பிரீமியம் ஸ்டோரி
எந்தவொரு வாகனமாக இருந்தாலும் பிரேக்கிங் செட்-அப்பின் பணி, பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்துவதே ஆகும். ஆனால் பவர்ஃபுல் இன்ஜினைக் கொண்ட பர்ஃபாமன்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, லேப் டைமில் சரிவை ஏற்படுத்தாதபடி பிரேக்கிங் அமைப்பு துல்லியமாகச் செயல்படுவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு ஏற்ப, பிரேக்கிங் தொழில்நுட்பம் கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதே நிதர்சனம்.

கால ஓட்டத்தில் டிரம் பிரேக் - ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் - காம்பி பிரேக் - ஏபிஎஸ் ஆகியவை, டூ-வீலர்களில் பயன்படுத்தப்பட்டதே அதற்கான உதாரணம். இப்போதைய மாடர்னான பிரேக்கிங் சிஸ்டத்தில், அடிப்படையான பாகங்களில் ஒன்றான பிரேக் கேலிப்பர் மற்றும் அதன் வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!
டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

பிரேக் கேலிப்பரின் வேலை எளிதானதுதான். பெரும்பாலும் பிரேக் பேடுகளைத் தன்வசம் வைத்திருப்பதுடன், பிரேக் லீவரில் காட்டப்படும் அழுத்தத்தைப் பொறுத்து, பிரேக் டிஸ்க்கின் சுழற்சியைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்துவதே ஆகும். பைக்கின் பர்ஃபாமன்ஸுக்கு ஏற்ப, இருக்கக்கூடிய பலவிதமான பிரேக் கேலிப்பர் & மவுன்ட்டிங் சிஸ்டத்தில் ஒன்று அதில் இடம்பெறும்.

ஹைட்ராலிக் ஜாக் பணிபுரியும் பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டே, ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகளும் இயங்குகின்றன. அதன்படி பிரேக் லீவரில் காட்டப்படும் அழுத்தம், முதலில் மாஸ்டர் சிலிண்டரில் இருக்கும் பிரேக் ஆயிலைச் சென்றடைகிறது. பின்னர் அதே ஆற்றலைக் கொண்ட பிரேக் ஆயில், ஹோஸ் வழியாக பிஸ்டனுக்கு வந்து, அதே வேகத்தில் பிரேக் பேடுகளையும் எட்டும். இதன் பிறகு, பிரேக் டிஸ்க் அழுத்திப் பிடிக்கப்படுவதால், பைக்கின் வேகம் குறையும். இது நீளமான விளக்கமாகத் தெரிந்தாலும், இவை எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்றுவிடும்.

பிஸ்டன் அளவில், பிரேக் கேலிப்பர்களின் வகை என்ன?

1.இருப்பதிலேயே சிம்பிளான கட்டுமானத்தைக் கொண்ட கேலிப்பர், சிங்கிள் பிஸ்டன்தான். ஆனால் டிஸ்க்கின் இருபுறத்தையும் பிடிக்கும்படி, இரு பிரேக் பேடுகள் அதனுள்ளே இருக்கும். கேலிப்பரில் இருக்கும் பிஸ்டன் ஒருபக்க பிரேக் பேடை அழுத்தும்போது, பக்கவாட்டுப் பகுதியில் ஏற்படும் விசையால், மறுபக்கத்தில் இருக்கும் பிரேக் பேடும் உள்பக்கமாக அழுத்தப்பட்டு, இரண்டும் சேர்ந்து பிரேக் டிஸ்க்கைக் கட்டுப்படுத்தும்.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!
டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

இந்த பிரேக் கேலிப்பரில் இருக்கக்கூடிய க்ளாம்ப்கள், இருபுறத்தில் இருந்தும் சமமான அழுத்தம் வருவதை உறுதி செய்யும். ஆனால் இரு பிரேக் பேடுகளின் தேய்மானம், கொஞ்சம் சீரற்ற முறையில்தான் இருக்கும். பெரும்பான்மையான பைக்குகளின் பின்புறம் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்புறம் இருப்பது சிங்கிள் பிஸ்டன் பிரேக் கேலிப்பர்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெயருக்கேற்றபடியே 2 பிஸ்டன் பிரேக் கேலிப்பரில், 2 பிஸ்டன்களும் 2 பிரேக் பேடுகளும் இருக்கும். பிரேக் டிஸ்க்கின் இருபுறத்திலும், தலா ஒரு பிஸ்டன் & பிரேக் பேடு பொருத்தப்பட்டிருக்கும். இதனால் பிரேக் லீவரை அழுத்தும்போது, இரு பிரேக் பேடுகளும் ஒரே நேரத்தில் பிரேக் டிஸ்க்கை அழுத்திப் பிடிக்கும். எனவே சிங்கிள் பிஸ்டன் பிரேக் கேலிப்பரைவிட, 2 பிஸ்டன் பிரேக் கேலிப்பரின் ஃபீட்பேக் வேகமாக இருக்கும். மேலும் இரு பிரேக் பேடுகளும், ஒரே அளவில் தேய்மானத்தைப் பெறும் (வீல்கள் வளையாமல் சீராக இருந்தால் மட்டும்). பல்வேறு வகையான பைக்குகளின் முன்பக்கத்தை, இந்த 2 பிஸ்டன் பிரேக் கேலிப்பரே அலங்கரிக்கிறது.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!
டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

நான்கு பிஸ்டன் கேலிப்பர்களில், பிரேக் டிஸ்க்கின் இருபுறத்திலும் தலா இரு பிஸ்டன் - ஒரு பிரேக் பேடு இருக்கும். இங்கே பிஸ்டனின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், எதிர்பார்த்தபடியே பவர்ஃபுல்லான பிரேக்கிங் திறன் கிடைத்து விடுகிறது.

பிரேக் பேடில் அதிக மற்றும் சீரான அழுத்தம் கிடைப்பது பெரிய ப்ளஸ். (2 வால்வ் மற்றும் 4 வால்வ் செட்-அப் இடையே இருக்கும் வித்தியாசம்தான்). இரு பிஸ்டன்களையும் எதிர்கொள்ள ஏதுவாக, இங்கே பெரிய சைஸ் பிரேக் பேடுகள் வழங்கப்பட்டிருக்கும். எனவே பிரேக் டிஸ்க்கை அழுத்தக்கூடிய பகுதி மற்றும் திறன் உயர்ந்திருப்பதால், இதன் ஃபீட்பேக் நச் ரகம்தான்.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!
டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

மோனோ ப்ளாக் பிரேக் கேலிப்பர்.... அப்படினா?

விலை குறைவான பைக்குகளில் இருக்கக் கூடிய மல்ட்டி பிஸ்டன் பிரேக் கேலிப்பர்கள் இருபாதிகளாகவே கட்டமைக்கப்படுகின்றன. எனவே, அவை தனித்தனியாக மெஷினிங் செய்யப்பட்ட பிறகே ஒன்றிணைக்கப் படுகின்றன. இதை பிரேக் கேலிப்பரின் நடுவே இருக்கும் மடிப்பு உறுதிப்படுத்திவிடும். ஆனால் சிங்கிள் பீஸாகச் செய்யப்படும் கேலிப்பரைவிட இதன் திடத்தன்மை குறைவுதான். இப்படி ஒரே பீஸ் மெட்டலால் மெஷின் செய்யப்பட்டு உருவாகும் கேலிப்பர்களே மோனோ ப்ளாக் என அழைக்கப்படுகின்றன.

கட்டுறுதியான கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் இவை, சூப்பர் பைக்குகளில் அதிகமாகக் காணப்படும். பிரெம்போவின் புகழ்பெற்ற ஸ்டைலெமா (Brembo Stylema) கேலிப்பர்கள், டுகாட்டியின் லேட்டஸ்ட் பைக்கான பனிகாலே V4-ல் இடம்பிடித்திருக்கின்றன.

இதற்கு முந்தைய M50 மோனோ ப்ளாக் கேலிப்பர், ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கில் வழங்கப் பட்டுள்ளன. மற்றபடி Ji Juan, Nissin, Bybre, Endurance ஆகிய நிறுவனங்களின் பிரேக் கேலிப்பர்கள், நம் நாட்டில் விற்பனையாகும் பைக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ரேடியல் VS ஆக்ஸியல்....

எந்த மவுன்ட்டிங் பெஸ்ட்?

1 லட்ச ரூபாய்க்குக் குறைவான பைக்குகளில், ஆக்ஸியல் மவுன்ட்டிங் (Axially Mounted) பாணியிலான கேலிப்பர்களை அதிகமாகப் பார்க்க முடியும் (பல்ஸர் & அப்பாச்சி சீரிஸ்). இதற்கு ஃபிக்ஸட் (Fixed) கேலிப்பர் என மற்றொரு பெயரும் உண்டு. சேஸிக்கு Parallel திசையிலும் - பிரேக் டிஸ்க்குக்கு Perpendicular திசையிலும், ஃபோர்க்கின் அடிப்பகுதியில் போல்ட்களின் உதவியுடன் இந்த கேலிப்பர் பொருத்தப்படும்.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!
டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

இவற்றில் பெரும்பான்மையாக ரப்பர் ஹோஸ்தான், பிரேக் ஆயிலைக் கேலிப்பருக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப் படும். ஆனால் சில என்ட்ரி லெவல் பர்ஃபாமன்ஸ் பைக்குகளில் மட்டும், கொஞ்சம் உடனடி ரெஸ்பான்ஸுக்காக மல்ட்டி பிஸ்டன் கேலிப்பர்களில் Steel Braided Lines காணப்படும் (பல்ஸர் 220/RS 200). இவற்றின் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் குறைவு என்பதுடன், தேவைபட்டால் ரீ-கன்டிஷனிங் செய்து கொள்ளவும் முடியும். இதுவே ரேடியல் மவுன்ட்டிங் (Radially Mounted) கொண்ட கேலிப்பர்கள் என்றால், அவை பிரேக் டிஸ்க்குக்கு Parallel திசையில், ஆக்ஸிலுக்கு வெளிப்புறத்தில் போல்ட்களால் இணைக்கப்படும் (டியூக் & RC சீரிஸ்). எனவே பிரேக் பிடிக்கும்போது ஏற்படக்கூடிய எதிர்விசைகளைச் சமாளிக்கும் திறன், ரேடியல் மவுன்ட்டிங் கேலிப்பர்களுக்கு மிகவும் அதிகம்.

இதற்கு ஃப்லோட்டிங் (Floating) கேலிப்பர் என மற்றொரு பெயரும் உண்டு. மேலும் இவை ஆக்ஸியல் மவுன்ட்டிங் கேலிப்பர்களை விட உறுதியானவை என்பதுடன், துல்லியமான பிரேக்கிங் ஃபீட்பேக் மற்றும் சமமான தேய்மானம் எ ப்ளஸ் பாயின்ட்களையும் கொண்டுள்ளன. தவிர தேவை ஏற்பட்டால், பெரிய மாடிஃபிகேஷன் ஏதும் இல்லாமல், வழக்கத்தைவிடப் பெரிய பிரேக் டிஸ்க்கை ரேடியல் மவுன்ட்டிங் கேலிப்பரில் பயன்படுத்த முடியும் என்பது செம. ஸ்பேஸர்களின் (Spacers) உதவியுடன், கூடுதல் இடத்துக்காக கேலிப்பரை நகர்த்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த நேரத்தில், வீல் கிளியரன்ஸை செக் செய்தாக வேண்டும்.

டிக்‌ஷ்னரி - பிரேக்குகள் பலவிதம்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘காசுக்கேத்த தோசை’ என்ற சொலவடை, ரேடியல் மவுன்ட்டிங் கேலிப்பர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். பிரேக் பேடுகளைத் தாண்டி இதில் சிக்கல் ஏற்பட்டால், பெரும்பாலும் மொத்த செட்டாகத்தான் இதை மாற்ற நேரிடும். தவிர, இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகங்களின் விலை கொஞ்சம் காஸ்ட்லிதான் என்பதை நினைவில் கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு