Published:Updated:

ஓலாவுக்குப் போட்டி; பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்கீமுடன் இந்தியாவுக்கு வருது சீன ஸ்கூட்டர் கொகோரோ!

Gogoro E-Scooter

ஓலா S1 ப்ரோ, இப்போது 1.5 லட்சம் ரூபாயில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த கொகோரோவும் அதே 1.5 லட்சம் மார்க்கெட்டில்தான் வரவிருக்கிறது.

ஓலாவுக்குப் போட்டி; பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்கீமுடன் இந்தியாவுக்கு வருது சீன ஸ்கூட்டர் கொகோரோ!

ஓலா S1 ப்ரோ, இப்போது 1.5 லட்சம் ரூபாயில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த கொகோரோவும் அதே 1.5 லட்சம் மார்க்கெட்டில்தான் வரவிருக்கிறது.

Published:Updated:
Gogoro E-Scooter
கொகோரோ (Gogoro) - ஏதோ கோழி கூவுற மாதிரி இருக்கும் இந்தப் பெயர், தைவானில் மிகப் பிரபலம். சீனாவில் மக்கள் தொகை மட்டுமில்லை; ஸ்கூட்டர் தொகையும் அதிகம். அதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூட்டமே பெரிய டிராஃபிக்கை ஏற்படுத்தும். அதற்கு முக்கியக் காரணமே – இந்த கொகோரோதான்.

கொகோரோ… வெறும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மட்டுமில்லை; பேட்டரி ஸ்வாப்பிங்கிலும் (Battery Swapping)கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம். ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறீர்கள். அதில் பெரிய பிரச்னையாக எதைச் சொல்வீர்கள்? பேட்டரி சார்ஜிங்தானே! அதற்கு முக்கியத் தீர்வாக இருப்பதுதான் இந்த பேட்டரி ஸ்வாப்பிங். அதாவது, உங்கள் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை சார்ஜ் போடத் தேவையில்லை. காலியான பேட்டரியைக் கழற்றி, சார்ஜ் ஏற்றிய புது பேட்டரியை ஸ்கூட்டரில் ஃபிட் செய்துவிட்டுப் பறக்கலாம். இதற்கு 6 விநாடிகள்தான் ஆகும் என்கிறது கொகோரோ. அதற்கு ஏகப்பட்ட பேட்டரி நெட்வொர்க் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் இருந்தால்தான் சாத்தியம். சீனாவில் கொகோரோவின் கொடி இதனால்தான் ஓங்கியிருக்கிறது.

தைவானில் சுமார் 2,400 லொக்கேஷன்களில் சுமார் 10,000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை வைத்திருக்கிறது கொகோரோ. இதன் மூலம் தைவானில் ஆண்டுக்கு 150 மில்லியன் ஸ்வாப்பிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தைவானின் வணிக ஆபரேஷன்களில் 26% மார்க்கெட்டை, கொகோரோ மட்டுமே நடத்துகிறது.

Gogoro E | கொகோரோ
Gogoro E | கொகோரோ

அப்படிப்பட்ட கொகோரோ… இந்தியாவுக்கு வரப் போகிறது. அதுவும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்து வருகிறது. பேட்டரி ஸ்வாப்பிங் மட்டுமில்லை; ஓர் அற்புதமான ஸ்கூட்டரையும் கொண்டு வரலாம் கொகோரோ. அது தைவானில் சக்கைப் போடு போடும் Gogoro S1 எனும் ஸ்கூட்டரின் காப்பி பேஸ்ட்டாகத்தான் இருக்கும் என்கிறார்கள். என்னடா, இந்த S1 எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கே என்கிறீர்களா? ஆம், நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டெர்கோ ஆப் ஸ்கூட்டரை அப்படியே வாங்கி இங்கே S1 என்கிற பெயரில் விற்பனை செய்து வருகிறது ஓலா. அந்த ஓலா S1 Pr–வுக்குப் போட்டியாகத்தான் இந்த Gogoro S1 ஸ்கூட்டரும் வரப் போகிறது.

ஓலா S1 ப்ரோ, இப்போது 1.5 லட்சம் ரூபாயில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த கொகோரோவும் 1.5 லட்சம் மார்க்கெட்டில்தான் வரவிருக்கிறது. இதன் கட்டுமானம் மற்றும் சஸ்பென்ஷனைப் பொருத்தவரை, அலுமினியம் மோனோகாக் சேஸியில், முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின் பக்கம் மோனோகாக் சஸ்பென்ஷன் செட்அப்பும்தான் கொண்டிருக்கும் இந்த Gogoro S1. இந்தியாவுக்கு ஏற்றபடி இதன் சேஸியில் ரீ–இன்ஜீனியரிங் வேலை பார்ப்பார்களாம்.

இதில் உள்ள லிக்விட் கூல்டு பெர்மனன்ட் மோட்டாரின் பவர் 7.2kW மற்றும் 27Nm டார்க். 50 கிமீ வேகத்தை இது 3.7 விநாடிகளில் கடக்குமாம். இது கம்யூட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடவசதி 24.5 லிட்டர் இருக்கலாம்.

மற்றபடி ஓலா ஸ்கூட்டருக்கு இணையாக வசதிகளும் இருக்கும். இதிலும் டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்டபிள் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், கீலெஸ் ஆப்பரேஷன், ரைடிங் மோடுகள் போன்றவை உண்டு. இதில் டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன் ஸ்டாண்டர்டு ஆப்ஷனாகக் கொடுக்கப்படலாம்.

இதில் ஓலாவைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் பேட்டரி டிப்பார்ட்மென்ட்டில்தான். இந்த ஸ்கூட்டரியில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியின் எடை 18 கிலோ. இதைத் தனியாக எடுத்து கழற்றி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

Gogoro Battery Swapping Station
Gogoro Battery Swapping Station

இது ஹீரோ மோட்டோ கார்ப்புடன் கை கோப்பதால்… வரப்போகும் ஹீரோவின் புத்தம் புது விடா ஸ்கூட்டரின் பேட்டரியை இதற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதனால், ஹீரோவின் நெட்வொர்க் சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் இந்த கொகோரோவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதன் முதல்படியாக Zypp Electric எனும் இந்திய நிறுவனத்துடன் கூட்டு வைத்து, ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை டெல்லியில் ஆரம்பித்து, அப்படியே முக்கியமான நகரங்களில் கொண்டு வர இருக்கிறது கொகோரோ.

இதன் பேட்டரி பவர் ஓலாவை விடக் குறைவாகத்தான் இருக்கும். எனவே, ஸ்வாப்பிங் செய்ய விரும்பாதவர்களுக்கு, சார்ஜிங்குக்கும் பெரிதாக நேரம் எடுத்துக் கொள்ளாது. ஆனாலும், இது சுமார் 150 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என்று க்ளெய்ம் செய்கிறது இந்த நிறுவனம். நம்ப முடியாவிட்டாலும், ரியல் டைமில் 100 கிமீ கிடைத்தால்… ஓலாவுக்கு டஃப் கொடுக்கலாம் கொகோரோ.