Published:Updated:

Komaki Electric Cruiser: ஒரே சார்ஜில் 250 கிமீ போகும்… பெரிய எலெக்ட்ரிக் க்ரூஸர் வருது!

Komaki Ranger Electric Cruiser
News
Komaki Ranger Electric Cruiser

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஆஃப்ரோடும் பண்ணிக்கலாம்; ‘சென்னைக்கு மிக அருகில்’ மினி டூரும் அடிச்சுக்கலாம்! #Komaki Ranger Electric Cruiser

‘கோமாக்கி…’ - பேரைக் கேட்டாலே கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கும்; ஆனால் ஆட்டோமொபைல் உலகத்தில் எல்லோரும் அதிர்வதுபோல் ஒரு காரியத்தைச் செய்ய இருக்கிறது கோமாக்கி.

இப்போதைக்கு எலெக்ட்ரிக்கில் ஸ்கூட்டர்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். காரணம், ஸ்கூட்டர்கள்தான் தயாரிப்பிலும் அதிகம். ஹீரோ, ஏத்தர், ஓலா, ஒக்கினாவா, ஆம்பியர் என்று ஏகப்பட்ட ஸ்கூட்டர் நிறுவனங்கள் உண்டு. ஆனால், இந்தியாவில் ரிவோல்ட், ஒடிஸி, கபிரா என்று சொல்லிக் கொள்ளும்படி எலெக்ட்ரிக் பைக்குகளின் சாம்ராஜ்யம் பெரிதாக இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க கோமாக்கி எடுத்த முடிவுதான், ‘ரேஞ்சர்’ எனும் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக்.

பெரும்பாலானவர்களுக்கு கோமாக்கி தெரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால் எலெக்ட்ரிக் பைக் வைத்திருப்பவர்களுக்கு கோமாக்கி கொஞ்சம் பரிச்சயமாக இருக்கலாம். ஆட்டோமொபைல் உலகில் கோமாக்கி ஒரு வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம். இப்போது கோமாக்கி, ஸ்கூட்டரில் இருந்து பைக்குக்கு அப்கிரேட் ஆக இருக்கிறது. இந்தியாவில் இந்த க்ரூஸர் பைக்கின் R&D-க்காக மட்டுமே சுமார் 1 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது கோமாக்கி.

Komaki Ranger Electric Cruiser
Komaki Ranger Electric Cruiser

க்ரூஸர் பைக் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். IC இன்ஜின் பைக்குகளில் ஹார்லி டேவிட்சன்தான் கொஞ்சம் காஸ்ட்லியான க்ரூஸர். ஓட்டுவதற்கு சொகுசாகவும், கால் வைக்கும் ஃபுட் பெக்குகள் முன்னோக்கி வைக்கப்பட்டு ஹாயாக க்ரூஸ் செய்து போகவும் பயன்படும்படி இருப்பவைதான் க்ரூஸர் பைக்குகள். ராயல் என்ஃபீல்டு புல்லட், மீட்டியார், ஹோண்டா ஹைனெஸ், ஜாவா என்று சொல்லிக் கொள்ளும்படி சில க்ரூஸர்கள் இருந்தாலும், மிடில் க்ளாஸ் மக்களுக்கு பஜாஜின் அவென்ஜர்தான் கொஞ்சம் கட்டுப்படியாகக் கூடிய க்ரூஸர் பைக். இப்போது, எலெக்ட்ரிக்கில் க்ரூஸர் என்பதற்கே கோமாக்கிக்கு நாம் கைக்குலுக்கியே ஆக வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருப்பதே இதன் பேட்டரி பேக்கும், இதன் ரேஞ்சும்தான். இதன் பெரிய 4 kW பேட்டரி, ஒரு சிங்கிள் சார்ஜிங்கில் சுமார் 250 கிமீ வரை போகும் என்று சொல்லியிருக்கிறது கோமாக்கி. இப்போதைக்கு இந்தளவு பெரிய பேட்டரி வேறு எந்த பைக்கிலும் இல்லை; ரேஞ்சும் இவ்வளவு தூரம் இல்லை என்று ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக’ இருக்கப் போகிறது கோமாக்கி ரேஞ்சர். இதன் 5,000W எலெக்ட்ரிக் மோட்டாரும் கொஞ்சம் அதிரிபுதிரியாக இருக்கப் போவதால், பெர்ஃபாமன்ஸிலும் பட்டையைக் கிளப்பலாம் என்றே தெரிகிறது.

மற்றபடி இன்னும் இந்த ரேஞ்சர் க்ரூஸர் பற்றிப் பெரிதாக எந்த விவரங்களும் சொல்லவில்லை கோமாக்கி. ஒரு வழக்கமான க்ரூஸர் பைக் எப்படி இருக்க வேண்டுமோ… அந்த ஸ்டைலில் க்ரூஸிங்குக்கு ஏற்ற ரைடிங் பொசிஷனும், ஸ்டைலோடும் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். நமக்குக் கிடைத்த டீஸர் படத்தைப் பார்த்தால்… வட்ட வடிவ டூயல் க்ரோம் எல்இடி ஹெட்லைட், பக்கவாட்டில் ரெட்ரோ ஸ்டைலில் இண்டிகேட்டர்கள், பெரிய ஹேண்டில்பார், டபுள்ஸ் ஏற்றிவரும் போது பின்னால் இருப்பவர் சாய்ந்து கொண்டு வந்தாலும் கீழே விழாத அளவு பில்லியன் பேக்ரெஸ்ட், கறுப்பு அலாய் வீல்கள், இரண்டு பக்கமும் சேடில் பைகள், Faux ஸ்டைல் எக்ஸாஸ்ட் என்று மொத்தமாகப் பார்க்கும்போது அவென்ஜர் போலவேதான் இருக்கிறது.

Komaki Ranger Electric Cruiser
Komaki Ranger Electric Cruiser

மேலும், எலெக்ட்ரிக் பைக் என்றால், டெக்னிக்கல் அம்சங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டுமே! க்ரூஸ் கன்ட்ரோல், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, பைக்கை ரிவர்ஸ் எடுக்க ஸ்விட்ச், அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் – இப்போதைக்கு இந்த வசதிகள்தான் நமக்குக் கிடைத்த தகவல்கள். பொங்கல் முடிந்து சில நாட்களில் இந்த பைக் மார்க்கெட்டுக்கு வரலாம்.

க்ரூஸர் என்பதால், இதில் மேடு பள்ளம் – குண்டு குழி என்று குட்டி ஆஃப்ரோடே செய்து கொள்ளலாம் போங்கள். இவர்கள் சொல்லும் ரேஞ்ச்சும், டிசைனும் உண்மையாக இருந்தால் – ஒரு சார்ஜைப் போட்டுவிட்டு இந்த எலெக்ட்ரிக் பைக்கை எடுத்துக் கொண்டு ஆஃப்ரோடும் பண்ணிக்கலாம்; ‘சென்னைக்கு மிக அருகில்’ மினி டூரும் அடிச்சுக்கலாம்!

என்ன, விலையில்தான் கோமாக்கி கோக்குமாக்கு பண்ணாமல் இருக்க வேண்டும்!