Published:Updated:

இன்ஜினீயரிங் படிச்சுட்டு இதெல்லாம் ஒரு வேலையானு கிண்டல் பண்ணாங்க!

ஆறுமுகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகம்

மொபைல் பஞ்சர் கடை: திண்டிவனம்

இன்ஜினீயரிங் படிச்சுட்டு இதெல்லாம் ஒரு வேலையானு கிண்டல் பண்ணாங்க!

மொபைல் பஞ்சர் கடை: திண்டிவனம்

Published:Updated:
ஆறுமுகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆறுமுகம்
இன்ஜினீயரிங் படிச்சுட்டு இதெல்லாம் ஒரு வேலையானு கிண்டல் பண்ணாங்க!

ட்யூப்லெஸ் டயரில் பஞ்சர் என்றால் பிரச்னை இல்லை; ‘இன்னைக்கு அடிச்சுக்கலாம்; நாளைக்கு பஞ்சர் ஒட்டிக்கலாம்’ என்று டகால்ட்டி செய்து, ஏமாற்றிக் கொள்ளலாம்(!). ஆனால், ட்யூப் டயர்கள் பஞ்சர் ஆகி, பஞ்சர் கடையை விசாரித்து, ‘ஆ…தள்ளு.. தள்ளு… தள்ளு’ என்று கிமீ கணக்கில் அதைத் தள்ளிக் கொண்டுபோகும் பைக் உரிமையாளர் களுக்குத்தான் அந்த வலி தெரியும்.

அப்படிப்பட்ட வலிக்கு நிவாரணியாக இருக்கிறார், ஆறுமுகம். ‘‘என்ன பஞ்சர் ஒட்டித் தருகிறாரா’ என்றால், ஆம்!... ஆனால், நாம் பஞ்சர் ஆகி நிற்கும் இடத்துக்கே வந்து சரி செய்து தருகிறார், இந்த 26 வயதுப் பட்டதாரி. அட ஆமாங்க… ஃபுட் டெலிவரி மாதிரி… பஞ்சர் டெலிவரி என்று வைத்துக் கொள்ளலாம். சென்னை, பாண்டிச்சேரி, கோவையில் இப்படிப்பட்ட மொபைல் பஞ்சர் பிரதிநிதிகள் பிரசித்தம். ஆனால், திண்டிவனம் பகுதியில் பஞ்சர் ஆகி நிற்பவர்களுக்கு ஆறுமுகம்தான் ஆபத்பாந்தவன்!

விசாரித்தால், பட்டதாரி என்றார். டாக்டர்களுக்கு ‘அர்ஜென்ட் கால்ஸ்’ வருவது மாதிரி, ஆறுமுகத்துக்கு பஞ்சர் கால்கள் அலைபேசியில் வந்தவண்ணம் இருக்கின்றன. தனது வீட்டிலிருந்து பேஸன் எக்ஸ்–ப்ரோ பைக்கில் பஞ்சர் கிட்டை ரெடி செய்து, எங்கேயோ பஞ்சர் போடப் பறந்து கொண்டிருந்தவரைப் பஞ்சர் கிட்டும் கையுமாகப் பிடித்தேன்.

"பிறந்து, வளர்ந்தது எல்லாமே திண்டிவனம்தான். எங்க அப்பா, அம்மாக்கு நான் மட்டும்தான். என்னுடைய அப்பா, ஒரு பஞ்சர் கடையை திண்டிவனத்திலேயே வைத்து 40 வருடமாகத் தொழிலாகச் செய்து வந்தார். ஸ்கூல் டைம் போக, பார்ட் டைமாகப் பார்த்தே 12–ம் வகுப்பு முடிப்பதற்குள் முழு வேலையையும் கற்றுக் கொண்டு விட்டேன்.

அப்பா, கடையைப் பார்த்துக்கச் சொன்னார். அம்மாதான் டிகிரிக்கு ரெக்கமண்ட் செய்தார். மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்து அரியர்ஸ் ஏதுமில்லாமல் படித்து முடித்தேன். எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி நான்தான். கல்லூரியில் 4-ம் வருடம் படிக்கும்போதே தனியார் நிறுவனமொன்றில் கேம்பஸில் தேர்வானேன். மும்பையில் 4 மாதம் வேலை. அதேநேரம், இங்கே பஞ்சர் கடை தொழிலில் சறுக்கல் ஏற்பட்டது. பஞ்சர் கடையையும் அம்மா அப்பாவையும் பிரிந்திருக்க முடியவில்லை.

இன்ஜினீயரிங் படிச்சுட்டு இதெல்லாம் ஒரு வேலையானு கிண்டல் பண்ணாங்க!
‘‘பேஸன் ப்ரோ மைலேஜ் குறைஞ்சிடுச்சு!’’ ‘‘நடமாடும் பஞ்சர் கடையாக எனது வண்டியை மாற்றிய பிறகு, வண்டியின் மொத்த எடை 270 கிலோ-வாக அதிகரித்துவிட்டது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் 55 கிமீ மைலேஜ் தந்து கொண்டிருந்த பைக், இப்போது 30 கிமீ தான் மைலேஜ் தருகிறது. இதுபோன்ற ரெனோவேஷன் பைக்குகளுக்கு வழக்கத்தை விட 3 மடங்கு அதிக பராமரிப்பு தேவை. 1000 கிமீ–க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலும், 2 மாதங்களுக்கு ஒருமுறை பிரேக் ஷூவும் மாற்றிவிடுவேன்! பஞ்சர் போட்டால் மட்டும் பத்தாது; நம்ம பஞ்சர் குதிரையையும் பத்திரமாப் பார்த்துக்கணும்ல!’’ என்றார் ஆறுமுகம்.

திரும்பவும் திண்டிவனம் ரிட்டர்ன். அப்புறமென்ன, கடைதான் எல்லாம்!

எப்படிப்பட்ட பஞ்சராக இருந்தாலும் சரி, முறையாகச் சரி செய்து தந்துவிடுவேன். அதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள்; வருவாயும் நன்றாகவே இருந்தது. இருந்தாலும், "இன்ஜீனியரிங் படிச்சுட்டு இதெல்லாம் தேவையா’னு கேலி பண்ணாங்க பலர். எனக்கு வருத்தமில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு பஞ்சர் ஒட்டும் தொழிலுக்கு வரவில்லை. இந்தத் தொழில் செய்து வந்த பணத்தில்தான் இன்ஜினீயராகவே ஆனேன். அதுதான் சரியும்கூட!" என்றவரிடம், ‘‘மொபைல் பஞ்சர் ஷாப் ஐடியா எப்படி?’’ என்றேன்.

"பொதுவாக, திண்டிவனம் அருகே வண்டிகள் பஞ்சராகி நின்றுவிட்டால், கடைக்கு வந்துதான் என்னை அழைத்துச் செல்வார்கள். இந்நிலையில்தான் கொரோனா சமயத்தில், கடைகள் ஏதும் இல்லை. சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பஞ்சர் ஆகிவிட்டதாகக் கூறி, அதன் ஓட்டுநர் என்னை வந்து அழைத்துச் சென்றார். வீலைக் கழற்றி எடுத்து வந்து, பஞ்சர் ஒட்டிப் பொருத்துவதற்கு 1 மணிநேரம் ஆகிவிட்டது. அவர்கள் பிரசவத்துக்காகச் சென்று கொண்டிருந்தபோதுதான், கார் பஞ்சராகியுள்ளது. அந்த ஒரு மணிநேரத் தாமதத்தால், கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரு தடவை ஆம்புலன்ஸுக்கும் இதே நிலைமை. அந்தச் சம்பவம்தான் எனக்கு மொபைல் பஞ்சர் ஷாப் ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஐடியாவைத் தந்தது!’’ என்றவர், தனது பேஸன் ப்ரோ பைக்கிலேயே பெரிய ஏர் டேங்க், பலூன் ஜாக்கி, பஞ்சர் கிட் என எல்லாம் பொருத்தி மொபைல் பஞ்சர் கடையாகவே மாற்றி விட்டார். இதற்கு 40,000 ரூபாய் செலவழித்திருக்கிறார். ஜஸ்ட் டயலிலெல்லாம் ஆறுமுகத்தின் நம்பரைப் பார்த்து அழைக்கிறார்களாம்.

5 கிமீ–க்கு உள்ளே என்றால், பைக்குக்கு 150 ரூபாயும், காருக்கு 250 ரூபாயும் கட்டணம். ரொம்பவும் எமர்ஜென்ஸி என்றால், திண்டிவனத்தைச் சுற்றி 25 கிமீ வரை நீங்கள் எந்த இடத்தில் பஞ்சர் ஆகி நின்றாலும், அங்கே ஆறுமுகம் ஆபத்பாந்தவனாக பேஷன் ப்ரோவில் வந்து நிற்பார். அவரின் தொடர்பு எண் இதுதான்: 9790516496

அடுத்த முறை திண்டினம் போனீங்கன்னா, பஞ்சர் பயம் இல்லாமப் போகலாம்!