Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்
கியா காரன்ஸ்
கியா காரன்ஸ்
Thulasidharan JT

எனக்கு ஒரு வித்தியாசமான குழப்பம். கியா காரன்ஸ் வாங்குவது என்று முடிவெடுத்து விட்டேன். 1.5 NA இன்ஜினா.. அல்லது 1.4 லி டர்போ பெட்ரோலா என்பதில்தான் குழப்பம். எது வாங்கலாம்?

- ஜாக்கி சுந்தர், திருச்சி.

1.4 லிட்டர் டர்போவில் பஞ்ச் அதிகமாக இருக்கும். நீங்கள் ஓட்டுதல் விரும்பி என்றால்… உங்களுக்கு ஓட்டுதலில் உற்சாகம் வேண்டும் என்றால்… சந்தேகமே தேவையில்லை. டர்போவுக்குப் போய்விடுங்கள். இதன் ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸின் செயல்பாடு… அற்புதமாக இருக்கும். இதில் நெடுஞ்சாலைகளில் காலை எடுத்துவிட்டுப் பயணிக்க, க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷனும் இருப்பதால் ஜாலியாகவே இருக்கும். என்ன, இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் மைலேஜிலும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சாதாரண ஃபேமிலி கார் போதும் என்று நினைத்தால்… 1.5 Naturally Aspirated இன்ஜினே போதுமானது. பொதுவாக, NA இன்ஜின்களில் ஒரு பெப்பினெஸ் குறையும். உதாரணத்துக்கு, மேக்னைட் காரில் டர்போவையும், NA–வையும் எடுத்துக் கொண்டால்… டர்போ அளவுக்கு மலையேற்றங்களிலும், ஹைவேஸ் ஓவர்டேக்கிங்கிலும் பெப்பியாக இருக்காது NA. ஆனால், காரன்ஸைப் பொருத்தவரை, டர்போவைப்போலவே NA இன்ஜினின் செயல்பாடு இருக்கத்தான் செய்கிறது. இது ஒன்றும் அண்டர்பவர் இல்லை; கார் முழுக்க ஆட்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கும்போது காரன்ஸின் NA இன்ஜின் பெரிதாகச் சுணக்கம் அடைவதாகத் தெரியவில்லை. இதன் பார்ட்–த்ராட்டில் ரெஸ்பான்ஸும் பக்கா! விலையும் டர்போவைவிடக் குறைவு. என்ன, க்ரூஸ் கன்ட்ரோலைத்தான் மிஸ் செய்வீர்கள்! இது நம் ஊரில் எல்லா நேரத்திலும் எடுபடாது. எனவே, காரன்ஸின் NA இன்ஜினே போதுமானது என்பது எங்கள் கருத்து!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Hill Driving
Hill Driving

நான் இப்போதுதான் கார் வாங்கி, அதை ஓட்டப் பழகியிருக்கிறேன். சேலத்தில் வசிக்கிறேன். அடிக்கலை மலையில் காரோட்டுபவர்களைப் பார்த்துப் பொறாமை வரும். நானும் மலைச்சாலைகளில் ஒரு ‘ஸ்கில்டு டிரைவர்’ ஆக வேண்டும் என்பது என் ஆசை. எனக்கு டிப்ஸ் சொல்லுங்கள் சார்!

– ராகவேந்தர், சேலம்.

ஹைவேஸ் மற்றும் சிட்டியில் கார் ஓட்டுவதற்கும், மலைச்சாலைகளில் கார் ஓட்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கரணம் தப்பினால் மரணம் என்பதும் மலைப்பயணங்களில் இயல்பான விஷயம். எனவே, அதில் கவனிக்கத்தக்க அம்சங்கள் நிறைய உண்டு.

மலைச் சாலைகளில் கார்னரிங்கில் ஓவர்டேக்கிங் கூடவே கூடாது. நல்ல விஸிபிலிட்டி இருந்தாலொழிய… வளைவான, ஒடிசலான கார்னரிங்குகளில் ஓவர்டேக்கிங்… மூச்!

ரியர்வியூ மிரர்… இன்சைடு மற்றும் அவுட்சைடு இரண்டையுமே அடிக்கடி கவனியுங்கள். மலைச்சாலைகளில் கார் ஓட்டும்போது, இயற்கையை ரசிக்கிறேன் பேர்வழி என்று வேடிக்கை பார்த்துக் கொண்டோ… நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே பயணிப்பதோ… வேண்டாம். மிகப் பெரிய அனுபவசாலி டிரைவர்கள்கூட இதில் சறுக்குவார்கள்.

எப்போதுமே ஏறும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். இதுதான் முக்கிய விதி. அதிலும், ஹெவி வெஹிக்கிள்ஸ் என்றால்… நிச்சயம் அதற்குத்தான் முன்னுரிமை. காரணம், பெரிய வாகனங்கள் பின்னால் கீழ்நோக்கிப் போகும் அபாயம் உண்டு. வளைவுகளில் முந்துவது எப்படித் தப்போ… அதேபோல் ஹெவு வெஹிக்கிள்ஸுக்கு இடம் தராமல் பயணிப்பது அதைவிடத் தப்பு.

சில முக்கியமான கார்னரிங்குகளில்… லேசாக ஹார்ன் அடிப்பதில் தப்பே இல்லை. காரணம், எதிரே வருபவர்களுக்கு ஒரு சின்ன அலெர்ட்டாக அது இருக்கும். ஆனால் அதே நேரம், காட்டுப்பகுதிகளில் காதைக் கிழிப்பதுபோல் ஹார்ன் அடித்து, விலங்குகளைப் பீதிக்குள்ளாக்குவது ரொம்பத் தப்பு.

மலைச்சாலைகளில் இறங்கும்போதும், ஏறும் கியரில் இறங்குவதுதான் விதி. ஆனால், இது எல்லா நேரங்களிலும் எடுபடாதல்லவா! அதனால், எப்போதுமே இரண்டாவது கியருக்கு மேல் தாண்டக் கூடாது. அதிகபட்ச வேகம் 25 கிமீ–க்குள் இருக்கலாம். காரணம், 3–வது கியருக்கு மேல் உங்கள் ஸ்பீடோ மீட்டர் முள் துடிக்கும்; வேகமும் எகிறும். இதனால், கார் உங்கள் கன்ட்ரோலில் இருக்காது. அதிக சிசி கொண்ட கார்களில் கியர் வேரியேஷன் இருக்கலாம்.

மலை இறங்கும்போது, கார் பிரேக்குகளைப் பயன்படுத்தாமல், முடிந்தவரை இன்ஜின் வேகத்தைக் குறைத்து (பிரேக் பிடிக்காமல் ஒரு நாக்கிங் தெரியுமல்லவா;. இதைத்தான் இன்ஜின் பிரேக்கிங் என்போம்) காரை இறக்குவதுதான் நல்லது. இறங்கும்போது அதிக டார்க் கிடைக்கும் என்பதால், கார் தரையுடன் அதிக தொடர்பிலேயே பயணிக்கும்.

அதேபோல், மலை ஏறும்போது, ரொம்பவும் மேடான ஏற்றங்களில்… முதல் கியர்தான் பெஸ்ட். ‘வ்வ்ர்ர்ரூம்’ என உறுமினாலும்… இதுதான் சரி. சில கார்களில் வேகத்துக்கு ஏற்ப இரண்டாவது கியரில் ஏறும்போது… ஒரு சுணக்கம் தெரியும். அதாவது, ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்தியிருப்பீர்கள். ஆனால், பவர் கிடைத்திருக்காது. இதைத்தான் டர்போ லேக் என்கிறோம். இது டீசல் கார்களில் அதிகமாக இருக்கும். பெட்ரோல் கார்களிலும் உண்டு. எனவே, கவனம்.

சிலர் மலை இறங்கும்போது, பிரேக்கில் கால் வைத்துக் கொண்டே இறங்குவார்கள். பாதுகாப்புக்காக இப்படிச் செய்யும் பலர் உண்டு. ஆனால், இதில் உங்கள் பிரேக் பேடுகள் சூடாகும் அபாயம் உண்டு. இதையே தொடர்ச்சியாகச் செய்யும் பட்சத்தில், ஒரு கட்டத்தில் கார் பிரேக்குகள் சுத்தமாகச் செயலிழந்து விடும். பதற்றம் அடையாமல், காரை நிறுத்தி, ஒரு டீ அடித்துவிட்டு, பிரேக் பேடுகளின் சூடு தணிந்தபிறகு கிளம்பலாம். இப்போது பிரேக் பிடிக்கும்.

இன்னும் சிலர் க்ளட்ச்சிலும் கால் வைத்தபடி இறங்குவார்கள். அதுவும் கிளட்ச் பிளேட்டுக்கு ஆபத்து. காரும் உங்கள் கன்ட்ரோலில் இருக்காது. உங்களுக்கும் ஆபத்து. எப்போதுமே சரியான வேகத்தில், சரியான வேகத்தில் இறங்கி, தேவையான நேரத்தில் கிளட்ச் மற்றும் பிரேக்கில் கால் வைப்பது நல்லது.

Hill Driving
Hill Driving

அதிக லோடு அடித்தால்… மலையேறுவது ரொம்பவும் சிரமமாக இருக்கும். முடிந்தவரை லோடைக் குறைப்பது நல்லது.

மலைச் சாலைகளில் இறங்கும்போது, செய்யவே கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. அது நியூட்ரலில் கியரை வைத்துவிட்டு, இறங்குவது. இது மிகப் பெரிய ஆபத்து. இதில் பிரேக்குகளின் ஃபீட்பேக் ரொம்பவும் சுமாராகவே இருக்கும். சிலர், ‘மைலேஜ் கிடைக்கும்ல’ என்பார்கள். இது ஆபத்து மட்டுமில்லை; கார்களுக்குச் செய்யும் அநியாயம்! இன்னும் சில பூமர் அங்கிள்ஸ், கார்களை ஆஃப் செய்துவிட்டும் இறங்குவதைப் பார்த்திருக்கிறேன். இது மலைச்சாலைகளில் என்றில்லை; கார் ஓட்டும்போது செய்யவே கூடாது தவறு. இதுபோன்ற நேரங்களில் பிரேக்குகள் 30%கூட வேலை செய்யாது என்பதுதான் உண்மை. ஸ்டீயரிங்கும் லாக் ஆக வாய்ப்புண்டு.

சரிவான சாலைகளில் காரை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பிரேக்/க்ளட்ச் கன்ட்ரோல் செய்து காரைப் பின்னால் நகர்த்தாமல் எடுப்பது எக்ஸ்பெர்ட் டிரைவர்களால் மட்டுமே முடியும். இப்போது ஹேண்ட்பிரேக்கின் உதவியை நாடலாம். இம்மாதிரி நேரங்களில் ஹாஃப் க்ளட்ச் வைத்து ஓட்டப் பழகிக் கொள்ளுங்கள்.

கார்களை மலைச்சாலைகளில் நிறுத்தும்போது, அடுத்த வாகனங்கள் செல்லும் அளவுக்குப் போதிய இடம் இருக்கிறதா என்பதைக் கவனித்து நிறுத்துங்கள். பகலோ, இரவோ… ஹஸார்டு லைட்டுகள் அவசியம்.

எக்காரணம் கொண்டும், ‘ரோடு காலியாத்தானே இருக்கு’ என்று வலதுபுறம் லேன் மாறவே மாறாதீர்கள்.

நீங்கள் இப்போதுதான் பழகுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனவே, எடுத்தவுடனேயே மலைச்சாலைப் பயணம் தனியாக வேண்டாம். சாலைகளில் நன்றாக கிளட்ச்/கியர்/ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை நன்கு பழக்கத்துக்குக் கொண்டு வாருங்கள். ஒரு எக்ஸ்பெர்ட் டிரைவரை உடன் அழைத்துக் கொண்டு முதலில் பயணிக்கவும்.

மலைச்சாலைகளில் கவனமாக ஓட்டி… பயணத்தை என்ஜாய் பண்ணுங்கள்! வாழ்த்துகள்!

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com