Published:Updated:

உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ரைடிங் கியர்ஸ்: பூட்ஸ், க்ளோவ்ஸ்

பெரும்பாலான ஐரோப்பியப் பிரதேசங்கள் கடுங்குளிராக இருக்கும் என்பதால், கை விரல்கள் விறைத்துப் போகாமல் இருக்க, அங்கே விற்பனையாகும் பெரும்பாலான பைக்குகள் ஹீட்டட் கிரிப் ஆப்ஷனுடன் வரும். நம்மூரில் 6 லட்ச ரூபாய்க்கு மேலே சென்றால்தான் இதுபோன்ற க்ளோவ்ஸ் கிடைக்கும். ‘short cuff’, ‘semi gauntlet’, ‘full gauntlet’ என்று க்ளோவ்ஸில் வெவ்வேறு வகைகள் உள்ளதால், பூட்ஸைவிட க்ளோவ்ஸைத் தேர்ந்தெடுப்பதுதான் சவாலானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மணிக்கட்டு வரை மட்டுமே இருக்கும் Short cuff வகை க்ளோவ்ஸ்களை, கிரிப்பாக ஹாண்டில் பாரைப் பிடித்து சாகசம் செய்ய ஸ்டன்ட்டர்கள் பயன்படுத்துவார்கள். துணியால் செய்யப்பட்டிருக்கும் இந்த வகை க்ளோவ்ஸ் கொண்டு, டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்களைக்கூட ஈஸியாக இயக்க முடியும். Short cuff வகை க்ளோவ்ஸ்கள் 1,400 முதல் Scimitar-லும், 1,800 முதல் BBG-ல் கிடைக்கின்றன.

உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

‘semi gauntlet’ க்ளோவ்ஸ்கள், மணிக்கட்டைத் தாண்டி சிறிது தூரம் நீண்டிருப்பதால், டூரிங்குக்கு ஏற்ற வகையில் ரைடிங் ஜாக்கெட்டுக்குள் சென்று ஃபிட்டாக அடைக்கலம் ஆகிவிடும். ‘semi gauntlet’ க்ளோவ்ஸ் 3,000 முதல் BBG - யிலும், 3,500 முதல் Aspida-விலும் கிடைக்கின்றன. நினைவிருக்கட்டும்; இந்த வகை க்ளோவ்ஸ்கள் பெரும்பாலும் லெதரால் ஆனது என்பதால், அதிக நேரம் மழையில் நனைந்தால் வீணாகிவிடும்.

முன்னங்கை பாதிக்கு மேல் மூடிக் கொள்ளக் கூடிய ‘Full Gauntlet’ க்ளோவ்ஸ்கள் பெரும்பாலும் ரேஸிங்கிற்குப் பயன்படும். அதேசமயம், லடாக் போன்ற மைனஸ் டிகிரி குளிரில் அணிந்து கொள்வதற்காக வாட்டர் ப்ரூஃப் க்ளோவ்ஸும் ‘Full Gauntlet’ டிசைனில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஸிங் வகை க்ளோவ்ஸ்கள் BBG-யில் ரூபாய் 4,500-க்கும், வாட்டர் ப்ரூப் வகை க்ளோவ்ஸ்கள் Aspida-வில் ரூபாய் 3,000-க்கும் கிடைக்கின்றன.

எல்லாம் சரி பாஸ், 400 ரூபாய்க்கு pro biker க்ளோவ்ஸ் கிடைக்குதே... என்றால், அது பாதுகாப்பானது இல்லை என்று அனுபவப்பூர்வமாகவே என்னால் சொல்ல முடியும்.

உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பிராண்டட் க்ளோவ்ஸில் ‘Knuckles’ எனப்படும் கை முட்டிகளுக்குள் மேல், பாதுகாப்புக் கவசம் வரும். அதேபோல விபத்தின்போது கையைத் தரையில் ஊன்றினால், துணியால் செய்யப்பட்டிருக்கும் விலை மலிவான க்ளோவ்ஸ் பிய்ந்து கையைச் சிராய்த்து விடும். ஆனால், லெதர் க்ளோவ்ஸ்கள் உள்ளங்கையை முழுமையாகப் பாதுகாக்கும்.

கைகளை போன்று கால் பாதங்களும் முக்கியம் அல்லவா? .

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் விக்கி. நண்பர்களுடன் சேர்ந்து ஒரு முறை அவசரமாக சினிமாவுக்குச் செல்கையில், தனியார் பேருந்தை ஓவர்டேக் செய்தார். அப்போது, திடீரென ரோட்டில் சென்டர் மீடியன் வந்துள்ளது. கேப்பில் பூந்து செல்லலாம் என நினைத்த விக்கிக்குப் போதிய இடைவெளி கிடைக்கவில்லை. பஸ் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக கடைசியில் டிவைடர் மீது வலது பாதம் மோத வேண்டியதாயிற்று. இன்று விக்கிக்கு வலது கால் பாத சுண்டு விரல் இல்லை.

`நாங்கள்தான் டூரிங் செல்லும்போது ஷூ அணிந்திருப்போமே’ எனச் சொல்பவர்களுக்கு : விபத்தின்போது விக்கியும் ஷூ அணிந்திருந்தார். கேன்வாஸ் ஷூ வகைகள் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, மெல்லிய உட்பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் சிறிய அளவு சேதத்தைக்கூடத் தாங்க முடியாது. இதற்கான தீர்வு தான் ரைடிங் பூட்ஸ்.

ரைடிங் பூட்ஸ்களால் மட்டுமே கணுக்கால், குதிகால், கால்விரல்கள் மற்றும் தாடை என முழுப் பாதத்தையும் சுற்றி கவசம்போல் பாதுகாக்க முடியும். டூரிங், ட்ராக் ரேஸிங் மற்றும் ஸ்டன்ட்டிங் வெவ்வேறு பயன்பாட்டுக்கு ஏற்ப கிடைக்கின்றன. இதில் உங்களுக்கான பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

உங்கள் பூட்ஸைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மழைக்காலத்தில் ரைடிங் செல்லும்போது, பைக்கர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று, காலுக்குள் தண்ணீர் புகுந்து சாக்ஸ் நனைந்து கால் ஊறிப் போவது. இதே லடாக் போன்ற பனிப் பிரேதசங்களில் மைனஸ் டிகிரியில் செல்லும் ஆற்றுக்குக் குறுக்கே பைக்கை ஓட்டியாக வேண்டும். இதற்காக டூரிங் செல்பவர்கள் வாட்டர் ப்ரூஃப் ரைடிங் பூட்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புல்லட்டுக்கு மேட்ச்சிங்காக நிறைய லெதர் பூட்ஸ்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால், அவை லேசான தூறலுக்கே தண்ணீரை உள்ளே கடத்திவிடும். அதனால், முழங்காலுக்கு மேலே வரக்கூடிய ‘High Ankle’ வகை ரைடிங் பூட்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Orazo பிராண்டில் 3,800 முதல் 5,500 வரை RE-க்கு ஏற்ற வகையில் லெதர் மாடலில் கிடைக்கும். BMW, கவாஸாகி என சூப்பர் பைக்கில் டூரிங் செய்பவர்களுக்கு உயர்தர மெட்டீரியலில் தயாரான Forma பூட்ஸ் சரியானதாக இருக்கும். ரூ.15,000 - 20,000 என டிசைனைப் பொருத்து விலை மாறும்.

ரேஸிங்குக்கு ஏற்ற ‘Calf Boots’ BBG-ல் 9,000 முதல் கிடைக்கும். ஆனால், BBG-ன் பூட்ஸ்களுக்கு CE தரச்சான்றிதழ் கிடையாது. 1,000 ருபாய் அதிகமாகச் செலவழித்தால், CE தரச்சான்றிதழ் பெற்ற Ryo ரேஸிங் பூட்ஸ்கள் வாங்கலாம்.

பாதுகாப்பு விதிகளோடு, பாதுகாப்புச் சாதனங்களும் முக்கியம்!