Published:Updated:

ஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000! - சாதித்துக் காட்டிய மாணவர்கள்!

போட்டி - எலெக்ட்ரிக் டூவீலர் டிசைன்

பிரீமியம் ஸ்டோரி

எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இப்போதைய ட்ரெண்டு என ஒரே வாக்கியத்தில் கடந்து போய் விடமுடியாது. 1800-ம் ஆண்டு, சைக்கிள்கள் பாரிஸ் நகரின் முக்கியப் போக்குவரத்தாக இருந்த காலம். ஓர் இடத்துக்கு வேகமாகப் போய் வரவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் ஒரே வழி... சைக்கிள்களில் இன்ஜினைப் பொருத்துவது. `இதை எப்படிச் சாத்தியப்படுத்தலாம்’ எனப் பல ஐரோப்பிய சைக்கிள் தயாரிப்பாளர்கள் யோசித்து, மோட்டார் சைக்கிள் நிறுவனங்களாக மாறினார்கள்.

சாதித்துக் காட்டிய மாணவர்கள்!
சாதித்துக் காட்டிய மாணவர்கள்!

பல தலைமுறையாக குதிரை வண்டித் தயாரிப்பில் இருந்த Jacob Lohner & Co நிறுவனம், 1887-ல் மோட்டார்சைக்கிள் நிறுவனமாக மாற முடிவெடுத்தது. பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக மின்சார மோட்டாரை வைத்து ஒரு பைக் தயாரிப்போம் என யோசித்து, `ஃபெர்டிணான்ட் ஃபோர்ஷ்’ என்ற பிரபல பொறியாளரை வேலைக்கு அமர்த்தியது. எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பது சவாலான விஷயமாக இருந்ததால், 2 ஆண்டுகளிலேயே இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டு எலெக்ட்ரிக் கார் ப்ராஜெக்டாக மாறி விட்டது. அன்று ஃபெர்டிணான்ட் ஃபோர்ஷ் எடுத்துக் கைவிடப்பட்ட காரியத்தை, இன்று 500 மாணவர்கள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலெக்ட்ரிக் பைக்
எலெக்ட்ரிக் பைக்

எங்கே தெரியுமா? SAE-யின் எலெக்டரிக் 2 வீலர் டிசைன் போட்டியில் (ETWDC). SAE Southern Section நடத்திய இந்தப் போட்டியின் கடைசிச் சுற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் தங்களது மின்சார பைக்குடன் படையெடுத்து வந்திருந்தனர். மொத்தம் 53 அணிகள், ஒரு அணிக்கு 10 பேர் என்ற கணக்கில் 530 பேர் இதில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் விதவிதமான வடிவங்களில், விதவிதமான தொழில்நுட்பங்களுடன் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைத்திருந்தார்கள். அசோக் லேலாண்டு, ராயல் என்ஃபீல்டு, ஆம்பியர், டஃபே, TI சைக்கிள்ஸ், TCS, RM டெக்னாலஜிஸ், ARCI, IIT என வந்திருந்த அத்தனை நிறுவன இன்ஜினீயர்களின் பரிசோதனையையும் தாண்டி, இந்தப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ADIT பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.

பிரதீப்
பிரதீப்

கிட்டத்தட்ட ஒரு ஏத்தர் ஸ்கூட்டருக்கு நிகரான அத்தனை அம்சங்களையும் இவர்கள் தங்களின் பைக்கில் பொருத்தியிருந்தார்கள். மேலும் இந்த பைக்கை 40,000 ரூபாய்க்கு உற்பத்தி செய்யும் அளவுக்கு உருவாக்கியிருந்தார்கள். 48V 24Ah லித்தியம் ஐயன் பேட்டரி, 1000W BLDC ஹப் மோட்டார் கொண்ட இந்த பைக் 4 ரூபாயில் 75 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. முழுமையாக சார்ஜ் ஆக 4 மணிநேரம் தேவை. 3 ரைடிங் மோடுகள், ரிவர்ஸ் அசிஸ்ட், ரிமோட் இக்னிஷன், ஜிபிஎஸ் டிராக்கிங், எலெக்ட்ரிக் பிரேக் என பல வசதிகளை இந்த பைக்கில் கொடுத்திருந்தார்கள். இந்த பைக்குக்கு க்ராஷ் டெஸ்ட்டெல்லாம் செய்திருந்தது, வேறு எந்தக் கல்லூரி மாணவர்களும் செய்யாத ஒரு விஷயம்.

சாதித்துக் காட்டிய மாணவர்கள்!
சாதித்துக் காட்டிய மாணவர்கள்!

2-ம் பரிசை, MIT புனே கல்லூரி மாணவர்கள் தட்டிச் சென்றார்கள். ஆனால், இதில் அப்ளாஸை அள்ளியது சென்னை ஜிஆர்டி கல்லூரி மாணவர்கள். எல்லோருமே தங்களது வாகனங்களைச் சாதாரண ஆட்கள் மட்டுமே ஓட்டும்படியாக உருவாக்கியிருக்க, ஜிஆர்டி மாணவர்கள் - மாற்றுத்திறனாளிகளும் ஓட்டும்படி தங்களுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்து, இதயத்தில் இடம்பிடித்து விட்டார்கள். கலந்துகொண்ட 530 மாணவர்களில் 36 பேர் பெண்கள். அது மட்டுமில்லை; சென்னை லயோலா பொறியியல் கல்லூரி அணியில் இருந்த எல்லோருமே பெண்கள்தான்.

சாதித்துக் காட்டிய மாணவர்கள்!
சாதித்துக் காட்டிய மாணவர்கள்!

இந்தப் போட்டியைப் பற்றி ஒருங்கிணைப்பாளர் பிரதீப்பிடம் பேசினோம், ``ஒரு வருடத்துக்கு முன்பே இந்தப் போட்டி திட்டமிடப்பட்டது. போட்டிக்கான முன்பதிவுத் தொகை ஓர்அணிக்கு 15,000 ரூபாய். ஒரு கல்லூரியில் இருந்து எத்தனை அணி வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டிக்கு முன்னோட்டமாக, மின்சார வாகனங்கள் பற்றியும் அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும்... மார்ச் மாதம் நான்கு நாட்கள் வொர்க்‌ஷாப் நடத்தினோம்.

அந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஆம்பியர், TCS, மத்திய அரசின் ARCI பொறியாளர்களை வைத்துப் பயிற்சி கொடுத்தோம். மாணவர்கள் பைக்கை டிசைன் செய்து உருவாக்கும் நேரத்தில், ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று எலெக்ட்ரிக் பைக் உருவாக்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்து, அதை எப்படித் தீர்ப்பது எனச் சொல்லிக் கொடுத்தோம்.

ஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000! - சாதித்துக் காட்டிய மாணவர்கள்!

கடைசியாக, போட்டி நடைபெறும்போது கூட ஆம்பியர் நிறுவனத்தின் பொறியாளர்களை வரவழைத்து மாணவர்களுக்கு வழிகாட்டினோம். இந்தப் போட்டிக்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்த ஆண்டு இதைவிட அதிக மாணவர்கள் வருவார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றார் பிரதீப். அடுத்த ஆண்டு போட்டிக்கான முன்பதிவுகள் இப்போதே தொடங்கிவிட்டன. saeiss.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களும், தகவல்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டின் டெஸ்லாக்களும், ஜிடி நாயுடுக்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு