Published:Updated:

OTA அப்டேட்டிலும் கோட்டை விட்ட OLA! - ஓலாவுக்கு வாடிக்கையாளர்கள் கடுப்பு அட்வைஸ்!

Ola
News
Ola

சொன்ன தேதிக்கு டெலிவரி செய்யப்படவில்லை; அப்படியே ஆனாலும் ஓட்டை ஒடசல் டெலிவரி; ஒழுங்கான நெட்வொர்க் இல்லை;

’’காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!”

‘‘ஓவர் பில்ட்அப் உடம்புக்கு ஆகாது!’’

‘‘ஏண்டா இதை வாங்கினோம்னு இருக்கு!’’

‘‘வாக்கு குடுத்தா அதைக் காப்பாத்தணும்… செய்ய முடியுறதை மட்டும்தான் சொல்லணும்!’’

– இப்படித்தான் சமீபகாலமாக கமென்ட்கள் மூலமாக வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்.

ரொம்பவும் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து ஏமாந்த விரக்தி தெரிகிறது அத்தனை வாடிக்கையாளர்களிடம்.

சொன்ன தேதிக்கு டெலிவரி செய்யப்படவில்லை; அப்படியே ஆனாலும் ஓட்டை ஒடசல் டெலிவரி; ஒழுங்கான நெட்வொர்க் இல்லை; உறுதியளித்த ரேஞ்ச் கிடைக்கவில்லை; சொன்னதைவிட சார்ஜிங் நேரம் எக்ஸ்ட்ரா ஆகிறது; பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்க ஆளில்லை. இப்படி ஓலா மீது எக்கச்சக்கப் புகார்கள்.

கனெக்டட் வசதி கொண்ட கார்களில் OTA அப்டேட்...
கனெக்டட் வசதி கொண்ட கார்களில் OTA அப்டேட்...

இப்போது ஓலா மீது லேட்டஸ்ட் புகார் ஒன்றும் சேர்ந்துவிட்டது. அது OTA (Over-the-air) எனும் சாஃப்ட்வேர் அப்டேட். ஸ்கூட்டரை டெலிவரி எடுத்தவர்கள், ஓட்டை ஒடசலைத் தாண்டிப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காரணம், தங்கள் ஸ்கூட்டரில் ஓலா சொன்ன க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன், ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் சாவி என எந்த வசதிகளுமே அப்டேட் ஆகவில்லை என்பதுதான். வாகனங்களை புக்கிங் விடும்போது, ‘செக்மென்ட் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லி விளம்பரப்படுத்திய ஓலா, இப்போது ‘நானும் பத்தோடு பதினொண்ணுதான்’ எனும் ரீதியில் பல்லிளித்திருப்பது வாடிக்கையாளர்களுக்குக் கடுப்பை ஏற்றியிருக்கிறது.

முதலில் OTA அப்டேட் என்றால் என்னனு பார்க்கலாம்!

ஒரு சுமாரான போன் ஸ்மார்ட் போன் ஆனதற்குக் காரணம் – இந்த OTA அப்பேட்தான். அதேபோல், வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஒரு சாதா வாகனத்தை தாதா வாகனம் ஆக்குவது இந்த OTA அப்டேட்தான். தற்போது விற்கப்படும் வாகனங்கள், மெக்கானிக்கல் பாகங்களைவிட எலெக்ட்ரிக்கலாக இயங்கும் ECU (Electronic Control Units) எனும் மென்பொருள் பாகங்கள்தான் அதிகம் கொண்டவையாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் வாகனத்தில் சாஃப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும் என்றால், ‘தள்ளு தள்ளு’ என்று சர்வீஸ் சென்டருக்கு டோ செய்து போய் OBD (On Board Diagnostics) மூலம்தான் அப்டேட் செய்ய முடியும். ஆனால், OTA வந்தபிறகு அப்படித் தேவையில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உங்கள் வாகனம் அலுவலகத்தில் அல்லது வீட்டில் பார்க்கிங்கிலேயோ நிற்கும்போது, தானாக காற்றுவாக்கிலேயே அதாவது Over the Air-லேயே ஒரு Cloud Based Server மூலமாக உங்கள் வாகனத்தில் அப்டேட் ஆகிக் கொள்வதுதான் இந்த OTA அப்டேட் முறை. இதன் மூலம்தான் வாகனங்களின் ஸ்மார்ட் வசதிகளான அட்டானமஸ் பிரேக்கிங் சிஸ்டம்… அதாவது – தானாக பிரேக் பிடிக்கும் சிஸ்டம், ADAS (Advanced Dricer Assistance System), உங்களுக்கு வழிகாட்டும் ஜிபிஎஸ் சிஸ்டம், தானாக லேன் மாறும் வசதி, சாவியைப் போடாமலேயே உங்கள் குரல் மூலமாகவே வாகனத்தை ஸ்டார்ட்/ஆஃப் செய்யும் வசதி, வாகனம் திருடு போனால் கண்டுபிடிக்க உதவும் ஜியோஃபென்ஸிங் சிஸ்டம், ஆளே இல்லாத நெடுஞ்சாலையில் ஆக்ஸிலரேட்டர் தொடாமலேயே நீங்கள் செட் செய்த வேகத்தில் வாகனம் பறக்க உதவும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி – இப்படிப் பல ஸ்மார்ட்டான விஷயங்கள் இந்த OTA அப்டேட்டின் மூலம்தான் இயங்கும்.

உதாரணத்துக்கு, உங்கள் ஸ்மார்ட் போனையே எடுத்துக் கொள்ளலாம். ஒரு ரூட் தேர்ந்தெடுத்து கூகுள் மேப்பை ஆன் செய்யுங்கள். ஒரு மேம்பாலம் வருகிறது; அதற்குக் கீழே சர்வீஸ் லேன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரண்டுக்கும் ஒரே அம்புக்குறிதான் காட்டும். இது OTA அப்டேட் ஆகாத சாஃப்ட்வேர். இப்போது சில மேப்களில்… மேம்பாலத்துக்குத் தனி அம்புக்குறி; கீழே உள்ள சாலைக்குத் தனி அம்புக்குறி காட்டுவதைக் கவனித்திருப்பீர்கள். இது OTA அப்டேட் நடந்தது. ஒரு எலெக்ட்ரிக் வாகனத்துக்கு இந்த OTA அப்டேட் மிகவும் முக்கியமான விஷயம். இப்படி OTA அப்டேட் நடக்காமலேயே ஓலா ஸ்கூட்டர்கள் டெலிவரி ஆனதுதான் ஓலா கஸ்டமர்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

OLA
OLA

ADAS, அட்டானமஸ் பிரேக்கிங் வசதி போன்ற பல விஷயங்கள் தவிர்த்து – க்ரூஸ் கன்ட்ரோல், மலைச் சாலைகளில் ஸ்கூட்டர் சரிவில் இறங்காமல் இருக்க ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஜியோஃபென்ஸிங் சிஸ்டம், டிஜிட்டல் சாவி, நேவிகேஷன் சிஸ்டம் – என்று பல வசதிகளைத் தரும் முதல் ஸ்கூட்டர் என்றுதான் விற்பனையின்போது விளம்பரப்படுத்தியது ஓலா.

ஆனால், இப்போது அதில் பல வசதிகள் எதுவுமே இல்லை என்று புகார் வாசித்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். ‘‘வாகனத்தைப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரைப் பற்றிய புரிதல் ஏற்படும். தொடர்ச்சியாக அவர்களுக்கு அப்டேட்டுகளைப் பற்றிய அப்டேட்டுகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்! வாடிக்கையாளர்கள் இன்னும் சில வசதிகளுக்குக் காத்திருங்கள்!’’ என்கிறார் ஓலாவின் சீஃப் மார்க்கெட்டிங் அலுவலம் வருண் துபே. 2022 ஜனவரி மாதத்தில் இந்த மொத்த வசதிகளின் OTA சாஃப்ட்வேர் அப்டேட் நடந்துவிடும் என்று சொன்ன ஓலா, இப்போது இதை இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்திருக்கிறது.

இப்போது கட்டுரையின் முதல் இரண்டு வரிகளைப் படியுங்கள்!