Published:Updated:

ஆஃப்ரோடிங் ஓகே... டூரிங் பண்ண முடியுமா?

ஹீரோ எக்ஸ்பல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹீரோ எக்ஸ்பல்ஸ்

ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V

ஆஃப்ரோடிங் ஓகே... டூரிங் பண்ண முடியுமா?

ஃபர்ஸ்ட் லுக்: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V

Published:Updated:
ஹீரோ எக்ஸ்பல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹீரோ எக்ஸ்பல்ஸ்
ஆஃப்ரோடிங் ஓகே...  டூரிங் பண்ண முடியுமா?
ஆஃப்ரோடிங் ஓகே...  டூரிங் பண்ண முடியுமா?

Moto Cross Race கேள்விப்பட்டு இருப்பீர்கள். சேறிலும் சகதியிலும் சீறிப் பாயும் பைக்குகள்தான் இந்த ரேஸில் சிறப்பம்சம். இந்த ரேஸ்களில் பயன்படுத்தப்படும் பைக்குகள், சாகச உணர்வு கொண்டவர்கள் மத்தியில் பிரபலம். இதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைக்குகள் வாங்க வேண்டுமானால், அவற்றின் விலை மிக மிக அதிகம். இப்படியான சூழலில்தான் 2011-ல் ஹீரோ நிறுவனம் இம்பல்ஸ் என்கிற பைக்கை அறிமுகப்படுத்தியது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த பைக் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. அதற்குள் 2015 போல இந்த பைக்குகள் மீதான மோகம் இல்லாமலே போய்விட்டது. 2017-ல் இந்த வகை பைக்குகள் தயாரிப்பதையே நிறுத்திவிட்டார்கள். ஆனால் மீண்டும் ஒரு கட்டத்தில் மோட்டோ பைக் ரேஸ் ஆர்வமுள்ளவர்கள் இம்பல்ஸ் பைக் மீது ஆர்வம் காட்டினர். செகண்ட் ஹேண்டில் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவதற்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த ஹீரோ 2019-ல் மீண்டும் Hero எக்ஸ்பல்ஸ் என்கிற பைக்கை அறிமுகப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் சந்தையில் நிறைய அட்வென்ச்சர் பைக்குகள் வந்திருந்தபோதும், ‘நாங்க அப்போவே இந்த மார்க்கெட்டில் இறங்கிட்டோம்’ எனச் சொல்லாமல் சொல்லி அடிக்கிற மாதிரி நிறைய வசதிகளுடன் களமிறங்கியது ஹீரோ. அப்படி அறிமுகமான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 2v பைக்கின் அடுத்த அப்டேட்டான எக்ஸ்பல்ஸ் 4v பைக் குறித்து அலசி ஆராய்வோம்! வாங்க!

முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ இம்பல்ஸ் பைக்கில், இன்ஜின் பவர் குறைவாக இருந்தது. ஆஃப் ரோட்டுக்கு இது ஏற்றது கிடையாது என பலரும் விமர்சனம் செய்தார்கள். எக்ஸ்பல்ஸ் வரும்போது, அதன் சிசி 250, 300 இருக்கும் என எதிர்பார்த்தால் அதிலும் 200 சிசி மட்டுமே இருந்தது. ஏன் ஹீரோ 200சிசியில் நிற்கிறார்கள் என நிறுவனத்தாரிடம் கேட்டபோது, மோட்டோ ரேஸ் கற்றுக்கொள்வதற்கு இந்த சிசியே அதிகபட்சம். இதுதான் பொருத்தமானது; மற்றும் விலையைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளக் கூடியது என அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

இன்ஜின்:

இந்த பைக்கில் இருப்பது 199.6 சிசி இன்ஜின். 19.1bhp ஆற்றலை இது கொடுக்கிறது. இதன் டார்க் 17.35 nm. கண்டிப்பாக ஆரம்ப நிலையில் கற்றுக்கொள்பவர்களுக்கு இது போதுமான இன்ஜின் ஆற்றல்தான். ஹீரோ எக்ஸ்பல்ஸ் இதற்கு முன்பு 2 வால்வ் உடன் வந்தது. இப்போது லாஞ்ச் ஆகியிருக்கும் எக்ஸ்பல்ஸ் 4v என்பதில் 4 வால்வுகள் இருக்கின்றன. இதனை ஹைலைட் செய்து மார்க்கெட்டிங் செய்கிறார்கள். அது என்ன வால்வ் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, இன்ஜின் எப்படிச் செயலாற்றுகிறது எனப் பார்க்க வேண்டும்.

காற்றும் எரிபொருளும்தான் இன்ஜினின் இரண்டு கண்கள். இவை இரண்டும் இன்ஜினுக்குள் சென்று இரண்டும் கம்பஸன் ஆகும். அதிலிருந்து காற்று, எக்ஸாஸ்ட் வழியாக வெளியே வந்துவிடும். தேவையான பவர் பிஸ்டனுக்குப் போகும். அந்த பிஸ்டன் ரன் ஆவறது மூலம் உருவாகிற பவர் ட்ரான்ஸ்மிஷனுக்கு வரும். அந்த ட்ரான்ஸ்மிஷனில் இருந்து டயருக்கு பவர் கிடைக்கும். இந்த ஏரும் பியூயலும் வருவதற்கு இன்ஜினில் இரண்டு வால்வ் இருக்க வேண்டும். ஒன்று உள்ளே வருவதற்கு, மற்றொன்று வெளியே போவதற்கு. இப்படி இரண்டு வால்வ் இருப்பதால்தான் 2V இன்ஜின் எனச் சொல்கிறார்கள்.

இந்த இன்ஜினில் லோ ஆர்பிஎம் அதிகமாகவே கிடைக்கும். ஓட்டுவதற்கு ரொம்ப இலகுவாக இருக்கும். லோ எண்ட்ல சூப்பரான டார்க் கிடைச்சுட்டே இருக்கும். இதனை ஹை ஸ்பீடுக்கு உயர்த்தணும்னுதான் 4v கொண்டு வந்தாங்க. இப்படி யோசிச்சுப் பாருங்க, நமக்கு இருக்கிற இரண்டு நுரையீரலோடு இன்னும் இரண்டு சேர்ந்து இருந்தா எப்படி இருக்கும்? சுவாசிக்கிறதுக்கு ரொம்ப எளிதா அமையும். அந்த மாதிரி 4 வால்வ் கொண்ட இன்ஜினில் ஏரும் ஃப்யூலும் எளிதா வரும்; அதிக கம்பஷன் நடக்கும். ஆற்றல் இன்னும் அதிகமா கிடைக்கும். ஹை ரெவ்ல இதை மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் பயன்படுத்தும்போது ஹீரோ என்ன செய்திருக்காங்கன்னா, டாப் ஸ்பீடுக்கு அவர்கள் போகவே இல்லை.

முன்பு இருந்த இம்பல்ஸ்லயும் எக்ஸ்பல்ஸ்லயும் 100, 110 தானே அதிகபட்ச ஸ்பீடாக இருந்தது. இந்த 4v இன்ஜினும் 110 கிமீதான் போகும் என ஹீரோ சொல்கிறார்கள். 4v இன்ஜினில் கிடைக்கிற பவரை என்ன செய்திருக்கிறார்கள் எனப் பார்த்தால், மீண்டும் லோ ஸ்பீட் எண்டுக்கே கொடுத்திருக்காங்க. அதற்காக ரியர் ஸ்ப்ராக்கெட் அளவை 3MM அளவுக்கு அதிகப்படுத்தி இருக்காங்க.

கியர் ரேஷியோல இருக்க பவரையும் மாற்றி இருக்காங்க. முன்பு முதல் கியர், இரண்டாவது கியரில் என்ன பவர் கிடைத்ததோ, அதைவிட அதிக பவர் இப்போது கிடைக்கும். இதில் இருப்பது ஷார்ட் கியரிங் செட்அப். ராயல் என்ஃபீல்டில் இருப்பது டால் கியரிங். அந்த வண்டியில் ரொம்ப நேரம் ரெவ் பண்ணி இரண்டாவது கியருக்குப் போகலாம். ஆனால் ஹீரோவில் 1,2,3 கியர்கள் அடுத்தடுத்து உடனே மாற்றுவதுபோல இருக்கும். கியர் குறைக்கும்போதும் அதே போலதான். ஷார்ட் கியரிங் என்பதால் லோ எண்ட் டார்க் அதிகமாக இருக்கும்.

இதில் பொருத்தப்பட்டிருப்பது ஆயில் கூல்டு இன்ஜின்தான். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கு. கியர் மாற்றுவதற்கு ரொம்பவே ஸ்மூத்தாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்தது போலதான். இதில் அட்வான்டேஜ் என்னவென்றால், கிக்கரும் கொடுத்திருக்கிறார்கள். பவர் ஸ்டார்ட் வேலை செய்யலைன்னா கிக்கர் பயன்படுத்தலாம். கிக்கர் அடித்து ஸ்டார்ட் செய்வதில் ஒரு கிக் இருக்கிறது என நினைப்பவர்களுக்கு ஏற்ற மாடல் இந்த எக்ஸ்பல்ஸ் 200 4V.

பைக் பாடி எப்படி இருக்கிறது?

இதன் சஸ்பென்ஷன் ஆஃப் ரோட்டுக்கு ஏற்றதுபோல கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாடி இருப்பது டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன். பின்னாடி இருப்பது மோனோஷாக் சஸ்பென்ஷன். ஆஃப் ரோடு பயணத்துக்கு ஏற்ற மாதிரி ரெக்டாங்குலர் ஸ்விங் ஆர்ம். சஸ்பென்ஷன் ட்ராவல்தான் செம! முன்பக்கம் பைக்கை 190mm வரை கீழே இறக்குகிறது. பின்புறம் 170mm வரை கீழே இறக்குகிறது. வழக்கமான ஸ்ட்ரீட் பைக்குகளில் 70mm முதல் 100mm வரையில்தான் அதிகபட்ச ட்ராவல் இருக்கும். பெரிய பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் சஸ்பென்ஷன் முழுக்க போயிட்டு, பாட்டம் அவுட் ஆகாம திரும்ப வரும்போது சிறப்பான ஆஃப் ரோடு எக்ஸ்பீரியன்ஸ் இந்த பைக்கில் கிடைக்கும்.

டயர் சைஸ் முன் பக்கம் 21 இன்ச் டயர். பின் பக்கம் 18 இன்ச் டயர். ஆஃப் ரோடு பைக்குகளில் முன் பக்க டயர் எப்போதும் போலவே பெரிதாக இருக்கிறது. 825 mm அளவு கொண்ட சீட். உயரம் குறைவாக இருப்பவர்களுக்குக் கொஞ்சம் சிரமம் என்றாலும், மேனேஜ் செய்து கொள்ள முடியும். சீட்டில் ஷாஃப்ட்டான குஷன் கொடுத்திருக்காங்க. சீட்ஸ்ல மூன்று வேரியன்ட் கொடுக்கிறாங்க. டூரிங், அட்வென்ச்சர், ஆஃப்ரோடு என நமக்கு ஏற்ற மாதிரி சீட் மாற்றிக் கொள்ளலாம்.

220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ். கிரவுண்டுக்கும் வண்டிக்குமான உயரம் அதிகம் என்பதால், குழி - பள்ளம் எல்லாம் வந்தால் தூசு மாதிரி கடந்து போகலாம். டேங்க் கொள்ளளவு 13 லிட்டர். இதன் மொத்த எடை 158 கிலோதான். மற்ற அட்வென்ச்சர் பைக்குகளைக் காட்டிலும், இது எடை குறைவுதான். ஆஃப் ரோட்டில் எளிதாக ஹேண்டில் பண்ண முடியும். அட்வென்ச்சர் பண்ணும்போது விழுந்தா கூட, ஒரே கையில் தூக்கி அழகா கொண்டு போயிடலாம்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை 3 புதிய கலர் வேரியன்ட்ல ஹீரோ, இதைக் கொண்டு வந்திருக்காங்க. சிவப்பு மற்றும் கருப்பு, நீலம் மற்றும் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மூன்றுவிதமான கலர்களில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு ரொம்பவே கவர்ச்சிகரமான கலரிங்.

 4வால்வுகள் உண்டு. 
லோ எண்ட் டார்க் சூப்பர்!
4வால்வுகள் உண்டு. லோ எண்ட் டார்க் சூப்பர்!
 ஸ்விட்ச்களின் தரம் ஓகே!
ஸ்விட்ச்களின் தரம் ஓகே!

தனித்துவமான விஷயங்கள்!

ஹேண்டில்பாரில் Knuckle Guard கொடுத்திருக்காங்க. ஆஃப்ரோட்டில் சேறு எல்லாம் கையில் படாம இருக்க இந்த கார்ட்ஸ் கொடுத்து இருக்காங்க. ஹெட்லைட்ஸ், டிஆர்எல் எல்லாமே எல்இடி லைட்ஸ். டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டர் கொடுத்திருக்காங்க. இந்த கிளஸ்டர்ல கியர் இண்டிகேஷன், எக்கோ மோட் இண்டிகேஷன், சைட் ஸ்டாண்ட் இண்டிகேஷன், கனெக்டட் ஆப் வசதிகள் ஆகியவை இருக்கு. உங்க போன்கூட புளுடூத் வழியா கனெக்ட் செய்து கொள்ள முடியும். கால்ஸ், மெசேஜஸ், நேவிகேஷன் ஆகியவற்றை இந்த கிளஸ்டர்ல வண்டி ஓட்டும்போதே பார்க்க முடியும். அதுபோக ஆஃப்ரோட்டுல அதிகபட்ச ஸ்பீட் எது, என்னனென்ன செயல்பாடுகள் நடந்தது என மொபைல் ஆப்பில் தெரிந்து கொள்ள முடியும். பழைய மாடலைவிட இதில் 21 சதவீதம் அதிக பவரோட ஹெட்லைட் இருக்கு. இரவு நேரத்தில் வெளிச்சம் அதிகமாக கிடைக்கும்.

முன்பே சொன்னதுபோல வண்டி எடை குறைவு என்பதால், ஓட்டுவதற்கு ரொம்பவே எளிதாக இருக்கிறது. அகலமான ஹேண்டில் பார், ஆஃப் ரோடுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் என்பதால் வண்டி ஓட்டும்போது நாம் சோர்வடைவதே இல்லை. மற்ற பைக்குகள் ஓட்டும்போது அந்த பைக்கில் நடுவில் அமர்ந்திருப்பது போல ஃபீல் இருக்கும். இந்த பைக்கில் பைக் மேல அமர்ந்து ரோட்டைப் பார்ப்பது போல இருக்கிறது. பைக்கின் உயரம் மற்ற பைக்கைக் காட்டிலும் அதிகமென்பதால், சிக்னலில் நிற்கும்போது நீங்க இரண்டு ஸ்டெப் உயரமா இருப்பது போலத் தோன்றும். சிட்டிக்குள்ள, ஆப் ரோட்டில் எல்லாவிதமான சாலைகளிலும் ஸ்மூத்தாக ஓட்ட முடிகிறது.

பிரேக்கிங் பொறுத்தவரை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக். அப்போதுதான் ரியர் வீல் சாகசங்கள் செய்ய வசதியாக இருக்கும். மார்க்கெட்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கலாம், தேவையானபோது கன்ட்ரோல் செய்துகொள்கிற வசதியையும் சேர்த்துக் கொடுக்கலாம் என ரேஸர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஹீரோ இதனைப் பரிசீலிக்கலாம்.

லோ எண்ட் டார்க் என்பதால், டிராஃபிக்கில் சிட்டிக்குள் ஓட்டும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் ஹை வே, லாங் டிரைவ் என போகும்போது அதிகபட்ச ஸ்பீடே 100-110 க்குள்தான் கிடைக்கும். இந்த ஸ்பீட் லிமிட் எனக்குப் போதும்; பாதுகாப்பா இருக்கும் என யோசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இதைவிடச் சிறந்த அட்வென்ச்சர் பைக் இந்த விலையில் கிடையாது. ஸ்போக் வீல்தான் என்பதால், பஞ்சர் ஆனால் டயரைக் கழட்டித்தான் பார்க்க முடியும்.

இதன் சென்னை ஆன் ரோடு விலை 1,63,000. மைலேஜ் 40-45 கிமீ வரை தருகிறது. மற்ற பைக்குகள் எல்லாம் இரண்டு லட்சத்துக்கு மேல்தான் விலை இருக்கும். ஆன் ரோடு, ஆப் ரோடு இரண்டுக்கும் ஏற்றது என்பதைத்தான் ஹீரோவே சொல்றாங்க. மைலேஜும் தாராளமாக இருப்பதால் அலுவலகம் வந்துட்டுப் போகக் கூட இந்த பைக் ஓகேதான். அட்வென்ச்சர் செய்யணும் என்றாலும், இதை எடுத்துட்டு வெளிய போகலாம். சர்வீஸ் மற்றும் பராமரிப்பைப் பொருத்தவரை ரொம்பவே கம்மியான விலையில் இதனைப் பராமரிக்க முடியும்.

டூரிங் என வரும்போது மட்டும் இந்த பைக்கின் பவர் குறைவாக இருப்பதுதான் சின்ன மைனஸ். இன்ஜின் பவர் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினால் இந்த வண்டி டூரிங் செய்வதற்கும் அற்புதமான பைக்காக இருக்கும்.