கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

முதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...

ஹீரோ கிளாமர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ கிளாமர்

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்: ஹீரோ கிளாமர்

முற்றிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் கிளாமர், தனது வரலாற்றில் முதன்முறையாக 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் களமிறங்கியுள்ளது. பல்ஸர் 125, SP125 ஆகியவற்றுடன் போட்டிபோடும் இந்த 125சிசி கம்யூட்டர் பைக் எப்படி இருக்கிறது?
முதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

பைக்கை உற்றுநோக்கும்போது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றன. டூயல் டோன் கலர்கள் மற்றும் Chequered Flag கிராஃபிக்ஸ் ஆகியவை அதற்கான உதாரணம் என்றாலும், கூடவே புதிய பாடி பேனல்கள் தன்வசம் கவனத்தை ஈர்க்கின்றன. ஸ்ப்ளிட் ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ஷார்ப்பான டேங்க் Extension, பைக்குக்கு ஸ்போர்ட்டி டச் தருகின்றன. முன்பைவிடப் பெரிய ஹாலோஜன் ஹெட்லைட் மற்றும் H வடிவ டெயில் லைட் ஆகியவை நைஸ். அனலாக் - டிஜிட்டல் மீட்டர் பார்க்க முன்புபோலவே இருந்தாலும், அதிலும் வித்தியாசம் தெரிகிறது. ஆரஞ்ச் நிறத்துக்குப் பதில் நீல நிற பேக்லிட் இருப்பதுடன், ரியல் டைம் மைலேஜும் அதில் இருக்கிறது. பின்பக்கத்தில் இருக்கும் அகலமான 100-80-18 டயர், புதிய கிளாமரின் தோற்றத்துடன் பொருந்திப் போகிறது. மற்றபடி சிங்கிள் பீஸ் சீட் - ஹேண்டில்பார் - கிராப் ரெயில் மற்றும் ஸ்விட்ச்கள் ஆகியவை, ஏற்கெனவே நாம் பார்த்ததுபோலவே உள்ளன. பாகங்களின் தரம் பைக்கின் விலைக்கேற்றபடி இருந்தாலும், ஃபிட் அண்டு ஃபினிஷ் ஆகியவை இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. பேஸன் ப்ரோ போலவே இங்கும் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான் என்பதுடன், லைட்டிங் எல்லாமே Halogen பல்ப்தான் (LED மிஸ்ஸிங்). செல்ஃப் ஸ்டார்ட் தவிர கிக்கர் லீவரும் வழங்கப்பட்டுள்ளது (4Ah MF பேட்டரி உண்டு).

முதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

BS-4 மாடல் போலவே, BS-6 பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினும் 124.7சிசி கொள்ளளவில்தான் வந்திருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய கிளாமர், தற்போது அதனுடன் மட்டுமே கிடைக்கிறது (கார்புரேட்டர் கிடையாது). எப்படி ஷைன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்துவிட்டதோ, அதேபோலவே கிளாமரும் தற்போது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிடப் பவர் குறைந்திருந்தாலும், டார்க்கில் அதைச் சரிகட்டிவிட்டது ஹீரோ. 10.73bhp பவர் மற்றும் 1.06kgm டார்க்கைத் தரும் இந்த ஏர் கூல்டு இன்ஜின், இதர போட்டியாளர்களைப் போலவே 2 வால்வ் அமைப்பிலேயே வருகிறது. 0-60 கிமீ வேகத்தை 6.97 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் கிளாமர், 0-90 கிமீ வேகத்தை 21.14 விநாடிகளில் எட்டுகிறது. கிட்டத்தட்ட 110சிசி பேஸன் ப்ரோவுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ்தான் இங்கே கிடைக்கிறது என்றாலும், அந்த பைக்கைப் போலவே 80-85 கிமீ வேகத்தில் சென்றாலும் இன்ஜின் Stressed ஆக இல்லாமல் உள்ளது. ஆனால் ஹோண்டாவுடன் ஒப்பிட்டால், ஹீரோவின் இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸில் ஓகே ரகம்தான். புதிய பேஸன் ப்ரோவைத் தொடர்ந்து, i3S மற்றும் Auto Sail ஆகிய தொழில்நுட்பங்கள் கிளாமரிலும் இடம்பிடித்துள்ளன. ஆனால் இந்த ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பைக் நியூட்ரலில் இருந்தால் மட்டுமே செயல்படும் (கிளட்ச்சைப் பிடிக்கும்போது, இன்ஜின் ஆன் ஆகிவிடும்). அதேபோல டிராஃபிக்கில் பைக்கைத் தானாக முன்னோக்கி நகர்த்தும் Auto Sail அம்சம், குறைவான வேகத்தில் ஏற்றம் நிறைந்த பகுதி அல்லது ஸ்பீடு பிரேக்கர்களில் செல்லும்போது அவ்வளவு திறம்படச் செயல்படவில்லை. மைலேஜைப் பொறுத்தவரை நகரத்தில் 62.56 கிமீயும், நெடுஞ்சாலைகளில் 74.6 கிமீயும் கொடுக்கிறது கிளாமர்.

ஓட்டுதல் அனுபவம்

புதிய டைமண்ட் ஃப்ரேமுடன் வரும் கிளாமர், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்களைக் கொண்டிருக்கிறது. அதன் டிராவல் முறையே 14% (முன்-120மிமீ) மற்றும் 10% (பின்-81மிமீ) அதிகரித்திருப்பதால், சஸ்பென்ஷன் செட்-அப்பில் மாற்றம் தெரிகிறது. முன்பக்கத்தைவிட பின்பக்க சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதை உணர முடிகிறது. பைக்கில் அதிக எடையை ஏற்றும்போது, அதன் நிலைத்தன்மையில் சரிவு ஏற்படாமல் அதைச் சமாளிக்கவே ஹீரோ இதைச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதனால் கிளாமரின் ஓட்டுதல் தரம், அனைவருக்கும் பிடித்தபடி இல்லாமல் போகலாம்.

முதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...

அகலமான பின்பக்க MRF டயர் மற்றும் 1,273மிமீ வீல்பேஸ் ஆகியவை, அதிக வேகத்தில் பைக்கின் நிலைத்தன்மைக்கு வலுச்சேர்க்கின்றன. 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பது பெரிய ப்ளஸ். 130மிமீ டிரக் பிரேக்ஸ் தவிர (iBS உண்டு), முன்பக்கத்தில் 240மிமீ Bybre டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக் கிடைக்கிறது.

60கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால், 19.49 மீட்டரில் பைக் நின்றுவிடுகிறது. சிகப்பு நிற ஷாக் அப்ஸார்பர் ஸ்ப்ரிங், பார்க்க நன்றாக உள்ளது. கிளாமரின் 123 கிலோ எடை, அனைத்து விதமான ரைடர்களுக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது எனலாம்.

டிஸ்க்/டிரம் என இரு வேரியன்ட்களில் வரும் கிளாமர், 4 கலர் ஆப்ஷன் களில் கிடைக்கிறது. முறையே 71,622 ரூபாய் மற்றும் 75,122 எனும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகளில், இந்த 125சிசி கம்யூட்டர் பைக் வந்திருக்கிறது. இது முந்தைய BS-4 மாடலில் இருந்த Fi வெர்ஷனைவிடச் சுமார் 2,500 ரூபாய் மட்டுமே அதிகம்!

முதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...

போட்டி பைக்குகளுடன் ஒப்பிடும்போது, கிளாமரின் வசதிகளில் பெரிய முன்னேற்றம் இல்லாதது மைனஸ்தான். என்றாலும், பல்ஸர் 125-யை விட 2,445 - 3,745 ரூபாய் குறைவான விலை மற்றும் SP125 விட 5,557 - 6,257 ரூபாய் குறைவான விலை அதனை நியாயப்படுத்திவிடுகிறது. கூடவே முன்பைவிட ஸ்மூத்தான இன்ஜின் மற்றும் சிறப்பான கையாளுமை கிடைத்திருப்பதும் போனஸ்தான். எனவே மொத்தமாகப் பார்க்கும்போது, 125சிசி செக்மென்ட்டில் ஹோண்டாவுக்குச் சவால் விடுக்க ஹீரோ தயாராக இருப்பதுபோலவே தோன்றுகிறது.