
ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

ஆஃப்ரோடு ரைடிங் என்றாலே 2.50 லட்சம் ஹிமாலயன்தான்’ என்ற நிலையை மாற்றி 1.20 லட்ச ரூபாய்க்கும் சிறந்த ஒரு ஆஃப்ரோடிங் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது ஹீரோ மோட்டோகார்ப். வெளியானதில் இருந்தே ஆஃப்ரோடர்கள் மனதிலும் ஒரு தனி இடத்தைப் பிடித்துத் தக்க வைத்து வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200. 2019-ல் BS-4 இன்ஜினுடன்தான் வெளியாகியிருந்தது எக்ஸ்பல்ஸ் 200. BS6 விதிகள் அமலுக்கு வந்தவுடன், அதற்கேற்ற இன்ஜின் மாற்றங்களுடன் ஒரே ஒரு முறை மேம்படுத்தப்பட்டது எக்ஸ்பல்ஸ் 200. அதன்பிறகு தற்போது இரண்டாவது முறையாக சில மாற்றங்களைச் செய்து எக்ஸ்பல்ஸ் 200 4V மாடல் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ.
என்னென்ன மாற்றங்கள்?
சில மாற்றங்களுடன் எக்ஸ்பல்ஸ் 200 தயாராகிக் கொண்டிருக்கிறது என்றவுடன் முதலில் காஸ்மெடிக் மாற்றங்களாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், காஸ்மெடிக் மாற்றங்கள் இல்லை; பெர்ஃபாமன்ஸில்தான் மாற்றம் செய்யப் போகிறார்கள் என ஸ்பை படங்கள் காட்டிக் கொடுத்தன. அதற்கேற்ற வகையில் இரண்டு வால்வுகள் கொண்டிருந்த எக்ஸ்பல்ஸ் 200 இன்ஜினை நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜினாக மேம்படுத்தி எக்ஸ்பல்ஸ் 200 4V-யாகப் புதிய பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ.
BS-4 இன்ஜினுடன் முதன்முதலில் எக்ஸ்பல்ஸ் 200 அறிமுகமானபோது 18.4bhp பவரையும், 17.1Nm டார்க்கையும் கொண்டிருந்தது. ஆனால், BS-6 விதிகளுக்கு ஏற்ப இன்ஜினை மாற்றியமைத்து வெளியிட்டபோது, பவரும் டார்க்கும் கணிசமான அளவில் குறைந்திருந்தது. 18.4hp-யாக இருந்த பவர் BS-6 வேரியன்ட்டில் 17.8hp-யாகக் குறைந்தது. அதோடு டார்க்கும் 16.45Nm என்ற அளவில் குறைந்தது. அங்கு குறைந்த பவரை தற்போது புதிய நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜினோடு மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறது ஹீரோ. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V-யானது 19.1hp பவரையும், 17.35Nm டார்க்கையும் தருகிறது.
புதிய எக்ஸ்பல்ஸ் 200 4V நான்கு வால்வுகளைக் கொண்டிருப்பதால், அதிக rpm-களில் நன்றாகக் காற்றை உள்ளிழுத்துச் செயல்பட முடியும். இதனால் சிறப்பான ஹை-எண்ட் பெர்ஃபாமன்ஸை புதிய எக்ஸ்பல்ஸில் எதிர்பார்க்கலாம். புதிய எக்ஸ்பல்ஸில் பெரிய மாற்றம் என்றால், அது மேற்கூறிய இன்ஜின் மேம்பாடுதான். அதனைத் தவிர்த்து ஸ்டார்ட்டர் மற்றும் இன்ஜின் கில் ஸ்விட்ச்சுடன் ஸ்விட்ச் கியரையும் மேம்படுத்தியிருக்கிறது ஹீரோ.
வெளித்தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஃப்யூல் டேங்க்கில் 4V என்ற ஸ்டிக்கர் மட்டும் கூடுதலாக இருக்கிறது. அதோடு ட்ரையல் ப்ளூ, ப்ளிட்ஸ் ப்ளூ மற்றும் ரெட் ரெஸ்ட் என்று புதிதாக மூன்று டூயல்-டோன் கலர் வேரியன்ட்களும் உண்டு.
ஆயில் கூலிங் சிஸ்டத்தையும் புதிய எக்ஸ்பல்ஸில் மேம்படுத்தியிருக்கிறது ஹீரோ.
இரவு நேரங்களில் ஹெட்லைட்டின் வெளிச்சம் போதவில்லை என்பதுதான் முந்தைய ஹீரோ எக்ஸ்பல்ஸில் பெரிய குறையாகச் சொல்லப்பட்டு வந்தது. மற்ற பைக்குகளைவிட ஒரு ஆஃப்ரோடிங் பைக்குக்கு ஹெட்லைட் வெளிச்சம் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அந்தக் குறையை இந்தப் புதிய எக்ஸ்பல்ஸில் நிவர்த்தி செய்திருக்கிறது. ஹீரோ. புதிய எக்ஸ்பல்ஸின் எல்இடி ஹெட்லைட்டுகள் முந்தைய எக்ஸ்பல்ஸில் இருந்ததைவிட 21 சதவிகிதம் கூடுதல் வெளிச்சத்தைத் தரும் எனத் தெரிவித்திருக்கிறது ஹீரோ. இரவு நேர வெளிச்சக் குறையை இந்த மாற்றம் தீர்க்கிறதா என்று பார்ப்போம். மேற்கூறிய மாற்றங்களைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் புதிய எக்ஸ்பல்ஸில் இல்லை.
விலை
மேற்கூறிய மாற்றங்களுடன் முந்தைய எக்ஸ்பல்ஸை விட 5000 ரூபாய் கூடுதல் விலையில் 1.28 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது எக்ஸ்பல்ஸ் 200 4V.
