கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
தொழில்நுட்பம்
Published:Updated:

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஃபர்ஸ்ட் ரைடு/டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஸ்டார் சிட்டி ப்ளஸ்… இந்த 110சிசி கம்யூட்டர் பைக்கை டிவிஎஸ் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது, அது 110சிசி விக்டர் GL பைக்குக்கு மாற்றாக பொசிஷன் செய்யப்பட்டது.

காலப்போக்கில் இது புதிய கலர் - கிராஃபிக்ஸ் உடனான ஸ்பெஷல் எடிஷன்களில் வந்ததால், இன்றளவும் ஸ்டார் சிட்டி ப்ளஸ் நீட்டாகவே காட்சியளிக்கிறது. இடையே 2016-ம் ஆண்டு களமிறங்கிய புதிய விக்டரின் வருகையால் தனது இடத்தை இழந்திருந்த இந்த கம்யூட்டர் பைக், தற்போது BS-6 அப்டேட்டுடன் களமிறங்கி விட்டது.

பழசைவிட 7 கிலோ அதிகம். 172 மிமீ கி.கிளியரன்ஸ் என்பதால், மேடு/பள்ளங்களைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.
பழசைவிட 7 கிலோ அதிகம். 172 மிமீ கி.கிளியரன்ஸ் என்பதால், மேடு/பள்ளங்களைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

இன்னும் விக்டரின் BS-6 வெர்ஷன் வராத நிலையில், இப்போதைக்கு இதுதான் டிவிஎஸ்ஸின் ப்ரீமியம் கம்யூட்டர் பைக். முப்பது லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் இந்த 110சிசி பைக், J.D பவர் சர்வே ரிப்போர்ட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகிறது.

முன்பைப் போலவே சிங்கிள்-டோன் (77,438 ரூபாய்) & டூயல்-டோன் (77,988 ரூபாய்) என இரு ஆப்ஷன்களில் - 5 கலர்களில் வந்திருக்கும் புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ், முன்பைவிடச் சுமார் 8,000 ரூபாய் அதிக விலையில் (விலைகள் அனைத்தும் சென்னை ஆன்-ரோடு) வந்திருக்கிறது. போட்டி 110சிசி BS-6 கம்யூட்டர்களைப் போலவே, இதுவும் ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. மேலும் முன்பிருந்த ஹாலோஜன் ஹெட்லைட்டைவிட, மும்மடங்கு அதிக வெளிச்சத்தைத் தரும் LED ஹெட்லைட் சேர்க்கப்பட்டுள்ளது (இது Segment First வசதி).

டிசைன் மற்றும் வசதிகள்

டெக்னிக்கல் விபரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸின் BS-4 மாடலும் BS-6 வெர்ஷனும், அதே அளவுகளில் அப்படியே தொடர்கின்றன. இருப்பினும் லேட்டஸ்ட் மாடலின் எடையில் கணிசமான வித்தியாசம் தெரிகிறது (BS-4: 109 கிலோ, BS-6: 116 கிலோ). முன்பைவிடத் தடிமனான Stainless Steel எக்ஸாஸ்ட் பைப்பே, இதற்கான பிரதானமான காரணம். இடையே இருக்கும் Catalytic Converter துருத்திக் கொண்டு தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸை முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது, சில்வர் வேலைப்பாடு உடனான புதிய LED ஹெட்லைட் கவனத்தை ஈர்க்கிறது. இது DC முறையில் இயங்குவதால், எந்த வேகத்தில் சென்றாலும் சீரான வெளிச்சம் வெளிப்படுகிறது. முன்பைவிட 2x Wider Throw கிடைப்பதால், இருட்டான இரவு நேரப் பயணங்களில் 11W LED ஹெட்லைட் துணைநிற்கும். இதற்கு மேட்சிங்காக, அதற்கு மேலே இருக்கும் கறுப்பு நிற வைஸரும் புதிது. இது முன்பைவிடக் கொஞ்சம் உயரமாக இருப்பதால், எதிர்காற்று முகத்தில் அறைவது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ரேடியானைப் போலவே, இங்கும் மொபைல் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. (அதை ஆக்சஸரீஸில்தான் வாங்கிப் பொருத்த வேண்டும்).

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

மேலும் பைக்கில் டேங்க் கவர் போடப்பட்டிருந்தால்தான், மொபைலை பத்திரமாகச் சார்ஜ் ஏற்றமுடியும். ரேடியான் மற்றும் ப்ளாட்டினா 110-ல் இருப்பதுபோல, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் DRL கிடையாது. டூயல் டோன் மாடலின் பெயருக்கேற்றபடி அதன் கிராஃபிக்ஸ், மிரர்கள், சீட், எக்ஸாஸ்ட் அமைந்திருக்கின்றன. பாடி கலரில் ஷாக் அப்சார்பரின் ஸ்ப்ரிங் இருப்பது நைஸ் டச். பைக்கில் ஆங்காங்கே இருக்கும் க்ரோம் 3D லோகோ, பார்க்க அழகு. அனலாக் - டிஜிட்டல் மீட்டர் அதேதான் என்றாலும், சர்வீஸ் இண்டிகேட்டர் தவிர புதிதாக இன்ஜின் வார்னிங் இண்டிகேட்டர் சேர்க்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் வாகனங்களுக்கே உரித்தான பவர் மற்றும் எக்கோ இண்டிகேட்டர்கள், இங்கும் தொடர்கின்றன. மீட்டரில் இருக்கும் வெற்றிடத்தில், Low Battery இண்டிகேட்டர் இருந்திருக்கலாம் (4 Ah MF பேட்டரி உண்டு). மேலும் ப்ளாட்டினா 110 பைக்கைப் போலவே, இங்கிருக்கும் சிறிய ஸ்க்ரீனில் ட்ரிப் மீட்டர் மற்றும் கடிகாரம் கொடுத்திருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த 110சிசி டிவிஎஸ் பைக்கின் கட்டுமானத் தரம் மற்றும் பிட் - ஃபினிஷ் முன்புபோல சிறப்பாகவே உள்ளது. தொடுவதற்கு மென்மையான Hand Grip - ஸ்விட்ச்கள், பெயின்ட் தரம், DC எலெக்ட்ரிக்கல்ஸ் ஆகியவை ப்ரீமியம் உணர்வைத் தருகின்றன.

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

எதிர்பார்த்தபடியே, கம்யூட்டர்களுக்கான தனது ET-Fi (Ecothrust Fuel Injection) தொழில்நுட்பத்தை, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் பயன்படுத்தியுள்ளது டிவிஎஸ். இதனால் முன்பைவிட 15% அதிக மைலேஜ் கிடைக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ET-Fi காரணமாக, Cold Start திறன் - த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கிறது. இதன் BS-4 மாடலைப் போலவே, BS-6 வெர்ஷனிலும் அதே ஷார்ட் ஸ்ட்ரோக் (53.5மிமீ Bore X 48.8மிமீ Stroke), 109.7சிசி இன்ஜின் – 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியே இடம்பெற்றுள்ளது. இது ரேடியான் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்டில் இருக்கும் அதே செட்-அப்தான். இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ அதிகரித்திருந்தாலும் (BS-4: 9.65:1, BS-6: 10:1), முன்பைவிட 0.3bhp பவர் குறைந்துள்ளது (8.1bhp@7,350rpm). இது தரும் டார்க்கில் மாற்றமில்லாவிட்டாலும், அது வெளியாகும் ஆர்பிஎம் மாறிவிட்டது (0.87kgm@4,500rpm). இப்படி சில மாறுதல்கள் இருந்தாலும், அதே Ecothrust இன்ஜின்தான் என்பதால், ஏற்கெனவே பழக்கப்பட்ட உணர்வே இருந்தது. ரிலாக்ஸ்டாக வேகம் பிடிக்கும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், 50 கி.மீ வேகம் வரை செம ஸ்மூத்தாக இருக்கிறது. 60 கி.மீ வேகத்தைத் தாண்டும்போது அதிர்வுகள் எட்டிப் பார்க்கத் தொடங்குகின்றன.

இது ரைடருக்கு அவ்வளவாகத் தெரியாவிட்டாலும், பில்லியனரால் இதை உணர முடியும். ப்ளாட்டினா 110 போல 5-வது கியர் இருந்திருந்தால், செம Refined அனுபவம் கிடைத்திருக்கலாம். பவர் சரிவடைந்திருந்தாலும், அது குறையாகத் தெரியாதபடி பவர் டெலிவரி அமைந்திருக்கிறது. ரேடியான் உடன் ஒப்பிட்டால், இதன் எக்ஸாஸ்ட் சத்தம் கொஞ்சம் மென்மையாகவே உள்ளது. குறைவான வேகம் - அதிக கியரிலும் இன்ஜின் திணறாமல் சீராகவே இயங்கியது. ஸ்டார் சிட்டி ப்ளஸ் அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை செல்லும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. டாப் ஸ்பீடுக்காக பைக்கை விரட்டியபோது, ஸ்பீடோமீட்டர் முள் 100 கி.மீயைத் தொட்டது. OBD-1 உடனான சர்வீஸ் இண்டிகேட்டர், இந்த கம்யூட்டர் பைக்கின் முறையான பராமரிப்புக்கு வழிவகை செய்கிறது. எந்த கியரில் செல்லும்போது இன்ஜின் ஆஃப் ஆனாலும், அப்படியே க்ளட்ச்சைப் பிடித்து செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்தி இன்ஜினை ஸ்டார்ட் செய்துவிடலாம். (All Gear Electric Start). வழக்கமான கிக் லீவரும் தொடர்வது ஆறுதல். CD110 போல இங்கே இன்ஜின் கில் ஸ்விட்ச் இல்லாதது நெருடல்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஓட்டுதல் அனுபவம்

BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனிலும் 172 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மேலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் – 5 Step அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர், சிங்கிள் க்ரேடில் டியூப்லர் சேஸி ஆகிய மெக்கானிக்கல் பாகங்கள் அப்படியே தொடர்கின்றன. ரைடிங் பொசிஷனைப் பொறுத்தவரை, அது மிகவும் ரிலாக்ஸ்டாகவே இருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸில், கியர்கள் துல்லியமாக மாறுகின்றன. க்ளட்ச்சும் ஆக்ஸிலரேட்டரும் பயன்படுத்த லைட்டாகவே இருக்கின்றன. ஹை-பீமில் இருக்கும்போது, இருட்டான இடங்களில் தேவையான வெளிச்சத்தை LED ஹெட்லைட் தருகிறது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் வந்துவிட்டதால், ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் இனி ரிசர்வ் சிஸ்டமே இல்லை என்பதுடன், அதற்கேற்ப பெட்ரோல் Tap-ம் மிஸ்ஸிங். சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங் மென்மையாக இருப்பது நல்லது என்றாலும், நீண்ட நேரப் பயணங்களுக்கு அது கொஞ்சம் அசெளகரியத்தைத் தரலாம். ஆனால் சீட் போதுமான சைஸில் இருப்பதால், இருவருக்கான இடவசதி கிடைக்கிறது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்குத் தேவையான சப்போர்ட்டைத் தருகிறது. அலுமினிய கிராப் ரெயில், பிடித்துப் பயன்படுத்த வாட்டமாக உள்ளது. நம் ஊர்ச் சாலைகளுக்கேற்ற சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், அது தரும் இடர்பாடுகளை நன்றாகவே சமாளிக்கிறது.

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

முன்பைவிட 7 கிலோ எடை அதிகரித்திருந்தாலும், அது பைக்கை பார்க் செய்யும்போது மட்டுமே உணர முடியும். இந்த அதிக எடை - நல்ல ரோடு கிரிப்பைத் தரும் 17 இன்ச் Duragrip டியூப்லெஸ் டயர்கள் (முன்: 2.75’’, பின்: 3.00’’) மற்றும் 1,260 மிமீ வீல்பேஸ் உடன் சேர்ந்து, ஸ்டார் சிட்டியின் நிலைத்தன்மைக்குத் துணைநிற்கிறது. மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, இருவர் செல்லும்போது பைக் கொஞ்சம் உட்கார்ந்ததுபோலத் தெரிந்தாலும், ஓட்டுதலில் எந்தக் குறையும் இல்லை.

BS-3 ஸ்டார் சிட்டி வைத்திருக்கும் ஒருவர், இந்த BS-6 பைக்கை ஓட்டிப்பார்த்துவிட்டு இப்படிச் சொன்னார், `‘நெடுஞ்சாலைகளில் பைக் எதிர்க்காற்றுக்கு அலைபாயாமல் இருக்கிறது. இது முன்பைவிட ஸ்மூத்தாகவும் இயங்குகிறது’’. டிரம் பிரேக்குகளின் ஃபீட்பேக் (முன்: 130மிமீ, பின்: 110மிமீ), கொஞ்சம் டல்லாகவே இருக்கிறது. முன்பக்க பிரேக்கைவிட, பின்பக்க பிரேக்தான் வேகத்தைக் குறைப்பதில் துடிப்புடன் இருக்கிறது (SBT தொழில்நுட்பம்).

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

எனவே ரேடியான் போலவே, இங்கும் முன்பக்க டிஸ்க் பிரேக்கை டிவிஎஸ் ஆப்ஷனலாகவாவது கொடுத்திருக்கலாம். தவிர லேட்டஸ்ட் பைக்குகளில் இருக்கும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் இல்லாதது மைனஸ். சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டத்துக்கான தேவை ஏற்படவில்லை.

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

முதல் தீர்ப்பு

BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷனின் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிலேயே இருக்கிறது (நன்றி: ET-Fi தொழில்நுட்பம்). என்றாலும் போட்டி பைக்குகளில் இல்லாத LED ஹெட்லைட் மற்றும் மொபைல் சார்ஜர் ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் முன்பக்க டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாகவாவது டிவிஎஸ் வழங்கியிருக்கலாம். தவிர, இன்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் இருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும்.

கம்யூட்டிங் ஸ்டார்! ஸ்டார்சிட்டி ப்ளஸ்...

மற்றபடி இதன் போட்டியாளர்களைப் பொறுத்தவரை, புதிய சேஸி மற்றும் இன்ஜினுடன் தனது 110சிசி ஸ்ப்ளெண்டர் i3S பைக்கின் BS-6 வெர்ஷனை ஹீரோ கொண்டுவந்துவிட்டது. தனது ட்ரீம் சீரீஸ் பைக்குகளின் BS-6 மாடல்கள் இன்னும் வெளிவராத சூழலில், புதிய இன்ஜின் மற்றும் அதிக வசதிகளுடன் CD 110 பைக்கின் BS-6 வெர்ஷனை ஹோண்டா களமிறக்கியிருக்கிறது. 110சிசி பிளாட்டினாவில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மாடல் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதில் H-Gear வெர்ஷனை மட்டுமே இனி வாங்க முடியும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 5 வருட வாரன்ட்டியுடன் வரும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், பிராக்டிக்கலான பைக்காக இருக்கிறது. தரத்தில் எந்தச் சமரசமும் இல்லாதது நல்ல விஷயம் என்பதுடன், இந்த செக்மென்ட்டில் ஒருவர் எதிர்பார்க்கும் அம்சங்களை இந்த 110சிசி பைக் தன்வசப்படுத்தி இருக்கிறது.

எனவே இன்னும் அதிக மக்களைச் சென்றடைவதற்கான சாத்தியங்களை இது கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.