Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2022 / பைக்ஸ்

மோட்டார் விகடன் விருதுகள்/ பைக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன் விருதுகள்/ பைக்ஸ்

சிறந்த பைக்ஸ் 2022

விருது சீஸன் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இந்த முறை வாசகர்கள் நம்மை முந்திக்கொண்டு, ‘‘எங்கள் ஓட்டு யாருக்குத் தெரியுமா?’’ என்று கேட்டு மெயில்/கடிதம்/சமூக வலைதளம் என்று பல ஏரியாக்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டார்கள். மோட்டார் விகடன் நடுவர்கள் குழுவும், வாசகர்களின் கருத்தும் இயைந்துபோன சில முடிவுகளின்படிதான் இந்த ஆண்டும் விருதுகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த மனதையும், மோட்டார் விகடன் விருதுகளையும் வென்ற 2022–ம் ஆண்டுக்கான சிறந்த கார்/பைக்குகளின் அணிவகுப்பு இங்கே ஆரம்பமாகிறது!

யமஹா R15 V4 & R15  M
யமஹா R15 V4 & R15 M
யமஹா R15 V4 & R15  M
யமஹா R15 V4 & R15 M

பைக்ஸ் ஆஃப் தி இயர் 2022

யமஹா R15 V4 & R15 M

டிவிஎஸ்-க்கு எப்படி அப்பாச்சியோ, அப்படி யமஹாவுக்கு R15. இந்திய இளைஞன் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வில் ஒரு கட்டத்திலாவது யமஹா என்பது ட்ரீம் பைக்காக இருந்திருக்கும். அதனுடைய லுக்கும் ஸ்டைலும் பார்ப்பவர்களை அங்கேயே கட்டிப்போடும். சீரான கால இடைவெளியில், R15-க்குப் புத்துயிர் கொடுத்து புதிய R15-வை அறிமுகப்படுத்தும் யமஹா. இந்த ஆண்டு R15-ன் நான்காவது வெர்ஷனாக யமஹா R15 V4 மற்றும் R15 M ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது.

புதிய யமஹா பைக்குகளில் என்னவெல்லாம் இருக்கிறது என்று கேட்பதைவிட என்னவெல்லாம் இல்லை என்று தான் கேட்கவேண்டும். யமஹாவின் Yconnect ஆப் கனெக்டட் புளூடூத் தொழில்நுட்பம், பளீரென அடிக்கும் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், காதைக் கிழிக்காத புரொஃபஷனல் டூயல் ஹார்ன் சத்தம், மொபைல் சார்ஜர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்.. என ஏகப்பட்ட புதிய வசதிகளை அனைத்தையுமே புதிய R15 மாடல்களில் கொடுத்திருக்கிறது அது. மொபைல் மூலமே பைக்கின் கன்ட்ரோல்களைச் செய்து கொள்வது இளசுகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இன்ஜினும் செம! குறைந்த ஆர்பிஎம்மிலேயே நிறைந்த டார்க்கைத் தரும் VVA தொழில்நுட்பம் கொண்ட 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், செம ஸ்மூத். ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்கு கேடிஎம்-ல் இருப்பதுபோல் ஸ்லிப்பர் அண்ட் அசிஸ்ட் க்ளட்ச், USD ஃபோர்க்ஸ் என்று எவ்வளவு வசதிகள். இதில் பார்த்த உடனேயே விரட்டத் தோன்றும் மோட்டோ ஜிபி எடிஷன், ரைடர்களின் சாய்ஸாக இருக்கலாம். இப்படி லுக்கில் இருந்து ஓவர்-ஆல் பேக்கேஜாக அசத்தும் R15-ன் V4 மற்றும் M பைக்குகள்தான், பைக்ஸ் ஆஃப் தி இயர் 2022.

டிவிஎஸ் ரெய்டர் 125
டிவிஎஸ் ரெய்டர் 125

கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர் 2022

டிவிஎஸ் ரெய்டர் 125

கம்யூட்டர்களை மட்டுமல்ல; இளசுகளையும் மனதில் வைத்து, எனெர்ஜிட்டிக்காகப் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் ஸ்டைலாக, அதே நேரம் பக்கா கம்யூட்டராகக் களமிறங்கிய ரெய்டர் 125தான் இந்த ஆண்டின் கம்யூட்டர் பைக் ஆஃப் தி இயர். பார்த்தவுடன் 150சிசியோ என்று திகைக்க வைக்கும் இதன் டிசைனுக்காகவே இதற்கு லைக்ஸ் போடலாம். பெர்ஃபாமன்ஸ், பாதுகாப்பு, வசதிகள் என எல்லாவற்றிலும் இறங்கி அடித்து ஒரு ஆல்ரவுண்டரைக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். புளூடூத் வசதி வருவதற்கு முன்பே இந்த ரெய்டர், ரைடர்கள் மனசில் இடம் பிடித்து விட்டது. 100 சிசி மற்றும் 150 சிசி வாடிக்கையாளர்களைக்கூட இந்த 125 சிசி கம்யூட்டர், தன் பக்கமாக ஈர்க்கும் வாய்ப்புகள் உண்டு. வாழ்த்துகள் டிவிஎஸ்.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

ஃபேஸ்லிஃப்ட் ஆஃப் தி இயர் 2022

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

டிவிஎஸ்ஸின் ஃப்ளாக்க்ஷிப் பைக்கான அப்பாச்சி - பட்ஜெட், பயன்பாடு, ஸ்போர்ட்டி லுக் என்று எல்லா ஏரியாக்களிலும் கில்லியாக இருக்கிறது. நீங்கள் அப்பாச்சி பைக் வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். பைக்கை டெலிவரி எடுப்பதற்குள், அப்பாச்சியில் புது அப்டேட்களைக் கொண்டு வந்திருக்கும் டிவிஎஸ். இந்த ஆண்டும் அப்படித்தான். 200சிசியைத் தொடர்ந்து 160சிசியில் பெர்ஃபாமன்ஸுக்கு எக்ஸ்ட்ரா பவர் (17.4bhp), எளிமையான கையாளுதலுக்கு எடைக்குறைப்பு (145kg), டிராஃபிக்கில் தானாக மூவ் ஆகும் GTT (Glide Through Technology) என மழைச்சாரல்போல அப்டேட்களைக் கொடுக்க, பேஸ்லிஃப்ட் ஆஃப் தி இயர் 2022 விருதைப் பெறுகிறது அப்பாச்சி RTR 160 4V. (விருது வாங்குவதற்குள் அடுத்த் ஃபேஸ்லிஃப்ட் வந்தாலும் ஆச்சரியமில்லை மக்களே!)

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

ரெட்ரோ பைக் ஆஃப் தி இயர் 2022

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

ரெட்ரோ பைக்குகளின் மூத்த குடி என்றால், ராய்ல என்ஃபீல்டுதான். ஆனால், மில்லினியல் மாடர்ன் அம்சங்களையும் க்ளாஸிக்கில் கலந்தடித்து, அதை அட்ராக்‌ஷனாகக் கொடுப்பதிலும் ராயல் என்ஃபீல்டை மிஞ்ச யாருமில்லை. இந்த ஆண்டு புதிய இன்ஜின், புதிய வசதிகள் மற்றும் புதிய அப்டேட்டோடு ஃப்ரெஷ்ஷாக களமிறங்கியிருக்கிறது புல்லட் க்ளாஸிக் 350சிசி. என்னதான் க்ளாஸிக் 350 லெஜண்ட்தான் என்றாலும், 95 கிமீ வேகத்தைக் கடந்தவுடன் நமது கைகளும் நடனமாடத் தொடங்கும் அளவுக்கு ஒரு வைப்ரேஷன் இருக்கும். ஆனால், மீட்டியாரில் பயன்படுத்தப்பட்ட இன்ஜினுடன் மீட்டியாரின் சிறப்பம்சங்களையும் (முக்கியமாக Turn by Turn Navigation, சின்ன டிஜிட்டல் மீட்டர், ஆப்ஷனல் டூயல் சேனல் ஏபிஎஸ் ) அச்சுப் பிசகாமல் எடுத்து வந்து க்ளாஸிக் 350-க்குப் பொருத்தி ராயல் என்ஃபீல்டு அழகு பார்த்தது வீணாகவில்லை. 100 கிமீ வேகத்திலும் இப்போது அதிராத பயணம் இந்த ரெட்ரோ க்ளாஸிக்கில். கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம் க்ளாஸிக் 350-க்கு இந்த விருதை.

டிவிஎஸ் ஜூபிட்டர் 125
டிவிஎஸ் ஜூபிட்டர் 125

ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் 2022

டிவிஎஸ் ஜூபிட்டர் 125

110 சிசி ஜூபிட்டரின் இதயத்தைக் கொஞ்சம் பெரிதாக்கி, ரெய்டர்-என்டார்க்கில் இருக்கும் 125 சிசியைப் பொருத்தியிருக்கிறது டிவிஎஸ். வசதிகளிலும் பயன்பாட்டிலும் நம்மை அசரடித்திருக்கிறது. அதிலும் அந்த வெளிப்புற - அதுவும் முன்பக்க பெட்ரோல் ஃபில்லிங், 2 ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு 33லிட்டர் கொண்ட அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடம், 125சிசிக்கே உரிய 8.3bhp பவர், டிரைவிங் மோடுகள், சத்தம் போடாத இன்ஜின் ரிஃபைன்மென்ட், ஏற்றப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் (165 மிமீ), புளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன், எர்கனாமிக்ஸ், டிஸ்க் பிரேக் ஆப்ஷன், முக்கியமாக போட்டி ஸ்கூட்டர்களைவிட குறைந்த விலை என எல்லாமே ஜூபிட்டரில் சிறப்பு. நிச்சயம் 2022-க்கான சிறந்த ஸ்கூட்டர் - ஜூபிட்டர் 125தான்.

கேடிஎம் RC 200
கேடிஎம் RC 200

ட்ராக் பைக் ஆஃப் தி இயர் 2022

கேடிஎம் RC 200

இப்படி ஒரு விருது தரக் காரணமாக இருந்ததற்காகவே கேடிஎம் RC 200-க்கு ஒரு நன்றி. சும்மாவே பின்னே... மோட்டோ ஜிபி பைக்குகளை மாதிரியாக வைத்து ரெடி செய்யப்பட்ட இதன் ஃப்ரேம், யாருக்குத்தான் பிடிக்காது. பழசைவிட பவர் டு வெயிட் ரேஷியோவில் கலக்குவதால், ட்ராக்கில் பறக்க இந்த RC 200 இன்னும் செமையாக இருக்கிறது. 25bhp பவர் கொண்ட இதன் லிக்விட் கூல்டு இன்ஜினின் பேய்த்தன பெர்ஃபாமன்ஸை உணர, சாதாரண அவுட்டர் ரிங் ரோடுகள்கூட பத்தாது பாஸ். 7.9 விநாடிகளில் 100 கிமீ தாண்டி விட்டது RC 200. புனே ட்ராக்கில் ஓட்டியபோது, 140 கிமீக்கு மேல் சிறுத்தையாகச் சீறியது RC 200. உயரம் குறைவானவர்களுக்கு ஹேண்டில் பார் அட்ஜஸ்ட் செய்யும் வசதிய்ம் இருப்பது செம! ட்ராக்குக்கு மட்டுமல்லாமல், சாதா சாலைகளுக்கும் ஏற்ப இதன் சஸ்பென்ஷன் செட்-அப்பையும் கொஞ்சூண்டு சாஃப்ட் ஆக மாற்றியிருக்கிறது கேடிஎம். எவ்வளவு மாறினாலும் விலையை மாற்றாமல் இருந்ததற்காகவே கேடிஎம்மின் இந்த ட்ராக் பைக்குக்கு ஒரு வேரியன்ட்ஸ் ஆஃப் தி இயர் 2022விருது பார்சேல்!

பஜாஜ் பல்ஸர் F250 & N250
பஜாஜ் பல்ஸர் F250 & N250

வேரியன்ட்ஸ் ஆஃப் தி இயர் 2022

பஜாஜ் பல்ஸர் F250 & N250

பல்ஸர் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும்விதமாக இரண்டு பிக்பாய்ஸைக் களமிறக்கியிருந்தது பல்ஸர். F250 மற்றும் N250. F என்றால் Faired. N என்றால் Naked. பல்ஸரின் NS, RS, AS என்று எந்த சீரிஸிலும் இது கிடையாது. இது வெறும் பல்ஸர் என்று முன்பே சொல்லிவிட்டது பஜாஜ். சிட்டிக்குள் புகுந்து புறப்பட N நேக்கட் பைக், வெறித்தனமாக சாலைகளில் பறக்க ஃபேரிங் மாடல் கொண்ட F. இப்படிப் பார்த்துப் பார்த்து இந்த ஃபேஸ்லிஃப்ட்டை ரெடி செய்திருக்கிறது பஜாஜ். இன்ஜின் சிலிண்டரில் வால்வுகளை அதிகப்படுத்தி, ஸ்லிப்பர் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் என்று வசதிகளைக் கூடுதலாகக் கொடுத்து, (அடுத்த ஆண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 6 ஸ்பீடு கியர் எதிர்பார்க்கிறோம் பஜாஜ்!) விலையை 150சிசிக்கு இணையாகக் குறைத்து பஜாஜ் வெளியிட்ட இந்த F250 மற்றும் N250 பைக்குகள்தான், வேரியன்ட்ஸ் ஆஃப் தி இயர் விருது வென்றிருக்கின்றன.