கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

``எனக்குக் கண் தெரியாது... பைக்கைப் பத்தி எல்லாமே தெரியும்!”

மெக்கானிக்: மறமடக்கி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
மெக்கானிக்: மறமடக்கி சீனிவாசன்

நம்ம ஊரு மெக்கானிக்: மறமடக்கி சீனிவாசன்

``எனக்குக் கண் தெரியாது... 
பைக்கைப் பத்தி எல்லாமே தெரியும்!”

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கி கிராமத்தில் இருக்கிறது சீனிவாசனின் மெக்கானிக் ஷாப். மறமடக்கி சுற்றுவட்டார கிராமங்களில் பைக் சர்வீஸ் செய்ய எந்த மெக்கானிக்கை அணுகலாம் என்று யாரைக் கேட்டாலும், மெக்கானிக் சீனிவாசனையே கைகாட்டி விடுகின்றனர். விபத்து ஒன்றில் கண் பார்வையை இழந்த நிலையிலும், அனைத்து மாடல் பைக்குகளையும் பிரித்து மேய்ந்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் சீனி. ஸ்ப்ளெண்டர் ஒன்றின் இன்ஜினைப் பிரித்து சர்ஜரி செய்தவாறே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

``பொறந்து வளர்ந்தது எல்லாம் மறமடக்கிதான். 9-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 1993-ல் அறந்தாங்கி அண்ணாமலை மெக்கானிக் ஷாப்ல மெக்கானிக் செல்வத்துக்கிட்ட சேர்ந்தேன். அவர்தான் என்னோட ஆஸ்தான குரு. மறமடக்கியில சொந்தமா 1998-ல் மெக்கானிக் ஷெட் போட்டேன். பெருசா வருமானம் இல்லை. அதற்கப்புறம் பழையபடி தொழிலாளியா 2000-ல செருவாவிடுதி மெக்கானிக் செட்டில் சீஃப் மெக்கானிக் வேலை. நல்லாதான் போயிக்கிட்டு இருந்துச்சு!” என்று கூறும் சீனிவாசன், 2003-ல் நடந்த சோக சம்பவத்தை விவரிக்கிறார்.

``சர்வீஸ் செஞ்ச டூவீலரை ஓட்டிப்பார்க்க எடுத்துக்கிட்டுப் போனப்ப, திடீர்ன்னு முன் டயர் வெடிச்சி, கன்ட்ரோல் பண்ண முடியாம நடுரோட்டுலயே விழுந்துட்டேன். தலையில செம அடி. உயிர் பிழைச்சிட்டேன். ஆனா, கண்ணுக்கும் மூளைக்கும் போற நரம்பு, ரத்த ஓட்டம் கட் ஆகிப்போச்சு, கண்ணு தெரியிறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க. அதற்கப்புறம் ரொம்ப வருஷம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். வீட்டிலயும் ரொம்ப கஷ்டம். அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள அப்பாவும், அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போயிட்டாங்க. அக்காதான் அம்மா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க.

அந்த நேரத்துல என் நண்பர்கள்தான், `ஒரு நல்ல மெக்கானிக் இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கக் கூடாது’னு தைரியம் சொல்லி, அவங்களே ஊர்ல சின்னதா ஒரு மெக்கானிக் ஷெட் வெச்சுக் கொடுத்தாங்க. `பாரதப் பறவைகள்’ங்கிற அமைப்பு டூல்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. ஆரம்பத்துல வண்டியைப் பிரிச்சி வேலை பார்க்க ரொம்பத் தடுமாற்றம் இருந்துச்சு. எடுத்த டூல்ஸ்ஸை எந்த இடத்துல வச்சோம்னு தெரியாம ரொம்ப நேரம் தடவிக்கிட்டு இருப்பேன். முயற்சியைக் கைவிடலை! டூல்ஸ் எடுத்துக் கொடுக்க, ஸ்பேர்ஸ் வாங்கிட்டு வரன்னு பையனை வேலைக்குச் சேர்த்தேன்.

``எனக்குக் கண் தெரியாது... 
பைக்கைப் பத்தி எல்லாமே தெரியும்!”

வண்டியை ஸ்டார்ட் செய்யச் சொல்லி, அதோட சத்தத்தை வச்சே என்ன கம்ப்ளெய்ன்ட்னு பார்த்து சரி செஞ்சி கொடுத்திடுவேன். கொஞ்ச நாள்லயே எல்லாரை மாதிரியும் எல்லா மாடல் பைக்குகளையும் சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். மொதல்ல என்கிட்ட டூவிலர்களை சர்வீஸ்க்குக் கொண்டு வர பலர் தயங்குனாங்க. ஆனா, இப்போ பக்கத்துலயே அதிக மெக்கானிக் ஷெட்கள் இருந்தாலும், எனக்கிட்ட வேலை சுத்தமா இருக்கும்னு சொல்லி என்னைத் தேடி வந்து வண்டி சர்வீஸுக்குக் கொடுக்கிறாங்க!” என்றவர், தன் அனுபவத்தை வைத்தே பைக் ரைடர்களுக்கு டிப்ஸும் வைத்திருக்கிறார்.

``தேய்ஞ்சு போன முன் வீல் டயரை ரொம்ப வருஷமா மாத்தாமல் வச்சிருந்ததாலதான் எனக்கு விபத்தே ஏற்பட்டுச்சு. எனக்கு மாதிரி வேறு யாருக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்திடக்கூடாது. மொதல்ல வண்டி டயர்ல காத்து இருக்கா, டயர் நல்லா இருக்கானு பார்த்துட்டு தான் மொதல்ல வண்டியையே எடுக்கணும். தினமும் காலையில வண்டியை எடுக்கும் போது, செல்ப் இருந்தாலும் கிக்கர்ல ஸ்டார்ட் செஞ்சு, 20 விநாடிகளாவது பைக்கை ஓட விடணும். அப்பத்தான், ஆயில் சர்க்குலேசன் நல்லாருக்கும். 4 ஸ்ட்ரோக் பைக் 2000 கிமீ ஓட்டிய உடனே கண்டிப்பா ஆயில் மாற்றிடணும். ஸ்கூட்டி வாகனங்கள்ல எல்லாமே கேபிள்லதான் ஒர்க் ஆகுது. ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை சர்வீஸுக்குப் போறப்ப ஆக்ஸிலரேட்டர், பிரேக், சோக் கேபிள் எல்லாத்தையும் நல்லா இருந்தாலும், ஒருமுறை மாத்திக்கலாம். கிளட்ச் விஷயத்திலயும் கவனம் செலுத்தினால் நல்லது. கூடுமான வரைக்கும் ஒரே மெக்கானிக்கிட்ட உங்களோட டூவீலரை சர்வீஸுக்கு விடுறது நல்லது!’’ என்கிறார்.