Published:Updated:

ஸ்கூட்டி... இப்போ இன்னும் பியூட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

பிரீமியம் ஸ்டோரி
“ஒரு நல்ல ஸ்கூட்டி வாங்கணும்; எந்த ஸ்கூட்டி வாங்கலாம்?’’ – புதிதாக ஸ்கூட்டர் வாங்கப்போகும் சில பேர் இப்படிக் கேட்கப் பார்த்திருக்கிறேன். அதாவது, அவர்கள் ஸ்கூட்டி என்று சொல்வது, ஒரு ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரைத்தான். அவர்கள் பார்வையில் ஆக்டிவாவும் ஸ்கூட்டிதான்; ஜூபிட்டரும் ஸ்கூட்டிதான். இப்படி ஒரு பிராண்ட் மாடலின் பெயரே ஒரு செக்மென்ட்டின் பெயராகிப் போகும் அளவுக்கு, டிவிஎஸ் ஸ்கூட்டி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.

அப்படிப்பட்ட ஸ்கூட்டி பெப் ப்ளஸ். இப்போது ஃபேஸ்லிஃப்ட் ஆகி, BS-6 வரைமுறைகளுக்கு ஏற்ப வந்திருக்கிறது. வழக்கமாக டிவிஎஸ் என்றால், ஓசூர் தொழிற்சாலைக்குத்தான் பறந்து, டிவிஎஸ்-க்குச் சொந்தமான ட்ராக்கிலோ, பெங்களூருவிலோ டெஸ்ட் டிரைவ் செய்வதுதான் வழக்கம். இந்த பேன்டமிக்கில் இ-பாஸ் அப்ளை செய்து ஓசூர் போவதற்குள் BS-7 அப்டேட் நடந்தாலும் ஆச்சரியமில்லை. அதனால், சென்னையில் உள்ள டீலர் வாகனமே நம் அலுவலகத்துக்கு வந்தது. அப்புறமென்ன… சென்னை முழுவதும் ஸ்கூட்டியில் ஒரு க்யூட் ரைடு!

டயல்கள் கசகசவெனக் குழப்பி அடிக்கவில்லை. நீட் அண்ட் க்ளீன்  10 இன்ச் ட்யூப்லெஸ் டயர், டிரம் பிரேக்தான்.  பிறைநிலா வடிவ ஹெட்லைட்... கீழே சதுர வடிவில் LED DRL  இண்டிகேட்டர்கள் வித்தியாசமான ஸ்டைல்...  ஸ்கூட்டி செம பிராக்டிக்கல். அங்கங்கே இதுபோன்ற இடவசதி.
டயல்கள் கசகசவெனக் குழப்பி அடிக்கவில்லை. நீட் அண்ட் க்ளீன் 10 இன்ச் ட்யூப்லெஸ் டயர், டிரம் பிரேக்தான். பிறைநிலா வடிவ ஹெட்லைட்... கீழே சதுர வடிவில் LED DRL இண்டிகேட்டர்கள் வித்தியாசமான ஸ்டைல்... ஸ்கூட்டி செம பிராக்டிக்கல். அங்கங்கே இதுபோன்ற இடவசதி.

டிசைன்

இப்போதும் சாலையில் போனால், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது ஸ்கூட்டி பெப். ``புது ஸ்கூட்டியா? என்ன மைலேஜ்? எவ்வளவு விலை?’’ என்று விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஸ்கூட்டியின் டிசைன் மாறியிருக்கிறதா என்றால்… இல்லை. இதில் ஓவர் டியூட்டி பார்க்கவில்லை டிவிஎஸ். பார்த்துப் பழகிய டிசைன்தான்; ஆனால் போர் அடிக்கவில்லை. முன் பக்கம் பிறை நிலா வடிவ ஹெட்லைட்டுக்குக் கீழே சதுரமாக LED டே டைம் ரன்னிங் லைட் கவர்ச்சியாக இருக்கிறது. ஹெட்லைட் ஆன் செய்தால், இது ஆஃப் ஆகிவிடும். ஏப்ரானின் பக்கவாட்டில் இரண்டு பக்கமும் நீளமான, வித்தியாசமான வடிவில் இண்டிகேட்டர்கள் செம! சிவப்பு-கறுப்பு கொண்ட Coral Matte, நீலம்-கறுப்பு கொண்ட Aqua Matte என இரண்டு மேட் ஃபினிஷிங் கலர்கள், ஸ்கூட்டியை இன்னும் கொஞ்சம் பியூட்டியாக மாற்றியிருக்கின்றன. பெண்களுக்கு மேட் ஃபினிஷிங் பிடிக்குமா என்று தெரியவில்லை. முன்புபோலவே பூப்போட்ட பிங்க் கலர் ஆப்ஷனெல்லாம் உண்டு. இதுபோக, 4 கலர்கள்.

நான் ஓட்டியது Aqua Matte கலர் மாடல். இந்த ஸ்பெஷல் எடிஷனில் மட்டும்தான் சீட் ஃபேப்ரிக், வித்தியாசமான முறையில் டிசைன் வேலைப்பாடு செய்திருந்தார்கள். நார்மல் எடிஷனில் டிசைன் இருக்காது. பின் பக்கம் கறுப்பு கிராப் ரெயில் உறுதியாக இருந்தது. எக்ஸாஸ்ட்டுக்கு க்ரோம் கார்டு கொடுத்திருந்தார்கள். சீட்டுக்குக் கீழே பக்கவாட்டில் Pep+ லோகோ 3D ஸ்டைலில் கலக்கலாக இருந்தது. புதிய ரியர் வியூ மிரர்கள், கறுப்பு கலரில் ஸ்கூட்டிக்கு மேட்ச்சிங்காக இருந்தன.

விலை: ரூ.65,362 (Matt), 64,594 (Normal) (சென்னை ஆன்ரோடு) 
ப்ளஸ்: பிராக்டிக்காலிட்டி, ஹேண்ட்லிங், டிசைன் 
மைனஸ்: பெர்ஃபாமென்ஸ், வெளிப்புற பெட்ரோல் ஃபில்லிங்
விலை: ரூ.65,362 (Matt), 64,594 (Normal) (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: பிராக்டிக்காலிட்டி, ஹேண்ட்லிங், டிசைன் மைனஸ்: பெர்ஃபாமென்ஸ், வெளிப்புற பெட்ரோல் ஃபில்லிங்

பிராக்டிக்காலிட்டி

பிராக்டிக்காலிட்டியில் ஸ்கூட்டிதான் முன்னோடி. முன் பக்க ஆப்ரானின் பின்பக்கத்தில், க்ளோவ் பாக்ஸ் இருந்தது. ஆனால், மூடி இல்லை. இதுவும் வசதியாகத்தான் இருக்கிறது. ஆப்ரான் & சீட்டுக்கு அடியில் என இரண்டு ஹூக்குகள் வேறு கொடுத்திருந்தார்கள். மார்க்கெட் செல்லும் மனைவிமார்களுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும். ஃப்ளோர்போர்டில் கால் வைத்து ஸ்கூட்டியை ஓட்ட நல்ல இடம் உண்டு. சின்னதாக லக்கேஜ்கூட வைத்துக் கொள்ளலாம். மேலே மொபைல் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் டம்மியாக இருந்தது. இது எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ். பில்லியன் ரைடர் கால் வைக்க ஃபுட்ரெஸ்ட் வசதியாகவே இருந்தது.

சைடு ஸ்டாண்டுக்கு அலாரம் அருமை. ‘ஹலோ சைடு ஸ்டாண்ட்’ என்று சாலையில் செல்பவர்களுக்கு வேலை வைக்கத் தேவையில்லை. ஆனால், இதுவும் எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில்தான் வரும் அன்பர்களே!

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

ஸ்கூட்டியின் வீல்பேஸ் 1,230 மிமீ. நல்ல நீளமாகவே இருந்தது. சீட் உயரம் 760 மிமீதான் என்பதால், உயரம் குறைவானவர்கள்கூட ஈஸியாக ஹேண்ட்லிங் செய்யலாம். பொதுவாக, ஸ்கூட்டியை சென்டர் ஸ்டாண்ட் போடச் சொன்னால், சென்டரைக் கண்ட ஸ்டேட் மாதிரி நடுங்குவார்கள் பெண்கள். ஈஸி தொழில்நுட்பத்தால் இப்போது 30% எஃபோர்ட் குறைந்திருக்கிறது என்கிறது டிவிஎஸ். பெப் ப்ளஸ் வாங்கினால், முயற்சித்துப் பாருங்கள்.

சில விஷயங்கள் மாறவே மாறாதுபோல! வெளிப்புற பெட்ரோல் ஃபில்லிங்கைத்தான் சொல்கிறேன். லேட்டஸ்ட் ஸ்கூட்டர்களில் எல்லாம் சீட்டைத் திறக்காமலே பெட்ரோல் ஃபில் செய்யும்படி இருக்க, ஸ்கூட்டி இதை ட்ரேட் மார்க்காகவே ஆக்கிவிட்டது (ஸ்ட்ரீக் நினைவுக்கு வந்தது). ஸ்கூட்டி போலவே இதன் பெட்ரோல் டேங்க்கும் ரொம்ப சிறுசு. 4.2 லிட்டர் கொள்ளளவுதான் (XL100 போல). 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால், ஃப்யூல் மீட்டரின் முள் மேலேறிவிடும். இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜ், ஓகே ரகம். லேடீஸ் ஹெல்மெட் வேண்டுமானால் வைக்கலாம். இதன் போட்டி ஸ்கூட்டரான ப்ளஷர் ப்ளஸ்ஸில் பூட் ஸ்பேஸில் எல்இடி லைட்டெல்லாம் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேண்ட்லிங்

இந்தியாவின் சிறிய ஸ்கூட்டர் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்தான். இதன் எடை வெறும் 93 கிலோதான். கொஞ்சம் பல்க் பார்ட்டிகள் தூக்கியே பார்க் செய்து விடுவார்கள். இந்த லைட் வெயிட்தான் ஓட்டுதலை எளிமையாக்குகிறது. இதுவே ஹைவேஸில் ஸ்டெபிலிட்டியிலும் கொஞ்சம் பயத்தை ஏற்படுகிறது. இதன் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்களை அசால்ட்டாகச் சமாளிக்கிறது. (ப்ளஷர் ப்ளஸ்ஸில் ஹைட்ராலிக் செட்-அப்தான்).

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

10 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுத்திருந்தார்கள். இதன் ரோடு கிரிப் டீசென்ட் ரகம். பெப் ப்ளஸ்ஸின் ஓட்டுதல், ஓரளவு இறுக்கம் இல்லாமல் இருந்தாலும், இதன் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஸ்பீடு பிரேக்கர்களில் அடிவாங்க வைக்கிறது. 135 மிமீதான். இரண்டு பேர் பயணிக்கையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஸ்கூட்டி... இப்போ இன்னும் பியூட்டி!

வழக்கம்போல், பெப் பளஸ்ஸும் பிரேக்கிங்கில் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. இந்தச் சின்ன ஸ்கூட்டருக்கு டிஸ்க்கெல்லாம் ஓவர் என்பது சரிதான். இரண்டு பக்கமும் 110 மிமீ SBT டிரம் பிரேக் கொடுத்திருந்தார்கள்.முன் பக்கத்திலாவது 130 மிமீ டிரம் கொடுத்திருக்கலாம். என்ன, பிரேக்கிங்குக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் போல!

இன்ஜின்

இப்போதைக்கு இந்திய டூ-வீலர் மார்க்கெட்டின் சிறிய Fi இன்ஜின், பெப் ப்ளஸ்ஸினுடையதுதான். 87.8சிசி, ஏர் கூல்டு - ECU கன்ட்ரோல்டு இன்ஜின் கொண்ட இதன் BS-6 அப்டேட்தான் இதில் பெரிய மாற்றம். இதன் பவர் 5.36 bhp. டார்க் 0.65kgm. பட்டன் ஸ்டார்ட் செய்ததும், இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் பீட் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. கார்புரேட்டருக்குப் பதில் இந்தச் சின்ன ஸ்கூட்டியில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைப் பார்ப்பதே புதுமையாக இருந்தது. ஸ்கூட்டரின் எடை 93 கிலோவைத் தாண்டாமல் இருக்க, மைக்ரோ அலாய் ஃப்ரேம் துணை நிற்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

ஆனாலும், இதுதான் இதன் மைனஸும்கூட! 40 கி.மீ-யைத் தாண்டவே ரொம்ப யோசிக்கிறது ஸ்கூட்டி பெப் ப்ளஸ். அதிகபட்சம் ஹைவேஸில் 50 கி.மீ-ல் விரட்டவே போராட வேண்டியிருந்தது. ஆனால், CVT காரணமாக, பிக்-அப் ஓகே ரகம். இதன் ET-Fi டெக்னாலஜி, ஸ்கூட்டியை ஸ்மூத்தாக்குகிறது. வழக்கம்போல், டிவிஎஸ்-ன் ஃபேவரைட்டான பவர் வார்னிங் லைட்டுகள் கொடுத்திருந்தார்கள். ஆனால், இது மாறி மாறி ஒளிரும்போது, நடுநடுவே ஹைபீம் ஆன் ஆகியிருக்கிறதோ என்றொரு பிரம்மை ஏற்படுவது எனக்கு மட்டும்தானா? ஸ்பைடர் மேன் மாதிரி பறக்கத் தேவையில்லை; ஜென்டில்மேன் மாதிரி நடந்தாலே போதும் என்பவர்களுக்குத்தான் இதன் ரைடிங் செட் ஆகும். இதன் மைலேஜ் துல்லியமாக டெஸ்ட் செய்ய முடியவில்லை. ஆனாலும், நமது ஓட்டுதலுக்கு ஆவரேஜாக 50 கி.மீ கிடைத்தது.

பெப் ப்ளஸ் வாங்கலாமா?

இந்தியாவின் சின்ன ஸ்கூட்டர்; சின்ன Fi இன்ஜின் - ஸ்கூட்டிதான். இத்தனைக்கும் BS-6 அப்டேட்டால் எக்ஸ் ஷோரூம் விலையில் 6,500 ரூபாய் விலை ஏறியபோதும், எல்லோரும் வாங்கும் விலையில் கட்டுப்படியாகக்கூடிய ஒரே ஸ்கூட்டர் – ஸ்கூட்டிதான். இதன் சென்னை ஆன்ரோடு விலை 65,362 ரூபாய் என்பது ஓகேதான். கூடுமானவரை மொபைல் சார்ஜர், LED DRL, ET-Fi தொழில்நுட்பம், அங்கங்கே இடவசதி என்று பிராக்டிக்கலாக பெப் ப்ளஸ்ஸை டிசைன் செய்ததற்கு டிவிஎஸ்-க்கு குடோஸ். பறக்கவெல்லாம் தேவையில்லை; மெதுவாக ஓடினாலே போதும் என்பவர்களுக்கான ஈஸியான ஸ்கூட்டர், ஸ்கூட்டி பெப் ப்ளஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு