கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

“சடர்ன் பிரேக் அடிப்பதில்கூட ட்ரிக் இருக்கு!’’

கார்த்திக்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திக்

நம்ம ஊரு மெக்கானிக்: வேலூர்

2 ஸ்ட்ரோக் பைக்குகள் தொடங்கி, BS-4, BS-6 என்று எல்லா பைக்குகளையும் ஒரு கை பார்க்கிறார், வேலூர் சத்துவாச்சாரி அருகிலிருக்கும் பெருமுகையைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்திக். கம்பெனி சர்வீஸ் அளவுக்குத் தொழிலில் தரம் இருப்பதால், கார்த்திக்கின் பெயர் சத்துவாச்சாரி வட்டாரத்தில் பிரபலம். ஒர்க்‌ஷாப்பில் ஸ்பானரும் கையுமாகப் பிடித்தேன் கார்த்திக்கை.

‘‘சொந்த ஊரு சேலம். அப்பா, அம்மா பொழைப்புத் தேடி வந்த ஊருதான் வேலூர். இங்கதான் பொறந்து வளர்ந்தேன். அஞ்சாம் வகுப்பு வரைக்குத்தான் ஸ்கூல் போக முடிஞ்சது. கொட்டுற மழையில குடிசை ஒழுகி, புத்தகம் நனைஞ்சு போனதுனால, பேனாவுக்குப் பதிலா ஸ்பானரைக் கையில எடுத்தேன். அப்போ எனக்கு 11 வயசு.

ரங்காபுரத்தில் வொர்க்ஷாப் வச்சிருந்த சதீஷ் அண்ணன்கிட்ட என் அப்பா வேலைக்குச் சேர்த்துவிட்டாரு. அவர்தான் என்னோட ஆஸ்தான குரு. ஷெட்டுக்கு வர்ற பைக்குகளைத் தொட்டுப் பார்த்து, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஓட்டவும் செஞ்சேன். பத்து வருஷம் ஒரே ஒர்க் ஷாப்புலயே இருந்து வேலைய கிளியரா கத்துக்கிட்டேன்!’’ என்று தன் கிரீஸ் படர்ந்த ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்த கார்த்திக், தொடர்ந்தார்.

‘‘அப்புறமா ஒரு இடத்துல சீஃப் மெக்கானிக். கொஞ்ச நாள்ல கஷ்டப்பட்டு பெருமுகையில தனியா ஷெட்டு ஆரம்பிச்சிட்டேன். முதன் முதல்ல சொந்தமா செகண்ட் ஹேண்ட் ஸ்ப்ளெண்டர் பைக்கை வாங்குனேன். இப்போ கேடிஎம் டியூக் பைக் வச்சிருக்கேன். குடிசையும் கான்கிரீட் வீடா மாறிடுச்சு. இந்த முன்னேற்றத்துக்கு எல்லாம் காரணம் இந்தத் தொழில நான் விரும்பிச் செஞ்சதுதான். பைக் மெக்கானிக் தொழிலோடு சேர்த்து இப்போ கார் பெயின்ட்டிங் வேலையும் செய்றேன்.

வேலூர் எவ்வளவு பெருசா வளர்ந்தாலும், என் கஸ்டமர்கள் என்னைய விட்டுப் போகல. பைக்ல சின்னச் சின்னப் பிரச்னை இருந்தாலும் என்கிட்டதான் வருவாங்க. யமஹா, சுஸூகி 2 ஸ்ட்ரோக் பைக்குகள்தான் நிறைய வரும். இன்னமும் அந்த பைக்குகளுக்குச் செம டிமாண்ட் இருக்கு!’’ என்றவர் பைக்கை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்த டிப்ஸ்களையும் கூறினார்.

``வேலூர் மாநகர ரோடுகள் குண்டும் குழியுமாத்தான் இருக்கு. இந்த மாதிரி ரோட்டுல 20, 30 கிமீ வேகத்துல ஓட்டுனாலே போதுமானது. இல்லைனா, முதுகு வலியோட பைக் இன்ஜின், சாக்ஸும் சேர்த்து அடிவாங்கும். ஹோண்டா ஆக்டிவா மாதிரியான ஸ்கூட்டர்களை 1,500 கிமீ ஓட்டுன உடனே ஆயில் சர்வீஸ் பண்ணிட்டா பெட்டர். 100 சிசி பைக்குகள் 2,500 கிமீ வரைக்கும் தாங்கும்! 250 சிசி பைக்குகள் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிமீ எடுத்துக்கலாம்.

“சடர்ன் பிரேக் அடிப்பதில்கூட 
ட்ரிக் இருக்கு!’’

எந்தவிதமான பைக்குகளாக இருந்தாலும் ஏர் ஃபில்ட்டர், பிரேக் ஷூ, வீல் ஃபேரிங், பிரேக் கேபிள் போன்றவற்றை அடிக்கடி மாத்தி மெயின்டெயின் பண்ணனும். சாதா பைக்குகளின் செயின் ஸ்ப்ராக்கெட்டுகளுக்கு, கார் கியர் பாக்ஸ் ஆயிலைப் போட்டாலே போதும். அதுவே, ஃலைப் வரும். சிசி அதிகமான ஓப்பன் டைப் செயின் ஸ்ப்ராக் கெட்டுகளுக்குக் கண்டிப்பாக ஸ்ப்ரே அடித்தால்தான் கரகரப்பான தேய்மான சத்தம் வராது.

சர்வீஸ் முடிஞ்சு பைக்கை எடுக்கும்போது, என் கஸ்டமர்கள்கிட்ட பைக்கை ஒரு தடவை செக் பண்ணிட்டு சொல்லுங்கனு சொல்வேன். காரணம் - சில மெக்கானிக்குள் கைவரிசை காட்டுவார்கள். ஆயில் மாத்துனேன்; ஃபேரிங் மாத்துனேன்; க்ளட்ச் ப்ளேட் போட்டேன்; ஃபோர்க் கழற்றி இறக்கி ஏத்திருக்கேன்னு சொல்லி எக்ஸ்ட்ரா பில் போடுவாங்க. செயின் ஸ்ப்ராக்கெட் மாத்திருக்கிறேன் என்றால் வீலைச் சுற்றிப் பார்க்கலாம். க்ளட்ச் ப்ளேட் மாத்தியிருந்தா, க்ளட்ச் விடும்போது ஃப்ரீயா போகும். இதேபோன்று பழுதான பாகங்களைச் சரிசெய்தது போன்றவற்றை, பைக்கைப் பார்த்தோ அல்லது ஓட்டிப் பார்த்தோ கண்டுபிடிச்சி டலாம்!” என்றார் கார்த்திக்.

 தேய்மான டயர் ரிஸ்க்!

டயர் நல்லா தேஞ்சி போனாலும், நூல் தெரிஞ்ச பிறகு புது டயர் மாத்திக்கலாம்னு சிலர் அப்படியே ஓட்டுவாங்க. அது ரொம்பத் தப்பு. விபத்துகூட ஏற்பட வாய்ப்பிருக்கு. கால் பட்டன் தேஞ்ச பின்னாடி டயரை மாத்திடுறது நல்லது. வெடிப்பு வெடிப்பாக இருந்தாலும் டயரை மாத்திடணும்.

 சடர்ன் பிரேக் எப்படி அடிப்பது?

100 கிமீ வேகத்துல பைக்கை ஓட்டிக்கிட்டுப் போறோம்னு வச்சிக்கோங்க. அப்போ, திடீரென ஃப்ரன்ட் டிஸ்க் பிடித்தால் வாரிவிட்டுடும். கியரில் இருக்கும்போது, ரியர் பிரேக்கை மூன்று நான்கு முறை அடித்து அடித்து விட்ட பிறகு ஃப்ரன்ட் டிஸ்க்கை அடிக்கணும். அப்போதான் டயருக்கு கிரிப் கிடைக்கும். கீழே விழமாட்டீங்க!

 துருப்பிடிக்காமல் இருக்க…!

பைக்கில் சில இடங்களில் எளிதாக துருப்பிடிக்கும். அங்கெல்லாம் பழைய இன்ஜின் ஆயிலைப் பூசிவிட்டாலே போதும். ஆயில் டிரை ஆகும் வரை துருப்பிடிக்காது.