Published:Updated:

ஹங்கேரி நாட்டு கீவே... இந்தியாவுக்கு வா வா!

கீவே
பிரீமியம் ஸ்டோரி
கீவே

அறிமுகம்: டூவீலர்கள்

ஹங்கேரி நாட்டு கீவே... இந்தியாவுக்கு வா வா!

அறிமுகம்: டூவீலர்கள்

Published:Updated:
கீவே
பிரீமியம் ஸ்டோரி
கீவே

எல்லா நிறுவனங்களுமே கிளை நிறுவனங்களை உருவாக்கி, மார்க்கெட்டில் தனக்கான போட்டியாளர்களாகவும் தாங்களே இருக்க வேண்டும் என்கிற கோட்பாட்டினை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 1999-ல் ஹங்கேரியில் தொடங்கப்பட்ட கீவே நிறுவனம், பெனெல்லியின் இன்னுமொரு சிஸ்டர் கன்சர்ன் நிறுவனம். அப்படித்தான் 98 நாடுகளில் அகன்று விரிந்திருக்கும் கீவே, இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

இந்தியன் மார்க்கெட்டில் அவர்கள் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் 8 மாடல்களில், 3 மாடல்களை மட்டும் முதல் நாள் வெளியிட்டது கீவே நிறுவனம். இந்த மாடல்களுடன் 125 சிசி, 250சிசியில் இரண்டு ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்குகளையும் வெளியிட இருக்கிறார்கள். 300சிசியில் மூன்றுவிதமான பைக் மாடல்களிலும் ரகத்துக்கு ஒன்றென வெளியாகவிருக்கிறது. நேக்கட், க்ரூஸர், சூப்பர் ஸ்போர்ட்ஸ் என மூன்றிலும் 300சிசி மாடல்கள் விரைவில் வர இருக்கின்றன என உத்தரவாதம் அளிக்கிறது கீவே நிறுவனம். அதேபோல ஏத்தர், ஓலா நிறுவனங்களுக்குப் போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். கீவே முதலில் லாஞ்ச் செய்த அந்த முத்தான 3 மாடல்களின் வாக்-அரவுண்டுக்காக மும்பை சென்றிருந்தேன்.

Sixties 300i
Sixties 300i

சிக்ஸ்டீஸுக்குப் போட்டி இனிதான் வரணும்!

‘அந்தக் காலம் அது அது அது' என நம்மை டக்கென்று பிளாக் & ஒயிட் காலத்து ரெட்ரோ ஃபீலுக்குக் கொண்டு சென்றுவிடுகிறது கீவேயின் மேக்ஸி ஸ்கூட்டரான Sixties 300i. நீங்கள் 90’ஸ் கிட்ஸ் என்றால், உங்களுக்கு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் நினைவிருக்கும். பிடிக்கவும் செய்யும். அந்த லாம்ப்ரெட்டா ரெட்ரோ வடிவத்தை இன்ஸ்பயர் செய்துதான் இதை வடிவமைத்திருக்கிறது கீவே.

பழசிலும் புதுசாக அங்கங்கே பல மாடர்ன் அம்சங்கள் தெரிகின்றன. LED லைட்ஸ் இருந்தால்தான் இப்போதெல்லாம் மரியாதை. Sixties 300i-ல் முழுக்க எல்இடி மயம்.LCD டிஸ்ப்ளேவுடன் அனலாக் கன்சோல், Sixties என எல்லாப் பக்கங்களிலும் தெரியும் சிவப்பு நிற ஸ்டிக்கர், கார்களைப்போல் அந்த டூயல் டோன் சிவப்பு/கறுப்பு கிரில், Victoria என்கிற வார்த்தை, பைக்கின் முன்பக்கத்தில் இருக்கும் லோகோ என ரெட்ரோ மாடர்ன் ஸ்டைலில் கலக்குகிறது சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டர்.

பின் பக்கத்தில் டெயில் லைட் டிசைன், பாதி இடத்தை எடுத்துக் கொண்டாலும், பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. ஸ்ப்ளிட் சீட் செட்டப்புடன் ஒருக்கும் சிக்ஸ்டீஸ் 300 i-ல் ரைடர் சீட்டை மட்டுமே திறக்க முடியும். 10 லிட்டர் டேங்க் இருந்தாலும், கால் வைக்கும் இடத்தில் பெட்ரோல் டேங்க்கின் முகப்பு இருப்பதால், ஏனோ அது பார்ப்பதற்கு லுக்காக இல்லை. ஆனால், வழக்கமான ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல், இதன் மூடி பின்பக்கம் இல்லை; ஃப்ளோர் போர்டில் கொடுத்திருக்கிறார்கள்.

278.2 சிசி, 4 வால்வு கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இதில். 18.7Hp@6500rpm பவரும், 22Nm@6000rpm டார்க்கும் தரும் இது, இந்த செக்மென்ட்டின் பவர்ஃபுல் ஸ்கூட்டராக இருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இது - கிரே லைட் ப்ளூ, ஒயிட் என மூன்று நிறங்களில் வெளியாகிறது. சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டரில், 12 இன்ச் டயர்கள்தான் இருக்கின்றன. ஒரு காஸ்ட்லி ஸ்கூட்டருக்கு ஒரு 13 இன்ச்சாவது இருந்திருக்கலாம். 1,390 மிமீ வீல்பேஸும், 140 மிமீ கி.கிளியரன்ஸும், 146 கிலோ எடையும் கொண்டிருக்கும் சிக்ஸ்டீஸ் 300i, ஹேண்ட்லிங்குக்குப் பக்காவாக இருக்கும்.

டூயல் சேனல் ஏபிஎஸ், 230/220மிமீ டிஸ்க்குடன் வரும் சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டருக்கு இந்த மில்லியனில் இனிமேல்தான் போட்டியாளர் உருவாக வேண்டும்.

கீவே கே-லைட் 250V
கீவே கே-லைட் 250V

ஹார்லி மாதிரியே இருக்கே... கீவே கே-லைட்!

கீவே வெளியிட்ட மூன்று மாடல்களில், இரு மாடல்கள் மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால், இன்னொரு மாடலான க்ரூஸரின் மீதுதான் எல்லோருடைய கண்களும் இருந்தன. `என்னடா இது ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை நிறுத்தி வெச்சிருக்காங்க’ என்று நினைத்தால்... அட, அதுதான் கீவேயின் க்ரூஸர் பைக்கான கே-லைட் 250V. உட்கார்ந்து பார்த்தேன்; ஹார்லி மாதிரியே உயரம் குறைவானவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இதன் சீட் உயரம் 715 மிமீதான். சூப்பர்ல! `அப்போ டபுள் எக்ஸாஸ்ட் இருக்கணுமே’ என்று தேடினேன். பைக்கின் வலதுபுறம், இரட்டைக் குழல் துப்பாக்கிபோல நீண்டிருந்தது டபுள் எக்ஸாஸ்ட். இந்த செக்மென்ட்டில் அதிகமான டேங்க் கொள்ளளவு இந்த கே-லைட்டில்தான் (20 லிட்டர்)!

அதேபோல், V ட்வின் இன்ஜின் செட்-அப் கொண்ட ஒரே க்ரூஸர், இனி இந்தியாவில் இதுதான். அதுவும் பட்ஜெட் விலையில். கீவே மார்தட்டுவது உண்மைதான். ஆனால் ஏர்கூல்டுதான். அதேபோல் 5 ஸ்பீடுதான். யெஸ்டி ரோட்ஸ்டர் எல்லாம் 6 ஸ்பீடு. 18.7Hp@8500rpm பவரும், 19Nm@5500rpm டார்க்கும் இதில் கிடைக்கிறது. இதிலுள்ளது பெல்ட் டிரைவ் மாடல் என்பதாலேயே இதன் ஸ்மூத்னெஸ் பற்றிச் சந்தேகப்படத் தேவையில்லை. இதுவும் செக்மென்ட் ஃபர்ஸ்ட்.

LED ஹெட்லைட்ஸ், வட்டமான LED DRL, ஹேண்டில் பாரிலேயே பொருத்தப்பட்டிருக்கும் இண்டிகேட்டர்கள், டேங்க்கிலேயே மவுண்ட் செய்யப்பட்டிருக்கும் அனலாக்/எல்சிடி டிஸ்ப்ளே, 16 இன்ச் வீல்கள் என அழகாக இருக்கிறது கே-லைட். இதன் எடைதான் 179 கிலோ என்பதால், கையாளக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். கி.கிளியரன்ஸ் 160 மிமீ என்பதும் ஓகே. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதால், கவலை இல்லை. ரியரில் ட்வின் ஷாக் அப்ஸார்பர்கள் இருக்கின்றன.

அவென்ஜர் 220, மீட்டியார், யெஸ்டி ரோட்ஸ்ட்டர் போன்ற க்ரூஸர்களுக்குக் கடும் போட்டி இருக்கிறது.

வியஸ்ட்
வியஸ்ட்

பெஸ்ட் மேக்ஸி ஸ்கூட்டர் வியஸ்ட்!

மூன்று வண்டிகளின் கவர் பிரிக்கும் வரைதான் எல்லோரின் கண்களும் க்ரூஸர் பக்கம் இருந்தது. வியஸ்ட்டின் கவரைப் பிரித்த பின்பு, ஒட்டுமொத்தமாக அரங்கில் இருந்த எல்லோருமே இந்த ஸ்கூட்டரைச் சுற்றித்தான் நின்று கொண்டிருந்தனர். சற்றே வேற்றுக்கிரகவாசி லுக்கில் இருந்தாலும், ஒரு பக்கா மேக்ஸி ஸ்கூட்டர் என்று பார்த்தவுடன் சொல்ல முடிகிறது வியஸ்ட் (Vieste) ஸ்கூட்டரை.

கார்களைப்போல், டிஜிட்டல் கீ... அதாவது கீ-லெஸ் என்ட்ரி வசதியிலேயே ஆரம்பிக்கிறது வியஸ்ட்டின் அட்டகாசம். ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ், இண்டிகேட்டர் என எல்லாமே எல்இடி மயம். முன் பக்க வைஸர் சூப்பர். சீட்டில் உட்கார்ந்தால் பக்காவாக இருக்கிறது இதன் ரைடிங் பொசிஷன். ஏரோ டைனமிக் அற்புதம். இதன் உயரம் 770 மிமீதான். டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் இருந்தது. கடிகாரமும் கொடுத்திருந்தார்கள். சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே (278.2சிசி, 18.7bhp, 22Nm) இன்ஜின் சமாச்சாரங்கள்தான் இதிலும். இதன் டிரைவ் ட்ரெயினில்தான் கலக்குகிறது வியஸ்ட். இதிலுள்ள கான்ட்டினென்ட்டல் பெல்ட் டிரைவ் சிஸ்டம், 12 லிட்டர் டேங்க், டூயல் டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோப்பிக் ஷாக் அப்ஸார்பர்கள் எனக் கலக்குகிறது. மேலும், மேக்ஸி ஸ்கூட்டரின் ஓட்டுதலுக்கு அதன் வீல்பேஸ்தான் முக்கியம். இது, 1,390 மிமீ. இதன் எடையும் 147 கிலோதான். பக்காவாக இருக்கும் இதன் ஹேண்ட்லிங். கி.கிளியரன்ஸ்தான் ரொம்பக் கம்மி (135 மிமீ).

இப்போதைக்கு இந்தியாவில் முக்கியமான மேக்ஸி ஸ்கூட்டர்கள் என்றால், சுஸூகி பர்க்மேன், ஏப்ரிலியா SXR போன்ற ஸ்கூட்டர்கள்தான். ஆனால், இவற்றின் பவர் மேக்ஸி இல்லை; மினிமம்தான். அதையும் தாண்டி பிஎம்டபிள்யூ C400 GT இருக்கு; ஆனால் விலை... ரொம்..ப மேக்ஸிமம். அந்த வகையில் 2.50 லட்சம் விலையில் இது வந்தால்... மேக்ஸி ஸ்கூட்டர்களின் சாய்ஸில் பெஸ்ட் ஆக இருக்கும் வியஸ்ட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism