ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பட் பட் ... எக்ஸெல் மொபெட்!

டிவிஎஸ் XL100 கம்ஃபர்ட் BS-6
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் XL100 கம்ஃபர்ட் BS-6

ஃபர்ஸ்ட் ரைடு: டிவிஎஸ் XL100 கம்ஃபர்ட் BS-6

“கலர் செமையா இருக்கே?’’ “எவ்வளவு மைலேஜ்ங்க தருது?’’ “இது புது BS-6 மாடலா?’’ “வண்டி செமையா இருக்கே!’’

- இப்படி ரோட்டில் போகும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்றால், புகாட்டியோ – டுகாட்டியோ ஓட்டத் தேவையில்லைபோல! நான் ஓட்டியது சாதாரண டிவிஎஸ் XL100 மொபெட்.

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் ஒரே ஒரு மொபெட் என்கிற பெருமை டிவிஎஸ் XL100-க்குத்தான். `நம்ம ஊரு வண்டி’ என்று சின்ன வயசில் டிவிஎஸ் 50-க்காக விளம்பரம் பார்த்திருப்போம். டிவிஎஸ் 50 மொபெட், XL 70 ஆகி இப்போது XL100 ஆக வளர்ந்து நிற்கிறது. அதுவும் இப்போது BS-6 அப்டேட்ஸுடன் கெத்தாக வந்துவிட்டது. காரணம், இப்போதும் XL100-க்கு லோடு அடிக்கும் அண்ணாச்சிகள் மத்தியில் செம வரவேற்பு.

விலை: ரூ: 60,600 (சென்னை ஆன்ரோடு)
ப்ளஸ்: மைலேஜ், மெயின்டனன்ஸ், ஹேண்ட்லிங், வசதிகள் I மைனஸ்: பிரேக்ஸ், பெர்ஃபாமென்ஸ்
விலை: ரூ: 60,600 (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: மைலேஜ், மெயின்டனன்ஸ், ஹேண்ட்லிங், வசதிகள் I மைனஸ்: பிரேக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

சொன்னால் நம்புங்கள்; இந்த மொபெட் செக்மென்ட்டுக்கு என்று ஆட்டோமொபைல் கிராஃபில் தனி இடம் உண்டு. 2018-2019-ம் ஆண்டில் மொபெட் விற்பனை 2% அதிகரித்திருக்கிறது. அதாவது, மொத்தம் 8,80,000 மொபெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றனவாம். இதுபோக, 16,000 யூனிட்டுகள் ஏற்றுமதி வேறு.

நம்ம ஊரு வண்டியில், நம்ம ஊரு சென்னையில் ஒரு கம்ஃபர்ட் டிரைவ் அடித்தேன்.

XL100 மொபெட்டில் மொத்தம் இரண்டு வேரியன்ட்கள். XL100 கம்ஃபர்ட், XL100 ஹெவிடியூட்டி. (ஸ்பெஷல் எடிஷன் தனி). கலரும் இரண்டு கலர்கள். இரண்டுமே ஒரு மாதிரி வித்தியாசமான கலர்கள். Mint Blue மற்றும் Luster Gold. நான் ஓட்டியது கம்ஃபர்ட் மாடல். தங்க நிறத்தில் தகதகவென மின்னியது. சரியான டேஸ்ட் டிவிஎஸ் டிசைனர்களுக்கு. கலருக்காகவே என்னை பாதிப் பேர் நிறுத்தி விசாரித்தனர்.


 1. அனலாக் உருண்டை மீட்டர்... லோ ஃப்யூல் வார்னிங் மீட்டர் உண்டு.   2. 16 இன்ச் வீல்.. எக்ஸாஸ்ட், பைக்ஸ் போல் சத்தம் எழுப்புகிறது  3. அட, பைக்குகள் போல் இன்ஜின் கில் ஸ்விட்ச்... கூடவே சாஃப்ட் டச் பட்டன் ஸ்டார்ட்டும்.  சிங்கிள் சீட்தான். ஒரு குடும்பத்துக்கு வசதியாக இருக்கும்.  4. வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லைட்... கீழே LED DRL... 5. ஹெட்லைட் ஆனில் இருந்தால், DRL ஆஃப் ஆகிவிடும்.
1. அனலாக் உருண்டை மீட்டர்... லோ ஃப்யூல் வார்னிங் மீட்டர் உண்டு. 2. 16 இன்ச் வீல்.. எக்ஸாஸ்ட், பைக்ஸ் போல் சத்தம் எழுப்புகிறது 3. அட, பைக்குகள் போல் இன்ஜின் கில் ஸ்விட்ச்... கூடவே சாஃப்ட் டச் பட்டன் ஸ்டார்ட்டும். சிங்கிள் சீட்தான். ஒரு குடும்பத்துக்கு வசதியாக இருக்கும். 4. வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லைட்... கீழே LED DRL... 5. ஹெட்லைட் ஆனில் இருந்தால், DRL ஆஃப் ஆகிவிடும்.

பைக்கின் ஏகப்பட்ட பிராக்டிக்கல் விஷயங்களை மொபெட்டில் பார்த்ததே ஜாலியாக இருந்தது. முதலில் பட்டன் ஸ்டார்ட்டில் ஆரம்பிக்கிறது இதன் உற்சாகம். அதுவும் சிங்கிள் ஸ்டார்ட்டில். பிரேக் லீவரைப் பிடித்தபடி, சாஃப்ட் டச் செய்தால் போதும். XL100 BS-6 லேசாக உறும ஆரம்பித்து விடுகிறது. இதற்குப் பெயர் i-Touch Start. இதன் இன்ஜின் சத்தமே பழசிலிருந்து வேறுபட்டு, ஒரு பைக் போலவே உறுமியது. கிக்கருக்கு ஆப்பு வைத்து விட்டார்களோ என்று தேடினேன். பைக்குகள்போல் வலது பக்கம் இருந்தது கிக்கர். குளிர் நேரங்களில் கிக் ஸ்டார்ட்டும் செய்து கொள்ளுங்கள்.

முதன் முதலாக ஒரு மொபெட்டில் Fuel Injection கொண்டு வந்ததற்காக டிவிஎஸ்-க்கு ஒரு ஷொட்டு. செம ஸ்மூத்தாக இருந்தது. பழைய BS-4 மொபெட்கள் ஓட்டும்போது, `டர்ர்ர்’ என்ற சத்தத்தில் ஊரே காதைப் பொத்தும். இந்த XL100 BS-6-ல் இருந்த 99.7 சிசி இன்ஜினின் இன்சுலேஷன் அருமை. மொபெட் ஓட்டிய ஃபீலிங்கே தெரியவில்லை. ஸ்கூட்டர் ஓட்டியதுபோல்தான் இருந்தது. இதன் பவர், 4.4 bhp பவர்தான். 45 கி.மீ-யைக்கூட ஸ்பீடோ மீட்டர் முள் தாண்டவில்லை. கால்களில் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. ஹைவேஸில் நன்கு ஆக்ஸிலரேட்டர் முறுக்கினேன். 59 கி.மீ-க்கு மேல் முள் போகவில்லை. அது சரிதான்; வியாபாரிகளுக்கு வேகம் முக்கியமில்லை.

XL100 BS-6-ல் எக்ஸாஸ்ட்டில் இருந்து புகை அவ்வளவாக வரவில்லை. வேகமாகப் போகும்போது மட்டும் மொபெட் லேசாக அலைபாய்ந்தது. காரணம், இதன் கெர்ப் எடை 89 கிலோ. பழைய XL-யைவிட இது 5 கிலோ அதிகமாகி இருக்கிறது. BS-4-ன் எடை 84 கிலோ. இந்த XL100-ன் BS-6 அப்டேட்டட் இன்ஜின்தான் இந்த எடை அதிகரிப்புக்குக் காரணம். இந்த Fi இன்ஜின் XL100-ன் மைலேஜ், பழசைவிட 15% அதிகமாகக் கிடைக்கும் என்கிறது டிவிஎஸ்.

பட் பட் ... எக்ஸெல் மொபெட்!

பிராக்டிக்காலிட்டியில்தான் அசத்துகிறது XL100. சீட்டிலிருந்தே தொடங்கி விடுகிறது பயன்பாட்டின் ஆரம்பம். பில்லியன் ரைடருக்கு லேசான குஷனோடு பேக்ரெஸ்ட்டெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். பழசில் ஸ்ப்ளிட் சீட்டுகள் இருக்கும். இதில் சிங்கிள் சீட்தான். டூயல் டோனில் பார்க்கவே நச்சென்று இருந்தது. முன் பக்கம் லோடு அடிக்க ஏற்றவாறு ஆப்ரானில் ஏகப்பட்ட இடவசதி. ஹெவிடியூட்டியில் 130 கிலோ லோடு அடிக்கலாம் என்றார்கள். ஹேண்ட்பாரில் பை மாட்டிக்கொள்ள ஹூக்கும் இருந்தது. ஸ்கூட்டர்கள் போல் அண்டர் சீட் ஸ்டோரேஜ் எல்லாம் மொபெட்டில் எப்போது எதிர்பார்க்கலாம்?

சில ஸ்கூட்டர்களிலேயே இப்போதெல்லாம் பெட்ரோல் போட கீழே இறங்க வேண்டியுள்ளது. XL சீரிஸைப் பொறுத்தவரை எதிலுமே அந்தப் பஞ்சாயத்து இல்லை.

வட்டமான ஹெட்லைட்டுக்கு மேலே… அட வைஸர். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் அனலாக் மீட்டர் இருந்தது. ஃலோ ப்யூல் மீட்டர் வார்னிங் லைட்டும் இருந்தது. மொத்தம் 4 லிட்டர்தான் டேங்க் கொள்ளளவு. 350 ரூபாய்க்குப் போட்டால் டேங்க் ஃபில் ஆகிவிடும். ரிஸர்வ் ஆப்ஷனெல்லாம் கிடையாது. 1.3 லிட்டர் இருக்கும்போது, வார்னிங் லைட் எரியும். இடது-வலம் என்று இல்லை; இண்டிகேட்டருக்கு ஒரே வார்னிங் லைட்தான். Fi இன்ஜின் என்பதால், மால்ஃபங்ஷன் வார்னிங் லைட்டும் இருந்தது. மொபெட்டை ஸ்டார்ட் செய்யும்போது இது ஒளிரும். ஓடும்போது ஆஃப் ஆகி இருக்க வேண்டும். இல்லையென்றால், மொபெட் சர்வீஸ் சென்டருக்குப் போக வேண்டும் என்று அர்த்தம்.

கன்ஸோலுக்குக் கீழே அட, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டெல்லாம் கொடுத்திருந்தார்கள். ஸ்கூட்டர்களில் இருக்கும் வசதி இது. ஆனால், சார்ஜ் போட்டுவிட்டு போனை எங்கே வைப்பது? கவர் எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் வரும்.

மொபெட்டின் இன்னொரு அழகு அம்சம் – இதன் LED DRL. 5 ஸ்ட்ரிப்புகளில் இதன் டே டைம் ரன்னிங் லைட் நச் லுக்! ஹெட்லைட்டை ஆன் செய்தால், இது ஆஃப் ஆகிவிடும். அதேபோல், இன்னொரு வாவ் விஷயம் - ஸ்டார்ட் பட்டனிலேயே இன்ஜின் கில் ஸ்விட்ச் எல்லாம் கொடுத்திருந்தார்கள். என்-டார்க் போன்ற ஸ்கூட்டர்களில்தான் இந்த அம்சம் உண்டு. வெல்டன் டிவிஎஸ்.

பட் பட் ... எக்ஸெல் மொபெட்!

16 இன்ச் ஸ்போக் வீல்களில் ட்யூப் டயர்கள் இருந்தன. பைக்குகளுக்கே உரித்தான டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் செட்-அப்பும், டூயல் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் செட்அப்பும் கொடுத்திருந்தார்கள். ஜர் ஜர் என ஏறி இறங்கியது. எடை குறைவு என்பதால், மூடை தூக்கும் பாகுபலி பார்ட்டிகள், மொபெட்டையே தூக்கி வைத்து பார்க் செய்துவிடலாம். வெயிட்லெஸ் என்பதால் கட் அடிக்கவும் ஏதுவாக இருக்கிறது.

என்ன, இதன் டிரம் பிரேக்ஸ்தான் ரொம்பப் பயமுறுத்துகிறது. சிக்னலுக்கு முன்பே பிரேக் பிடிக்கத் திட்டம் போட்டுவிட வேண்டும்.

BS-4 கம்ஃபர்ட்டைவிட சுமார் 6,000 முதல் 7,000 வரை விலை அதிகமாகி வந்திருக்கிறது XL100 BS-6 மாடல். இதன் சென்னை ஆன்ரோடு விலை சுமார் 60,600 ரூபாய். ஆனால், இந்த விலைக்கு ஒரு பஜாஜ் CT100 பைக் வாங்கி விடலாம் என்பது உண்மை. வியாபாரிகளைக் கருத்தில் கொண்டு விலையில் டிவிஎஸ் கொஞ்சம் மனது வைத்தால் நல்லது. இருந்தாலும், இந்தியாவின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு XL100 மொபெட்டுக்குப் போட்டியே இல்லை என்பதுதான் உண்மை.