கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!

பைக்கர்ஸ் மீட்
பிரீமியம் ஸ்டோரி
News
பைக்கர்ஸ் மீட்

தமிழ்நாடு பைக்கர்ஸ் மீட்: மதுரை

மதுரையிலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில், ஆண்டிப்பட்டி கனவாய் காற்று தழுவத் தொடங்குவதற்கு முன்பு, இடதுபுறத்தில் மலையும் மரங்களும் சூழ்ந்த அந்த ரெஸார்ட் வளாகத்துக்குள் - பவர் ரேஞ்சர்ஸ் மாதிரியான மனிதர்களின் உற்சாகக் குரலும் பைக்குகளின் உறுமல் சத்தமும் கேட்டது.

என்னடாவென்று எட்டிப் பார்த்தால், தமிழ்நாடு பைக்கர்ஸ் மீட் என்றார்கள். பைக்கர்ஸின் வருடாந்திர சந்திப்பும், ஆஃப்ரோடு சாகசங்களும் நிறைந்த பொழுது அது.

ஆஸ்வால்ட்
ஆஸ்வால்ட்

டூவீலர்களை சக தோழனாக, குடும்ப உறுப்பினராக, லவ்வராக நினைத்து வாழ்பவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும், பைக் ரைடர் என்ற புள்ளியில் இணைந்து ஆண்டுக்கொருமுறை சந்தித்துக் கொள்வதை வழக்கப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுதான் அது.

இதன் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்வால்ட் மற்றும் அவரது குழுவினர், பைக்குகளை செக் செய்வது, ரைடர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுப்பது என்று செம பிஸியாக இருந்தார்கள். ஆஸ்வால்ட்டிடம் பேசினோம்.

“இந்த ஈவென்ட் முழுக்க முழுக்க பைக்கர்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களுக் காகவே எடுத்துட்டு வந்திருக்கோம். தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ஊர்லேயும் பத்து அல்லது நூறு பேர் கொண்ட டீம் இருக்கிறாங்க. அவங்க திறமைகளை வெளியே கொண்டு வரவும், அங்கீகரிக்கவும் இப்படி ஒரு இணைப்பு ஏற்படுத்திட்டோம்.

இதன் மூலமா, ஒவ்வொரு ஊர் டீம்ல உள்ளவங்க வேற ஊர்களுக்குச் செல்லும் போது எதிர்பாராதவிதமா பைக் பஞ்சர் ஆனாலோ, அல்லது பெட்ரோல் காலி ஆனாலோ, அல்லது வேற ஏதாவது பிரச்னை வந்தாலோ, அந்த ஊர் பைக்கர்ஸ் டீம்ல இருக்குறவங்களைத் தொடர்பு கொண்டால் வந்து உதவி பண்ணுவாங்க.

பைக் ரைடு செல்வதை, ஒரு கட்டுப்பாட்டோடு ஒருங்கிணைக் கணும்ங்கிற எண்ணத்தோட தொடங்குன அமைப்புதான் இது. இதுல தலைவர், செயலாளர் என்ற பொறுப்பெல்லாம் கிடையாது. கூட்டு முடிவுதான். பைக் ரைடர்களை ஆரோக்கியமான முறையில உருவாக்கணும். டிராஃபிக் விதிகளை ஃபாலோ பண்ணணும், ஹெல்மெட் இல்லாமல் வண்டி எடுக்கக்கூடாது, பொதுமக்களைப் பயமுறுத்த மாதிரி பைக் ஓட்டக் கூடாதுன்னு எங்களுக்குள்ள பல் கட்டுப்பாடுகள் இருக்கு. அதைத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து வகை பைக்கர்ஸ் குழுக்களும் ஒருங்கிணைந்து இந்த செலிபிரேஷன்!” என்றார் ஆஸ்வால்ட்.

வெறும் ஆஃப்ரோடு, ரைடிங், ஜெயித்தவர்களுக்குப் பரிசு என்று மட்டுமில்லாமல்... வாகனங்களில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்வது எப்படி, பைக்குகளுக்கு முதலுதவி செய்வது, பஞ்சர் போடுவது, பெட்ரோல் காலி ஆனால் பைக்கை எப்படி எளிதாக டோ செய்து கொண்டு போவது (அதுவும் சாதா ரோட்டில் மட்டுமில்லை; மேடு பள்ளம் நிறைந்த ஆஃப்ரோட்டிலும்!) என்று நடைமுறைச் சிக்கல்களுக்கும் இங்கே பக்காவாகப் பயிற்சி கொடுக்கிறார்கள்.

பைக் ரைடர் என்றால் ஆண்கள்தானா என்று சவால் விடும் அளவுக்கு, பெண்களும் தங்கள் இயந்திரக் குதிரையுடன் ஆக்ஸிலரேட்டர் முறுக்கிக் கொண்டிருந்தார்கள். ரோடே இல்லாத குண்டும் குழியும் கொண்ட ஆஃப்ரோடில் பைக்குகளின் சஸ்பென்ஷனுக்கு வேலை கொடுத்து அதிசயிக்க வைத்தனர். பைக்குகளின் அப்டேஷன்கள், பைக்குகளைப் பராமரிப்பது குறித்த டிப்ஸ்கள், ரைடு போவதில் உள்ள டெக்னிக்குகள், பாதுகாப்பாக ரைடு செல்வது பற்றிய ஆலோசனைகள், ரைடில் ஏற்பட்ட த்ரில்லிங்குகள் என்று ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!
இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!
இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!
இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!
இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!

``படிச்சு முடிச்சதும் பைக் வாங்குறதுக்காகத்தான் வேலையில் சேர்ந்தேன். புதுசா வர்ற பைக்கோட பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி வேலை பார்த்த கம்பெனியில பேக்கேஜ் கேட்டேன். எனக்கு வேற எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அதனால பைக்குக்குச் செலவு பண்றதைப் பத்தி வீட்ல கவலைப்படல. ஒரு ஜூஸ் குடிக்க மைசூர் போயிட்டு வந்த அனுபவமெல்லாம் இருக்கு. சென்னையில வேகமா போறதுக்கு வாய்ப்பில்லை. அதுக்காகத்தான் இந்த மாதிரி குழுவுல சேர்ந்து நம்ம திறமையை வெளிக்காட்டலாம்னு வந்தேன்!’’ என்றார், சென்னை நின்ஜா குழுவினரோடு வந்து நிகழ்ச்சியில் கலக்கிய பிரேம்.

கோவையிலிருந்து வந்திருந்த ரியாவிடம் பேசினேன்:``காலேஜ் படிச்சுட்டு இருக்கேன். சின்ன வயசுலருந்தே பைக் மேல காதல், என் அப்பாதான் பைக் ஓட்டக் கத்துக்கொடுத்தார். ஆனாலும் லைசென்ஸ் எடுத்தப்புறம்தான் ரோட்டுல ஓட்டினேன். மற்ற வீடுகள் மாதிரி அப்பா-அம்மா என்னை டிஸ்கரேஜ் பண்ணலை. உற்சாகப்படுத்துனாங்க. இந்த அனுவல் மீட்ல நெறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்!” என்றார்.

திருமணமாகி 3-வது நாளே தன் கணவருடன் வந்திருந்த சந்தியா, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். “என்னோட பைக் ஆசையைப் பத்தி என் கணவர் புரிந்துகொண்டதால், அவரே இங்கு அழைத்து வந்தார். இங்கே ஆஃப்ரோடு கேம்தான் ரொம்பவே சேலஞ்ஜிங்கா இருந்தது. அதுவும் பசங்களுக்கு நடுவுல கலந்துக்கிட்டது ஒரு புது அனுபவம். இந்த பைக்கர்ஸ் டீம்ல நாங்க ரொம்பவே பாதுகாப்பா உணர்றோம்!” என்றார்.

நிறைவு நாளில் சிறப்பாகப் பங்கெடுத்த அனைவருக்கும் ட்ராஃபி வழங்கினார்கள். ட்ராஃபியை வாங்கிய அனைவரும் பைக்குகளுடன் கிளம்பி விட்டார்கள்; ஆனால், ஆண்டிப்பட்டி கணவாய்க்குள் பைக்குகள் உறுமும் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது.

இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!
இது பைக்கர்ஸ் மீட் இல்லை; பைக்கர்ஸ் ட்ரீட்!