Published:Updated:

டியூக் இப்போ இன்னும் ஷார்ப்!

ஃபர்ஸ்ட் ரைடு - கேடிஎம் 790 டியூக்

பிரீமியம் ஸ்டோரி

8.63 லட்ச ரூபாய்... இந்த எக்ஸ்-ஷோரூம் விலையைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன குழப்பம் வருகிறதோ, அதேதான் எனக்கும் வந்தது. குறைவான விலையில் நிறைவான பர்ஃபாமன்ஸ்; மாடர்ன் தொழில்நுட்பங்கள் என அசத்தும் கேடிஎம் நிறுவனம், புதிய 790 டியூக்கில் அதைத் தவறவிட்டுவிட்டதோ எனத் தோன்றியது. ஆனால், உடனடியாக எந்தவிதமான முன்முடிவுக்கும் வந்துவிடாமல், பைக்கை ஓட்டிப் பார்க்கத் தீர்மானித்தேன்.

டிசைன் மற்றும் எர்கனாமிக்ஸ்

கேடிஎம் பைக்குகளுக்கே உரித்தான டிசைன் கோட்பாடுகளை, 790 டியூக்கிலும் பார்க்க முடிகிறது. சிறப்பான கையாளுமை மற்றும் குறைவான எடை முக்கியம் என்பதால், வழக்கம்போல குறைவான பாடி பேனல்களே உள்ளன. அதுவும் ஷார்ப்பான வடிவமைப்பில் கவர்கின்றன.

டியூக் இப்போ இன்னும் ஷார்ப்!

ஆனால் இந்த பைக்கின் ஹெட்லைட் மற்றும் மிரர்கள், 390 டியூக்கை நினைவுபடுத்துவது நெருடல். தவிர 790 டியூக்கின் பின்பகுதி, மிகவும் வழக்கமான தோற்றத்தில் இருப்பது மைனஸ். ஆனால் முரட்டுத்தனத்தில் குறை இல்லை. TFT டிஸ்ப்ளே மற்றும் அட்ஜஸ்டபிள் லீவர்கள், தரத்திலும் பயன்பாட்டிலும் அசத்தல்.

390 டியூக்போல சுலபமான கையாளுமை, இதில் உட்காரும்போதே கிடைத்துவிடுகிறது. 825மிமீ சீட் உயரம் கொஞ்சம் அதிகம்தான்; ஆனால் அகலமான சீட் என்பதால் இது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இதனுடன் ஓரளவுக்கு ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் மற்றும் காம்பேக்ட் சைஸ் சேரும்போது, இரு கால்களையும் தரையில் வைத்து பைக்கை பேலன்ஸ் செய்வது எளிதாக இருக்கிறது.

கேடிஎம் பைக்குகளில் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்த ட்ரெல்லிஸ் ஃப்ரேம், இதில் இல்லை என்பது அதிர்ச்சிதான்! சிம்பிளான வடிவமைப்பில் இருக்கும் Two Spar Tubular ஃப்ரேமில் இன்ஜின்தான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, மொத்த ஃப்ரேமின் எடையே 8.8 கிலோதான் என்பதுடன், இருபுறமும் உள்ள அலுமினிய சப் ஃபிரேமின் எடை 3.4 கிலோதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

கேடிஎம் வரலாற்றிலேயே, பேரலல் ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்ட முதல் பைக் 790 டியூக்தான். V-ட்வின் இன்ஜின்களைவிட இதன் விலை குறைவு என்பதுடன், இவற்றைச் சிறிய இடத்தில் கச்சிதமாகப் பொருத்த முடியும் என்பதே காரணம். 8 வால்வ் - DOHC - லிக்விட் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - அதிக 12.7:1 கம்ப்ரஷன் ரேஷியோ ஆகிய அம்சங்களைக் கொண்ட 799சிசி இன்ஜின், 105bhp பவர் மற்றும் 8.7kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

டியூக் இப்போ இன்னும் ஷார்ப்!

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பவர் குறைவுதான் என்றாலும், டார்க்கில் எங்கேயோ போய்விட்டது. மேலும் Uneven Firing Order காரணமாக, இது V-ட்வின் இன்ஜினைப் போலவே சத்தம் போடுகிறது. ஆனால் வேகம் செல்ல செல்ல, அது ரசிக்கும்படியாக இருப்பது பெரிய ப்ளஸ். இரண்டு Balancer Shaft இருப்பதால், 790 டியூக்கின் இன்ஜின் அனைத்து வேகங்களிலும் ஸ்மூத்தாகவே இயங்குகிறது.

டியூக் 790-யில் Rain, Street, Sport, Track என மொத்தம் 4 ரைடிங் மோடுகள் உள்ளன. எதிர்பார்த்தபடியே Rain மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் டல்லாக இருப்பதுடன், 2% பவர் குறைபாடும் உள்ளது. மற்ற மோடுகளில் பைக்கின் பர்ஃபாமன்ஸில் பலத்த மாற்றம் தெரியும். ஷார்ட் கியரிங், ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பவரை மனதில் வைத்து டியூன் செய்யப்பட்டிருக்கும் இன்ஜின் ஆகியவை சேர்ந்து, உடனடியான பவர் டெலிவரிக்கு வழிவகுக்கின்றன. இதனால் 6 கியர்களையும் அடுத்தடுத்துப் பயன்படுத்துவது அலாதியான அனுபவமாக இருப்பதுடன், ஒவ்வொரு கியரிலும் 9,500 ஆர்பிஎம் ரெட்லைனை இன்ஜின் அசால்ட்டாக எட்டிப்பிடித்து விடுகிறது. டெஸ்ட் டிராக்கில் 230 கி.மீ வேகம் வரை செல்ல முடிந்தது!

ஓட்டுதல் அனுபவம்

790 டியூக் ஸ்கோர் செய்யும் இன்னுமொரு இடம் சேஸி. காம்பேக்ட்டாக இருப்பதால், இதனைக் கையாள்வது சுலபமாகவே இருக்கிறது. 187 கிலோ எடையுள்ள இந்த கேடிஎம் பைக், தனது பிரதான போட்டியாளரான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் (அதே எடை) பைக்குக்குச் சவால் விடுகிறது. எனவே திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவது செம அனுபவம் என்பதுடன், நினைத்த மாத்திரத்தில் எளிதாக பைக்கின் திசையை மாற்ற முடிகிறது.

790 டியூக் பெரிய வீல் பேஸைக் கொண்டுள்ளதால், அதிக வேகத்தில் பைக்கின் நிலைத்தன்மை அட்டகாசம்! இதற்கு ஹேண்டில்பாரில் உள்ள ஸ்டீயரிங் டேம்பர் முக்கிய காரணம். Bi-Directional Quickshifter இருப்பதால், கிளட்ச்சைப் பயன்படுத்தாமலேயே கியரை மாற்றலாம்.

WP நிறுவனத் தயாரிப்பின் செட்-அப் கச்சிதமாக இருக்கும் என்று நம்பலாம். பின்பக்க மோனோஷாக்கில் Pre-Load மட்டுமே அட்ஜஸ்ட் செய்ய முடியும். முன்பக்கம் உள்ள 43மிமீ USD-ல் அதுவும் இல்லை. சஸ்பென்ஷன் செட்-அப் நகரச்சாலைகளில் ஓகேவாக இருந்தாலும், ரேஸ் டிராக்கில் ஸ்போர்ட்டியாக ஓட்டுவதற்கு உதவுகிறது.

டிராக்கில் முட்டியைத் தரையோடு தரையாகத் தேய்த்துக்கொண்டு, குறுகலான திருப்பங்களில் பைக்கை வளைத்து நெளித்துக் கொண்டு பறக்க, 790 டியூக் பக்காவான பைக்காக இருக்கிறது. ஆனாலும், ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்குடன் போட்டி போட, 790 டியூக் R பைக்கை கேடிஎம் கொண்டு வந்தால் சூப்பராக இருக்கும்!

டியூக் இப்போ இன்னும் ஷார்ப்!

J Juan டிஸ்க் பிரேக்ஸ் ஷார்ப்பாக இல்லாவிட்டாலும், அவற்றின் ஃபீட்பேக் நன்றாகவே இருக்கிறது. 17 இன்ச் Maxxis டயர்கள் ரேஸ் ட்ராக்கை மனதில் வைத்துத் தயாரிக்கப்படவில்லை என்றாலும், அதன் ரோடு கிரிப் மனநிறைவைத் தருகின்றன.

ஒருவேளை, டயர் - பிரேக் - சஸ்பென்ஷன் ஏதாவது தவறிழைத்தால்கூட, 790 டியூக்கின் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் விழித்துக் கொள்ளும். Track மோடை ரைடர் தமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

த்ராட்டில் ரெஸ்பான்ஸ் (Sport செம, Track வாவ்) மற்றும் wheelie Control (முதல் கியரில் பைக்கின் முன்பக்கம் மேலே எழும்புவதைத் தவிர்ப்பது) என பல விஷயங்களைக் கட்டுப்படுத்தலாம். Launch Control 1,000 கி.மீக்குப் பிறகுதான் வேலை செய்யத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Track மோடில் பைக்கை ஓட்டும்போது, 9 Level-களில் டிராக்‌ஷன் கன்ட்ரோலை அட்ஜஸ்ட் செய்யலாம் (ஹேண்டில்பாரில் உள்ள Up/Down Arrow பட்டன்) என்பது சூப்பர். 790 டியூக்கில் IMU இருப்பதால், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ், திருப்பங்களுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றன. பின்பக்க வீலில் ஏபிஎஸ் ஆஃப் ஆப்ஷன் அதாவது Super Moto மோடு உண்டு என்றாலும், ஒட்டுமொத்தமாக ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்ய முடியாது.

முதல் தீர்ப்பு

அடிப்படையில் ஸ்ட்ரீட் பைக்காக இருந்தாலும், 790 டியூக் ரேஸ் ட்ராக்கிலும் பட்டையைக் கிளப்புகிறது. குறைவான டர்னிங் ரேடியஸ், எடை குறைவான கிளட்ச், 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பர்ஃபாமன்ஸ், காம்பேக்ட் சைஸ் என நெரிசல்மிக்க நகரச் சாலைகளை 390 டியூக்கைவிட 790 சிறப்பாகச் சமாளிக்கும் எனத் தோன்றுகிறது. ஓட்டுதல் அனுபவத்திலும் ஸ்கோர் செய்துவிடுகிறது. ஆனால் இன்ஜின் சூடு எப்படி இருக்கும் என்பது இனிதான் தெரியும்.

த்ரில் வேகம் - நம்பமுடியாத விலை என்பதே கடந்த ஏழு ஆண்டுகளாக கேடிஎம்மின் தாரக மந்திரமாக இருந்த நிலையில், 790 டியூக் எதிர்பார்த்ததைவிட் அதிக விலையில் வந்திருக்கிறது (9.60 லட்ச ரூபாய், சென்னை ஆன்ரோடு).

இன்ஜின் மற்றும் Mandatory Fittings (சாரி கார்டு, க்ராஷ் கார்டு, கிராப் ரெயில்) ஆகியவற்றைத் தாண்டி, எல்லாமே CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்படுபவைதான்.

இதனாலேயே சர்வதேச சந்தைகளைப் போலவே, கவாஸாகி - டிரையம்ப் - டுகாட்டி - சுஸூகி ஆகியவற்றைவிட அதிக விலையில் இந்த கேடிஎம் நம் நாட்டிலும் டயர் பதித்திருக்கிறது. ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RS பைக்கைவிட 790 டியூக்கின் விலை குறைவு என்பது ஆறுதலாக இருந்தாலும், ஒரு தடவை 790-யை ஓட்டிப் பாருங்க மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு