Published:Updated:

”என் கஸ்டமர்கள் வண்டியை மாத்துவாங்க... மெக்கானிக்கை மாத்தமாட்டாங்க !”

மெக்கானிக் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மெக்கானிக் ராஜ்

நம்ம ஊரு மெக்கானிக்: கோவில்மேடு ராஜ்

”என் கஸ்டமர்கள் வண்டியை மாத்துவாங்க... மெக்கானிக்கை மாத்தமாட்டாங்க !”

நம்ம ஊரு மெக்கானிக்: கோவில்மேடு ராஜ்

Published:Updated:
மெக்கானிக் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மெக்கானிக் ராஜ்

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் மெக்கானிக் கமல், `ராஜா கையை வைச்சா’ என்று ஒரு பாட்டுப் பாடுவாரே… அப்படித்தான் கோவை கோவில்மேடு பகுதியில் பைக் ரசிகர்கள் மத்தியில் ராஜ் பிரபலம். ‘ராஜ் நம்ம பைக்கில் கையை வெக்கமாட்டாரா’ என்று ஏங்குகிறார்கள் பைக் உரிமையாளர்கள். அந்தளவு மெக்கானிக் ராஜ் கோவில்மேட்டில் கெத்தாக வலம் வருகிறார். இவர் மெக்கானிக் மட்டுமல்ல; கோவை மேற்குப் பகுதி மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் தொழிலாளர் சங்கச் செயலாளராகவும் இருக்கிறார். நம்ம ஊரு மெக்கானிக்குக்காக அவரை ஸ்பானரும் கையுமாகப் பிடித்தேன்.

‘‘சின்ன வயசுல இருந்தே சைக்கிள் மேலயும், வண்டி மேலயும் ஆர்வம் இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல வண்டியில் இருக்குற இன்ஜின் பற்றியும், அது எப்படி இயங்குதுனு தெரிஞ்சுக்கவும் ஆசை வந்துச்சு. அதைக் கழட்டி மாட்ட ஒரு சான்ஸ் கிடைக்காதானு ஏங்கிக்கிட்டு இருந்தேன். இதுக்காகவே மெக்கானிக் ஷெட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அதாவது, பத்தாப்பு முடிச்சுட்டு ஐடிஐ படிக்கலாம்னு இருந்தேன். ஆனா ஐடிஐ படிச்சா இன்ஜின் பற்றித்தான் தெரிஞ்சுக்க முடியும். ஆனா சர்வீஸ் செய்யக் கத்துக்க முடியாதுன்னு என்னோட 15 வயசுலயே வொர்க்ஷாப் தொழிலுக்கு வந்துட்டேன். இப்போ 30 வருசத்துக்கு மேல ஆயிடுச்சு! நான் கழட்டி மாட்டாத இன்ஜின் இல்லைங்க!’’ என்று சொல்லும் அவர் கையில் ஸ்பானர் விளையாடுகிறது.

இவரிடம் யார் பேசினாலும், அவருக்குள்ளே இருக்கும் பைக் ஆர்வம் பேசுபவர்களுக்கும் அப்படியே கடந்துவிடும்போல. அவ்வளவு உற்சாகத்துடன் பைக்குகளைப் பற்றிப் பேசுகிறார்.

‘‘100 சிசிக்கு மேல இருக்குற பைக் எல்லாமே எனக்கு அத்துப்படி. 4 ஸ்ட்ரோக் இன்ஜின்ல என்ன பிரச்சினைனாலும் என்கிட்ட கொடுத்தா சரி செஞ்சுடுவேன். ஒரு பைக்ல இருக்கறதக் கழட்டி இன்னொரு பைக்குக்கு மாடிஃபை செய்து செட் பண்றதுல நான் ஸ்பெஷலிஸ்ட்! நான் 1989–ல் தனியா ஒரு மெக்கானிக் ஷெட் வெச்சென். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எனக்குப் பணத்தைவிட கஸ்டமர்கள்தான் முக்கியம். அவங்க கேக்கறதைச் செஞ்சு கொடுத்து சந்தோஷப்படுத்தறதுதான் எனக்கு ஆனந்தமே!

ஒரு புது பைக் வாங்கும்போது, ஷோரூம்ல எவ்வளவு கிமீ கேரன்ட்டி தர்றாங்களோ… சர்வீஸில் அதே கிமீ கேரன்ட்டியை நானும் தருவேன். உதாரணமா, ஒரு புது பைக் 40,000 கிமீ ஓடும்னு வாக்குறுதி தந்தாங்கன்னா, அதே பைக்கை நான் சர்வீஸ் செஞ்சது அப்புறம் 40,000 கிமீ ஓடும்னு என்னால கேரன்ட்டி தர முடியும்!’’ என ஸ்பானரின் மீது சத்தியம் செய்கிறார் ராஜ்.

‘‘இப்பொழுது வருகிற புதிய பைக்குகளை எப்படிப் புரிந்து கொண்டு பழுது பார்க்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, மறுபடியும் அதே உற்சாகம்.

‘‘மத்த தொழில்களைப்போல எங்க தொழில்லயும் அப்டேட் ரொம்ப முக்கியம் மேடம். ஒவ்வொரு புது பைக் வரும்போதும் எடுத்தவுடனேயே சர்வீஸ் எடுத்துற மாட்டேன். முதல்ல அதைப் பத்தி ரிவ்யூ படிச்சு, அதோட இன்ஜின் பத்தி நல்லா தெரிஞ்சுப்பேன். அப்புறம், கம்பெனியில அவங்களே கூப்பிட்டுச் சொல்லித் தருவாங்க. சில கம்பெனிங்கள்ல சொல்லித் தரமாட்டாங்க. அப்படியான பைக்குகளப் பத்தி டெக்னிஷியன்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுப்போம். இப்படித்தான் எங்களை நாங்க அப்டேட் செஞ்சுப்போம்! ஏன்னா, கஸ்டமர்கள் எனக்குக் கடவுள் மாதிரி. 1989–ல் நான் கடை திறக்கும்போது இருந்த கஸ்டமர்கள் எல்லாருமே இன்னும் எனக்குக் கஸ்டமர்களாகவே இருக்காங்க. அவங்க என்னதான் புது வண்டிக்கு மாறினாலும் புது மெக்கானிக்குக்கு இன்னும் மாறல! இதைவிட ஒரு மெக்கானிக்குக்கு என்னங்க சந்தோஷம் இருக்கப் போகுது!’’ என்று உணர்ச்சிவசப்படுகிறார் ராஜ்.

”என் கஸ்டமர்கள் வண்டியை மாத்துவாங்க... மெக்கானிக்கை மாத்தமாட்டாங்க !”


மெக்கானிக் ராஜ் சொன்ன டிப்ஸ்…

வாரத்துக்கு ஒரு தடவை பைக்குக்குக் காற்று சோதனை செய்வது அவசியம். அதேபோல பைக் செயினையும் மறந்துவிடாதீர்கள். இவை இரண்டுமே மைலேஜுக்கு முதல் நண்பர்கள்.

பைக்கின் ஏர் ஃபில்டரை ஒவ்வொரு 5000 கிமீ–க்கும்; ஸ்பார்க் பிளக்கை ஒவ்வொரு 12,000 கிமீ–க்கும் மாற்ற வேண்டும். இதைச் செய்பவர்கள், கஷ்டப்படவே மாட்டார்கள்.

முக்கியமாக எல்லோரும் சொல்வதுதான். பைக்குகளில் 2,500 கிமீக்கும்; ஸ்கூட்டர்களில் 2,000 கிமீ–க்கும் ஒரு முறை கட்டாயம் ஆயில் மாற்ற வேண்டும். ஆயிலின் விஸ்காசிட்டி குறைந்தால்… பெரிய செலவு காத்திருக்கு! சர்வீஸ் செய்ய நேரம் இல்லாதவர்கள் அட்லீஸ்ட், இன்ஜின் ஆயிலை மட்டுமாவது மறக்காமல் மாத்திடுங்க!

சிலருக்கு க்ளட்ச் டைட்டாக இருந்தால் பிடிக்கும்; சிலருக்கு லூசாக இருந்தால் நல்லாருக்கும் என்பார்கள். ஆனால், இரண்டுமே தப்பு! க்ளட்ச் சரியான அளவில் இருக்க வேண்டும். இரண்டிலுமே க்ளட்ச் பிளேட் தேய்மானம் ஆகி, பைக்கிள் ஆயுள் குறைய வாய்ப்புண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism