Published:Updated:

மோட்டார் கிளினிக்

Safari
பிரீமியம் ஸ்டோரி
Safari

கேள்வி பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி பதில்

Published:Updated:
Safari
பிரீமியம் ஸ்டோரி
Safari
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் ஒரு ரிட்டயர்டு ரயில்வே அலுவலர். என் மனைவியுடன் ஹைதராபாத்தில் இருக்கிறேன். 21 லட்சம் பட்ஜெட்டில் நான் ஒரு எஸ்யூவி வாங்க விரும்புகிறேன். சென்னைக்கு நெடுஞ்சாலைப் பயணம் மாதம் 2 தடவை உண்டு. டிரைவர் வைத்தும் ஓட்டுவேன். காரன்ஸ், ஹேரியர், சஃபாரி போன்றவை என் லிஸ்ட்டில் உள்ளன. 5/7 சீட்டர் எதுவென்றாலும் ஓகே. பாதுகாப்புக்கு முன்னுரிமை வேண்டும். எது வாங்கலாம்?

– ஜெயந்த், ஹைதராபாத்.

நீங்கள் பெட்ரோல்/டீசலா என்பதைச் சொல்லவில்லை. இரண்டையுமே எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு வசதிதான் மிக முக்கியம் என்றால், காரன்ஸ் இருக்கவே இருக்கு. இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் இதில்தான். 3–வது வரிசை சீட்களிலும் உள்ளே போய்வர Ingress/Egress தன்மை வேறெந்த காரிலும் இல்லை. வென்டிலேட்டட் சீட்களில் ஆரம்பித்து 360டிகிரி கேமரா என ஏகப்பட்ட வசதிகள். இதில் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், காரன்ஸின் கட்டுமானம் அந்தளவுக்கு இருக்குமா தெரியவில்லை. மற்ற டாடா கார்களை ஒப்பிடும்போது, இதன் பில்டு சுமார் ரகம்தான். நெடுஞ்சாலைப் பயணம் என்பதால் இதைச் சொல்கிறோம்.

டாடா சஃபாரி – ஒரு 7 சீட்டர் கார். டாடா கார்களின் கட்டுமானம் பற்றி உங்களுக்கே தெரியும். நீங்கள் ரிட்டையர்டு என்பதால், இதில் நடுப்பக்க ரெக்லைன் சீட்கள் மற்றும் நடுப் பக்க சீட்களுக்கும் வென்டிலேட்டட் வசதியோடு புது சஃபாரி வந்திருக்கிறது. டிரைவர் வைத்து ஓட்டுவதால், பின் பக்கம் ரீடிங் லைட் வசதியோடும் இருக்கிறது சஃபாரி. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ப்ரீமியம். என்ன, இது ஹேரியரைவிட சுமார் ரூ.2 – 2.5 லட்சம் அதிகமாக இருக்கும்.

சஃபாரியும் ஹேரியரும் டெக்னிக்கலாக ஒன்றே! உருவத்தில்தான் வேறு! லேண்ட்ரோவர் ப்ளாட்ஃபார்மில் தயாராகும் ஹேரியரின் கட்டுமானம் கிண்ணென்று இருக்கிறது. இதில் நடுப்பக்க வென்டிலேட்டட் சீட்கள் கிடையாது. இதன் மைலேஜ் 10 கிமீ என்கிறார்கள். மற்றபடி சஃபாரியில் இருக்கும் அத்தனை மோடுகள், அம்சங்கள், டிரைவர் மெமரி சீட் வசதி என எல்லாமே ஹேரியரில் உண்டு. நீங்கள் கேட்ட பட்ஜெட்டைத் தாண்டாமல், உங்களுக்கு 5 சீட்டர் போதும் என்றால், நடு சீட்டில் வென்டிலேட்டட் வசதி இல்லையென்றாலும் பரவாயில்லை என்றால், ஹேரியரை டக் என டிக் அடிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

நாங்கள் மஹிந்திரா எஸ்யூவி வைத்திருக்கிறோம். எனது மாடலில் சன்ரூஃப் இல்லை; எனக்கு சன்ரூஃபின் மேல் அலாதிப் பிரியம். ஆஃப்டர் மார்க்கெட்டில் பொருத்தலாமா? அப்படிப் பொருத்துவதால் ஏதேனும் சிக்கல் வருமா?

- நீலவேணி, மதுரை.

சன்ரூஃப் ஒரு காருக்கு ப்ரீமியம் லுக்கைக் கூட்ட வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல; காருக்குள் வெளிச்சத்தையும் வெளிப்பக்க ஆம்பியன்ட்டையும் கூட்ட வேண்டும் என்பதற்காகவும்தான். சன்ரூஃபில் பல நன்மைகளும் உண்டு. சில எலெக்ட்ரானிக் சன்ரூஃப்களில் டில்ட் வசதி இருக்கும். காரை பார்க் செய்யும்போது, இதை டில்ட் செய்துவிட்டால், ஏர் சர்க்குலேஷனுக்கு இது மிகவும் உதவும். பார்க்கிங்கில் இருக்கும்போது, உள்ளே உலவும் சூடான காற்றை இது வெளியே தள்ளும். வெளிக்காற்றுச் சத்தமும் குறைவாக இருக்கும். வெயில் குறைவான மாலை நேரங்களில், அதுவும் மலைச்சாலைகளில் பயணிக்கும் போது, சன்ரூஃபின் உண்மையான சுகம் புரியும். இது ஒரு அப்மார்க்கெட் வசதி. சன்ரூஃப் உள்ள கார்களுக்கு ரீ–சேல் மதிப்பு உயரும் என்பதும் உண்மை.

இதில் சில மைனஸ்களும் உண்டு. பெரிய பனோரமிக் சன்ரூஃப்களால் காரின் எடை அதிகரிக்கவும் செய்யும். ஏசி போடும்போது, சன்ரூஃபையும் திறந்து வைத்தால், ஏசி கம்பரஸரின் பணிச்சுமையை இது அதிகப்படுத்தும்.

கார்களில் OEM ஃபிட்டட் ஆக சன்ரூஃப் வரும்போதே எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்படுகிறது என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆஃப்டர் மார்க்கெட்டில் சன்ரூஃப் பொருத்துவதை யாருமே ரெக்கமண்ட் செய்வதில்லை. தேர்டு பார்ட்டி சன்ரூஃப் பொருத்தும்போது, காரின் அமைப்பையும், கட்டுமானத்தையும், கூரையையும் இது பாதிக்கலாம். காருக்குள்ளே எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களிலும் கை வைப்பார்கள். இதனால் வாரன்ட்டியிலும் பாதிப்பு உண்டு. ஏதேனும் விபத்துகளில் இதுபோன்ற சன்ரூஃப்களால் பேராபத்து ஏற்படக் கூடும். மேலும் OEM சன்ரூஃப்களை ஒப்பிடும்போது, இதில் வாட்டர் லீக்கேஜும் இருக்க வாய்ப்புண்டு. இது மழை நேரங்களில் பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.

எனவே, ஆஃப்டர் மார்க்கெட் சன்ரூஃபைத் தவிர்ப்பதுதான் நல்லது.

மோட்டார் கிளினிக்
படம்: வெ.நரேஷ் குமார்

என் பட்ஜெட் 2.5 லட்சம். புல்லட் வாங்க வேண்டும் என்பது ஆசை. க்ளாஸிக் 350 மீது ஒரு கண். நடுவில் யெஸ்டியின் ரோட்ஸ்ட்டர் பைக்கைப் பார்த்தேன். பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. இப்போது ஒரு டைலமா வந்து விட்டது. யெஸ்டி ரோட்ஸ்ட்டரா… புல்லட் 350 க்ளாஸிக்கா?

- நந்தகுமார், சென்னை.

நிஜம்தான்; இந்த ஒற்றைக் குடுவை, வட்ட வடிவ ஹெட்லைட்ஸ் கொண்ட ரெட்ரோ ஸ்டைல் யெஸ்டி ரோட்ஸ்ட்டரைப் பார்த்ததும் அனைவருக்குமே பிடித்து விடுகிறது. பெரிய விண்ட்ஸ்க்ரீன் நெடுஞ்சாலைப் பயணத்துக்கு அருமையாக இருக்கும். க்ளாஸிக்கை ஒப்பிடும்போது ரோட்ஸ்ட்டரில் பல நல்ல விஷயங்கள் உண்டு. க்ளாஸிக்கைவிட பவரும் (29.7bhp) டார்க்கும் (2.9kgm) அதிகம். அதனால், பிக்–அப்பும் டாப் ஸ்பீடும் சூப்பராக இருக்கிறது. க்ளாஸிக்கில் 125 கிமீ போனாலே பெரிய விஷயம். ரோட்ஸ்ட்டரில் 140 கிமீ வரை பறக்கலாம். க்ளாஸிக்கில் 5 ஸ்பீடுதான்; இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு. இதன் ட்வின் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் பீட்டும் அருமை.

க்ளாஸிக்கைவிட இதன் எடை குறைவு (184 கிலோ);

சீட் உயரம் (790மிமீ) குறைவு. அதனால், உயரம் குறைவானவர்கள், ஒல்லியானவர்களும் எளிதில் கையாளலாம். அட, கிரவுண்ட் கிளியரன்ஸ்கூட 5 மிமீ க்ளாஸிக்கைவிட அதிகம் (175 மிமீ). முக்கியமான விஷயம் – க்ளாஸிக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் இருக்கிறது. ரோட்ஸ்ட்டரில் டூயல் சேனல் ஏபிஎஸ். பிரேக்கிங் பவரும் நன்றாகவே இருக்கிறது. அதேபோல், யெஸ்டியில் கிடைக்கும் ஒரே அலாய் வீல் பைக்கும் இந்த ரோட்ஸ்ட்டர்.

என்ன, இது க்ளாஸிக்கைவிட விலை கொஞ்சம் அதிகம். இதன் ஆன்ரோடு சுமார் 2.34 லட்சம். ஆனால், யெஸ்டி கம்பெனியில் இதுதான் விலை குறைந்த பைக். ரோட்ஸ்ட்டரில் கடுப்பேற்றும் விஷயம், 80‘ஸ் ஸ்டைலில் இருக்கும் அந்த சைடு லாக் மட்டும்தான். மற்றபடி, கூட்டிக் கழித்துப் பார்த்தால் கொடுக்கும் காசுக்கு ஏற்ற பைக், யெஸ்டி ரோட்ஸ்ட்டர்.

மோட்டார் கிளினிக்

IOC நிறுவனத்தில் இருந்து ஒரு செய்தி வந்ததே! ‘வாகனத்தின் டேங்க் ஃபுல்லாக எரிபொருள் நிரப்பக் கூடாது; இது ஆபத்தை விளைவிக்கும்’ என்று. இதனால், நிஜமாகவே ஆபத்து உண்டா? தெளிவுபடுத்துங்கள்!

– பாலன், திருச்சி.

இந்தச் செய்தி தங்களுடையது இல்லை என்று ஐஓசி நிறுவனமே மறுத்திருக்கிறது. உண்மையில் எரிபொருள் தளும்பத் தளும்ப நிரப்புவது ஆபத்து இல்லை. அது எந்த விபத்திலும் சிக்காத வரை. விபத்தில் சிக்கும்போதுதான் அது வெடிக்கும் ஆபத்துக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது. மற்றபடி, ஃபுல் டேங்க் நிரப்புவதில் தவறில்லை என்றாலும், தேவையில்லை என்றும் சொல்லலாம். அதேநேரம் வெற்றிடம் இல்லாமல் பெட்ரோல் நிரப்பும்போது, பெட்ரோல் சுலபமாக ஆவியாகும் என்பதுடன், விரிவடையும் தன்மை கொண்டது. மேலும், டேங்க்கில் கொஞ்சம்போல் இடம் இருந்தால்தான் அது இன்ஜினுக்குள் சுலபமாகச் சென்று இயங்க உதவி புரியும். பைக்குகளை சிலர் ஆட்டி ஆட்டி பெட்ரோலை நிரப்புவார்கள். அதுவும் அவசியமற்றது. இரவு மற்றும் அதிகாலை நேரம் பெட்ரோல் போடும்போது, எரிபொருள் அடர்த்தியாக இருக்கும். இதனால், மைலேஜ் ஓரளவு கூடும்.

சிலர் கார்களில் எரிபொருள் நிரப்பும்போது, ‘ஆட்டோ கட்’ ஆனதைத் தாண்டியும், தளும்பத் தளும்ப நிரப்புவார்கள். இதுவும் கூடாது. ‘ஆட்டோ கட்’ என்பதே எரிபொருள் இவ்வளவு செலுத்தினால் போதும் என்பதற்காகத்தான். மேலும், ‘ஆட்டோ கட்’ வரை நிரப்பும்போது, ஒரு காரின் மைலேஜ் எவ்வளவு என்பதையும் எளிதில் கண்டுபிடிக்கலாம். ‘ஆட்டோ கட்’டுக்குப் பிறகு, குறிப்பிட்ட தூரம் ஓடியபிறகு, மறுபடியும் ‘ஆட்டோ கட்’ வரை எரிபொருள் நிரப்பினால்… ஓடிய தூரத்தை வைத்து மைலேஜ் கண்டுபிடிக்கலாம்.

ஸ்கூட்டர்களில் ஃபுல் டேங்க் நிரப்பும்போது, அதன் எடை அதிகரிக்கும். இதனால் ஹேண்ட்லிங்கும், மைலேஜும், டைனமிக்ஸும் ஓரளவு பாதிக்கப்படலாம்.

அதாவது, எரிபொருள் முழுக்க நிரப்புவது என்பது, ஆபத்தான ஒன்றில்லை; அவசியமில்லாத ஒன்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism