கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருது! பூரிக்கும் ஹீரோ ஹோண்டா சிடி 100 பாபு...

ஹீரோ ஹோண்டா சிடி 100
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ ஹோண்டா சிடி 100

வாசகர் அனுபவம் | ஹீரோ ஹோண்டா சிடி 100

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருது! 
பூரிக்கும் ஹீரோ ஹோண்டா சிடி 100 பாபு...

விழுப்புரம் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, அந்த பைக் என்னுடைய மில்லினியல் பைக்கைக் கடந்து போனது. ‘என்னடா இது’ எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சட்டென நிறுத்தினேன். நீங்கள் 80’ஸ் கிட்ஸாக இருந்து… கொஞ்சம் நாஸ்டால்ஜியாவைக் கிளறிவிட்டுப் பார்த்தால்… அட… ஹீரோ ஹோண்டா சிடி100 என்று சட்டெனக் கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால், என் போன்ற 20’ஸ் கிட்ஸுக்கே பிடிக்கும் வகையில் புத்தம் புதிதாக அப்படியே அதன் பழைமை மாறாமல் அதைப் பராமரித்து வருகிறார். அவர், விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு.

அந்த ஹீரோ ஹோண்டா பைக்குக்கு 21 வயசு என்றால், யாரும் நம்பக்கூட மாட்டார்கள். (ஹீரோ ஹோண்டானு சேர்த்துப் படிச்சு எவ்வளவு நாளாச்சு!) எனது ஆர்வத்தை அறிந்து கொண்ட பாபு, ‘இதெல்லாம் சாதாரணமப்பா’ எனும் தொனியில், "தினமும் உங்களை மாதிரி குறைந்தது 5 பேராவது கேட்டுட்டுவாங்க சார்" என்று புன்னகை கலந்த பூரிப்புடன் பேச ஆரம்பித்தார்.

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே விழுப்புரம்தான். 15 கிமீ தூரத்துல இருக்கிற பிடாகம் அரசுப் பள்ளியிலதான் என்னோட அப்பாவும், அம்மாவும் டீச்சரா வேலை செஞ்சாங்க. 1990-ல இருந்து யமஹா ஆர்எக்ஸ் 100-க்கும், ஹீரோ ஹோண்டா சிடி100-க்கும் போட்டியாகவே இருக்கும். இப்போ என்பதில்லை... அப்போவே இளைஞர்களுக்கு ஆர்எக்ஸ்100 என்றால் ரொம்பவே பிடிக்கும். கொஞ்சம் மெச்சூரிட்டியா இருக்கிறவங்க பலரும் சிடி100, பஜாஜ் சேட்டக் வண்டிகள எடுப்பாங்க. 2000-மாவது வருஷத்துல என்னோட அப்பா கோதண்டம், ‘புதுசா டூவீலர் எடுக்கணும்’னு வீட்டில் சொன்னாரு. அப்போ நான் இளைஞரா இருந்ததால, ஆர்எக்ஸ்100 எடுக்கச் சொன்னோம். ஆனா, என்னோட அப்பா... ஹீரோ ஹோண்டா சிடி100 எஸ்எஸ் தான் எடுக்கப் போறேன்னு உறுதியா இருந்தாரு. `ஏம்பா’னு நாங்க கேட்டதுக்கு, ‘இந்த வண்டிதான் நல்ல மைலேஜ் தரும். பெட்ரோல் போடப் போறதும், வண்டிய ஓட்டப்போறதும் நான்தானே! இப்போ உங்களுக்கு இந்த வண்டியப் பத்திச் சொன்னா புரியாது’ என்றார். ஏன்னா, அதுக்கு முன்னாடியும் எங்க அப்பா ஹீரோ ஹோண்டா சிடி100 பைக்தான் வச்சிருந்தாரு. அதனாலதான், சிடி100 எஸ்எஸ் வாங்கணும்னு அவ்வளவு உறுதியா இருந்து புதுசா வாங்கினாரு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே அந்த வண்டியிலதான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வருவாங்க. அவங்களுக்கு அந்த வண்டி சௌகரியமா இருந்துச்சு.

2005-ல் என்னோட அப்பா தவறிட்டாரு. அதுக்கப்புறம் அந்த வண்டிய என்னோட தம்பி சென்னைக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டாப்ல. 2012 வரைக்கும் அந்த வண்டியை ஓட்டிக்கிட்டு இருந்தாரு, அப்புறம் கொஞ்சம் பழுதாகினதால வீட்டிலேயே நிறுத்திட்டார். அதுக்குப் பின்னாடி, அந்த வண்டி பயன்பாடே இல்லாம போய் துருப்பிடிச்சுக் கண்டமாகி கிடந்துச்சு. இருந்தாலும் என்னோட அப்பாவோட நினைவா அந்த வண்டியைச் சரி பண்ணி வச்சுக்கணும்னு நான் நினைச்சேன்.

போன வருஷம் விழுப்புரத்துக்கு வண்டியை எடுத்துக்கிட்டு வந்துட்டேன். வண்டிய ரெடி பண்ண யார்கிட்ட கொடுக்கலாம்னு யோசிச்சப்போதான், எனக்கு நல்ல பழக்கமான சக்திவேல் ஞாபகத்துக்கு வந்தாரு. விழுப்புரம் நகராட்சி ஆபீஸ்க்கு எதுத்தாப்ல இருக்கிற மெக்கானிக் ஷாப்பில்தான் ஒர்க் பண்ணுறாரு. ஒரு வண்டிய அவர்கிட்ட ஒப்படைச்சு... `இந்த மாதிரி ரெடி பண்ணித் தாங்க' அப்படின்னு சொல்லிட்டா போதும், நாம எதிர்பார்க்குற மாதிரியே நிதானமா ரசிச்சு செஞ்சு தருவாப்ல. அதேபோல அவரை ஃபுல் டைம் மெக்கானிக் அப்படின்னும் சொல்லிட முடியாது. பகுதி நேரமா ஆக்டிங் டிரைவர் வேலைக்கும் போவாரு. மீதமுள்ள நேரத்துல மெக்கானிக் ஒர்க்கை சரியா பண்ணுவாரு.

'இன்னைக்கு இந்த பார்ட்' அப்படின்னு முடிவு பண்ணி வேலையச் செஞ்சிடுவாரு. கொஞ்சம் டைம் ஆனாலும், வேலை சுத்தமா இருக்கும். அதனாலதான் அவர்கிட்ட என் அப்பாவோட வண்டியைக் கொடுத்து... ‘எந்தவிதப் புதுமையும் இல்லாம, ஹீரோ ஹோண்டா சிடி100 எஸ்எஸ் எப்படி இருக்குமோ, அப்படியே ரெடி பண்ணணும். பாக்குறதுக்கு ரியல் பைக் மாதிரியே இருக்கணும். வேற எதுவுமே கூடுதலா வேண்டாம்’னு சொல்லி 20,000 ரூபாய் முதலில் அட்வான்ஸ் கொடுத்தேன். அவ்வளவுதான்; நான் கேட்ட மாதிரியே ரெடி பண்ணி ஒப்படைச்சிட்டார்.

லிட்டருக்கு 70 கிமீ மைலேஜ் தருது! 
பூரிக்கும் ஹீரோ ஹோண்டா சிடி 100 பாபு...

பைக்கோட சேஸி, போல்ட், நட், பக்கவாட்டு ஷீல்டு எல்லாத்தையும் பாலிஷ் பண்ணி அப்படியே யூஸ் பண்ணிக்கிட்டோம். ஏன்னா அந்தத் தரம் புதுசா ஆர்டர் பண்ணி வாங்குற பொருள்ல இருக்குமானு தெரியாது. இன்ஜினை முழுசா ஒர்க் பண்ணிப் பயன்படுத்திக்கிட்டோம். இன்னும் தேவைப்பட்ட மீதி பாகங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாங்கிப் பொருத்திட்டார் சக்திவேல்.

அதேபோல, மெக்கானிக்ஸ் உள்ளாகவே வைத்திருக்கும் 'வாட்ஸ் அப் குரூப்ஸ்' மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் இந்த வண்டிக்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் தேடிப் புடிச்சி வாங்கிப் பொருத்தி ரெடி பண்ணினார். சுமார் 6 மாசம் ஆச்சு; என்னோட அப்பாவின் வண்டியப் புதுசு போலவே மீண்டும் பாக்குறதுக்கு. எனக்கு அந்த ஒரு மொமன்ட் ரொம்பவே பிடிச்சிருந்தது. இதற்காக மொத்தம் 60,000 ரூபாய் செலவாச்சு.

அடுத்த 5 வருஷத்துக்கான ஆர்டிஓ (RTO) அப்ரூவலும் வாங்கிட்டேன். நான் இந்த பைக்கை எடுத்துக்கிட்டு ரோட்டில் போகும்போது, ஒரு நாளைக்குக் குறைந்தது 5 பேராவது வண்டியை பற்றி விசாரிப்பாங்க. ‘அருமையான வண்டிங்க. நீங்க இன்னுமா வச்சிருக்கீங்க!’ என்றும், ‘ஆர்எக்ஸ்100 மீண்டும் வருதுன்னு சொன்ன மாதிரி, இந்த வண்டியும் ஷோ ரூம்க்கு வந்திருக்கா?’ என்றும் ஏக்கமா கேட்பாங்க. இன்னும் சிலரோ, ‘பழமையே மாறாம அப்படியே புதுசு மாதிரி ரெடி பண்ணி இருக்கீங்களே’னு சொல்லிட்டுப் போவாங்க.

அப்போதெல்லாம் மனசுக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அதனாலேயே தினமும் காலையில எழுந்திருச்சா வண்டியப் பக்காவா தொடச்சிடுவேன். நான் யமஹா என்டைசர், புல்லட், பல்ஸர் 150, யூனிகார்ன்னு நிறைய வண்டிங்க வெச்சிருந்திருக்கேன். இத்தனை வண்டிகளை ஓட்டியதில் சஸ்பென்ஷன்ல மட்டும் எனக்கு யூனிகார்ன் நல்ல சுகமா இருக்கும். ஆனா, இந்த சிடி100 எஸ்எஸ் பைக்கை ரெடி பண்ணி ஓட்டும்போது, கிடைக்கிற மனத்திருப்தியே அலாதியானது.

பைக் ஓட்டுறதுக்கு நல்லா இருக்கு, பழைய தரத்தில் அப்படியே இருக்கு. மைலேஜும் லிட்டருக்கு 70 கிமீ தருது பாஸ். இன்னும் ஓட்ட ஓட்ட 75 கிமீ தரலாம்னு என் மெக்கானிக் சொல்லியிருக்காரு! இப்போ பழைய வண்டிகளுக்கு நிறையவே டிமாண்ட் இருக்கு. என்னதான் ஆயிரம் வண்டிகள் மார்க்கெட்டுக்கு வந்து போனாலும், ‘இந்த வண்டி மீண்டும் கிடைக்குமா?’ அப்படினு ஒரு சில வண்டிகளுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதை இப்போ உணர்றேன். ‘இப்போ உங்களுக்கு இந்த வண்டியைப் பத்திச் சொன்னா புரியாது’னு எங்க அப்பா இந்த வண்டியை வாங்கும்போது சொன்னாரு. ஆனா, அதை இப்போ நான் புரிஞ்சுகிட்டேன். என்னதான் இருந்தாலும், 'ஓல்ட் இஸ் கோல்ட் தான்'"என்றார் மகிழ்ச்சி பொங்க.

மெக்கானிக் சக்திவேலிடம் பேசினேன். "நான் ஒரு 15 வருஷமா மெக்கானிக் வேலை செஞ்சுகிட்டு வரேன். கூடுதலா ஆக்டிங் டிரைவராகவும் வேலைக்குப் போவேன். பழைய வண்டிகளை புதுசு மாதிரி ரெடி பண்ணுறதுல எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம். கஸ்டமர் ஃப்ரீடம் கொடுத்தாங்க அப்படினா, அவங்க கேக்குற மாதிரியே ரெடி பண்ணி தருவேன்!" என்றார் சுருக்கமாக.