கார்ஸ்
Published:Updated:

150 கிமீ ரேஞ்ச், 4 மணி நேர சார்ஜிங், 90 கிமீ டாப் ஸ்பீடு!

HOP OXO Electric Bike
பிரீமியம் ஸ்டோரி
News
HOP OXO Electric Bike

நேக்கட் டிசைனில் கலக்கும் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்!

150 கிமீ ரேஞ்ச், 4 மணி நேர சார்ஜிங்,  90 கிமீ டாப் ஸ்பீடு!

நம் ஊரில் தமிழ் பேசத் தெரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவுக்கு, எலெக்ட்ரிக் பைக்குகள் இல்லை. அதாவது, ஸ்கூட்டர்கள் இருக்கும் அளவுக்கு எலெக்ட்ரிக் பைக்குகள் மிக மிகக் குறைவு என்பதை இப்படிச் சொல்கிறேன். சாலைகளில் எங்காவது பச்சை நிற நம்பர் ப்ளேட்டில் ரிவோல்ட் பைக்குகளைப் பார்த்தால் உண்டு. ஓபென் ரோர், டார்க் க்ரேட்டோஸ் பைக்குகள், வட இந்தியாவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் போட்டியாக ஆக்ஸோ (OXO) என்றொரு எலெக்ட்ரிக் பைக்கை லாஞ்ச் செய்திருக்கிறது ஹாப் (HOP) என்கிற நிறுவனம். இதுவும் வடஇந்திய நிறுவனம்தான். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஹாப் எனும் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்–அப் நிறுவனம், ஆக்ஸோ எனும் அல்ட்ரா மாடர்ன் எலெக்ட்ரிக் பைக் ஒன்றை லாஞ்ச் செய்திருக்கிறது. ஏற்கெனவே இந்த ஹாப்பிடம், LEO, LYF என்று இரண்டு ஸ்கூட்டர்கள் உண்டு. டெல்லியில் நடந்த இதன் லாஞ்ச் நிகழ்ச்சிக்குச் சென்று, ஒரு ஃபர்ஸ்ட் லுக்!

டிசைன்

ஒரு நேக்கட் பைக் மாதிரியேதான் இருக்கிறது ஆக்ஸோ. ஃபேரிங் எதுவும் இல்லாமல், முக்கோண வடிவ ஹெட்லைட், ஷார்ட் ஆன ஹேண்டில் பார், நல்ல குறுகலான… பல்க்கியான (பெட்ரோல் டேங்க்) பேட்டரி டேங்க்… என்று மில்லினியல் டிசைனுக்கு ஏற்றமாதிரி இருக்கிறது ஆக்ஸோ. எனக்கு யமஹா FZ பைக்கின் லேட்டஸ்ட் வெர்ஷனை இன்ஸ்பயர் செய்து இதை உருவாக்கியதுபோலவே இருந்தது. ஆனால் ஹெட்லைட் முழுக்க ஹாலோஜன் பல்பில் ஒளிர்ந்தது. டே டைம் ரன்னிங் லைட்கள் மட்டும் எல்இடியில் இருந்தன.

இதன் சீட், சிங்கிள் வெர்ஷனாக இருந்தது. ஸ்ப்ளிட் சீட் இல்லை. ஆனால், இந்த சிங்கிள் சீட்தான் கம்யூட்டிங் செய்வதற்கு ஏற்றபடி இருக்கும். குடும்பஸ்தர்களுக்கு இது பக்காவாக இருக்கும். இதில் உட்கார்ந்து பார்த்தேன். இதன் நல்ல ரைடிங் Posture கொண்ட பொசிஷன் இளசுகளுக்கும் பிடிக்கும் வகையில் இருந்தது. எனக்கு ரிலாக்ஸ்டு பொசிஷன் கிடைத்தது. இதன் சீட் உயரம் 780 மிமீ என்பது மிகச் சரியான உயரம்.

அடுத்து, இதில் மிகவும் பிடித்தது – இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ். 180 மிமீ என்பது, ஸ்பீடு பிரேக்கர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இருக்காது. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ் கொடுத்திருந்தார்கள். அலாய் வீல்கள் 18 இன்ச் அளவு என்பது ரைடிங்குக்குப் பக்காவாக இருக்கும். பின் பக்கம் 17 இன்ச் இருந்தது.

சஸ்பென்ஷனைப் பொருத்தவரை முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் செட்அப்பும், பின் பக்கம் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் லோடட் டூயல் ஷாக் அப்ஸார்பர்கள் இருந்தன. ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக டெயில் லைட் இருந்தது. இதன் எடை சுமார் 140 கிலோவுக்குள் என்பதால், இதன் ரைடு அண்ட் ஹேண்ட்லிங் பக்காவாக இருக்கும்.

வழக்கமான எலெக்ட்ரிக் பைக்குகள் போல் இல்லாமல் பெல்ட்டோ, செயின் டிரைவோ இல்லாமல்… ஒரு மாதிரி கவர்டு செய்யப்பட்ட ரியர் ஹப் எலெக்ட்ரிக் மோட்டாரைப் பின்பக்கம் பொருத்தியிருப்பது நன்றாகவே இருக்கிறது.

வசதிகள்

இதன் சாவியே, கார்களின் கீலெஸ் என்ட்ரி சாவி மாதிரி நல்ல ஸ்டைலாக இருந்தது. இதன் சிங்கிள் சாஃப்ட் டச் பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்தால், Ready to Hop என்று வருகிறது. அதாவது, பைக் ஐடிலிங்கில் இருக்கிறது என்று அர்த்தம். ஆன் ஆனதுமே இதன் 5 இன்ச் ஸ்மார்ட் MID ஸ்க்ரீன், LCD-ல் டிஸ்ப்ளே ஆகிறது. இதுதான் இதன் சென்டர் கன்சோல் என்றே சொல்லலாம். இதில் 30 வகையான இன்ஃபர்மேஷன்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்க்ரீனும் மழை மற்றும் வெயில், தூசு போன்றவற்றைத் தாங்குவதற்கு ஏற்ப IP67 ரேட்டிங்கில் டெஸ்ட் செய்யப்பட்டதாகச் சொல்கிறது ஹாப். இதில் ரிவர்ஸ் மோடும் இருந்தது. ஆக்ஸிலரேட்டரைத் திருகி, 5 கிமீ வரை பின் பக்கம் ரிவர்ஸ் எடுத்துக் கொள்ளலாம். மேடுகளில் பைக்கை எடுக்க இது ஈஸியாக இருக்கும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும், சைடு ஸ்டாண்ட் சென்சாரும் இருந்தன.

இதில் 4G கனெக்டட் ஆப் வசதியும் கொடுத்திருந்தார்கள். HOP Nuron எனும் டிஜிட்டல் இன்டலிஜென்ட் ப்ளாட்ஃபார்மை அறிமுகம் செய்திருக்கிறது ஹாப். புளூடூத் வசதி ஸ்டாண்டர்டாக உண்டு.

எலெக்ட்ரிக் பைக்குக்குத் தேவையான க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொடுத்திருக்கலாம். கிராஜுவல் ரைடிங்குக்கும், எக்ஸ்ட்ரா ரேஞ்சுக்கும் இது பயன்படும். மற்றபடி வசதிகளைக் கிள்ளியும் கொடுக்கவில்லை; அள்ளியும் கொடுக்கவில்லை ஹாப். இன்றைய தேதிக்கு என்ன தேவையோ… எல்லாமே இருக்கின்றன.

பேட்டரி, மோட்டார், ரேஞ்ச் மற்றும் மோடுகள்

இதில் IP67 ரேட்டிங் கொண்ட கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். இன்ஜின் இருக்க வேண்டிய இடத்தில் இது பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. மக்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்க, இந்த பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை அதீதப் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களை வைத்தே இதை டெஸ்ட் செய்திருப்பதாகச் சொன்னது ஹாப். மழை நேரங்களில் பயப்படத் தேவையில்லாத அளவுக்கு, இதன் BMS (Battery Management System)–ல் கடுமையான வேலை பார்த்திருக்கிறார்களாம்.

வழக்கமான NMC (Nickel Manganese Cobalt) கொண்ட இந்த பேட்டரியின் பவர் 3.75kWh. இது ஒரு கம்யூட்டர் பைக்குக்கு ஏற்ற பேட்டரி பேக்தான். இதிலுள்ள BLDC எலெக்ட்ரிக் மோட்டார், சுமார் 8.4bhp பவரைத் தருகிறது. இது நம் 110 சிசி கம்யூட்டர் பைக்குக்கு இணையான பவர்தான். இதுவே பேஸ் வேரியன்ட்டில் இன்னும் குறையும். சுமார் 6.9 bhpதான் வரும். இதன் பே லோடு சுமார் 250 முதல் 300 கிலோ வரை என்கிறது ஹாப்.

மொத்தம் இதில் 3 ரைடிங் மோடுகள் உண்டு. இதன் டாப் ஸ்பீடு 90 கிமீ என்கிறது ஹாப். எக்கோ மோடில் 45 கிமீ; பவர் மோடில் 65 கிமீ வரை போகலாம். இதன் ரேஞ்ச் 150 கிமீ வரை என்று சொல்கிறது ஹாப். இது எக்கோ மோடுக்கான ரேஞ்ச்தான். பவர் மற்றும் ஸ்போர்ட்டில் குறையலாம். ஓட்டிப் பார்த்தால் இது தெரியும்.

பொதுவாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மேம்பாலங்கள், மலையேற்றம் போன்றவற்றில் பயணிப்பது டர் அடிக்கும். ஆனால் இதில் 18 டிகிரி வரை ஏற்றங்களில் அசால்ட் செய்யலாம் என்கிறது ஹாப். இதில் வழக்கமான ரீ–ஜென் பிரேக்கிங் அம்சமும் உண்டு. பிரேக் பிடிக்கப் பிடிக்க… பேட்டரியில் பவர் சேமிக்கப்பட்டு ரேஞ்ச் எக்ஸ்ட்ரா கிடைக்கும்.

இதன் சார்ஜிங் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், 16ஆம்ப் ப்ளக் பாயின்ட்டில் சார்ஜ் செய்து கொள்ளலாம். 4 மணி நேரத்தில் 0–80% சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். 100% சார்ஜுக்கு வெறும் 5 மணி நேரம் ஆகும் என்கிறது ஹாப். 850W கொண்ட ஸ்மார்ட் சார்ஜர் வாங்கிக் கொள்ளலாம்.

வேரியன்ட் மற்றும் விலை

ஆக்ஸோ, ஆக்ஸோ எக்ஸ் என 2 வேரியன்ட்களில் வருகிறது இந்த பைக். இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 1.25 லட்சம் முதல் 1.40 லட்சம் வரை அறிவித்திருக்கிறது ஹாப். பைக்குக்கு 3 ஆண்டுகளும், பேட்டரிக்கு 4 ஆண்டுகள் வரையும் வாரன்ட்டி கொடுத்திருக்கிறது ஹாப். இதில் Oxo X வேரியன்ட்டுக்கு அன்லிமிட்டெட் கிமீ/வருடம் வாரன்ட்டி தருவது செம! இந்த நிறுவனம் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்தால்… இதன் மவுசைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளலாம்.

‘‘தமிழ்நாட்டுக்குச் சீக்கிரம் வரும் ஹாப் ஆக்ஸோ!’’

ஹாப், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம். இதன் R&D-யில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சீனியர் வைஸ் பிரசிடென்ட்டாகப் பணிபுகிறார் என்பது பெருமைதானே! ‘‘ஆக்ஸோ தமிழ்நாட்டுக்கு எப்போ வரும்?’’ என்று அவரிடம் கேட்டோம்.

‘‘இதுவரை ஸ்கூட்டர்கள்தான் தயாரித்து வந்தோம். இப்போது ஆக்ஸோ எனும் பைக் மூலம் தடம் பதித்துள்ளோம். BMS-ல் கடுமையான சோதனைகளை இதற்குச் செய்துள்ளோம். மோட்டாரிலும், ஓட்டுதலிலும் பல பரிசோதனைகள் செய்து இதைக் கொண்டு வந்திருக்கிறோம். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா இந்த மாநிலங்களில் சீக்கிரமாக வந்து விடுவோம். மிக விரைவில் ஹாப் தயாரிப்புகள், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கிடைக்கும்படி களமிறங்கி விடுவோம்!’’ என்றார்.

Krishna Kumar / Sr.Vice President - R&D / HOP
Krishna Kumar / Sr.Vice President - R&D / HOP
150 கிமீ ரேஞ்ச், 4 மணி நேர சார்ஜிங்,  90 கிமீ டாப் ஸ்பீடு!
150 கிமீ ரேஞ்ச், 4 மணி நேர சார்ஜிங்,  90 கிமீ டாப் ஸ்பீடு!