Published:Updated:

‘‘பைக்குக்கு உயிர் இல்லைனு யாரு சொன்னது?’’

ஈரோடு பாலு
பிரீமியம் ஸ்டோரி
ஈரோடு பாலு

நம்ம ஊரு மெக்கானிக்: ஈரோடு பாலு

‘‘பைக்குக்கு உயிர் இல்லைனு யாரு சொன்னது?’’

நம்ம ஊரு மெக்கானிக்: ஈரோடு பாலு

Published:Updated:
ஈரோடு பாலு
பிரீமியம் ஸ்டோரி
ஈரோடு பாலு
‘‘பைக்குக்கு உயிர் இல்லைனு யாரு சொன்னது?’’

கடனை உடனை வாங்கி பெட்ரோல் போட்டு வண்டியெல்லாம்கூட ஓட்டிவிடலாம். ஆனால், அதற்குச் சரியான மெக்கானிக் கிடைப்பதற்குப் படும் பாடு இருக்கிறதே! ஆனால், ஈரோட்டுக்காரர்கள் இப்படிச் சலிப்பதில்லை. காரணம், மெக்கானிக் பாலு.

ஐசியூ கண்டிஷனில் இருக்கும் ஸ்கூட்டர்களில் இருந்து, சோர்வாக இருக்கும் சூப்பர் பைக்ஸ் வரை எந்தப் பிரச்னையெனக் கொண்டு சென்றாலும் பிரித்து மேய்ந்து, பறக்க வைக்கிறார். நிஜம்தான்; பணத்தை மையமாக வைக்காமல், டூ–வீலர்களைக் காதலிப்பவர்களால் மட்டும்தான் வாடிக்கையாளர்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஒருவர்தான் பாலு.

ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகே, நேரு வீதியில் நெரிசலான சாலையின் ஓரம் ‘சிவா ஆட்டோ ஒர்க்ஸ்’ என்ற ஒர்க்‌ஷாப் வரவேற்றது. குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களைப்போல. ஒர்க்‌ஷாப் முழுக்க டூவிலர்களின் பாகங்கள் பிரித்து போடப்பட்டுக் கிடக்க, ஊழியர்கள் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஏதோ ஒரு பைக்குக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டிருந்த பாலு, ஊழியரை டீ வாங்கி வரச் சொல்லிவிட்டு, நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“என் பேரு பாலசுப்பிரமணியன். பாலுனு சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும். ஈரோடு மாவட்டம், அரச்சலூர்தான் என்னோட சொந்த ஊர். 7-வது வரைக்கும் தான் படிப்பு. 12 வயசுல, ஈரோடு பஸ் ஸ்டாண்டு பக்கத்துல எங்களோட சொந்தக்காரரான குமார்ங்கிற அண்ணனோட ஒர்க்ஷாப்ல வேலைக்குச் சேர்ந்தேன். வாரம் அஞ்சு ரூபாதான் சம்பளம். மொபட்ல ஆரம்பிச்சி புல்லட் வரைக்கும் ஒர்க்‌ஷாப்புக்கு வந்த எல்லா வண்டியையும் சர்வீஸ் செய்ய கத்துக்கிட்டேன். குமார் அண்ணன்கிட்ட இருந்து வெளிய வந்து 1997-ல் 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டுல ‘சிவா ஆட்டோ ஒர்க்ஸ்’ங்கிற ஒர்க்‌ஷாப்பைத் தொடங்குனேன். எங்க அப்பா இறந்த பின்னாடி, எங்க தாய்மாமா சிவாதான் எல்லாமாவும் இருந்தார். அதுக்குத்தான் அவரோட பேரை என்னோட ஒர்க்‌ஷாப்புக்கு வச்சேன்.

1997-ல இருந்து 2000 வரை பஜாஜ் ஸ்கூட்டர்தான் அதிகம் சர்வீஸ் பண்ணுனேன். ஸ்கூட்டர் பாலுனுதான் என்னை கூப்புடுவாங்க. அப்புறம் பைக், புல்லட், சூப்பர் பைக்ன்னு போய்க்கிட்டு இருக்கு. டிரையம்ப், பிஎம்டபிள்யூ, டுகாட்டி, காவாஸகி நின்ஜா, சுஸூகி ஹயபூஸா இப்படி 100 சூப்பர் பைக்ஸ் வேலை செஞ்சாச்சி. நட்டு போல்ட்டை எல்லாம் ஸ்பேனர்ல கழட்டாம, ஏர்கன் மெஷின்ல கழட்டுறதுன்னு ஒர்க்‌ஷாப்பை ஹைடெக்காக வச்சிருக்கேன். பல ஊர்கள்ல இருந்து என்கிட்ட பைக்கை சர்வீஸ்க்கு எடுத்துட்டு வர்றாங்க. ஒர்க்‌ஷாப்ல 50 வண்டி நின்னாலும், தினமும் பொறுமையா 5-6 வண்டி வரைக்கும்தான் வேலை பார்க்குறேன்.

‘‘பைக்குக்கு உயிர் இல்லைனு யாரு சொன்னது?’’

2 லட்ச ரூபாய் செலவுல பஜாஜ் டொமினார் 400 இன்ஜினை எடுத்து ‘பவர் ஹேண்ட் கிளைடர்’ செஞ்சிருக்கேன். 2 ஆயிரம் அடிக்கு மேல அதைப் பறக்க வைக்கிறதுக்காக ரன்வேயில் டெஸ்டிங் செஞ்சுக்கிட்டு இருக்கேன். குறைந்த எரிபொருளில் ஒரு ஆள் பயணம் செய்யக்கூடிய வகையில் இந்த பவர் ஹேண்ட் கிளைடர் இருக்கும். குழந்தைகளுக்காக 3 அடி உயரமுள்ள சின்ன சைஸ் மோட்டார் சைக்கிளை, ரிமோட் டைப்ல இதுவரை 100-க்கும் மேல செஞ்சு கொடுத்துருக்கேன். மாற்றுத் திறனாளிகளுக்காக 3 சக்கர ஸ்கூட்டர்ஸ் மற்றும் கைகிட்டயே கியர், பிரேக் செட்டப் இருக்கிற மாதிரி நிறைய பைக் செஞ்சு கொடுத்துருக்கோம். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கிற பசங்களுக்கு அவங்களோட ப்ராஜெக்ட்டுக்காக, ஹைபிரிட் பைக் போன்ற ப்ராஜெக்ட்டுகள் பண்ண நிறைய ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஈரோட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவரைக்கும் 10 வகுப்பு வரை எடுத்துருக்கேன்.

கொரோனா டைம்ல எனக்கு ரொம்ப சீரியஸ் ஆகிடுச்சி. நான் பொழைக்கவே மாட்டேன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க. ஒருவழியா தேறி ஒருவாரம் கழிச்சி ஒர்க்‌ஷாப் போனப்ப, நண்பர் ஒருத்தரு டிரையம்ப் டைகர் பைக்கைக் கொண்டு வந்து ‘ஓட்டுறீங்களாண்ணே’ன்னு கேட்டாரு. என்னால பைக்கை பேலன்ஸ் பண்ணக் கூட முடியலை. பைக்கை ஸ்டார்ட் பண்ணி சைலன்ஸர் உறுமுனதும் என் ஹார்ட்பீட் ஜம்ப் ஆகிடுச்சி. பைக்ல ஒரு ரவுண்ட் போயிட்டு வந்ததும், உடம்புல மறுபடியும் உற்சாகம் வந்து உட்காந்துடுச்சி. பைக்குக்கு உசுரு இல்லைன்னு யாருங்க சொன்னா. அதுகூட இருந்து பார்த்தா அது தானா ஃபீல் ஆகும்!” என டச்சிங்காக முடித்தார்.