
ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: பஜாஜ் சேட்டக்
ஒரு சில விஷயங்களைப் பற்றிப் பேசும்போதோ கேட்கும் போதோ, பழங்கால நினைவுகள் நம்மை ஆட்கொள்ளும். சேட்டக் அப்படியோர் இனிமையான நினைவு.
நாளடைவில் இந்தியா ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மயமாகிவிட்டாலும், பஜாஜ் ஆட்டோ அந்த அலையிலிருந்து விலகியே இருந்தது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நம் நாட்டை நோக்கிப் படையெடுக்கும் சூழலில், சேட்டக் பிராண்டை அந்த நிறுவனம் தட்டி எழுப்பியிருக்கிறது. ஏத்தர், டிவிஎஸ், ஒகினாவா, ஹீரோ, ஆம்பியர் ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கு இது எப்படி ஈடுகொடுக்கிறது?
டிசைன் மற்றும் வசதிகள்
ரெட்ரோ டிசைன் கோட்பாட்டை, சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளது பஜாஜ். வெஸ்பா தயாரிப்புகளை நினைவு படுத்தினாலும், வடிவமைப்பில் இது சிக்ஸர் அடிக்கிறது.

மெட்டல் பாடியில் இருக்கும் வளைவுகள், LED ஹெட்லைட்டுக்குள் இருக்கும் LED DRL, முன்பக்க ஆப்ரான் மற்றும் பின்னே இருக்கும் Faux கிரில், ஒற்றை பாகமாக இருக்கும் பின்பக்கம் என சேட்டக்கில் ரசிக்கும்படியான அம்சங்கள் நிறைய! LED டெயில் லைட்டில் இருக்கும் டைனமிக் இண்டிகேட்டர்கள், ஆடி கார்களை நினைவுபடுத்துகின்றன. அந்த Keyless Ignition செம! முன்பக்க Trailing Link சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்க Single Sided ஸ்விங் ஆர்ம், மெட்டாலிக் கிரே பெயின்ட் கொண்ட 12 இன்ச் அலாய் வீல்களை முழுவதும் காண்பிக்கின்றன (கிராப் ரெயில் மற்றும் ஃபுட் பெக்ஸிலும் Metallic Grey-வின் தாக்கம் உண்டு). இது தவிர முன்பக்க டிஸ்க் பிரேக், உயர்தர Dark/Light Tan சீட் ஆகியவை ப்ரீமியம் வேரியன்ட்டில் (1.15 லட்சம், எக்ஸ் ஷோரூம், புனே) கிடைக்கின்றன.
இதுவே விலை குறைவான அர்பன் வேரியன்ட்டில் (1 லட்சம், எக்ஸ் ஷோரூம்) இருபுறமும் டிரம் பிரேக்ஸ் மற்றும் Solid கலர் ஆப்ஷன்களே இருக்கின்றன. எந்த வேரியன்ட்டாக இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபிட் அண்டு ஃபினிஷ், பாகங்கள் மற்றும் கட்டுமானத் தரம் வாவ் ரகம்தான்; ஃபெதர் டச் ஸ்விட்ச்கள், புளூடுத் கனெக்ட்டிவிட்டி உடனான டிஜிட்டல் மீட்டர் ஆகியவை போனஸ். Negative பாணியில் அமைந்துள்ள ஸ்பீடோமீட்டரில் நேவிகேஷன், டிராக்கிங், பேட்டரி போன்ற பல விபரங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

Flush Fit பாணியில் இயங்கும் மிரர்கள், சைடு ஸ்டாண்டு, ஃபுட் பெக்ஸ் ஆகியவை, இது ஒரு ப்ரீமியம் தயாரிப்பு என்பதை உணர்த்துகின்றன. எனவே பெட்ரோல் ஸ்கூட்டர்களிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாற விரும்புபவர்களைத் தன்வசம் ஈர்க்கக்கூடிய விதத்தில், சேட்டக்கின் வடிவமைப்பு அமைந்திருக்கிறது.
பர்ஃபாமன்ஸ்
சேட்டக்கை இயக்குவது - 3.8kW/4.1kW பவர் மற்றும் 1.6kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார், இரு ரைடிங் மோடுகளையும் கொண்டிருக்கிறது (எக்கோ, ஸ்போர்ட்). நெரிசல்மிக்க நகரச் சாலைகளை வேகமாகக் கடக்கும் அளவுக்கு த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இருக்கிறது. சேட்டக்கில் இன்டகரேட்டட் சார்ஜிங் யூனிட் (Integrated Charging Unit) இருப்பதால், நீங்கள் ஒருவேளை எக்கோ மோடிலேயே ஸ்கூட்டரை ஓட்டினாலும், ஆக்ஸிலரேட்டரை 85%-க்கும் அதிகமாகத் திருகும்போது, ICU அமைப்பு ஸ்கூட்டரைத் தானாகவே ஸ்போர்ட் மோடுக்கு மாற்றிவிடுகிறது.

இது ஓவர்டேக் செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன், மேனுவலாக மோடுகளை மாற்றும் வேலையும் இருக்காது. ஆனால் சேட்டக்கின் ரேஞ்ச்சை அதிகரிக்கும் பொருட்டு, டாப் ஸ்பீடில் கைவைத்துவிட்டது பஜாஜ். LCD டிஸ்ப்ளேவில் அதிகபட்சமாக 69கிமீ வரை மட்டுமே பார்க்க முடிந்தது. குறைந்தது 110சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையாக, 75-80 கி.மீ வரையாவது டாப் ஸ்பீடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ரேஞ்ச்
450X, iQube போன்றவற்றுடன் ஒப்பிட்டால், பர்ஃபாமன்ஸில் ஆவரேஜ் மதிப்பெண்களையே பெறுகிறது சேட்டக். ஆனால் தினசரிப் பயன்பாட்டுக்கான பிராக்டிக்கல் வாகனமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, இது போதுமானதாகவே இருக்கும். அதன்படி பர்ஃபாமன்ஸில் விட்டதை, ரேஞ்ச்சில் எட்டிப் பிடித்துவிட்டது பஜாஜ். ஃபுல் சார்ஜில் முறையே 85 கிமீ (ஸ்போர்ட் மோடு) மற்றும் 95கிமீ (எக்கோ மோடு) வரை செல்கிறது சேட்டக்.

Bosch நிறுவனத்தின் 3kWh லித்தியம் ஐயன் பேட்டரிகளைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஃபுல் சார்ஜ் ஆவதற்கு 5 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. இதுவே 80% சார்ஜ் ஏற்ற 3.5 மணிநேரமும், 25% சார்ஜ் ஏற 1 மணிநேரமும் ஆகிறது. IP67 ரேட்டிங் கொண்ட பேட்டரிகளைக் கழற்ற முடியாது என்பதுடன், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லாதது நெருடல்.

இதற்கு 3 வருடம்/50,000 கிமீ வாரன்ட்டி தருகிறது பஜாஜ். சேட்டக்கின் விலையிலேயே ஹோம் சார்ஜர் அடக்கம் (இதை பஜாஜின் டெக்னீஷியன் ஒருவர் வந்து வீட்டில் மாட்டிவிடுவார்). சீட்டுக்குக் கீழே இருக்கும் 5A சாக்கெட்டில் சார்ஜிங் கேபிளைச் சொருக முடிகிறது. சார்ஜ் ஏறும்போது, இதைத் தேவைப்பட்டால் மூடிக் கொள்ளலாம் என்பது நைஸ்.

ஓட்டுதல் அனுபவம்
110சிசி ஸ்கூட்டர்களிலேயே டெலிஸ்கோபிக் ஃபோர்க் வந்துவிட்ட நிலையில், பழைய Trailing Link சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது சேட்டக். சிறிய ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் மேடு பள்ளங்களின் மீது ஸ்கூட்டர் பயணிக்கும்போது, அது தரும் இடர்பாடுகளைச் சஸ்பென்ஷன் நன்றாகவே சமாளிக்கிறதுதான்.ஆனால் பெரிய பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, அதை ரைடர் உணர்வது மைனஸ். மற்றபடி திருப்பங்களில் சேட்டக்கைச் செலுத்துவது நல்ல அனுபவமாக இருக்கிறது. இதற்கு 12 இன்ச் MRF ட்யூப்லெஸ் டயர்கள் துணை நிற்கின்றன.
முதல் தீர்ப்பு
தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சேட்டக் எனப் பெயர் வைத்ததிலேயே, பாதி வெற்றி பெற்றுவிட்டது பஜாஜ். இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ரெட்ரோ டிசைன், போதுமான வசதிகள், ஒட்டுமொத்தத் தரம், ப்ரீமியம் அனுபவம் என அசத்திவிட்டது சேட்டக். இதன் பர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதல் ஆகியவை மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கின்றன. கேடிஎம் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், முதற்கட்டமாக புனே மற்றும் பெங்களூரில் கிடைக்கிறது.

முதல் ஆண்டுக்கான Data Subscription சேவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் மொபைல் ஆப்பில் சார்ஜிங் ஸ்டேட்டஸ், இருப்பிடம், ரேஞ்ச் போன்ற தகவல்களைப் பார்க்கலாம். 15,000 கிமீக்கு ஒருமுறை சேட்டக்கை சர்வீஸ் செய்தால் போதும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்து கொண்டிருப்பதை, மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது சேட்டக்.