Published:Updated:

"அடப்போங்கப்பா வண்டி எப்பதான் வரும்?!"- ஓலா ஸ்கூட்டர் டெலிவரியில் என்ன பிரச்னை? ஏன் இவ்வளவு தாமதம்?

கட்டக் கடைசியாக ஓலாவின் அறிவிப்புப்படி நவம்பர்–1, அதாவது இன்றைக்கு டெலிவரி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கட்டக் கட்டக் கடைசியாக, இப்போது மறுபடியும் வரும் டிசம்பர் மாதத்துக்கு, டெலிவரி தேதியைத் தள்ளி வைத்திருக்கிறது ஓலா.

‘‘பெட்ரோல் விலை 100 ரூபா வர்றதுக்குள்ள ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிடலாம்னு பார்த்தோம். ஓலானு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருதாமே... அதுதான் புக் பண்ணிருக்கோம்!’’ என்று வாடிக்கையாளர்கள் ஓலாவை ஆசையோடு புக் செய்தபோது, பெட்ரோல் விலை 98 ரூபாய்.

இப்போது பெட்ரோல் விலை 100–ஐத் தாண்டி, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்கோருக்கு இணையாக 111 ரூபாயை நெருங்கக் காத்திருக்கிறது. ஆனால், ஓலா ஸ்கூட்டர் இன்னும் டெலிவரி ஆனபாடில்லை.

Ola Factory
Ola Factory

ஜூலை 2021–ல்தான், 499 ரூபாய் கொடுத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. ஒரே நாளில் ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் புக் ஆகி சரித்திரம் படைத்தது ஓலா. ‘முதலில் புக் செய்பவர்களுக்கு முன்னுரிமை’ என்கிற அடிப்படையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15–ம் தேதி டெலிவரி செய்யப்படும் என்றார்கள். பிறகு செப்டம்பர் 15–க்கு ஒத்தி வைத்தார்கள். பிறகு இரண்டு நாள் கழித்து செப்டம்பர் 17–ம் தேதி என்றார்கள். ஸ்கூட்டர் கிடைத்த பாடில்லை.

அதற்குப் பிறகு, ‘‘உங்கள் ஆர்டர் ஐடி எண்.****–க்கு அக்டோபர் 15–ம் தேதி முதல் 25–ம் தேதிக்குள் நிச்சயம் ஸ்கூட்டர் டெலிவரி கிடைக்கும்’’ என்று ட்விட்டரில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருவராகப் பதில் அளித்தார் ஓலாவின் CEO பாவிஷ் அகர்வால்.

கட்டக் கடைசியாக ஓலாவின் அறிவிப்புப்படி நவம்பர்–1, அதாவது இன்றைக்கு டெலிவரி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கட்டக் கட்டக் கடைசியாக, இப்போது மறுபடியும் வரும் டிசம்பர் மாதத்துக்கு, டெலிவரி தேதியைத் தள்ளி வைத்திருக்கிறது ஓலா.

என்னதான் ஆச்சு ஓலாவுக்கு? ஏன் இந்த டெலிவரி குழப்பம்?

Ola Electric
Ola Electric

அதிகமான புக்கிங்தான் இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்கிறார்கள். அறிவித்த முதல் நாளே ஒரு லட்சத்துக்கும் மேலான எண்ணிக்கையில் ஒரு ஸ்கூட்டருக்கு புக்கிங் நடந்தது ஓலாவுக்குத்தான் சாத்தியமாகி இருக்கிறது. ஒரு புக்கிங்கிற்கு ரூ.499 விதம், இரண்டாவது நாளிலேயே 1,100 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது எனத் தனது அதிகாரபூர்வத் தளத்தில் மகிழ்ச்சியாகச் சொன்னது ஓலா.

ஓலா ஸ்கூட்டர் S1 அல்லது S1 Pro…
எதுக்கு மவுசு அதிகம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, நெதர்லாந்தில் உள்ள நஷ்டத்துக்கு ஆளான Etergo எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை வாங்கியது ஓலா. அந்த Etergo AppScooter எனும் ஸ்கூட்டரை நம் நாட்டுக்கு ஏற்றபடி சில சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் செய்து விற்பனை செய்தால் என்ன என்று ஒரு ஐடியா! தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் உள்ள 500 ஏக்கர் இடத்தில் ஓலா தனது தொழிற்சாலையை ஆரம்பித்தது. ஓலா எனும் பெயரிலேயே ஸ்கூட்டரைத் தயாரித்து வருகிறது ஓலா நிறுவனம். S1 மற்றும் S1 Pro என இரண்டு வேரியன்ட்களில் ரெடியாகி வருகிறது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ‘Make in Tamilnadu’ எனும் பிராண்டைத் தாண்டி – வசதிகள், ரேஞ்ச், இடவசதி, தொழில்நுட்பம் என எல்லா விஷயங்களிலும் சொல்லியடிக்கக் காத்திருப்பதால், ஓலாவுக்கு வரவேற்பு பயங்கரமாக இருந்தது.

Ola Factory
Ola Factory

இன்னும் புக்கிங்குகள் தொடர்ந்து கொண்டே இருக்க, சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டது ஓலா. பெரும்பாலும் விலை குறைவான S1 ஸ்கூட்டர்தான் அதிகமாக புக்கிங்குகள் விழும் என்று நினைக்க, ஆனால் விலையும் வசதிகளும் ரேஞ்சும் அதிகம் கொண்ட S1 Pro–வுக்குத்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் செம மவுசு இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, S1 Pro ஸ்கூட்டரை அதிகமாக புரொடக்ஷன் செய்ய வேண்டியிருப்பதால், இப்போது ஷிஃப்ட் அடிப்படையில் பணிகளைத் துரிதமாக்கி இருக்கிறதாம் ஓலா. ‘‘தயாரிப்பில்தான் தாமதம்; வேறொன்றுமில்லை’’ என்று நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

புக்கிங் செய்த சில வாடிக்கையாளர்களிடம் விசாரித்ததில், ‘அடப் போங்கப்பா’ என்று சிலர் சலிப்படைந்து போயிருந்தாலும், ஓலாவை வரவேற்க பலர் ஆவலாகவே இருக்கின்றனர்.

இப்போது, தேதியைக் குறிப்பிடாமல் ‘அடுத்த மாதம் டெலிவரி’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கும் ஓலா, அடுத்த மாதமும், ‘அடுத்த மாதம் டெலிவரி’ என்று ஒரே பேச்சாக இருந்தால்..?

அவ்வ்வ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு