கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இனி எலெக்ட்ரிக்கையும் விடாது ஹீரோ! ஹீரோவின் புது விடா ஸ்கூட்டர்!

ஹீரோ விடா V1
பிரீமியம் ஸ்டோரி
News
ஹீரோ விடா V1

ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இனி எலெக்ட்ரிக்கையும் விடாது ஹீரோ!
ஹீரோவின் புது விடா ஸ்கூட்டர்!

நிறைய பேருக்கு ஹீரோ எலெக்ட்ரிக்கும், ஹீரோ மோட்டோ கார்ப்பும் பல குழப்பங்களை ஏற்படுத்தும். சிலர் ஹீரோ ஷோரூமுக்குச் சென்று ‘எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்லாம் எங்க’ என்று விசாரிப்பதைப் பார்த்திருக்கிறேன். (இந்தக் குழப்பங்களுக்கு அடுத்த மோட்டார் கிளினிக் பகுதியில் விடை காணலாம்!) ஆனால், இனிமேல் அப்படிப்பட்ட தவறுகள் நடக்காது. ஆம், ஹீரோ மோட்டோ கார்ப் – தன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விடா V1 (Vida) எனும் மாடலைக் களமிறக்கி இருக்கிறது.

இதில் மொத்தம் V1 Pro மற்றும் Plus என 2 வேரியன்ட்களை லாஞ்ச் செய்கிறது ஹீரோ மோட்டோ கார்ப். இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக, ஆரம்ப வேரியன்ட்டுக்கு 1.45 லட்சம் முதல் டாப் வேரியன்ட்டுக்கு 1.59 லட்சம் வரை பொசிஷன் செய்திருக்கிறது ஹீரோ.

‘ஆம், இது கொஞ்சம் விலை அதிகமாக இருக்கே’ என்று இதன் டீஸர் அன்றே கவலைப்பட்டார்கள் வாடிக்கையாளர்கள். ஆனால், அதை நியாயப்படுத்தும் விதமாகப் பல விஷயங்களைச் செய்யக் காத்திருக்கிறது ஹீரோ. விடா ஸ்கூட்டரின் முக்கியமான சில விஷயங்களைப் பார்க்கலாம்.

டிசைன், வசதிகள்

விடா கொஞ்சம் பார்ப்பதற்கு யூனிக்கான டிசைனில் கலக்கத்தான் செய்கிறது. காஸ்ட்லியான ஸ்கூட்டரில் எல்இடி லைட்ஸ் இல்லாமலா! இதன் ஹெட்லைட்ஸை முன் பக்க ஆப்ரானில் பொருத்தியிருக்கிறார்கள். இது பலருக்குப் பிடிக்குமா தெரியவில்லை. பல்வகையான ப்ளாஸ்டிக் பேனல்களைக் கொண்டு மிக்ஸட் ஆக இதை ரெடி செய்திருக்கிறார்கள். ஆனால், இது ஒரு வகைக்கும் நல்லதுதான். காரணம், சின்ன விபத்துகளில் மொத்த பாடி பேனல்களையும் மாற்றாமல், எளிதாக இதை ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்.

வழக்கம்போல் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் கொடுத்திருக்கிறார்கள். இதில் 3 ரைடிங் மோடுகள் உண்டு. எக்கோ, ஸ்போர்ட், ரைடு. இதில் Custom மோடு என்றொன்று உண்டு. இதில் வேகத்தைக் குறைத்து செட் செய்வது, ரேஞ்சைக் கூட்டிக் கொள்வது என்று நமது ரைடிங் தேவைகளுக்கு ஏற்பச் செய்து கொள்ளலாம். சில ஸ்கூட்டர்களில் வெயிலில் கிளார் அடிக்கும்… இதில் பிரைட்னெஸ் கன்ட்ரோல் வசதி கொடுத்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டாக்குமென்ட்களைப் பாதுகாக்கும் ஸ்டோரேஜ் வசதி என்று சில தேவையான விஷயங்களும் உண்டு. ஓவர் தி ஏர் (OTA) அப்பேட் வசதியும் உண்டு.

இதில் எக்ஸ்ட்ராவாக Park மோடும் இருக்கிறது. ரிவர்ஸ் மோடைத்தான் ஸ்டைலாக பார்க் மோடு என்று வைத்திருக்கிறார்கள். டைட்டான இடங்களில் ஈஸியாக பார்க் செய்து கொள்ள முடியும். மேலும் கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன், ஜியோ ஃபென்ஸிங், பைக் ட்ராக்கிங் என்று பல வசதிகள் உண்டு.

இதன் சீட்டுக்கு அடியில் 26 லிட்டர் இடவசதி இருக்கிறது. இதில் ஒரு ஃபுல் பேஸ் ஹெல்மெட்டை வைக்கலாம். இது சேட்டக்கைவிட (18 லி), ஏத்தரைவிட (22 லி) அதிகம். ஆனால், ஓலாவைவிட 10 லிட்டர் குறைவு. ஏத்தரைப்போலவே இதன் சீட் உயரம் 780 மிமீ. அதனால், ரைடிங் பொசிஷன் பக்கா. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மிமீ இருக்கிறது. இது ஏத்தரைவிட 2 மிமீ அதிகம் மட்டுமே! இதன் வீல்பேஸ், 1,301 மிமீ. இது ஏத்தரைவிட அதிகம்.

இதன் எடை 125 கிலோதான் என்பதால், பெண்கள்கூட இதை எளிதில் கையாளலாம். ஆனாலும் ஏத்தரைவிட எடை அதிகமே! இதில் சஸ்பென்ஷனைப் பொருத்தவரை முன் பக்கம் டெலிஸ்கோப்பிக்கும், பின் பக்கம் மோனோஷாக்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரேக்குகள் 190/130மிமீ. ஆனால், பின் பக்கம் டிரம் மட்டுமே! ஏத்தர், ஓலாவெல்லாம் டிஸ்க் கொடுத்து அசத்துகிறார்கள்.

ஸ்விட்ச்கள் தரம் அருமை. பார்க் மோடு உண்டு.
ஸ்விட்ச்கள் தரம் அருமை. பார்க் மோடு உண்டு.
இனி எலெக்ட்ரிக்கையும் விடாது ஹீரோ!
ஹீரோவின் புது விடா ஸ்கூட்டர்!

பேட்டரி மற்றும் மோட்டார்

விடாவில் கழற்றி மாட்டக் கொள்ளக்கூடிய Removable Battery வசதி கொடுத்திருக்கிறார்கள். இதனால், மாடி போர்ஷனில் வசிப்பவர்கள் எளிதில் கழற்றி எடுத்து சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இது தவிர, இன்னும் 2 வழிகளில் இதை சார்ஜ் செய்யலாம் என்கிறது ஹீரோ விடா. DC ஃபாஸ்ட் சார்ஜர் – அதிவேக சார்ஜிங் நெட்வொர்க்குக்கு ஹீரோ வழி வகை செய்யவிருக்கிறது. இந்த சார்ஜிங் கிட் டிசைன், ஏத்தர் 450X –ன் டிசைன் மாதிரியே இருப்பதால்… இதை ஏத்தர் கிரிட்டிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், நார்மலான பவர் ஸாக்கெட்டில் இதை சார்ஜ் செய்தால், முழு சார்ஜ் ஏற்ற 5.5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும் என்கிறது ஹீரோ. அதாவது, பேட்டரியைக் கழற்றாமல், அப்படியே ஸ்கூட்டர் மூலமாகவே ப்ளக் அண்ட் ப்ளே செய்து கொள்வது.

இதன் அடிப்படை வேரியன்ட்டான V1 Plus-ல் கொஞ்சம் பேட்டரி பேக் சிறுசு. இதில் 3.44kWh பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். இதுவே V1 Pro வேரியன்ட்டில் 3.94kWh சக்தி வாய்ந்த பேக் இருக்கிறது. இதன் காரணமாக, நிச்சயம் ரேஞ்சிலும் Pro மாடல் ப்ரொஃபஷனலாக இருக்கிறது. இதன் ரேஞ்ச் 165 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது ஹீரோ. இதுவே V1 Plus மாடலின் ரேஞ்ச் நன்றாகக் குறைகிறது. இது சிங்கிள் சார்ஜுக்கு 143 கிமீ என்கிறார்கள். ஆனால், என்னைக் கேட்டால், விலை முக்கியம் என்பவர்களுக்கு V1 Plus மாடலே போதும் என்று நினைக்கிறேன்.

பேட்டரியில் மாற்றம் இருப்பதால்… ரேஞ்சில் மட்டுமில்லை; சார்ஜிங்கிலும் மாற்றம் இருக்கிறது. ஹோம் சார்ஜரில் 0–80 கிமீ–க்கு V1 Plus வேரியன்ட்டுக்கு 5.15 மணி நேரம் ஆகும் என்றால், இதுவே Pro வேரியன்ட்டுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் எடுத்துக் கொள்கிறது. இதற்கு 5 மணி நேரம் 55 நிமிடங்களும் ஆகும் என்கிறார்கள். இதன் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 1.2Km /Min என்கிறார்கள். அதாவது, 1 நிமிடத்துக்கு 1.2 கிமீ போகும் வரை சார்ஜ் ஏறும்.

ஆப்ரானில் ஹெட்லைட்...
ஆப்ரானில் ஹெட்லைட்...
இனி எலெக்ட்ரிக்கையும் விடாது ஹீரோ!
ஹீரோவின் புது விடா ஸ்கூட்டர்!
12 இன்ச் வீல்களில் முன் பக்கம் டிஸ்க் உண்டு.
12 இன்ச் வீல்களில் முன் பக்கம் டிஸ்க் உண்டு.

பேட்டரிகள்தான் வேறு. ஆனால், எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றுதான். இதன் பவர் 6kW (3.9kW தொடர்ச்சியான அவுட்புட் கிடைக்கிறது). அதேநேரம், பெர்ஃபாமன்ஸிலும் வித்தியாசம் தெரிகிறது என்கிறார்கள். ஆனால் ரொம்ப இல்லை ஜென்டில்மேன். பெரிய 3.94kWh பேட்டரி பேக் என்பதால், கொஞ்சம் வேகமாக இருக்கிறது V1 Pro. இது 40 கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் கடக்கிறது. இதுவே 0.2 விநாடிகள் அதிகமாகிறது V1 Plus-க்கு. எலெக்ட்ரிக் மோட்டார் கன்ட்ரோலை இரண்டு வேரியன்ட்களுக்கும் ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்திருப்பதாகச் சொல்கிறது ஹீரோ. ஆனால், இரண்டின் டாப் ஸ்பீடுமே 80 கிமீ.

விடா ஸ்கூட்டர் விலை அதிகம்தான்… ஆனால்?

விடாவின் விலையைக் கொஞ்சம் அதிகமாகவே பொசிஷன் செய்திருக்கிறது ஹீரோ. 1.45 – 1.59 லட்சம். இது ஏத்தர், ஓலாவைவிட எக்ஸ் ஷோரூமிலேயே 20,000 ரூபாய் அதிகம். பின் பக்கம் டிரம் பிரேக்ஸைத் தவிர, விடாவில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. ஆனால், ஹீரோவின் நம்பகத்தன்மையும், ஏத்தர் சார்ஜிங்கில் கூட்டணி வைத்ததுமே வாடிக்கையாளர் களுக்கு நம்பிக்கையாக உணர்வார்கள் என்று தோன்றுகிறது. எதற்கும் ஐக்யூப், ஓலா, ஏத்தர், சேட்டக் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது!

இனி எலெக்ட்ரிக்கையும் விடாது ஹீரோ!
ஹீரோவின் புது விடா ஸ்கூட்டர்!