Published:Updated:

புல்லட்டுக்குப் போட்டி ஹோண்டாவிடம் இருந்து!

ஃபர்ஸ்ட் லுக் : ஹோண்டா ஹைனெஸ் CB350

பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா... இப்போதெல்லொம் ஒரு புத்துணர்ச்சியுடனே இயங்குகிறது. ஆம், BS-6 விதிகளுக்கேற்ப தமது மாடல்களை மற்ற நிறுவனங்கள் அப்டேட் செய்யும்போது, இந்த நிறுவனமோ தனது மாடல்கள் அனைத்தையுமே புத்தம் புதியதாகத் தயாரித்து இறக்கிவிட்டது.

மேலும் இதுவரை தான் தடம் பதிக்காத செக்மென்ட்களிலும் களமிறங்கியிருக்கிறது. ஹார்னெட் 2.0 அதற்கான உதாரணம் என்றாலும், அந்த எண்ணத்தைத் தற்போது வலுப்படுத்தும்படி வந்திருக்கிறது ஹைனெஸ் (H’ness) CB350.

சிம்பிளான ஸ்பீடோ மீட்டர். டேக்கோ மீட்டர் இல்லை.
சிம்பிளான ஸ்பீடோ மீட்டர். டேக்கோ மீட்டர் இல்லை.

ரெட்ரோ மாடல்களுக்குப் பெயர்பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, இப்படி ஒரு போட்டியை ஹோண்டாவிடமிருந்து யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். Rebel பைக்தான் வரப்போகிறது எனப் பலரும் எதிர்பார்த்த வேளையில், H’ness CB350 பைக் DLX, DLX Pro என இரு வேரியன்ட்களில் - 6 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது.

ஹோண்டாவின் புது 350 சிசி இன்ஜின் இது
ஹோண்டாவின் புது 350 சிசி இன்ஜின் இது

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

சர்வதேசச் சந்தைகளில் கிடைக்கும் தனது CB சீரிஸ் பைக்குகளை அடிப்படையாகக் கொண்டு, ஹைனெஸ் CB350 பைக்கை வடிவமைத்திருக்கிறது ஹோண்டா. அதற்கேற்ப இந்த பைக்கின் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள், அப்படியே 1980 CB350 பைக்கை நினைவுபடுத்துகிறது. மற்றபடி வட்டமான ஹெட்லைட் - க்ரோம் ஃபெண்டர்கள் - கட்டுமஸ்தான 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் - பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் பழைய Honda லோகோ ஆகியவை, உலகளவில் ஹோண்டா விற்பனை செய்யும் CB 1100RS எனும் ரெட்ரோ பைக்கில் இருப்பதுபோலவே உள்ளன. தனது வகையிலேயே முதன்முறையாக, முழுக்க LED லைட்டிங்குடன் கிடைக்கும் ஒரே பைக் ஹைனெஸ் CB350தான்.

DLX Pro மாடலில் சில ஸ்விட்ச்கள் இடம் மாறி இருக்கும்.
DLX Pro மாடலில் சில ஸ்விட்ச்கள் இடம் மாறி இருக்கும்.

இது ரெட்ரோ பைக்தான் என்பதை, வித்தியாசமான டயர் சைஸ் தெளிவுபடுத்தி விடுகிறது (முன்-19 இன்ச், பின்-18 இன்ச்). ரைடிங் பொசிஷனும் அந்த எண்ணத்தை வழிமொழியும்படி அமைந்துள்ளது. 800மிமீ உயரத்தில் இருக்கும் சிங்கிள் பீஸ் சீட் - ரைடரை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் - நடுப்புறத்தில் உள்ள ஃபுட் பெக்ஸ் ஆகியவை, ரிலாக்ஸ்டான சீட்டிங்குக்கு துணை நிற்கின்றன. இன்ஜினில் இருக்கும் க்ரோம் ஃபினிஷ் வெரி நைஸ் ரகம். ஆனால் DLX Pro மாடலில், இண்டிகேட்டர் மற்றும் ஹார்ன் பட்டன் இடம் மாறியிருப்பது, பழகுவதற்கு நேரம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. DLX-ல் இந்தப் பிரச்னை இல்லை. ஜாவா & ராயல் என்பீல்டு போல, முழுக்க க்ரோம் ஃபினிஷில் ஒரு கலர் ஆப்ஷன் இங்கும் கொடுக்கலாமே?

முழுக்க முழுக்க LED ஹெட்லைட் கொண்ட பைக்.
முழுக்க முழுக்க LED ஹெட்லைட் கொண்ட பைக்.

Y ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் காம்பேக்ட்டான மீட்டர் கன்சோல் போன்றவை, க்ளாஸ்! ஸ்பீடோமீட்டரில் ரியல் டைம் மைலேஜ் - கியர் & சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் - பேட்டரி வோல்டேஜ் - எக்கோ மோடு தெரிந்தாலும், பெனெல்லி போல இங்கும் டேக்கோமீட்டர் இருந்திருந்தால் முழுமையாக இருந்திருக்கும். Hazard இண்டிகேட்டர்கள் இருப்பது ஆறுதல்.

DLX Pro மாடலில் டூயல் டோன் கலர்கள், டூயல் ஹாரன், Honda Smartphone Voice Control system (HSVCS) எனப்படும் புளூடுத் கனெக்ட்டிவிட்டி கிடைக்கின்றன. 5,000 ரூபாய் குறைவான விலையில் வரும் DLX மாடலில் இந்த வசதிகள் கிடையாது. H’ness CB350 மொத்தமாகவே, சிம்பிளான பாகங்கள் மற்றும் தோற்றத்துடன் இருப்பது சிலருக்குப் பிடிக்காமலும் போகலாம். பைக்கின் தரத்தில் பெரிதாகக் குறைகள் இல்லை எனலாம். தவிர ராயல் என்ஃபீல்டு மற்றும் பெனெல்லியின் டேங்க்கில் இருக்கும் ரப்பர் டேங்க் பேடு இங்கே மிஸ்ஸிங்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

ஹைனெஸ் CB350 பைக்குக்கு எனப் பிரத்யேகமாக, புத்தம் புதிய இன்ஜினைத் தயாரித்துள்ளது ஹோண்டா. 348.36சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் & PGM-Fi உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் கூல்டு இன்ஜின், ஆரம்ப கட்ட மற்றும் மித வேகப் பயன்பாட்டை மனதில் வைத்து டியூன் செய்யப்பட்டுள்ளது. எனவே இது வெளிப்படுத்தும் 20.8bhp@5,500rpm பவர் மற்றும் 3.0kgm@3,000rpm டார்க்கில் வியப்பேதும் இல்லை. பவர் ஓகேதான் என்றாலும், டார்க்கில் இது இதர போட்டியாளர்களை வீழ்த்திவிடுகிறது. 181 கிலோ எடையுள்ள இந்த ரெட்ரோ பைக், 116.57bhp/Tonne எனும் பவர் டு வெயிட் ரேஷியோவைக் கொண்டுள்ளது. போட்டி பைக்குகளில் இல்லாத ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், இந்த Long Stroke இன்ஜினில் இருப்பது செம. மற்ற ஹோண்டா தயாரிப்புகளுக்கே உரித்தான இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸை இங்கேயும் எதிர்பார்க்கலாம். என்றாலும், பெரிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில் அதிர்வுகள் வருவதற்கான சாத்தியம் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக இதில் பேலன்ஸர் ஷாஃப்ட்டைப் பொருத்திவிட்டது ஹோண்டா. ஹைனெஸ் CB350 பைக்கின் டீசர் வீடியோ இணையத்தில் வைரலானதற்கு, அதில் இடம்பெற்ற பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தமே பிரதான காரணி. இதற்கு எக்ஸாஸ்ட்டின் Expansion Chamber-ல் இருக்கும் One-Chamber Structure மற்றும் 45மிமீ நீளமான எக்ஸாஸ்ட் பைப் துணை நிற்கின்றன.

ஹோண்டா ஹைனெஸ் CB350
ஹோண்டா ஹைனெஸ் CB350

ஓட்டுதல் அனுபவம் & எர்கனாமிக்ஸ்

ஹைனெஸ் CB350 பைக்கின் இன்ஜின் போலவே, அதன் மெக்கானிக்கல் பாகங்களும் இந்த பைக்குக்கு எனத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருக்கும் Half-Duplex ஸ்டீல் க்ரேடில் ஃப்ரேமில் இன்ஜினுக்கான மவுன்ட்கள் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளன. எனவே பைக்கின் கையாளுமை நன்றாக இருக்கும் என்கிறது ஹோண்டா. மற்றபடி டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் ஹைட்ராலிக் க்ரோம் ஷாக் அப்சார்பர், வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்ஸ் (முன்-310மிமீ, பின்- 240மிமீ), MRF Nylogrip Zapper டயர்கள் (முன்- 100/90-19, பின்- 130/70-18), டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான Nissin கேலிப்பர்கள் என வழக்கமான அம்சங்களே இருந்தாலும், Honda Selectable Torque Control (HSTC) எனப்படும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், போட்டி பைக்குகளில் இல்லாத அம்சம். மேலும் HSVCS வசதி வாயிலாக புளூடூத் Telephony, நேவிகேஷன், மியூசிக் Playback, வாய்ஸ் மெசேஜ் Read out போன்ற விஷயங்கள் தெரிகின்றன.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் மொபைலை சார்ஜ் ஏற்ற USB பாயின்ட் இருந்தாலும், பைக்கில் மொபைல் மவுன்ட் இல்லாதது நெருடல். சிறப்பான 166மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். பெரிய 1,441மிமீ வீல்பேஸ் & அகலமான பின்பக்க டயர் என்பதால், நெடுஞ்சாலைகளில் H’ness CB350-ன் நிலைத்தன்மை நன்றாக இருக்கலாம். போட்டியாளர்களைவிட இதன் எடை 14-24 கிலோ வரை குறைவு என்பதால், நகர்ப்புறத்தில் இதை ஓட்டுவது கொஞ்சம் சுலபமாகவே இருக்கலாம். இருப்பினும் ஜாவா/42 பைக்கின் எடை, இதைவிட 9 கிலோ குறைவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புல்லட்டுக்குப் போட்டி ஹோண்டாவிடம் இருந்து!

முதல் தீர்ப்பு

1.85 லட்சம் (DLX) மற்றும் 1.90 லட்ச ரூபாய் (DLX Pro) என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில், இந்த பைக்குகளை அறிமுகமாகி இருக்கின்றன.. பெனெல்லியின் விலை இதைவிட 10 ஆயிரம் அதிகம்! இந்தியாவில் தனது முதல் ரெட்ரோ பைக்கின் விற்பனை அனுபவம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என எண்ணிய இந்த நிறுவனம், தனது Big Wing ஷோரூம்களில் இந்த பைக்கைப் பொசிஷன் செய்திருக்கிறது. எனவே வழக்கமான ஹோண்டா ஷோரூம்களில் இந்த பைக்கைப் பார்க்கவோ வாங்கவோ முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை - ஈரோடு - திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டுமே இந்த விற்பனையகம் அமைந்திருக்கிறது.

போட்டியாளர்களைப் பொறுத்தவரை, ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 - ஜாவா/42 - பெனெல்லி இம்பீரியல் 400 ஆகியவை ஹைனெஸ் CB350-க்குச் சவால் விடுகின்றன. இந்தப் பட்டியலில் ராயல் என்ஃபீல்டின் Meteor 350 மற்றும் புதிய க்ளாஸிக் ஆகியவை விரைவில் இணையவுள்ளன. போட்டி பைக்குகளைவிட இந்த ரெட்ரோ பைக்கின் விலை கொஞ்சம் அதிகம்தான் (11-29 ஆயிரம் ரூபாய்) என்றாலும், அதற்கு நியாயம் சேர்க்கும்படி சில பல First in Class வசதிகளுடன், ஹோண்டா இதைத் தயாரித்துள்ளது. பெரிய முன்பக்க டிஸ்க், அதிக வீல்பேஸ், பெரிய டேங்க், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் எல்லாம் இதன் பலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு