Published:Updated:

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6

Published:Updated:
டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6

ப்பாச்சி RTR 4V... இந்தப் புதிய சீரிஸ் டிவிஎஸ் பைக்குகளில் 200சிசி மாடல் 2016-ம் ஆண்டிலும், 160சிசி மாடல் 2018-ம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய டிசைன் கோட்பாடுகளின்படி இந்த அப்பாச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன என்றாலும், அந்த பிராண்டுக்கே உரிய பர்ஃபாமன்ஸ், கையாளுமை, பிராக்டிக்காலிட்டி ஆகியவையும் இதில் இருந்தன. பைக் ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இவை, மாதாந்திர விற்பனையில் வெற்றியை ருசித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில், ஏப்ரல் 2020-ல் அமலுக்கு வரவிருக்கும் BS-6 விதிகளைக் கருத்தில் கொண்டு, RT-Fi எனும் தொழில்நுட்பத்துடன் (Race Tuned - Fuel Injection) இந்த அப்பாச்சி RTR 4V சீரிஸ் பைக்குகளை அப்டேட் செய்திருக்கிறது டிவிஎஸ்.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?
BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

போட்டி நிறுவனங்கள் (ஹீரோ, ஹோண்டா, ஜாவா, யமஹா) களமிறக்கிய BS-6 மாடல்கள் இன்ஜின் பவர்/டார்க்கில் கோட்டை விட்டதால், அந்தப் பிரச்னை இங்கேயும் வந்திருக்கிறதா? அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள, இந்த அப்பாச்சிகளை ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையில் ஓட்டிப் பார்த்தோம்.

டிசைன் மற்றும் வசதிகள்

பைக்குகளின் அடிப்படை டிசைனில் பெரிதாக மாற்றமில்லை. ஆனாலும் ஃப்ரெஷ் அப்பீலுடன் இருக்கின்றன. இதற்கு Claw வடிவ LED DRL உடனான புதிய LED ஹெட்லைட்தான் பிரதானமான காரணம். இது பக்கவாட்டில் இருந்து பார்ப்பதற்கு, ஏனோ பல்ஸர் 135LS பைக்கின் ஹெட்லைட்டை நினைவுபடுத்துகிறது. பகலில் நாங்கள் பைக்கை ஓட்டியதால், இதன் முழுத் திறனைப் பரிசோதிக்க முடியவில்லை. LED DRL-க்கு மேட்ச்சிங்காக, ரியர்வியூ மிரர்களும் Claw வடிவத்தில் காட்சியளிக்கின்றன. அளவில் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், முன்பைவிடச் சிறப்பான பயன்பாட்டு அனுபவம் கிடைக்கிறது. இது பைக்கின் ஏரோடைனமிக்ஸிலும் கை கொடுக்கும் என்கிறது டிவிஎஸ்.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

ஆனால் இந்த நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களிலேயே Hazard இண்டிகேட்டர்கள் இருக்கும் நிலையில், அது இங்கேயும் கொடுக்கப்பட்டிருக்கலாம். BS-4-ன் Fi மாடலில் கியர் இண்டிகேட்டர், White பேக்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்தது. இந்த இரண்டுமே இந்த BS-6 RTR 160 4V பைக்கில் மிஸ்ஸிங். LED ஹெட்லைட் பார்க்க ஸ்டைலாகவே இருந்தாலும், அருகில் வந்து பார்க்கும்போது குறைகள் தெரிகின்றன. உதாரணத்துக்கு, ஹெட்லைட்டின் மேல்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கறுப்பு நிற ப்ளாஸ்டிக்கின் தரம்.

தவிர முந்தைய மாடல்களின் ஹெட்லைட்டுக்கு மேலே இருந்த கறுப்பு நிற வைஸர், இப்போது காணாமல் போய்விட்டது. மேலும் LED DRL முன்பைப் போலவே Transparent ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இரு பைக்கிலுமே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம் பிடித்துள்ளது. எனவே பெட்ரோல் Tap இனி தேவையில்லை. அதேபோல RTR 160 4V பைக்கில் கிக்கர் லீவர் நீக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட், தனது பணியை One Touch-ல் சிறப்பாகச் செய்கிறது.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

மேலும் இதில் Chequered Flag-யை நினைவுபடுத்தும்படியான கிராஃபிக்ஸ், பெட்ரோல் டேங்க்கில் இடம் பிடித்திருக்கிறது. டூயல் டோன் FIP சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங், முன்பைவிட அதிக சொகுசை வழங்கும்படி தயாரிக்கப் பட்டுள்ளது. இதுவே RTR 200 4V பைக்கில், பெட்ரோல் டேங்க் மற்றும் பின்பக்க பாடி பேனல்களில் சிவப்பு நிற Race பாணியிலான கிராஃபிக்ஸ் இருக்கிறது. தவிர இரு பைக்கின் நடுவேயும், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பு வெளியே தெரியாதபடி மூடியிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம், கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். புதிய Wave Bite சாவி, பயன்படுத்த வாட்டமாக இருக்கிறது.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

சிங்கிள் சிலிண்டர், ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின்களில் 4 வால்வ் - SOHC - ஆயில் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - டபுள் பேரல் எக்ஸாஸ்ட் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் இரண்டுக்குமே பொதுவானதாக உள்ளன. 200சிசி மாடலில் கூடுதலாக RT ஸ்லிப்பர் க்ளட்ச் உண்டு. இரண்டிலுமே Fi ஸ்டாண்டர்டு என்பதால், முன்பைவிட இவை இன்னும் ஸ்மூத்தாக இயங்குவதுடன், த்ராட்டில் ரெஸ்பான்ஸும் கொஞ்சம் துல்லியமாக மாறியிருக்கிறது.

RTR 160 4V RT-Fi மாடலைப் பொறுத்தவரை, பவர்/டார்க் என இரண்டுமே கொஞ்சம் சரிந்திருக்கிறது. BS-4 வெர்ஷன் 16.8bhp@8,000rpm பவர் மற்றும் 1.48kgm@6,500rpm டார்க் தந்தால், BS-6 மாடல் 16.02bhp@8,250rpm பவர் மற்றும் 1.41kgm@7,250rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. எக்ஸாஸ்ட் சத்தத்தில் மாற்றமில்லாவிட்டாலும், பவர் டெலிவரியாகும் ஆர்பிஎம்மில் மாறுதல் இருக்கிறது. அதன்படி ஆரம்ப கட்ட வேகத்தில் கொஞ்சம் சுணக்கம் தெரிந்தாலும், மிட் ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் பர்ஃபாமன்ஸ் நன்றாகவே இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 115 கிமீ வேகம் வரை செல்ல முடிந்தது.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

இதுவே RTR 200 4V RT-Fi பைக்கில் முன்பைவிட எடை குறைவான Assymmetric பிஸ்டன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இன்ஜின் தனது டார்க்கில் கோட்டை விட்டதை (BS-4: 1.86kgm@7,300rpm, BS-6: 1.68kgm@7,500rpm), அதிக ஆர்பிஎம்மை விரைவாக எட்டிப்பிடிக்கும் திறனில் சரிக்கட்டிவிடுகிறது.

0 - 60 கி.மீ வேகத்தை முன்பைவிட 0.05 விநாடி விரைவாக (3.9 விநாடிகளில்) எட்டும் எனவும், அதிகபட்சமாக 127 கிமீ வரை செல்லும் (முன்பைவிட 1 கிமீ குறைவு) எனவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது. டிவிஎஸ்ஸின் டெஸ்ட் டிராக்கில் 125 கி.மீ வேகம் வரை செல்ல முடிந்தது.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

இந்த பைக்குகளின் BS-4 மாடல் போலவே, BS-6 வெர்ஷனும் விரட்டி ஓட்டப்படுவதை விரும்பினாலும், அதிக ஆர்பிஎம்களில் அதிர்வுகள் லேசாக எட்டிப் பார்ப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் இது ரைடருக்கு எந்த இடத்திலும் அசெளகரியத்தைத் தராது. தவிர BS-4 வெர்ஷனுடன் ஒப்பிட்டால், BS-6 மாடல்களின் கம்ப்ரஷன் ரேஷியோ & ஐடிலிங் ஆர்பிஎம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இது இன்ஜின் சூட்டில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஓட்டுதல் அனுபவம்

RTR 160 4V RT-Fi பைக்கின் நீளம் 15 மிமீ குறைந்திருந்தாலும், டிரம் பிரேக் மாடலின் எடை முன்பைவிட 3 கிலோ அதிகரித்து விட்டது - 147 கிலோ (டிஸ்க் பிரேக் மாடலின் எடை அதே 149 கிலோதான்). ஆனால் இந்த பைக்கின் சீட்டிங் பொசிஷன், சஸ்பென்ஷன் செட்-அப், பிரேக்ஸ், சேஸி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இதன் ஓட்டுதல் அனுபவம், முன்பைப் போலவே சிறப்பாகவே உள்ளது. RTR 200 4V RT-Fi முன்பைவிட 65 மிமீ குறைவான உயரம் (1,050மிமீ) மற்றும் 32 மிமீ அதிக நீளம் (2,050மிமீ) என மாறியுள்ளதுடன், பைக்கின் எடையும் 2 கிலோ அதிகரித்துவிட்டது (153 கிலோ). எனவே இது பவர்ஃபுல் மாடல் என்பதைப் பறைசாற்றும் விதமாக, முன்பைவிட அதிக உறுதித்தன்மை கொண்ட Brass Coated செயின் ஸ்ப்ராக்கெட், குறைவான Rolling Resistance & அதிக ரோடு கிரிப் தரக்கூடிய பின்பக்க ரேடியல் டயர் (130/70 R17 M/C 62P) பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றுசேர்ந்து, பைக்கின் ஓட்டுதலை இன்னும் ஃபன் ஆக்கியுள்ளது.

மேலும் இரு பைக்குகளிலுமே, GTT (Glide Through Technology) எனும் வசதியை வழங்கியிருக்கிறது டிவிஎஸ். இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் உள்ள Creep மோடு போல இருக்கிறது. அதன்படி முதல் கியரைப் போட்டுவிட்டு கிளட்ச்சை விடும்போது, எந்த ஆக்ஸிலரேஷனும் கொடுக்காமலேயே பைக் தானாக முன்னோக்கிச் செல்கிறது (6 கிமீ வேகம் வரை). இது நெரிசல்மிக்க நகர டிராஃபிக்கில் செல்லும்போது, ரைடருக்கு ஆபத்பாந்தவனாகக் கைகொடுக்கும்.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

இந்த வசதி, முதல் மூன்று கியர்களில் வேலை செய்யும்படி (11-17 கி.மீ வேகம் வரை) தயாரித்துள்ளது டிவிஎஸ். என்டார்க் 125 ஸ்கூட்டரைத் தொடர்ந்து, RTR 200 4V பைக்கில் Smart Connect தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மொபைலின் புளூடூத் மற்றும் TVS Connect App வழியே இயங்குகிறது. இதனை இயக்க/அட்ஜஸ்ட் செய்ய, இடதுபுற ஸ்விட்ச்சில் i எனும் சிறிய பட்டன் இடம் பிடித்திருக்கிறது. LCD டிஜிட்டல் மீட்டரில், இதற்கெனப் பிரத்யேகமாக Dot Matrix டிஸ்ப்ளே இருக்கிறது. இவையெல்லாமே தெளிவாகத் தெரிவது பெரிய ப்ளஸ்.

முதல் தீர்ப்பு

போட்டி பைக்குகளைவிடப் பவர்ஃபுல்லாக இருக்கும் RTR 160 4V-ன் வேரியன்ட்களின் எண்ணிக்கை, மூன்றிலிருந்து இரண்டாகச் சுருங்கிவிட்டது. பைக்கின் நீளமான பெயருக்குத் துணையாக, எக்கச்சக்க வேரியன்ட்களைக் கொண்டிருந்த RTR 200 4V, தற்போது ஒரே டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். இந்த BS-6 அப்பாச்சிகளின் புக்கிங், டிவிஎஸ் டீலர்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. முன்பைவிட 3,000 - 9,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்கில் LED ஹெட்லைட் போன்ற புதிய சிறப்பம்சங்களை வழங்கி, அதனை நியாயப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். Fi காரணமாக சீரான பவர் டெலிவரி மற்றும் துல்லியமான த்ராட்டில் ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால், ஏற்கெனவே ஸ்மூத்தான இந்த பைக்குகள் இன்னும் ரிஃபைண்டாக மாறியிருக்கின்றன.

BS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா?

ஆனால் RTR 200 4V பைக்கின் கிராஃபிக்ஸ், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பைக் ஆர்வலர்களைக் குஷிப்படுத்தும்விதமாக, RTR 200 4V பைக்கின் பவரையும் கியரின் எண்ணிக்கையையும் டிவிஎஸ் அதிகரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். BS-6 விதிகள் காரணமாக, இந்த RTR 4V RT-Fi சீரிஸில் கார்புரேட்டர் இல்லாதது, ஒருசில ரைடர்களுக்கு வருத்தத்தைத் தரலாம். மேலும் இரண்டு பைக்கிலுமே கலர் ஆப்ஷன்கள் கொஞ்சம் குறைவாக இருப்பது நெருடல்தான். அதேபோல, விலை உயர்வு என்பதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போல இல்லாமல், பவர் குறைந்தாலும் பர்ஃபாமன்ஸில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை என்பதுதான் இந்த அப்பாச்சிகளின் வெற்றிக்குக் கைகொடுக்கக் காத்திருக்கின்றன.