உலகளவில் நடத்தப்படும் விளையாட்டுகளில் ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் மற்றும் FIFA World cup மிகவும் பிரபலமானது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டுகளின் மொத்த வருமானம் 3 பில்லியன் முதல் 7 பில்லியன் டாலர் வரை. அதேபோல் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஃபார்முலா-1 ரேஸிங், மோட்டோ ஜிபி எனப் பல பிரபலமான விளையாட்டுகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் பார்முலா-1 ரேஸிங்கின் மொத்த வருமானம் 2.2 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 ஆயிரம் கோடி. நமது நாட்டில் நடைபெறும் ஐபிஎல் விளையாட்டின் மொத்த வருமானம் 1000 கோடி முதல் 2,500 கோடி வரை. பல கோடிகள் செலவு செய்து நடத்தப்படும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது உலகம் முழுவதும். ஐபிஎல்-யை விட 6 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டித்தரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் இந்தியர்களின் பங்கு குறைவே! டீம் மேனேஜ்மென்ட், மார்ஷல், மெக்கானிக், இன்ஜினியர், கம்யூனிகேஷன்ஸ் என இன்டீரியராகப் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது மோட்டார் ஸ்போர்ட்ஸில். கை நிறைய சம்பளமும் உண்டு. ஆனால் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்குள் செல்ல வேண்டும் என்றால் எப்படி, எதை, எங்கே படிக்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வு இந்தியாவில் இல்லை. இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்; பல இளைஞர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக மோட்டார் விகடனும், CRA மோட்டார் ஸ்போர்ட்ஸும் இணைந்து 3 மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்கம் நடத்தியது.
ரேஸிங் போட்டோகிராபி
மார்ஷல் ட்ரெய்னிங்
டீம் மேனேஜ்மென்ட்
ரேஸிங் போட்டோகிராபி
புகைப்படங்கள் எடுப்பதில் சிலருக்கு அதிகமான ஆர்வம் இருக்கும். பார்க்கும் எல்லாவற்றையும் கேமராவில் பதிவு செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது ஆசையாக இருக்கும். `போட்டோகிராபிதான் என் வாழ்க்கை; அதில்தான் நான் சம்பாதிக்கவும் போகிறேன்’ என்ற எண்ணம் இருப்பவர்களுக்காகவே நடத்தப்பட்ட பயிலரங்கம்தான் ரேஸிங் போட்டோகிராபி.
“இதற்கு முன்பு திருமணங்களையும் பிறந்த நாள் விழாக்களையும் புகைப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்த நான், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பார்த்து இந்தப் பயிலரங்கத்துக்கு ஆவலுடன் வந்திருக்கிறேன்” என்றார் ரமேஷ் பாலாஜி.
கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ரேஸ் ட்ராக்கில் இந்த மூன்று நாள் பயிலரங்கம் நடைபெற்றது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் பிரபல புகைப்பட வல்லுநர் Adithya Bedre மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்தார்.
விழாக்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், ரேஸ் ட்ராக்கில் 200 கிமீ வேகத்தில் பறக்கும் கார்களையும் பைக்குகளையும் புகைப்படம் எடுப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. இதற்கெனப் பிரத்யேக லென்ஸ்கள் தேவை. அதாவது, குறைந்தது 300mm முதல் 600mm வரையிலான லென்ஸ்கள் தேவைப்படும். காரணம், ரேஸ் நடக்கும்போது புகைப்படக்காரர்கள் உள்ளே செல்ல முடியாத தூரத்தில் இருந்துதான் புகைப்படம் எடுக்க வேண்டும். அதிகப்படியான எம்எம் கொண்ட லென்ஸ்கள் தூரத்திலிருக்கும் பைக்குகளைத் துல்லியமாகப் படம் எடுக்க உதவியாக இருக்கும்.
முதல் நாள் முதல் வகுப்பில் அனைவருக்கும் முதலில் ரேஸ் ட்ராக்கில் எங்கெங்கெல்லாம் செல்லலாம்; செல்லக்கூடாது; எந்தெந்த இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறினார் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸின் தலைவர் தருண்.
ரேஸ் ட்ராக்கில் பல மணி நேரம் நிற்க வேண்டியதிருக்கும். ஒதுங்குவதற்கு நிழல்கூட இருக்காது. எனவே தொப்பி, கூலர்ஸ், தளர்வான ஆடைகள் இருந்தால் நலம்.இதுதான் முதல் டிப்ஸ். சேஃப்டி டிப்ஸ் வகுப்பு முடிந்தவுடன் கையில் கேமராக்களை எடுத்து ஷூட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் புகைப்படக்காரர்கள்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டோ கிராபியில் டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ் ஒன்றாகச் சொல்லித் தர ஆரம்பித்தார் ஆதித்யா.
டிப்ஸ் 1 : Panning Shot
சூரியனுக்கு நேரெதிராக நின்று புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. கேமரா முதலில் மேனுவல் மோடில் இருக்கவேண்டும்; ஷட்டர் ஸ்பீட் 320-யைத் தாண்டக் கூடாது, F பாயின்ட்டை சூரிய ஒளிக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். புகைப்படத்தை எந்தக் கோணத்தில், எப்படி எடுக்க வேண்டும் என்பதை நேர்த்தியாக ஷட்டர் பட்டனை கிளிக் செய்து அற்புதமான புகைப்படங்களை எடுத்துக் காட்டினார் ஆதித்யா.



சடசடவென கற்றுக்கொண்டதை க்ளிக் செய்து பார்க்க, ஆர்வத்துடன் இறங்கிவிட்டனர் புகைப்படக்காரர்கள். அதிவேகத்தில் செல்லும் பைக்குகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் எடுப்பதற்கான பயிற்சிதான் இந்த முதல் டிப்ஸ். ஒவ்வொருவரும் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து அதில் நிறைகுறைகளை எடுத்துக் கூறினார் ஆதித்யா.
டிப்ஸ் 2 : Aperture Priority (Depth of field)

இந்த Aperture Priority மோடில், ஒயிட் பேலன்ஸ் ‘ஆட்டோ’வாக இருக்கவேண்டும். f2.8, ஷட்டர் ஸ்பீட் தானாகவே சரிசெய்துவிடும். எக்ஸ்போஷர் சூரிய ஒளிக்கு ஏற்றாற்போல் நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். புகைப்படத்தில் இருக்கும் பைக்கைத் தவிர, மற்ற இடங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியக்கூடாது, அதாவது ஃபோகஸ் இல்லாமல். இதை Depth of field என்று கூறுவார்கள். பெரும்பாலும் Depth of field அதிகமாக இருக்கும் புகைப்படங்கள் எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்படும். புகைப்படக்காரர் காண்பிக்க நினைக்கும் சப்ஜெக்ட்தான் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்; வேறு எதுவும் தெரியாது. அதற்காகத்தான் f2.8 அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது.
ஆதித்யா சொல்லும் டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ் சொல்வதற்கும், கேட்பதற்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் பலமுறை பயிற்சி எடுத்தால் மட்டுமே தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதால் மூன்று நாட்களும் க்ளிக் சத்தம் ஓய்ந்தபாடில்லை.
டிப்ஸ் 3 : Editing

"புகைப்படங்களை எடுப்பதில் மட்டும் முடிந்து விடாது; சரியான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சரியான அளவில் எடிட்டிங் செய்வதும் ஒரு புகைப்பட வல்லுநரின் முக்கியமான வேலை. போட்டோ எடிட்டிங் செய்வதற்கு பல சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதில் Adobe Light Room மிக உதவிகரமாக இருக்கும்'' என்று எடிட்டிங் டிப்ஸை ஆரம்பித்தார் ஆதித்யா. இரண்டு நாட்களாக எடுத்த புகைப்படங்களில் சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்து, அதை எடிட் செய்து காண்பிக்க வேண்டும் என்பது மூன்றாவது நாள் வகுப்பு. பைக்கை ஓட்டும் ரேஸர், பைக் மற்றும் பைக்குகளில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்கள் அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும். பைக்கின் மீதோ, ரேஸர் மீதோ `shadow’ இருக்கக்கூடாது. Rule of third விதியைப் பயன்படுத்தி புகைப்படங்களைச் சரியான முறையில் க்ராப் செய்து, சிறந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபர்களாகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டனர் பங்கேற்ற அனைத்து போட்டோகிராபர்களும்.