"நமஸ்தே ஜி... மேரா பேட்டா" என்று ஆரம்பித்து, "என் பையனுக்கு 11 வயது ஆகிறது. ரேஸில் ஆர்வமாக இருக்கிறான். நாங்கள் டெல்லியில் இருந்தாலும், ரேஸ் பயிற்சிக்காக அடிக்கடி சென்னை வந்து போகத் தயாராக இருக்கிறோம்." - தன் மகனோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் `கார்ட் அட்டாக்' வந்து, இந்தியில் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெண்.
இப்படிப்பட்ட உரையாடல்கள் நமக்குப் புதிதல்ல. காரணம்:
``என் மகனுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஆனால், பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பைக் ரேஸராக விரும்புகிறான். ஆனால், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் அவனுக்கு பைக் ஓட்ட எப்படிச் சொல்லிக் கொடுப்பது?’’
``பைக் ரேஸ், கார் ரேஸில் எல்லாம் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் செலவாகுமாமே... உண்மையா?’’
``பைக் ரேஸ், கார் ரேஸ் என்று கவனம் திரும்பி விட்டால்... ஊர் ஊராகச் செல்ல வேண்டி இருக்குமே... அதனால் படிப்பு பாதிக்கப்படுமா?’’
``ரேஸ்களில் விபத்து நடப்பது சர்வசாதாரணம் என்கிறார்களே... இது அந்த அளவுக்கு ஆபத்துக்கள் நிறைந்த ஒரு துறையா?”
- வாரத்துக்கு இப்படி 10 பேராவது நம் அலுவலகத்துக்கு, தொலைபேசி வழியாகவோ, மெயில் வழியாகவோ சந்தேகம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைச் சொன்னால்... ``சரி, மகனுக்கு/மகளுக்கு ரேஸிங் பயிற்சியை எந்த வயதில் ஆரம்பிப்பது, எங்கே பயிற்சி கொடுப்பது, யார் பயிற்சி கொடுப்பார்கள்?” என்று அடுத்த செட் கேள்விகள் வந்துவிழும்.
ரேஸ் ஆர்வலர்களை, ரேஸ் வீரர்களாக வார்த்தெடுக்க `ரேஸ் அகாடமி’ என்ற பெயரில் ஏராளமான பயிற்சிப் பள்ளிகள் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. கார் மற்றும் பைக் கம்பெனிகள்கூட ரேஸ் ஆர்வலர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு ஊக்கப்படுத்தி வருகின்றன.

இந்த வகையில் முக்கியமானது... ஹோண்டா டூ வீலர் - ஆண்டுதோறும் நடத்தும் ஹோண்டா நேஷனல் டேலன்ட் ஹன்ட். முதல் பாராவில் சொன்ன சம்பவம், இந்த நிகழ்வில் நடைபெற்ற சம்பவம்தான்.
``ஹோண்டா நேஷனல் டேலன்ட் ஹன்ட், சென்னையை மையமாகக் கொண்டு இயங்குகிறது என்பதால்... தமிழ்நாட்டில் இருக்கும் தேர்ச்சி பெற்ற ரேஸ் வீரர்களின் வழிகாட்டுதல் மாணவர்களுக்குக் கிடைக்கிறது. சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் ரேஸ் ட்ராக், மாணவர்களுக்கு மேலும் சௌகரியமாக அமையும் என்பது கூடுதல் வசதி.''
`ஹோண்டா டேலன்ட் ஹன்ட்’ குறித்து ஒரு முன்னோட்டம் கொடுத்தார் ஹோண்டா ரேஸிங்கின் உயர் அதிகாரியான பிரபு நாகராஜ். அவரை நாம் சந்தித்த இடம்தான் `கார்ட் அட்டாக்.’
கடந்த மாதம் 2021-ம் ஆண்டுக்கான ஹோண்டா டேலன்ட் ஹன்ட், இங்கேதான் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து 9 வயது முதல் 17 வயதுவரை உள்ள 14 போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சுட்டிப் பெண்ணும் அடக்கம்.
ரேஸுக்கு, அதிலும் முக்கியமாக பைக் ரேஸுக்கு முக்கியத் தகுதி... ஃபிசிக்கல் ஃபிட்னஸ் மற்றும் ஸ்டெமினா. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்த இவர்களுக்கு, முதலில் ஃபிசிக்கல் ஃபிட்னஸ் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து அவர்களின் ரேஸ் திறமை எப்படி இருக்கிறது என்று சோதிக்கப்பட்டது. கால் எட்டச் சிரமப்படும் சிறுவர்கள்கூட தங்கள் பைக் ஓட்டும் திறமையை அங்கே காட்டினார்கள்.
அதன் பிறகு ரேஸ் என்பதை அவர்கள் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்களா... அல்லது புரொஃபஷனாகப் பார்க்கிறார்களா என்று நடுவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஹோண்டா தேர்வு செய்யும் வெற்றியாளர்கள், அடுத்த கட்டப் போட்டிக்கு முன்னேறிச் செல்வார்கள்.அப்போது பந்தய மைதானத்தில் ரேஸ் ஓட்டுவதற்குப் பயிற்சிஅளிக்கப்பட்டு, தேர்வும் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறும் வெற்றியாளர்களை ஹோண்டா India Talent Cup CBR150R-2021 போட்டியில் கலந்து கொள்ள ஹோண்டா வாய்ப்பு வழங்கும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் பெற்றோர்களுடன் பேசும்பொழுது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
சாலைகளில் பைக் ஓட்டுவதை விடவும், ரேஸ் மைதானத்தில் பைக் ஓட்டுவது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் அது.