்கியமான செலவு – பேட்டரி மட்டும்தான். இ-ஸ்கூட்டர்களில் மோட்டாருக்கு 7 ஆண்டுகள்; பேட்டரிக்கு 2 ஆண்டுகள் நிச்சயம் எந்தப் பிரச்னையும் இருக்காது. பெரிய பர்ஃபாமன்ஸ் கிடையாது என்பதால், தேய்மானச் செலவுகளும் நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏத்தர், சேட்டக், ஐ-க்யூப் போன்ற இ-ஸ்கூட்டர்களை, அந்தந்த டீலர் நெட்வொர்க்கில்தான் சர்வீஸ் விட வேண்டும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

ரீ-சேல்:

இ-ஸ்கூட்டர்களிடம் ரீ-சேல் மதிப்பை எதிர்பார்க்கக் கூடாது. அதிலும் பேட்டரி ரீ-ப்ளேஸ்மென்ட்தான் முக்கியப் பிரச்னை என்பதால், என்னதான் OLX போன்ற ஆப்களில் பதிவிட்டாலும், கஸ்டமர் கிடைப்பது கஷ்டம்தான்.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. 40,000 கி.மீ ஓடிய ஆக்டிவாவை, 40,000 ரூபாய்க்குக்கூட வாங்க ஆள் உண்டு. யூஸ்டு 125சிசி ஸ்கூட்டர்கள் என்றால்கூட, போதிய டிமாண்ட் இருக்கவே செய்கிறது.

வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

’பெட்ரோலா, பேட்டரியா? உங்க சாய்ஸ் என்ன?’ என்று சில வாசகர்களிடம் கேட்டபோது…

``நான் ஏற்கெனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் வெச்சிருக்கேன். குழந்தையை ஸ்கூலில் கொண்டுபோய்விட, மார்க்கெட் போக இதுதான் செமையா இருக்கு. என் சாய்ஸ், இ-ஸ்கூட்டர்தான்!’’

- ஜோதி, திருப்பூர்

பெட்ரோலா... பேட்டரியா... எது லாபம்? எது வேகம்?

``நான் அடிக்கடி லாங் ரைடு போவேன். நமக்கு எலெக்ட்ரிக்லாம் செட் ஆகாது அண்ணாச்சி. சட்டு புட்டுனு பெட்ரோல் போட்டோமா… பறந்தோமானு இருக்கணும்!’’

- பரமேஸ்வரன், நெல்லை

``மனைவிக்கு ஸ்கூட்டர் வாங்கலாம்னு ஐடியா. நானும் பெரிய குழப்பத்தில்தான் இருந்தேன். பெட்ரோல் விக்கிற விலையைப் பார்த்தா, பெட்ரோல் போடவே தனியா வேலைக்குப் போகணும்போல! இ-ஸ்கூட்டர் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!’’

- நாகராஜன், சென்னை

``இரண்டுமே எனக்குப் பிடிக்கும். ஆனா, நினைச்ச இடத்துக்குப் பயப்படாமப் போகணும்னா பெட்ரோல் ஸ்கூட்டர்தான் நம்பிக்கையா இருக்கு. சார்ஜிங்கால்தான் இ-ஸ்கூட்டர் வாங்க எனக்கு யோசனையா இருக்கு! என் சாய்ஸ் எப்பவுமே பெட்ரோலுக்குத்தான். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிடிக்காதுனு இல்லை. சார்ஜிங் மட்டும்தான் என்னோட பிரச்னையே!”

-பாலா, மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு