Published:Updated:

``ஒவ்வொரு பைக்கும் என் காதலிதான்!”

Mechanic Ajis
பிரீமியம் ஸ்டோரி
News
Mechanic Ajis

நம்ம ஊரு மெக்கானிக்

``ஒவ்வொரு பைக்கும் என் காதலிதான்!”
``ஒவ்வொரு பைக்கும் என் காதலிதான்!”

கரூர் பழைய பைபாஸ் சாலையையொட்டி, இடதுபுறம் பிரிந்து போகும் சந்தில் இருக்கிறது அப்துல் அஜீஸின் `ஏ.ஏ அமித் ஆட்டோ கராஜ்' டூவீலர் ஒர்க்ஷாப். கடைக்கு உள்ளும் புறமும் விரவிக் கிடக்கும் டிவிஎஸ் 50 தொடங்கி புல்லட் வரையிலான வண்டிகள், அஜீஸின் சொல்படி ஸாரி.. ஸ்பானர்படி கேட்கின்றன. "மெக்கானிசம் என்பது கடல் மாதிரி. அதுல, நீந்திக்கிட்டேதான் இருக்கணும். முழுசா நீந்திக் கடக்க முடியாது. ஆனால், நீந்திக்கிட்டே இருக்க முடியும்" - ஸ்பானரை ஸ்டைலாகச் சுழற்றியபடி, லயித்துப் பேசுகிறார் அஜீஸ்.

``1990-ல் ஆறாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ, என் அப்பா அவந்தி வண்டி வச்சுருந்தார். 'லட்சுமி வண்டி'னு சொல்வாங்க. அந்த வண்டியை சர்வீஸ் விட எடுத்துக்கிட்டுப் போனப்ப, என்னையும் கூட்டிட்டுப் போனார். எங்க வண்டியை மெக்கானிக், பார்ட் பார்ட்டா கழற்றினதைக் கண் கொட்டாமப் பார்த்துகிட்டு இருந்தேன். பிறகு, ஒவ்வொரு பார்ட்ஸா மாட்டி, மறுபடியும் வண்டிக்கு உருவம் கொடுத்தது, என்னைக் கவர்ந்தது. அந்த நொடியில், `இதுதான் நம்ம தொழில்'னு முடிவு பண்ணினேன். வீட்டுக்குப் போனதும், 'நான் படிக்கலை. மெக்கானிக்காக ஆகப்போறேன்'னு சொன்னேன். வீட்டுல கண்டிச்சாங்க. ஆனால், என் முடிவுல ஒத்தக்கால்ல நின்னேன். வேற வழிதெரியாம, 'கெட்டது கழுத'னு என்னைத் தண்ணி தெளிச்சு விட்டாங்க. அதனால், பி.எல்.ஏ டிவிஎஸ் ஷோரூம்ல மெக்கானிக்கா சேர்ந்தேன். அங்க போர்மேனா இருந்த ஜோசப் பெர்னாண்டஸ் எனக்குக் குருவானார். எந்நேரமும் ஸ்பானரும் கையுமாக திரியும் அவரோட விரல் பிடித்து, சகல வித்தைகளையும் கத்துக்கிட்டேன். 2001 - ல் வெளியில் வந்து, லட்சுமிராம் தியேட்டர் பக்கத்துல டூவீலர் ஒர்க்ஷாப் தொடங்கினேன்.,

நடுவுல ஒரு சம்பவம். அதுனால, நான் இப்போதைக்கு அசிஸ்டென்ட் யாரையும் வச்சுக்கலை. கடந்த 18 வருஷமா நானே ராஜா, நானே மந்திரினு தனிக்காட்டு ராஜாவாக இயங்கிகிட்டு வர்றேன். நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த இடத்துக்கு ஒர்க்ஷாப்பை மாத்தினேன்.

மெக்கானிசம் தொழிலை அவ்வளவு லவ் பண்றேன். ஒவ்வொரு வண்டியும் எனக்கு லவ்வர்தான். அதனால், இந்த வண்டி ஸ்பெஷலிஸ்ட்னு இல்லாம, சகல வண்டிகளையும் ரிப்பேர் பண்றேன். டிவிஎஸ் 50, கேடிஎம், டொமினார் 400, புல்லட் 500 சிசி, கார்புரேட்டர் - Fi மாடல் வண்டிகள்னு எல்லா பைக்குகளும் என் ஸ்பானருக்குக் கட்டுப்படும். தவிர, ஓல்டு புல்லட், லேம்ப்ரெட்டா, பஜாஜ் ஸ்கூட்டர், பிரியா, சேட்டக், க்ளாசிக், யமஹா, ஜாவா, யெஸ்டி, ராஜ்தூத்னு சகல வின்டேஜ் பைக்குகளையும் ரிப்பேர் பண்ணுவேன்.

பழைய வண்டி, புது வண்டி, நியூ வெர்ஷன்னு எந்த வண்டியைப் பார்த்தும் குழம்ப வேண்டியதில்லை. பிஸ்டன் டாப் எப்படி மேலே நிக்குதோ, அதுதான் டைமிங் சென்டர். டைமிங் கனெக்ஷன் அதுதான். அதைப் புரிஞ்சுகிட்டா, வண்டி மெக்கானிக் தொழில்ல டிஸ்டிங்க்ஷன் வாங்கினது மாதிரி. ஆனா லெஃப்ட் - ரைட்ல இருக்கும் மார்க்கைப் பார்த்து, பலரும் குழம்புவாங்க. இந்தச் சூட்சமத்தை நுணுக்கமா தெரிஞ்சுகிட்டா, அவங்கதான் பிஸ்தா. இதைப் புரிஞ்சுகிட்டு, பிஸ்டன் டாப்புல கேம்ஷாஃப்ட்டைத் தூக்கி இணைச்சாலே, டைமிங் சென்டர் கரெக்டா இருக்கும். இதுதான், இந்த ஸ்பானர் தொழிலின் அரிச்சுவடி. நான் பல்ஸர் பைக் யூஸ் பண்றேன். அப்பா ஞாபகார்த்தமா லூனா பைக்கும் வெச்சிருக்கேன். டிவிஎஸ் பைக்குகள்தான் எனக்கு ஆரம்பகாலத்தில் தொழில் சொல்லிக் கொடுத்ததால், டிவிஎஸ் பைக்குகள் மட்டும் எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்!”

Mechanic Ajis
Mechanic Ajis

அப்துல் அஜீஸ் சொல்லும் டிப்ஸ்:

பைக்குகளை யாரேனும் முன்னாடி இடிச்சுட்டா, பைக்கின் எந்தப் பக்கம் இடிக்கப்பட்டதோ, அந்த பக்கம் மட்டும் பைக் ஓட்டும்போது இழுத்துக்கிட்டுப் போற மாதிரி இருக்கும். கை லேசாக உதறும். அதனால், உடனே போர்க் பென்ட் எடுக்க ஓட வேண்டாம். லெஃப்ட் சைடுல மோதியிருந்தால், வண்டியை நிறுத்தி, லெஃப்ட் சைடு லாக் பண்ணிவிட்டு, டயர்ல கிக் பண்ணணும். அதன்பிறகு, கிக் பண்ணியதால் லூஸ் ஆகும் டீ-ஸ்டம்ப் போல்ட்டை டைட் பண்ணினால், வீல் சென்டர் ஆகிவிடும். வண்டி சைடாக இழுக்கும் பிரச்னை வராது.

ஸ்கூட்டரைப் பொறுத்தமட்டில், 2000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததும், ஆயில் மாத்திவிடுவது உத்தமம். அதேபோல், 25,000 கிலோமீட்டர் வந்ததும் பிளக்கை மாற்றிவிட வேண்டும்.

அதேபோல், பிரேக் ஷூ தேய்ந்தால், அதை வெல்டிங் பண்ணி மறுபடியும் மாட்டக்கூடாது. புதிதாக பிரேக் ஷூ வாங்கி மாட்ட வேண்டும். இல்லை என்றால், வீல்ஹப் டேமேஜ் ஆகிவிடும்.

அதேபோல், புது ஸ்கூட்டரில் மூன்றாவது ஆயில் சர்வீஸின்போது, வண்டி முழுக்க சர்வீஸ் பண்ண வேண்டும். அப்படிச் செய்தால், வண்டியில் தேய்மானம் குறைவாக இருக்கும். வண்டிக்கும் லைஃப் கிடைக்கும். அதேபோல், வண்டி பிளக்கைக் கழற்றி க்ளீன் பண்ணும்போது, வண்டியை கிக் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணினால், ஃபயர் ஆக வாய்ப்புள்ளது.

Fi மாடல் வண்டிகளின் பெட்ரோல் டேங்க்கை ஓபன் பண்ணும்போது, பக்கத்தில் யாரும் ஸ்மோக் பண்ணக்கூடாது. ஸ்பார்க் ஆகுற விசயங்களும் அருகில் இருக்கக் கூடாது.

இன்ஜெக்ட் மாடல் வண்டிகள் எதிலும் டேங்கை ஃபுல் பண்ணக்கூடாது. டேங்கில் கால்வாசி பகுதியில் ஏர் இருப்பது மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், அந்த வண்டிகளும் ஃபயர் ஆகிவிடும்.

100 சிசி பைக்குகளை 50 கிமீ தூர எல்லைக்குள் மட்டும் பயன்படுத்த வேண்டும். லாங் டிரைவிங் செல்பவர்கள், 200 சிசி அளவுள்ள பைக்குகளைப் பயன்படுத்த வேண்டும். முடியாதபட்சத்தில், குறைந்தபட்சம் 150 சிசி பைக்குகளைப் பயன்படுத்தலாம்.