Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

மோட்டார் விகடன் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன் விருதுகள்

இந்த ஆண்டின் மோட்டார் விகடன் பைக் ஆஃப் தி இயர்.

பைக் ஆஃப் தி இயர்: ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

ரெட்ரோ பைக் பிரிவில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த ராயல் என்ஃபீல்டுக்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் புதிய போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். எனவே, தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் புதிய தொழில்நுட்பங்களைக் கையில் எடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

இந்தியாவில் தனது சந்தை மதிப்பை மாற்றியமைத்த அதேசமயம், அதிர்வுகளுக்குப் பெயர்பெற்ற 350சிசி UCE இன்ஜினின் அடுத்த தலைமுறை வெர்ஷனை உருவாக்க வேண்டும்; அது பலதரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தும்படி அமைய வேண்டும்; மிக முக்கியமாக, முன்பிருந்ததைவிட அதிக விலை கொண்டதாக இது இருக்கக்கூடாது - இப்படிப் பல சுயகட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு மீட்டியார் 350 பைக்கைத் தயாரிக்கும் பணிகளில் இறங்கியது ராயல் என்ஃபீல்டு.

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே... இந்த க்ரூஸர் பைக், 3 வேரியன்ட்கள் - 7 கலர் ஆப்ஷன்கள் - Make It Yourself எனும் கஸ்டமைசேஷன் வசதி எனப் பல்வேறு ஆப்ஷன்களுடன் களமிறங்கிவிட்டது. முன்பைவிடச் சில வசதிக் குறைபாடுகள் இருந்தாலும், அது ரைடர்களுக்குப் பெரிய குறையாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தண்டர்பேர்டு பைக்கில் இருந்த எதுவுமே இந்த பைக்கில் பயன்படுத்தப்படவில்லை. இன்ஜின், ஃப்ரேம், ஸ்விட்ச்கள், மீட்டர், லைட்டிங், டயர்கள், பிரேக்ஸ், சஸ்பென்ஷன் என எல்லாமே புத்தம் புதிது. அதனால், மீட்டியார் 350-யை ஓட்டியபோது, அது புதுமாதிரியான ஓட்டுதல் அனுபவத்தைத் தந்தது.

தனது 650சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜினில் கற்ற வித்தையை, இதிலுள்ள சிங்கிள் சிலிண்டர் இன்ஜினிலும் சேஸியிலும் ராயல் என்ஃபீல்டு காட்டியிருக்கிறது. எனவே, அதிர்வுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. கியர்பாக்ஸும் கச்சிதமாகத் தனது பணியைச் செய்கிறது. மேலும் க்ளட்ச்சின் எடை போதுமான அளவில் இருந்ததுடன், ஃப்யூல் இன்ஜெக்ஷன் காரணமாக த்ராட்டில் ரெஸ்பான்ஸும் துல்லியமாக இருக்கிறது.

தண்டர்பேர்டைவிட மீட்டியார் 350-ன் எடை குறைவு என்பதுடன், திருப்பங்களில் பைக்கை ஓட்டுவதும் சுலபமாக இருந்தது. அகலமான டயர்கள் மற்றும் பெரிய டிஸ்க் பிரேக்கின் காம்போவும் பக்கா! `இதற்காகத்தானே காத்திருந்தோம்’ என்று காத்திருக்கும் பறக்கும் ராசாளிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த மீட்டியாரே, இந்த ஆண்டின் மோட்டார் விகடன் பைக் ஆஃப் தி இயர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர்: ஹீரோ பேஸன் ப்ரோ

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

100சிசியில் இருந்து 110சிசிக்குப் ப்ரமோஷன் பெற்றபிறகு, பேஸனின் பேக்கேஜிங் கொஞ்சம் மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது. அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்தும்படி வந்திருக்கும் BS-6 பேஸன் ப்ரோ, முற்றிலும் புதிய மெக்கானிக்கல் பாகங்களைத் தன்வசப்படுத்தியிருக்கிறது (இன்ஜின், சேஸி, சஸ்பென்ஷன்). இதற்கு ஈடுகொடுக்கும்படி, பலவித கலர்களுடன் கூடிய பாடி பேனல்கள், பேஸன் ப்ரோவுக்கு ஒரு 125சிசி பைக் போன்ற தோற்றத்தைக் கொடுத்தன. தனக்கே உரித்தான i3S உடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் இருக்கும் Creep வசதியை நினைவுபடுத்தும்படியான Autosail அம்சத்தை இதில் அறிமுகப்படுத்தி இருந்தது ஹீரோ. மேலும் ஹீரோவுக்கே உரித்தான பலங்களுடன் வந்திருக்கும் பேஸன் ப்ரோதான், இந்த ஆண்டின் கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர் ஆஃப் தி இயர்: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

மில்லினியல்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் 150 - 160 சிசி செக்மென்ட்டில், தான் விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் ஹீரோ இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடாக வந்த எக்ஸ்ட்ரீம் 160R, பைக் ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 100சிசி கம்யூட்டர் பைக்குகளுக்குப் பெயர் பெற்ற ஹீரோவிடமிருந்து, இதுபோன்றதொரு தயாரிப்பை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முழுக்க LED லைட்டிங், குறைவான 139.5 கிலோ எடை, துடிப்பான ஓட்டுதலுக்கு ஈடுகொடுக்கும் மெக்கானிக்கல் பேக்கேஜ், ஸ்டைலான டிசைன், போட்டி பைக்குகளுக்குச் சமமாக வசதிகள், கச்சிதமான விலை என ஒரு ஆல்ரவுண்டராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது எக்ஸ்ட்ரீம் 160R. 150-160சிசி கோதாவில் லேட்டாகக் குதித்தாலும், கடும்போட்டிக்கு இடையே இந்த விருதைத் தட்டிச் செல்கிறது இந்த எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டிங் பைக்.

என்ட்ரி ப்ரீமியம் பைக் ஆஃப் தி இயர்: ஹோண்டா ஹைனெஸ் CB 350

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

ராயல் என்ஃபீல்டுக்குச் சவால் விடும்படி இவ்வளவு நெருக்கமானதொரு தயாரிப்பை, ஹோண்டாவிடமிருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு ரெட்ரோ பைக்குக்கான இலக்கணங்களுடன் LED லைட்டிங், HSVCS, ஸ்லிப்பர் க்ளட்ச், HSTC போன்ற மாடர்ன் அம்சங்களுடன் இந்த ஹோண்டா பைக், அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. இதன் எக்ஸாஸ்ட் சத்தம், பலரையும் ஈர்த்தது. ஆக்டிவா மற்றும் ஷைனைத் தாண்டி, மற்ற டூ-வீலர் செக்மென்ட்களிலும் தனது கால்தடத்தை உறுதியாக வைத்துக் கொண்டிருக்கும் ஹோண்டாவின் புதிய லட்சுமி வெடி ஹார்னெட் 2.0 என்றால், அதிரடி சரவெடி இந்த ரெட்ரோ பைக். அதனால்தான் தனது சூப்பர் பைக்குகள் விற்பனையாகும் Big Wing ஷோரூம்களில், CB 350 பைக்கை இந்த நிறுவனம் பொசிஷன் செய்திருக்கிறது.

க்ரூஸர் ஆஃப் தி இயர்: ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

தண்டர்பேர்டு & தண்டர்பேர்டு X சீரிஸ் என இரு பைக்குகளுக்குப் பதிலாக, Meteor 350-யைக் களம் இறக்கியிருக்கிறது ராயல் என்பீல்டு. அகலமான டயர்கள், பெரிய பிரேக்ஸ், தடிமனான சேஸி என மெக்கானிக்கல் ரீதியாக முன்னேறியிருந்தாலும், முன்பைவிட பைக்கின் எடை 6 கிலோ குறைந்திருக்கிறது. தண்டர்பேர்டு பைக்கை நினைவுபடுத்தும்படியே புதிய இன்ஜினின் பவர்/டார்க் & கியர்பாக்ஸ் இருந்தன என்றாலும், மீட்டியார் 350-யை ஓட்டியபோது கிடைத்ததோ, ஆனந்த அதிர்ச்சி! ஆம், 100 கிமீ வேகத்தில்கூடப் பெரிதாக அதிர்வுகள் இல்லாமல் இன்ஜின் இயங்கியது. கியர்பாக்ஸும் துல்லியமாகச் செயல்பட்டது. ராயல் என்ஃபீல்டுக்கே உரித்தான Engine Thump - போனஸ். Tripper சிஸ்டம், பைக்கில் டூரிங் செல்லும் பார்ட்டிகளின் லைக்குகளைத் தன்வசப்படுத்தியுள்ளது.

Customize ஆப்ஷன் மூலம், நமது பைக்கை நாமே டிசைன் செய்து கொள்ளக்கூடிய மீட்டியார்தான், இந்த ஆண்டின் சிறந்த க்ரூஸர்.

ஸ்கூட்டர் ஆஃப் தி இயர்: ஹோண்டா ஆக்டிவா 6G

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

ஹோண்டா - வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் நீண்ட நாள்களாக ஆக்டிவாவில் எதிர்பார்த்த விஷயங்களை 6G மாடலில் இந்த நிறுவனம் சேர்த்ததுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். வழக்கமான 110சிசி ஸ்கூட்டராக இருந்தாலும், சைலன்ட் ஸ்டார்ட் - ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச் - eSP/ACG தொழில்நுட்பம் போன்ற ப்ரீமியம் அம்சங்கள் இதில் இருப்பது ப்ளஸ். மேலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க், வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, பெரிய முன்பக்க வீல், அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர் என இந்த ஆக்டிவா, ஓட்டுதலில் பலமடங்கு பக்குவமடைந்த மாடலாக மாறியிருக்கிறது. இதனுடன் கட்டுபடியாகக் கூடிய விலை, பரந்துவிரிந்த டீலர் நெட்வொர்க், பிராண்ட் மதிப்பு ஆகியவை ஒன்றுசேர்ந்துவிட்டதால், இந்த 6G-யின் அசுரத்தனத்தை யாராலுமே நெருங்க முடியவில்லை.

டெக்னாலஜி ஆஃப் தி இயர்: டிவிஎஸ்

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

அப்பாச்சி RR 310-ல் பவர்ஃபுல் மற்றும் விலை அதிகமான பைக்குகளில் காணப்படும் ரைடிங் மோடுகள் என்ற அம்சத்தை, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுக்குள் அசால்ட்டாகப் புகுத்தியிருக்கிறது டிவிஎஸ். அர்பன், ரெயின், ஸ்போர்ட் எனும் இவை பெயரளவில் இல்லாமல், நிஜமாகவே இன்ஜினின் இயங்குதிறனைத் தமது பெயருக்கேற்றபடி மாற்றியமைக்கின்றன. மேலும் என்டார்க்கில் நமக்கு அறிமுகமான Smart Xonnect, அப்பாச்சி பைக்குகளில் அடுத்தகட்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. இதில் Turn by Turn நேவிகேஷனைத் தாண்டி, பைக்கை நாம் எப்படி ஓட்டுகிறோம் என்பது குறித்த முழு தகவல்களையும் ரிப்போர்ட்டாகவே தருகிறது. RTR 200-ல் Preload அட்ஜஸ்டபிள் டெலிஸ்கோபிக் ஃபோர்க் & அட்ஜஸ்டபிள் லீவர்கள் என்றால், அப்பாச்சி RR 310 பைக்கில் TFT டிஸ்பிளே & Ride By Wire என தனது குட்டிக் குட்டி பைக்குகளிலும்கூட தொழில்நுட்பத்தில் அசத்திவிட்டது டிவிஎஸ்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃப் தி இயர்: ஏத்தர் 450X

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில், இந்த ஆண்டைத் தொடங்கி வைத்தது எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் என்பது எதிர்காலத்துக்கான முதல்படி. அவை எல்லாமே இந்திய நிறுவனங்களிடமிருந்து வெளிவந்ததுதான் வியப்பளிக்கும் விஷயம். இந்த ஏரியாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள ஏத்தர், தனது 450 மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. புதிய கலர்களைத் தாண்டி, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட புதிய டச் ஸ்க்ரீன் இடம்பெற்றிருந்தது. இதில் OTA, Dark Mode, 4G eSIM போன்ற வசதிகள் இருந்தன. மேலும் திறன் கூட்டப்பட்ட லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாருடன், எடை குறைக்கப்பட்ட ஸ்டீல் - அலுமினிய சேஸி இணைக்கப்பட்டது. இதனால் முன்பைவிட இந்த ஏத்தரின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் கையாளுமை அதிரடியாக இருந்ததுடன், எதிர்பார்த்தபடியே ஓட்டுதலிலும் ரேஞ்சிலும் முன்னேற்றம் தெரிந்தது. 450X-ன் விற்பனை அனுபவம் வாடிக்கையாளருக்குச் சுலபமாக அமையும்படியான நடவடிக்கைகளை, இந்த நிறுவனம் லாக்டெளன் காலத்தில் எடுத்திருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் ஸ்போர்ட்டியான டிசைன், ஒட்டுமொத்தத் தரம், அதிக வசதிகள், அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ், போதுமான ரேஞ்ச் எனத் தனது பலங்களை மெறுகேற்றியுள்ள 450X, இந்த ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

சிறந்த போன்: சாம்சங் S20 ப்ளஸ்

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

போட்டி போட எத்தனை நிறுவனங்கள் வந்தாலும், தனக்கான இடத்தை என்றுமே விட்டுக் கொடுக்காமல், அதற்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி ராஜாவாக அமர்ந்திருக்கிறது சாம்சங். மிட்ரேஞ்ச், பட்ஜெட் செக்மென்ட் போன்களில் புதுமை இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அதன் ப்ரீமியம் `S' சீரிஸ் மாடல்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் மக்களை 'வாவ்' சொல்ல வைக்கத் தவறியதில்லை சாம்சங். அப்படித்தான் இந்த வருடம் S20 சீரிஸ் அசத்தலாக வெளிவந்தது. இந்த சீரிஸில் வந்த மூன்று போன்களுமே பார்த்ததும் காதல் கொள்ள வைத்தாலும் நம்மைப் பெரிதும் கவர்ந்தது S20 ப்ளஸ்தான். 73,999 ரூபாய் விலையில் நிறைவான போனாக அறிமுகமானது சாம்சங் S20 ப்ளஸ். தரமான டிசைன் & பில்டு, வேற லெவல் பெர்ஃபாமென்ஸ், ஸ்மூத்தான மென்பொருள் அனுபவம், மிரளவைக்கும் கேமராக்கள் என குறைகளே வைக்கவில்லை சாம்சங் S20 ப்ளஸ்.

சிறந்த பட்ஜெட் போன்: ரெட்மி நோட் 9 ப்ரோ

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் போன்கள், பட்ஜெட் செக்மென்ட் போன்கள்தான். முன்பெல்லாம் 10,000 ரூபாய்க்கு போன் வாங்கினாலே அது பெரிய விஷயமாகத் தெரியும். இன்று 15,000 ரூபாய்க்குள் வெளிவரும் போன்கள் அனைத்தையும் பட்ஜெட் போன்கள் என அழைக்கும் நிலை. இந்த செக்மென்ட்டில் சில ஆண்டுகளாவே ரெட்மிதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை. ரெட்மியின் பிரபல நோட் சீரிஸில் புதிய என்ட்ரியாக அறிமுகமானது ரெட்மி நோட் 9 ப்ரோ. கேமராவில் மட்டும் குறை வைத்ததுபோல இருந்தாலும், மற்ற விஷயங்களில் டிஸ்டிங்ஷன் பெற்றது நோட் 9 ப்ரோ. மக்கள் மத்தியில் இதற்கு எந்த அளவு மவுசு இருந்தது என்பது இதன் விற்பனை நிலவரங்களைப் பார்த்தாலே புரிந்துவிடும். காரணம், மக்கள் அனைவரும் விரும்பும் விலையில் வெளிவந்தது ரெட்மி நோட் 9 ப்ரோ.

சிறந்த ப்ரீமியம் போன்: ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

மோட்டார் விகடன் விருதுகள் 2021 - பைக் - கேட்ஜெட்ஸ்

ப்ரீமியம் என்றாலே மிக அதிக விலை என்பதை மாற்றி எழுதிய நிறுவனம் ஒன்ப்ளஸ். `ப்ரோ' என்ற அடைமொழிக்கு ஏற்ப வசதிகள் அனைத்துமே `ப்ரோ'தான். `இந்த விலைக்கு இந்த வசதியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என எப்போதுமே சில சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் அதன் ஸ்மார்ட்போனில் தராமல் இருக்கும் ஒன்ப்ளஸ். இது பெரிய குறையாகத் தெரியாது. ஆனால் ஆப்பிள், சாம்சங் போன்ற ப்ரீமியம் போன்களில் இருப்பது நம்மிடம் இல்லையே என்ற சின்ன ஏக்கம் வாடிக்கையாளர்களிடம் இருக்கும். ஆனால், இம்முறை `எல்லாவிதத்திலும் எங்கள் போன் ப்ரீமியம் போன்தான்' என இறங்கி அடித்திருக்கிறது ஒன்ப்ளஸ். இம்முறை வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங் என அனைத்தையும் கொடுத்தது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ்ஸை அடுத்த லீக்குக்கு எடுத்துச் சென்றது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ.