Published:Updated:

ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தற்காலிக நிறுத்தம்... அப்போ புக் பண்ணவங்க நிலைமை?!

Ola S1 Production stopped

‘‘ஒண்ணு 30,000 ரூபாய் குடுங்க… இல்லேன்னா 12 மாசம் வெயிட் பண்ணுங்க!’’ என்று ஓலா சொல்லியிருப்பது அதிர்ச்சியான விஷயம். ஆம், தனது S1 ஸ்கூட்டரின் தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டது ஓலா!

ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தற்காலிக நிறுத்தம்... அப்போ புக் பண்ணவங்க நிலைமை?!

‘‘ஒண்ணு 30,000 ரூபாய் குடுங்க… இல்லேன்னா 12 மாசம் வெயிட் பண்ணுங்க!’’ என்று ஓலா சொல்லியிருப்பது அதிர்ச்சியான விஷயம். ஆம், தனது S1 ஸ்கூட்டரின் தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டது ஓலா!

Published:Updated:
Ola S1 Production stopped

ஒரு மாருதி கார் ஷோரூமுக்கு ஸ்விஃப்ட் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துப் போயிருப்பீர்கள். ‘‘எஸ்–ப்ரெஸ்ஸோ கார் வாங்கிக்குங்களேன்… செம டிஸ்கவுன்ட் இருக்கு! ஸ்விஃப்ட்டைவிட மைலேஜும் நல்லா தரும். நீங்க கேட்ட சிவப்புக் கலரும் அதில் இருக்கு!’’ என்று விற்காத காரை உங்கள் தலையில் கட்டவோ, தங்கள் டார்கெட்டை அடையவோ, உங்கள் மண்டையைக் கழுவுவார்கள் விற்பனைப் பிரதிநிதிகள்.

இந்த மாதிரிப் பிரச்னைலாம் வராது என்றுதான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பொருத்தவரை நினைத்திருந்தார்கள் மக்கள். காரணம், ஓலாவுக்குத்தான் டீலர்ஷிப்போ, ஷோரூமோ இல்லையே! ஆனால், அதையெல்லாம் தாண்டி டீலர்ஷிப்பில் நடக்கும் தகிடுதத்தங்களை ஓவர்டேக் செய்து, ஆன்லைனிலேயே டிஜிட்டலாக நடத்திக் கொண்டிருக்கிறது ஓலா நிறுவனம். நீங்கள் ஓலாவின் S1 ஸ்கூட்டரை புக் செய்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான அதிர்ச்சித் தகவல்தான் இது.
ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

ஆம், S1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பை நிறுத்திவிட்டதாகச் சொல்லியிருக்கிறது ஓலா.

ஓலாவில் மொத்தம் இரண்டே இரண்டு ஸ்கூட்டர்கள்தான். S1 மற்றும் S1 Pro. இதில் S1 Pro என்பதுதான் டாப் வேரியன்ட். இரண்டிலும் 8.5kW எலெக்ட்ரிக் மோட்டார்தான் என்றாலும், S1 Pro–வின் பேட்டரி தொகுப்பு S1–யைவிட அதிகம். S1–ல் இருப்பது 2.98kW என்றால், S1 Pro–வில் இருப்பது 3.97 kW. அதனால் சார்ஜிங் எக்ஸ்ட்ராவாக நிற்கும். இதன் ரேஞ்சும் அதிகமாக இருக்கும். S1 Pro–வின் ரேஞ்ச் 181 கிமீ வரை போக முடியும் என்று க்ளெய்ம் செய்கிறது ஓலா. இதுவே S1 ஸ்கூட்டரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 121 கிமீ தான் போக முடியும். (இந்த மைலேஜே கிடைக்கமாட்டேங்குது என்று ஓலா வாடிக்கையாளர்கள் புலம்புவது தனி ஸ்டோரி.) அதேபோல் S1 Pro–வின் டாப் ஸ்பீடு 115 கிமீ. இதுவே S1–ல் 90 கிமீ–ல்தான் போக முடியும். S1 Pro–வில் வசதிகளும் கொஞ்சம் அதிகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

S1 ஸ்கூட்டரின் விலை, S1 Pro–வைவிட 30,000 ரூபாய் குறைவு என்பதால்… ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள், ‘‘நமக்கு எதுக்கு இம்புட்டு ஸ்பீடு; வசதிகள்லாம். S1–யே போதும்’’ என்று S1 ஸ்கூட்டரைத்தான் புக் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆன்லைனில், ஆப்பில் என்று ஓலா ஸ்கூட்டரை புக் செய்திருந்தவர்களுக்குப் பல மாதங்களாக டெலிவரியில் தண்ணி காட்டிக் கொண்டிருந்த ஓலா, இப்போதுதான் ஒரு வழியாக S1 Pro ஸ்கூட்டரையே டெலிவரி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

Ola
Ola
‘பக்கத்து இலைக்குப் பாயாசம் வந்துடுச்சு… எங்க இலைக்கு எங்கடா பாயாசம்’ என்று ‘சிங்கம்புலி’ போல் பாவமாகக் காத்துக் கொண்டிருந்த S1 வாடிக்கையாளர்களுக்கு, இப்போது மேலும் ஓர் அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லியிருக்கிறது ஓலா.

அதாவது, ‘‘இன்னும் S1 Pro–வின் டெலிவரி முடியவில்லை; தயாரிப்புப் பணிகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் S1 ஸ்கூட்டர் தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். நீங்கள் ஏன் S1 Pro–வுக்கு மாறக்கூடாது? இதனால் உங்களுக்கு லாபம்தான்!’’ என்று விற்பனைப் பிரதிநிதிகளைவிடப் பாசமாக ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறது ஓலா.

அப்போ S1 ஸ்கூட்டரை புக் பண்ணிவனங்களோட கதி?! அதாவது, அவர்கள் S1 Pro ஸ்கூட்டருக்குத்தான் அப்டேட் ஆக வேண்டும். ‘அதுனால என்ன லாபம்தானே!’ என்றால்… ‘அஸ்க்குபுஸ்க்கு… நீங்கள் அதற்கு ஓலா S1 Pro–வின் விலையை ஈடுகட்ட எக்ஸ்ட்ரா 30,000 ரூவா கட்ட வேண்டும்’ என்று வாடிக்கையாளர்களுக்கு செக் வைத்துவிட்டது ஓலா.

ஓலா இப்படிச் சொல்லியிருப்பது, ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்பதே நிஜம். ‘‘வாடிக்கையாளர்கள் எந்த வாகனத்தை வாங்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். இது வலுக்கட்டாயத் திணிப்பு!’’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். (நாங்களும் அதில் அடக்கம்!)

ஓலா ஸ்கூட்டர்
ஓலா ஸ்கூட்டர்

‘‘இதுக்கு மேல குடுக்க எங்ககிட்ட காசு இல்லைங்க’’ என்று ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி கைவிரித்தவர்களுக்கு, இப்படி ஒரு நியாயமான பதிலைச் சொல்லியிருக்கிறது ஓலா. ‘‘அப்படியென்றால் S1 ஸ்கூட்டரின் தயாரிப்பு முடியும்வரை காத்திருக்க வேண்டும்’’ என்பதுதான் அது.

என்ன, அதுக்கு இன்னும் ஒரு வருஷம் காத்திருந்தால் போதும். அதாவது, ஜஸ்ட் 12 மாசம்தான்! ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’னு ‘வைதேகி காத்திருந்தாள்’ விஜயகாந்த் மாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போதுதான் வெளிச்சம் தெரிந்தது. அதற்குள் இப்படி ஒரு ஆப்பு வைத்துவிட்டது ஓலா.

அடப் போங்க பாஸ்… அதுக்குள்ள இருக்கிற பெட்ரோல் ஸ்கூட்டரையும் வித்துட்டு, 80’ஸ் ஸ்டைலில் சைக்கிள்ல காத்தடிச்சுட்டுக் கிளம்பிட வேண்டியதுதான்னு நீங்க நினைக்கிறது என் கண்ணுக்குக் கண்ணாடி மாதிரி அப்படியே தெரியுது!