Published:Updated:

CB டூரிங் வரிசையில் ஹார்னெட்!

ஹோண்டா CB200X
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB200X

ஃபர்ஸ்ட் லுக்: ஹோண்டா CB200X

CB டூரிங் வரிசையில் ஹார்னெட்!

ஃபர்ஸ்ட் லுக்: ஹோண்டா CB200X

Published:Updated:
ஹோண்டா CB200X
பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டா CB200X

2011 - ம் ஆண்டு CBR 250R மூலம் ஸ்போர்ட்ஸ் டூரிங் செக்மென்ட்டை 1.5 லட்ச பட்ஜெட்டில் தொடங்கி வைத்தது ஹோண்டா. நமது மோட்டார் சைக்கிள் மார்க்கெட் அப்போது அந்தளவு முதிர்வடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம் மாதம் கிட்டத்தட்ட 40,000 ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகள் விற்பதால், ஸ்போர்ட்ஸ் டூரிங்கில் இருந்து விலகி ஹோண்டா ஹைனஸ், CB 350 என ரெட்ரோ - கஃபே ரேஸர்களைக் கொண்டு வந்தது. Xpulse 200, டொமினார் 250 என இந்த பட்ஜெட் டூரிங் செக்மென்ட் மீண்டும் உயிர் பெற்றுள்ளதால், ஹார்னெட் 2.0-வில் சிறுசிறு அம்சங்கள் சேர்த்து CB 200X - ஐ வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

டிசைன்

ஹார்னெட் 2.0 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், வித்தியாசங்களில் இருந்து ஆரம்பிப்போம். உயரமான வைஸர் காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் என்பதால், நெடுஞ்சாலைப் பயணங்களில் சீக்கிரம் களைப்படையாமல் இருக்கலாம். எல்இடி இண்டிகேட்டர் உடன் கூடிய (Knuckle) கவர் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது. நிமிர்ந்து ஓட்டக்கூடிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கும் உயரமான ஹேண்டில் பார், சோர்வைக் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் வித்தியாசங்கள் முடிவதால், CB 200X-ன் பின்புற டிசைன் ஹார்னெட்டை ஜெராக்ஸ் எடுத்து வைத்ததுபோல் உள்ளது.

இன்ஜின்

பெயரில் மட்டும்தான் 200. ஆனால் ஹார்னெட் 2.0 ல் பணிபுரியும் அதே 184cc BSVI PGM-FI இன்ஜின்தான் CB200X-லும். இந்த ஏர் கூல்டு என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு 17bhp@8500 பவரும், 1.61kgm@ 6000rpm டார்க்கையும் கொண்டிருக்கிறது.

ஹார்னெட்போல் அல்லாமல் இன்ஜினின் ஹெட்டை செமி ஃபேரிங் சூழ்ந்துள்ளதால், 200X-க்கு ஹோண்டா ஆயில் கூலிங் அம்சத்தைக் கொடுத்திருக்கலாம். தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான 180 - 200 சிசி பைக்குகள் ஆயில் கூலிங் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஹார்னெட்டைக் காட்டிலும் 5 கிலோ எடை கூடுதல் என்பதால், CB200X ன் பெர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம் ஆகியவை ஃபர்ஸ்ட் ரைடு ரிவ்யூவில் தெரிய வரும்.

சிறப்பம்சங்கள்

இந்த செக்மென்ட்டின் மற்ற பைக்குகளைக் காட்டிலும், CB200x, ஹார்னெட் 2.0 போலவே இந்த செக்மென்ட்டில் வேறு எந்த பைக்கிலும் இல்லாத சிறப்பம்சம் என்றால், தங்க நிறத்தில் ஜொலிக்கும் USD போர்க்ஸ்தான்.

மற்றபடி, LED ஹெட்லேம்ப்ஸ், இருபுறமும் டிஸ்க் பிரேக்ஸ் (சிங்கிள் சேனல் ABS), மோனோ ஷாக் ரியர் சஸ்பென்ஷன், ‘Y’ வடிவ 5 ஸ்போக் அலாய் வீல் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர், டிஜிட்டல் கடிகாரம், சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்ட் மீட்டர் போன்ற அம்சங்களுடன் கூடிய முழு டிஜிட்டல் மீட்டர் என ஹார்னெட்டின் அம்சங்கள் தான் CB 200X-லும் தொடர்கின்றன.

கூடுதல் அம்சங்கள் எனப் பார்த்தால், பிளாக் பேட்டர்ன் டூயல் ஸ்போர்ட் டயர்கள் மற்றும் ஹஸார்ட் லேம்ப்ஸ் என சொற்பமாக உள்ளன. ஸ்ட்ரீட் பைக்கில் இருந்து டூரிங் பைக்காக மேம்படுத்த டூயல் சேனல் ABS, ஸ்போக் வீல்ஸ் போன்றவற்றை ஆப்ஷனலாகவேனும் கொடுத்திருக்கலாம்.

ரூ.1,44,500 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைக்கு CB200X-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இதைவிடப் பெரிய இன்ஜின் மற்றும் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட யமஹா FZ 25S 5,000 ரூபாய் குறைவு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மீண்டுமொருமுறை போட்டியாளர்களைவிட ஹோண்டா விலை அதிகமாக நிர்ணயித்துள்ளதால், செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் டெலிவரி தொடங்கும்போதுதான் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருக்குமா என்பது தெரியும்.தலைப்பு தேவை